விவேகானந்தரும் அவரது அன்னையும்
6 ஆகஸ்டு 1899 அன்று திருமதி ஒலிபுல் அம்மையாருக்குச் சுவாமிஜி பின்வருமாறு கடிதம் எழுதினார்:
உங்களுக்குத் தெரிந்த என் சித்தி, என்னை எமாற்றுவதற்கு ஒரு ஆழ்ந்த திட்டம் வைத்திருந்தார். அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் சூழ்ச்சி செய்து எனக்கு வீட்டை 6000 ரூபாய்க்கு (400 டாலர்) விற்பதற்குத் திட்டமிட்டனர். நானும் அவர்களை நம்பி என் அன்னைக்காக அந்த வீட்டை வாங்கினேன். அதை எனக்கு விற்றபின், ஒரு துறவியென்ற முறையில் நான் நீதிமன்றம் சென்று வலுகட்டாயமாக அந்த வீட்டை உரிமையாக்கிக் கொள்ளமாட்டேன் என்ற எதிர்பாப்பில், வீட்டை என்னிடம் ஒப்படைத்து விட்டனர்.
இரண்டாவது முறை அமெரிக்காவில் தங்கியிருந்தபோது தன் அன்னையையும் அவருடைய பிரச்சனைகளையும் பற்றி சுவாமிஜி மீண்டும் சிந்திக்க நேர்ந்தது. அது குறித்து 17 ஜனவரி 1900 அன்று திருமதி ஒலி புல்லுக்கு எழுதிய கடிதத்தில் சுவாமிஜி கூறுகிறார்.
மடத்தைப் பொறுத்த அனைத்துக் கவலைகளையும் விட்டுவிட்டு என் அன்னையிடம் சிறிதுகாலம் திரும்பிச் செல்ல வேண்டும் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. அவரது இறுதிகாலத்திலாவது சிறிது ஆறுதல் அளிக்க நான் முயல வேண்டும்.
உங்களுக்குத் தெரியுமா? மகானான ஆதி சங்கரர்கூட இதைச் செய்ய வேண்டியிருந்தது…. 1884 ஆம் ஆண்டில் அன்னையைப் பிரிந்தது பெரிய துறவாகும். அப்போது அன்னையிடம் திரும்பிச் செல்வது அதைவிட மிகப் பெரிய துறவாகும். இமயமலைக்குச் சென்று அனைத்தையும் கடந்த ஆழ்நிலைத் தியானத்தில் மூழ்க வேண்டும் என்ற அவருடைய கனவு, கொடுமையும், துன்பமும் நிறைந்த இவ்வுலகத்தின் தேவையினால் சுக்குநூறாகியது.
7 மார்ச் 1900 அன்று சுவாமிஜி திருமதி ஒலி புல்லுக்கு கடிதம் எழுதினார்.
என் அன்னையைப் பொறுத்தவரையில் நான் அவரிடம் திரும்பிச் செல்கிறேன்- என் இறுதி நாட்களுக்காகவும், அவருடைய இறுதி நாட்களுக்காகவும் நியூயார்க்கில் எனக்குள்ள 1000 டாலர் மாதம் 9 ரூபாய் பெற்றுத் தரும் அவருடைய பழைய வீடு, ஏறக்குறைய 6 ரூபாய் கொண்டு வரும்.
………. என் வாழ்நாள் முழுவதும் என் அன்னைக்குப் பெரும் சித்திரவதையாக நான் இருந்திருக்கிறேன். அவருடைய வாழ்நாள் முழுவதும் ஒரு தொடர்துயரமாகவே இருந்து வருகிறது. முடிந்தால், அவரைச் சிறிது மகிழ்ச்சியாக வைத்திருப்பதே என்னுடைய கடைசி முயற்சியாக இருக்க வேண்டும். நான் அனைத்தையும் திட்டமிட்டு வைத்துள்ளேன்.
18 மே 1900 அன்று சுவாமிஜி திருமதி ஒலி புல்லுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினார்.
என் குடும்பத்திற்காகத் திருமதி சேவியர் 6000 ரூபாய் தந்தார். அதை எனது ஒன்றுவிட்ட சகோதரர்கள் சித்தி முதலானோருக்குக் கொடுத்தேன். வீடு வாங்குவதற்காக 5000 ரூபாய் மடத்து நிதியிலிருந்து கடன் வாங்கப்பட்டது.
26 ஜூலை 1900 அன்று சுவாமிஜி அமெரிக்காவை விட்டு நீரிழவு, நீர்க்கோப்பு, மூச்சுத் திணறல், ஏறக்குறைய ஒரு கண்ணில் பார்வை இழந்த நிலை ஆகியவற்றால் உடல்நலம் சிதைந்தவராக முடிவாக இந்தியாவிற்குத் திரும்பினார். ஆனாலும் தன்னுடைய அன்னைக்குச் செய்ய வேண்டிய புனிதக் கடமை என்று கருதிய எதையும் அவர் ஒருபோதும் ஒதுக்கியதில்லை.
அந்த நிலையிலும் அவர் அவ்வப்போது தன் அன்னையைச் சென்று கண்டு வந்தார். அவருடைய பொருளாதாரத் தொல்லைகளையும், குடும்பப் பிரச்சினைகளையும் தம்மால் முடிந்த அளவு தீர்த்து வைக்கவும் முயற்சிகள் செய்தார்.
கங்கைக் கரையில் தன்னுடைய அன்னைக்காக ஒரு சிறு குடிலை அமைத்துத் தர வேண்டும் என்ற சுவாமிஜியின் திட்டம் நிறைவேற ஒரு கனவாகவே இருந்தபோதிலு<ம். அவருடைய 14 வது வயத்தில் தொடங்கிய நீதிமன்ற வழக்கை முடிக்குக் கொண்டுவர பல வழிகளில் தொர்ந்து முயன்று வந்தார்.
19 ஜூன் 1902 அன்று தன் அன்னையின் இருப்பிடத்திற்குச் சென்று எதிர்த் தரப்பினருக்கு மே<லும் 1000 ரூபாய் தந்து பிரச்சினையைத் தீர்த்து வைத்தார். 2 ஜூலை 1902 அன்று, இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர், வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகச் சுவாமிஜி மேலும் 400 ரூபாய் கொடுத்தார். சுவாமிஜி மகாசமாதி அடைந்தபோது அவருடைய அன்னையின் வயது 61.
தனது அன்னையிடம் சுவாமிஜிக்கு ஆழ்ந்த அன்பு ஏற்படக் காரணமாக இருந்த தூய்மை, புனிதம் ஆகியவை நிறைந்த புவனேசுவரியின் இயல்பையும் சுவாமிஜியிடம் அவர் ஏற்படுத்திய தாக்கத்தையும் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதானது அல்ல. சுவாமிஜியின் பெற்றோர்களின் பின்னணியைப் பற்றிச் சிறிதாவது அறிமுகம் இல்லாமல் இவற்றைப் புரிந்து கொள்ள முடியாது.
புவனேசுவரி தேவியின் உயர்ந்த இயல்பின் பிண்ணனி:
சுவாமிஜியின் பக்தி மற்றும் அர்ப்பணிப்புக்கு உரியவராகத் திகழ்ந்த அவரது அன்னை ஓர் ஒப்பற்ற பெண்மணியாகும். தொன்றுதொட்டு இந்தியப் பண்பாட்டின் முதுகெலும்பாக விளங்கும் நற்பண்புகளின் முழு உருவம் அவர். இந்தியாவில் குழந்தைகளின் பண்பாட்டுக்கு கல்விக்கு முற்றிலும் பொறுப்பானவர்கள் அவர்களது அன்னையரே.
எனவே நாட்டின் ஒட்டுமொத்த எதிர் காலமும் அன்னையரிடம் தான் உள்ளது. பண்டைய நீதிமுறைகளின் தொகுப்பாளரான மனு எழுதுகிறார். பக்தி செலுத்துவதற்கு உரியவர்களாக விளங்குபவர்களைப் பொறுத்தவரையில், ஆசிரியர் ஒரு சொற்பொழிவாளரை விட பத்து மடங்கும், தந்தை ஓர் ஆசிரியரைவிட நூறு மடங்கும், தாய் ஒரு தந்தையை விட ஆயிரம் மடங்கும் உயர்ந்தவர்களாகும்
மேற்கூறிய கருத்தின் அடிப்படையில், புவனேசுவரி தேவியின் (1841-1911) உயர்ந்த மற்றும் புனிதமான இயல்பைப் பணிவாக ஆராய்வோம். வடக்கு கொல்கத்தாவில் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட பெற்றோர்களின் ஒரே குழந்தை அவர் தோற்றத்தில் அவர் சற்றே குள்ளமாக அழகு மிக்கவராக விளங்கினார். நரேந்திரர் மரபுவழியாகப் பெற்றிருந்த மிடுக்கான நடை இவருக்கு உரியதுதான்.
சுவாமிஜி தன் அன்னையைப் பற்றி கூறியவற்றைச் சகோதரி கிறிஸ்டைன் நினைவு கூர்கிறார்.
ராமாயணத்தைப் படிக்கக் கேட்டு,. அவ்வாறு கேட்டதை அப்படியே திரும்ப ஒப்பிக்கக் கூடியவர் அவர் (புவனேசுவரி தேவி)………..(சுவாமிஜி) நல்ல நினைவாற்றல் கொண்டிருப்பதை ஆன்மீகத்திற்கு ஓர் அடையாளமாகக் கருதினார்.
தன் அன்னையைப் பற்றிய பல நிகழ்ச்சிகளை அவர் கூறினார். அவரிடம் (சுவாமிஜி) தனக்குள்ள உணர்ச்சிகளையும், பெருமையையும் மறைத்துக் கொள்ள மிகவும் முயன்ற பெருமைமிகு. சிறிய பெண்மணி- அவர்(சுவாமிஜி) தேர்ந்தெடுத்த வாழ்வில் (துறவற வாழ்க்கை) ஒப்புதல் இன்மை.
அதே சமயம் அவர் அடைந்த புகழில் பெருமை ஆகிய இரண்டு உணர்ச்சிகளுக்கும் இடையில் அவர் (புவனேசுவரி தேவி) எப்படி அலைக்கழிக்கப்பட்டார்…….. அவருடைய(சுவாமிஜி) அன்னையைக் காணும் பேறு பெற்ற எங்களுள் சிலர், தன்னுடைய கம்பீரமான தோற்றத்தைச் சுவாமிஜி அவரிடமிருந்துதான் பெற்றிருக்கிறார் என்பதை அறிவோம். இந்தச் சிறிய பெண்மணி ஓர் அரசியைப் போன்று கம்பீரமாக நடந்து கொண்டார்.
சுவாமிஜியின் அன்னையை வயது முதிர்ந்த நிலையில் கண்ட அவரது சீடரான மன்மத கங்குலி இவ்வாறு கூறுகிறார்:
அவருடைய தோற்றமே பெருமதிப்பிற்கு உரியதாக காட்சியளித்தது, நீண்ட புருவங்களும், பெரிய அழகிய கண்களும், உறுதி வாய்ந்த உடல் வலிமையும் கொண்டவர் அவர். எதிர் பேச்சுக்கு இடமின்றி பணிய வைக்கும் ஆளுமைச் சிறப்பைக் கொண்டவராக அவர் விளங்கினார். சுவாமிஜி இந்தக் குணநலன்களை அவரிடமிருந்து பெற்றதில் வியப்பு ஏதுமில்லை.
சுவாமிஜியின் தந்தைவழி உறவு-அவரது உயர்ந்த தந்தையும், பாட்டனாரும்
வடக்கு கொல்கத்தாவிலு<ள்ள சிமூலியாவில் செல்வம், கல்வி, ஈகை ஆகியவற்றில் சிறந்து விளங்கிய தத்தர் குடும்பம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்றாகும். விசுவநாத தத்தருக்கும் (1835-1884), புவனேசுவரி தேவிக்கும் (1841-1911) நரேந்திரநாத் தத்தர் என்று பெயரிடப்பட்ட சுவாமிஜி பிறந்தார்.
விசுவநாதரின் தந்தை துர்க்கா பிரசாதர் துறவு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆழ்ந்த ஏக்கம் கொண்டிருந்தார். 1835-ல் விசுவநாதர் பிறந்த சில மாதங்களிலேயே அவர் உலகைத் துறந்து துறவறம் பூண்டார். பன்னிரண்டு ஆண்டுகள் ஆன்மீக சாதனைகள் புரிந்த அவர், அதன் பின்னரே, சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி சொந்த ஊரான கொல்கத்தாவிற்கு ஒரு முறை வந்து சிறிதுகாலம் தங்கியுள்ளார்.
துர்க்கா பிரசாதரின் துறவு மனப்பான்மையைக் கீழ்வரும் நிகழ்ச்சி சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. கொல்கத்தாவிற்கு வந்தபோது ஒரு நண்பரின் வீட்டில் அவர் தங்கினார். அவருடைய வருகையை யாருக்கும் தெரியாமல் வைத்திருப்பதாக அந்த நண்பர் அவரிடம் கூறியிருந்தார். ஆனாலும், அவர் வந்ததில் அளவற்ற மகிழ்ச்சியடைந்த அந்த நண்பர் துர்க்கா பிரசாதருடைய வருகையை அவருடைய வீட்டிற்குத் தெரியப்படுத்தி விட்டார்.
துர்க்கா பிரசாதரின் உறவினர்கள் உடனேயே அங்கு வந்து அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். இதனால் சற்றும் மனம் தளராத துர்க்கா பிரசாதர் தனக்களிக்கப்பட்ட அறையின் ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்துவிட்டார். அறை பூட்டப்பட்டது. தனக்கு அளிக்கப்பட்ட உணவை ஏற்க மூன்று நாட்கள் துர்க்கா பிரசாதர் மறுத்துவிட்டார். அதைக் கண்டு அவர் எங்கே இறந்து விடுவாரோ என்று அஞ்சிய அவருடைய உறவினர்கள் இறுதியாகக் கதவைத் திறந்துவிட்டனர். உடனேயே துர்க்கா பிரசாதர் அந்த வீட்டை விட்டுச் சென்றுவிட்டார். பின்னர், வாரணசியில் எல்லா இடங்களிலும் விசுவநாதர் தேடிப் பார்த்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
விசுவநாதரின் அன்னையும் தன்னுடைய மனவுறுதியை வெளிப்படுத்தினார். கணவருடைய குடும்பத்தின் பகைமை, எதிர்ப்பு மற்றும் சுயநலம் ஆகியவற்றைப் பொறுத்துக் கொண்டு மகளை வளர்க்க அவர் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். விசுவநாதருக்கு, ஏறக்குறைய, பன்னிரண்டு வயதாகும்போது அவருடைய அன்புக்குரிய அன்னை காலமானார்.
பெற்றோரை இழந்த விசுவநாதர், தந்தையின் சகோதரரான காளி பிரசாதரின் வீட்டில் வளர்ந்தார். விசுவநாதருக்குச் சேர வேண்டிய சொத்துகளைக் காளி பிரசாதர் பெருமளவில் அபகரித்துக் கொண்டார். ஏமாற்றப்படுகிறோம் என்பதை அறிந்த போதும் விசுவநாதர் தன் சிற்றப்பாவிடம் மதிப்புடன் நடந்துகொண்டு அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து வந்தார்.
விசுவநாதர் அக்காலத்தில் நிலவிய இந்து, இஸ்லாமிய மற்றும் மேலை நாட்டுப் பண்புகளின் ஒருவகை கலப்புப் பண்பாட்டைத் தழுவி நடந்து கொண்டார். புதிய பண்பாட்டைத் தழுவியதாகத் தன் வாழ்வை அவர் அமைத்துக் கொண்டார்,. ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவராக விசுவநாதர் விளங்கினார். தான் மிகவும் விரும்பிய இசைக் கலையை முறைப்படி ஒரு பாடகரிடம் அவர் கற்று வந்தார். அவரது மறைவுக்குப் பின்னரும், அவருடைய இசை ஆர்வத்தையும், கொடைத் தன்மையையும் கொல்கத்தா மக்கள் நினைவில் வைத்திருந்தார்கள்.
விசுவநாதர் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பதவி செய்து கொண்டார், சட்டத் தொழிலில் அவருக்கு இருந்த திறமை வட இந்தியாவின் பல பகுதிகளிலும் அவரைத் தொழில் காரணமாகப் பயணம் மேற்கொள்ள வைத்தது. பரந்த மனம் படைத்தவரான அவர் பிற மதங்களின் கலாச்சாரத்தையும், இலக்கியங்களையும் ரசிப்பவராக விளங்கினார்.
இந்து மதத்தின் புனித நூல்களை மட்டுமல்லாது பைபிளையும் ஹபீசின் கவிதைகளையும் அவர் படித்தார். உணவு, உடை மற்றும் பழக்க வழக்கங்களில் பழைமை வாதியாக இல்லாமல் பரந்த நோக்கம் கொண்டவராக இருந்தார். இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ நண்பர்களிடம் சரளமாகப் பழகுவார். ஒருமுறை தன் மகன் நரேந்திரனுக்குப் பைபிளைப் பரிசளித்த அவர் கூறினார் இந்த ஒரு நூலில் அனைத்து மதங்களையும் காணலாம்.
விசுவநாதரிடம் குறுகிய எண்ணம் எதுவும் இல்லை. பண்டிதர் ஈசுவர சந்திர வித்யாசாகரின் விதவைகள் மறுமணத் திட்டத்தை அவர் ஆதரித்தார். லாகூரில் ஒருமுறை அன்னை துர்க்காவின் திருவுருவப் படத்தை வழிபட்டதோடு அதில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கி மகிழ்ந்தார்.
சுவாமி சாரதானந்தர் கூறுகிறார்: ஆனால் வேண்டிய அளவு பொருள் ஈட்டுதல், மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் கொடைத் தன்மை-இவையே விசுவநாதரின் வாழ்க்கை லட்சியமாக இருந்தது. உண்மையில், வழக்கறிஞராக இருந்து அவர் ஈட்டிய வருவாய் அனைத்தும் அவரை அண்டியிருந்த பலரைப் பேணுவதற்காகவே பெருமளவில் செலவிடப்பட்டது.
ஏழைகளுக்கும், துன்பப்படுபவர்களுக்கும் நன்கொடை வழங்குவது அவருடைய நோய் என்றே கூறலாம் என்று பின்னர் அவருடைய மகன்களில் ஒருவர் கூறினார். தன் தந்தையைப் பற்றி சுவாமிஜி கூறியதைச் சகோதரி கிறிஸ்டைன் நினைவு கூர்கிறார்:
அவர் கூறினார்: என்னிடம் உள்ள இரக்கம் மற்றும் அறிவு ஆகியவற்றுக்காக என் தந்தைக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். எதற்காகச் செலவழிப்பான் என்று தெரிந்தும் ஒரு குடிகாரனுக்கு எப்படி தன் தந்தை பணம் கொடுப்பார் என்று அவர் கூறுவார்.
அந்தச் செயலை நியாயப்படுத்தி அவருடைய தந்தை கூறுவார் இந்த உலகம் பயங்கரமானது. முடியுமானால் அவன் சிறிது நிமிடங்களாவது உலகத்தை மறந்திருக்கட்டும் அவருடைய தந்தை ஒரு கொடை வள்ளலாக இருந்தார்.
ஒருநாள் வழக்கத்தைவிட அதிகமாகவே எதையும் பொருட்படுத்தாது செலவழிக்கும் மன நிலையில் இருந்த அவரிடம் அவருடைய இளம் வயது மகன் (சுவாமிஜி) கூறினான். அப்பா எனக்கு எதை விட்டு வைக்கப் போகிறீர்கள். அதற்கு அந்தத் தந்தையின் பதில், கண்ணாடி முன் சென்று நில், நான் உனக்கு எதை விட்டு வைத்திருக்கிறேன் என்று தெரியும்.