Home » பொது » ராகேஷ் ஷர்மா இந்திய விண் நாயகன்!!!
ராகேஷ் ஷர்மா இந்திய விண் நாயகன்!!!

ராகேஷ் ஷர்மா இந்திய விண் நாயகன்!!!

ராகேஷ் ஷர்மா இந்திய விண் நாயகன்:

விண்வெளியில் பறந்த முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர் ராகேஷ் சர்மா! இந்த விஞ்ஞான சாதனை 1949இல் இதே நாளில் (ஜனவரி 13) பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பிறந்தவர் ராகேஷ் சர்மா.

1961ம் வருடம். விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் என்ற பெருமைக்குரிய ரஷ்ய நாட்டுக்காரரான யூரி காகரின் ஹைதராபாத் வந்திருந்தார்.

அவருடன் பள்ளி மாணவர்களது சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிறையப் பேர் காரிகனுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்ளவும் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கவும் போட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் அந்த கூட்டத்திலிருந்து சற்றுத் தள்ளி ஒரு சிறுவன் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தான்.

ஆனால் பிற்காலத்தில் தானும் விண்வெளிக்குச் செல்லப்போகிறோம் என்பதோ, இதேபோல ஏராளமானவர்கள் தன்னை ஆட்டோகிராஃப் கேட்டு மொய்க்கப்போகிறார்கள் என்றோ அவனுக்கே தெரியாது.


அந்தச் சிறுவன்தான் ராகேஷ் சர்மா, பிற்காலத்தில் விமானப் படையில் சேர்ந்து ஸ்குவாட்ரன் லீடர் ஆகி விண்வெளிக்குச் சென்று திரும்பிய சாதனையாளர்.

1984 ஏப்ரல் 3ஆம் நாளன்று சோவியத்துடன் இணைந்து இந்தியா மேற் கொண்ட – விண்வெளிப் பயணத்தில் (சோயுஸ்டி – 11) பங்கு கொண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1984ல் அவர் இந்திய விமானப்படையில் பணியாற்றிக்கொண்டிருந்த சமயத்தில்தான் விண்வெளிப் பயணத்துக்குத் தெர்ந்தெடுக்கப்பட்டார். விண்வெளிக்குச் சென்று திரும்பிய முதல் இந்தியர் ராகேஷ் சர்மாதான் என்றபோதிலும் உலகின் 138வது விண்வெளி வீரர் அவர். ருஷ்ய அரசாங்கம் அவருக்கு “ஹீரோ ஆஃப் சோவியத் யூனியன்” விருதளித்து கௌரவித்தது.

இந்திய அரசு அவருக்கு ‘அசோக் சக்ரா’ விருது வழங்கியது. விமானப் படையிலிருந்து விங் கமாண்டர் ஆக ரிடையர் ஆன ராகேஷ் சர்மா அதன் பிறகு ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் நாசிக் பிராந்தியத்தில் சீஃப் டெஸ்ட் பைலட்டாகப் பணியாற்றினார்.

1984ல் விண்வெளிப் பயணம் முடித்துவிட்டு இந்தியா திரும்பிய ராகேஷ் சர்மாவும், ராகேஷ் சர்மாவால் கடைசி நிமிடத்தில் விண்வெளிக்குப் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அவருக்குப் பதிலாக விண்வெளிக்குச் செல்லத் தயார் செய்யப்பட்டவரான ரவீஷ் மல்ஹோத்ராவும் சென்னை வந்திருந்தார்கள். அவர்களைத் தாம்பரம் விமானப் படைத் தளத்தின் ஆஃபீசர்ஸ் மெஸ்ஸில் தாம்பரம் விமானப்படையினரது குடும்பத்தினர் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கே ராகேஷ் சர்மாவும், ரவீஷ் மல்ஹோத்ராவும் பத்திரிகையாளர்களையும் சந்தித்தார்கள். “ராகேஷ் விண்வெளியில் பறந்துகொண்டிருந்த சமயம் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?” என்று ரவீஷிடம் ஒரு நிருபர் கேட்டபோது, ” பூமியில் இருந்த கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து விண்கலத்தையும் ராகேஷையும் கவனித்துக் கொண்டிருந்தேன்” என்றார்.

இடையில் புகுந்த ராகேஷ் சர்மா “விண்வெளியில் தன்னந்தனியாக பறந்துகொண்டிருந்த சமயத்தில் நம்முடைய நெருங்கிய சகா ஒருவர் பூமியிலிருந்து சதா தன்னைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார் என்ற எண்ணமே எனக்கு மிகுந்த மனோதைரியத்தைக் கொடுத்தது” என்றார்.

“எங்களுக்கு ஏதாவது ஒரு யோகா செய்து காட்டுங்களேன்” என்று ஒருவர் ராகேஷ் சர்மாவிடம் கேட்டதற்கு அர்த்தம் உண்டு. காரணம், விண்வெளி நிலையத்தில் ராகேஷ் சர்மா சில யோகா பயிற்சிகளைச் செய்தார். “விண்வெளியிலேயே இருக்கச்சொன்னால் இருந்துவிடுவீர்களா?” என்று ராகேஷ் சர்மாவிடம் ஒருவர் கேட்டபோது ” நோ! பூமியில் வசிக்கவும் விண்வெளிக்குச் சென்று வரவும் பிரியப்படுகிறேன்” என்று பதிலளித்தார்.

தாம்பரத்திலிருந்து புறப்பட்டு வள்ளுவர் கோட்டம்வரை திறந்த ஜீப்பில் ராகேஷ் சர்மாவும் ரவீஷ் மல்ஹோத்ராவும் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்கள். வழி நேடுக சாலையின் இரண்டு பக்கங்களிலும் மக்கள் நின்று கை அசைத்து அவர்களை உற்சாகமூட்டினார்கள். பலருக்கும் இரண்டு பேரில் யார் ராகேஷ் ? யார் ரவீஷ்? என்று அடையாளம் தெரியவில்லை. இரண்டு பேருமே விமானப்படைச் சீருடையில் இருந்தார்கள். பார்வையாளர் ஒருவர் சட்டென்று அடையாளம் சொன்னார்: “மீசை இல்லாதவர் ராகேஷ்; மீசை வைத்திருப்பவர் ரவீஷ்.”

வள்ளுவர் கோட்டத்தில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் விண்வெளி வீரர்களுக்குப் பாராட்டு விழா. ராகேஷ், ரவீஷ் இருவரும் சின்ன உரையாற்றினார்கள். அவர்களது பேச்சைத் தமிழில் மொழி பெயர்த்துச் சொன்ன அவ்வை நடராஜன், ராகேஷ் சர்மா, ரவீஷ் மல்ஹோத்ரா இருவரிடமும் ஒரு புதிர் போட்டார்.

“ராகேஷ் சர்மாவுக்கு முன்னதாகவே எங்கள் முதலமைச்சர் ஒரு விண்வெளிவீரர்” என்று சொல்லி அவர்களுக்கு மட்டுமின்றி அவையினரருக்கும் சஸ்பென்ஸ் கொடுத்தார். அவரே சஸ்பென்சையும் உடைத்தார்: “பல வருடங்களுக்கு முன்னால் கலையரசி என்ற திரைப்படத்தில் எங்கள் முதலமைச்சர் விண்வெளி வீரராக நடித்திருக்கிறார்” என்றபோது அதை எம்.ஜி.ஆர்.கூட ரசித்தார்.

அன்று இரவு எட்டு மணிக்கு விண்வெளி வீரர்களுக்கு ராஜாஜி ஹாலில் தமிழக அரசின் சார்பில் ஒரு விருந்துக்கு ஏற்பாடாகி இருந்தது. பத்திரிகையாளர்கள் உள்படச் சுமார் 400 பேர் கலந்துகொண்டார்கள். விருந்தின் முடிவில் விண்வெளி வீரர்களுக்கு நினைவுப் பரிசாக நடராஜர் சிலையும் தஞ்சாவூர்த் தட்டும் வழங்கப்பட்டது. அவர்களின் திருமதிகளுக்குப் பட்டுப் புடைவையும், அவர்களின் குழந்தைகளுக்கு எல்காட் கைக் கடிகாரமும் பரிசளிக்கப்பட்டது.

ராகேஷ் சர்மா ரிடையர்மென்ட்டுக்குப்பிறகு இப்போது நீலகிரி மாவட்டம் குன்னூரில் செட்டில் ஆகிவிட்டார். இன்றைக்குக்கூடக் கல்லூரிகளில் அவரைப் பேச அழைக்கிறார்கள். அவரிடம் பலரும் கேட்கிற ஒரு கேள்வி: “விண்வெளியிலிருந்து இந்தியாவைப் பார்த்தபோது எப்படித் இருந்தது?” அன்றும், இன்றும், என்றும் அவர் சொல்லும் பதில்: “சாரே ஜஹான் சே அச்சா!” அப்புறம் இன்னொன்றும் சொல்கிறார். ”முதல் நாள் இந்தியாவைப் பார்த்தேன். அடுத்தடுத்த நாள்களில் ஒட்டு மொத்த உலகமும் என் தாய் நாடு போலத்தான் உணர்ந்தேன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top