விவேகானந்தரும் அவரது அன்னையும்
தாய்மையை போற்றுதல் என்பது காலங்காலமாக இந்தியர்களின் ரத்தத்தில் ஊறியிருக்கும் ஒரு பண்பு ஆகும். சுவாமி விவேகானந்தரிடம் இந்த பண்பு முழுமையாக வெளிப்பட்டது. தனது மேலை நாட்டுச் சுற்றுப்பயணங்களின் போது, லட்சியப் பெண்மை என்பது மேலை நாடுகளைப் பொறுத்த வரையில் மனைவி; கீழை நாடுகளைப் பொறுத்த வரையில் அது தாயமை; என்று அவர் கூறியுள்ளார்.
இந்துப் பெண்மணிகள் வளர்த்துக்கொண்டது, தம் வாழ்வின் லட்சியமாக கொண்டது என்று குறிப்பிடக்கூடிய முக்கிய பண்டு தாய்மையே என்றும் அவர் கூறினார். இந்தியக் குடும்பங்களில் ஒரு தாய்க்கு உள்ள இடத்தை கீழ்க்கண்டவாறு அவர் வரையறுத்துள்ளார்:
எங்கள் குடும்பங்களில் அன்னையே கடவுள். இவ்வுலகில் தன்னலம் சிறிதும் அற்ற, உண்மையான அன்பு ஒரு தாயிடம் மட்டுமே இருக்கிறது. அந்த அன்பினால் அவள் எப்போதும் துன்புற்றுக்கொண்டே இருப்பாள். அதே சமயம் எப்போதும் அவள் அன்பை பொழிந்து கொண்டே இருப்பாள். அன்னையிடம் நாம் காணும் அன்பை விட, வேறெந்த அன்பு இறைவனின் அன்புக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்க முடியும்? எனவே ஒரு இந்துவுக்கு இந்த உலகில் தாயே இறைவனின் அவதாரமாகும். சுவாமி விவேகானந்தர் மேலும் கூறினார்.
அவதார புருஷர் ஒவ்வொருவரும் அன்னையை வெளிப்படையாகவோ, மறைமுகமாக÷ வா வழிபட்டு இருக்க வேண்டும். இல்லை யென்றால் அவர் எவ்வாறு சக்தி பெற்றிருக்க முடியும்.
மேலை நாடுகளில் இதைக் கேட்க நேர்ந்த ஒருவர் எழுதினார். தாய் என்பவள் புனிதமானவள். இறைவன் நம் தந்தை என்பதைக்காட்டிலும், இறைவனின் தாய்மைப்பபண்பே விவேகானந்தரின் மனதில் மேலோங்கி இருந்தது. அமெரிக்காவில் உள்ள ஆயிரம் தீவுப்பூங்கா என்னும் இடத்தில் தம் சீடர்களுக்கு சுவாமிஜி கூறினார்.
தெய்வீக அன்னையின் ஒரு சிறு துளியையாவது உலகில் நம் அன்னையிடம் கண்டு வழிபடுவது பெரும் சிறப்புக்களுக்கு வழிவகுக்கும். உனக்கு அன்பும், ஞானமும் வேண்டுமென்றாள் அன்னையை வழிபடு. சுவாமி விவேகானந்தர் தன் வாழ்நாள் முழுவதும், தனது அன்னையை வாழும் தேவியாகவே கண்டு சேவை செய்தார். தனது குருநாதரைப்போன்று, பெண் மற்றும் பொன் மீதான பற்றையும், குடும்பத்தையும் முற்றிலும் துறந்த அந்த துறவியைப்பற்றிய ஒரு புதிய கோணத்தை இது வெளிப்படுத்துகிறது.
துன்பத்தில் உழலும் மனிதர்கள் நிறைந்த இவ்வுலகுடன் நரேந்திரனைப் பிணைக்க அவரது குருநாதர் துண்டிக்கப்படாத ஒரு பிணைப்பை வைத்திருந்தார். தம் வாழ்நாள் முழுவதும் சோதனைகள், இன்னல்கள், ஏழ்மை ஆகியவற்றை பெரும் கண்ணியத்துடன் தாங்கி கொண்ட, தன் தலை மகனானன நரேந்திரரை நாடு முழுவதும் சுற்றியலையும் துறவியாக, மக்கள் நலம் நாடுபவராக, உலக ஆசானாக இவ்வுலகிற்கு வழங்கிய தம்முடைய அன்னையான புவனேசுவரி தேவியிடம், சுவாமி விவேகானந்தர் கொண்டிருந்த என்றும் மாறாத அன்பும், பொறுப்புணர்ச்சியுமே அந்தப்பிணைப்பு.
தன் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் சுவாமி விவேகானந்தர் கேத்ரி அரசருக்கு பேலூர் மடத்திலிருந்து 22 நவம்பர் 1898 அன்று இவ்வாறு கடிதம் எழுதினார்:
மிக முக்கியமான எனது சொந்தப்பிரச்சனை ஒன்றைக்குறித்து நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். என் மனத்தில் உள்ளதை உங்களிடம் திறந்து சொல்ல எனக்கு எந்த வெட்கமும் இல்லை. இந்த வாழ்க்கையில் உங்களை மட்டுமே நான் என்னுடைய நண்பராக கருதுகிறேன்.
……என் மனதை அரித்துக்கொண்டிருக்கிற மகா பாவம் ஒன்று உள்ளது. உலகத்திற்கு சேவை செய்வதற்காக நான் என் தாயை வருந்தத்தக்க விதத்தில் புறக்கணித்ததே அது. ….எனவே இனி சில வருடங்களாவது என் தாய்க்கு சேவை செய்ய வேண்டும் என்பது என் கடைசி விருப்பமாக உள்ளது. நான் என் தாயுடன் வாழ விரும்புகிறேன். ….இது எனது இறுதி நாட்களையும், என் தாயின் இறுதி நாட்களையும் மனதிற்கு இதமானதாக ஆக்கும். அவர் இப்போது ஒரு சிறு குடிசையில் வசிக்கிறார். அவருக்கு அடிப்படை வசதிகள் கொண்ட ஒரு சிறிய வீடாவது கட்டுவதற்கு விரும்புகிறேன்.
……….ஸ்ரீராமனின் ராஜ பரம்பரையில் வந்த ஒருவர் தாம் நேசிக்கின்ற, தாம் நண்பன் என்று அழைக்கின்ற ஒருவருக் ஏதாவது செய்வது பெரிய காரியமா? வேறு யாரிடம் கேட்பது என்று எனக்கு தெரியவில்லை. ஐரோப்பாவிலிருந்து கிடைத்த பணம், பணிக்காக தரப்பட்டது. ஏறக்குறைய அதன் ஒவ்வொரு பைசாவும் கொடுக்கப்பட்டு விட்டது. எனக்காக வேறு யாரிடமும் கேட்கவும் என்னால் இயலாது.
எனது குடும்ப விஷயங்களை உங்களிடம் மனம் திறந்து கூறி விட்டேன். இது வேறு யாருக்கும் தெரியக்கூடாது. நான் களைத்து விட்டேன். இதயம் துவண்டு விட்டது. உயிர் ஓய்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் எனக்கு எவ்வளவோ தாராளமாக செய்திருக்கிறீர்கள். இந்த ஒன்றையும் கூட செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தம் அன்னையிடம் சுவாமிஜி கொண்டிருந்த மனம் கனித்த அன்பை சிறப்பாக எடுத்துக்காட்டும் கடிதங்களில் இது ஒன்றாகும். அன்பின் அவதாரம் சுவாமிஜி. இக்கடிதத்திலுள்ள ஒவ்வொரு சொல்லிலும், எண்ணத்திலும், உணர்ச்சியலும் தன் அன்னையிடம் அவருக்கு இருந்த உளம் கனிந்த அன்பு சொட்டு சொட்டாய் ஊறியிருக்கிறது என்றே கூறலாம். எஃகின் உறுதியும், மலரின் மென்மையும் ஒன்றிணைந்த அரியதொரு கலவை அவரிடம் இருந்ததை இக்கடிதத்தின் மூலம் அறிய முடிகிறது.
சுவாமி விவேகானந்தரும், கேத்ரி அரசர் அஜீத் சிங்கும் மனப்பூர்வமான அன்பு பூண்டவர்களாக இருந்தனர். முதன் முதலில் கேத்ரிக்கு சென்ற போது, சுவாமிஜி அஜீத்சிங்குடன் இரண்டரை மாதங்கள் தங்கி இருந்தார்.
நான் கேத்ரி அரசரை சந்திக்காமலிருந்தால், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு என்னென்ன செய்தேனோ, அவற்றையெல்லாம் செய்திருக்க முடியாது என்று கேத்ரியில், 17 டிசம்பர் 1897 அன்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் சுவாமிஜி கூறினார். மேலும், முன்ஷி ஜக்மோகன்லாலுக்கு 11 அக்டோபர் 1897 அன்று எழுதிய கடிதத்தில் சில குறிப்பிட்ட மனிதர்கள், குறிப்பிட்ட சில சமயங்களில், குறிப்பிட்ட செயல்களை செய்ய பிறக்கின்றார்கள்.
அஜீத்சிங்கும் நானும் அப்படிப்பட்ட ஆன்மாக்கள். மனித இனத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற பெரும் பணியை நிறைவேற்ற ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கின்றோம் என்று அஜீத்சிங்கை பற்றி சுவாமிஜி எழுதியுள்ளார்.
கேத்ரி அரசரிடம் சுவாமிஜிக்கு இருந்த நெருக்கம் மற்றும் மனம் நிறைந்த நட்பு ஆகியவற்றின் பின்னணியில் காணும் போது தான், சுவாமிஜி எவ்வாறு அவரிடம் தன் அன்னைக்கு உதவி கோரும் இத்தகைய வேண்டுகோளை விடுத்திருப்பார் என்பது புரிகிறது. சுவாமிஜியுடைய கடிதத்தில் எதிரொலிக்கும் ஏக்கம், மற்றும் ஆழ்ந்த உணர்ச்சிகளினால் மனம் நெகிழ்ந்த கேத்ரி அரசர், உடனடியாக அவருடைய அன்னைக்கேற்ற ஒரு வீட்டின் செலவுகளுக்கு தேவைப்படும் தொகையைப்பற்றிய விபரம் கேட்டு சுவாமிஜிக்கு கடிதம் எழுதினார். டிசம்பர்1, 1898ல் சுவாமிஜி அரசருக்கு பதில் கடிதம் அனுப்பினார்:
நான் மேலும் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். முடிந்தால் என் அன்னைக்க நிரந்தரமாக மாதம் ரூ.100 மட்டும் கொடுக்க வேண்டும். என் மரணத்திற்கு பின்னும் அது தொடர வேண்டும். மேலும் மதிப்பிற்குரிய தங்களின் அன்பும் கருணையும் என்மீது எக்காரணத்தினாலாவது குறைந்தாலும், ஒரு காலத்தில் ஒரு ஏழைச் சாதுவிடம் தாங்கள் கொண்டிருந்த அன்பை நினைவில் கொண்டு என் எளிய தாய்க்கு அந்த உதவியை தொடர வேண்டும்.
இந்த கடிதத்தை பெற்றவுடன் கேத்ரி அரசர் சுவாமிஜிக்கு 500 ரூபாய் உடனடியாக அனுப்பி வைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களினால் வீடு கட்டுவது கைவிடப்பட்டது.சிலகாலத்திற்கு பின்னர் சுவாமிஜி 5000 ரூபாய் கடன் பெற்று தன் சித்தியிடமிருந்து ஒரு வீட்டை விலைக்கு வாங்கினார். ஆனால் அவரது சித்தி வீட்டு உரிமப் பத்திரத்தை தர மறுத்ததுடன், சுவாமியை முற்றிலும் ஏமாற்றி விட்டார்.