லால் பகதூர் சாஸ்திரி
‘சாஸ்திரி’ என்றாலே லால் பகதூர் சாஸ்திரி என்று சொல்லி விடுகிறோம். சாஸ்திரி என்பது மெஞ்ஞான பாடத்தில் முதல் மாணவனாக பெற்ற பட்டமே சாஸ்திரி என்பது, அதுவே இன்று வரை லால்பகதூரின் புகழாய் நிலைத்து நிற்கிறது.
தொடக்கத்தில் பால கங்காதர திலகரைப் போற்றி அவர் வழி நடந்தவர் 1921ல் ஒத்துழையாமைப் போராட்டங்களுக்குப் பின்னர் காந்திஜியை பின்பற்றத் தொடங்கினார். சாதி முறையை எதிர்த்த இவர், தன் பெயரில் இருந்த ஸ்ரீவஸ்தவா என்ற பெயரை நீக்கினார். 1926ல் காசி வித்யாபீடத்தில் மெய்ஞானப் படிப்பை முடித்த பிறகு சாஸ்திரி பட்டம் பெற்றார். இதுவே பெயருடன் இணைந்து விட லால் பகதூர் சாஸ்திரியானார்.
1921ம் ஆண்டு மணமுடித்த போது, இவரது ஊரில் அந்தக் காலங்களில் பெரும் வரதட்சணை வாங்கும் பழக்கம் இருந்த போது, இவர் கதர்த் துணியையும், இராட்டையையும் மட்டுமே வரதட்சணையாக வாங்கிக் கொண்டார்.
1926 ல் தேசியத் தலைவரான லஜபதி ராய் துவக்கி, நடத்தி வந்த மக்கள் பணி சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். அச்சங்கத்தில் சேர ஒரு நிபந்தனை இருந்தது. பணியில் சேர்ந்தால் 20 ஆண்டுகள் பொதுப்பணி புரிய வேண்டும். தூய, எளிய வாழ்க்கை நடத்த வேண்டும்.
உப்புச் சத்தியாக்கிரகப் போரில் கலந்து கொண்டு சிறையிலிருந்த போது அவரது மகள் உடல் நலம் குன்றி இருந்தமையால் அவருக்கு இருபது நாட்கள் விடுப்புக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். விடுப்புக் காலம் முடியும் முன்னர், மகள் இறந்து விடவே காரியங்களை முடித்து மறுநாள் (விடுப்புக் காலம் முடியும் முன்னரே) சிறைக்குத் திரும்பினார்.
அதே போன்று மற்றொரு சமயம் மகனுக்கு உடல் நலமின்மைக் காரணமாக ஒரு வார விடுப்பில் வந்தவர், விடுப்பு முடியும் தருவாயிலும் மகனுக்கு சரியாகாதபோதும் சிறைக்குத் திரும்பினார்.
கட்சிப் பொறுப்பிலிருந்த போது இவரது குடும்பச் செலவுக்காக கட்சியிலிருந்து மாதம் நாற்பது ரூபாய் கொடுக்கப்பட்டு வந்தது. தனது மனைவி இதில் ஐந்து ரூபாய் மிச்சம் பிடிக்கிறார் என்பதை அறிந்த சாஸ்திரி அடுத்த மாதத்திலிருந்து தனது சம்பளத்தை ரூ. 35ஆகக் குறைத்துக் கொண்டார்.
1936ல், லால்பகதூர் சாஸ்திரி, அலகாபாத் நகரசபையில் உறுப்பினராக இருந்தார். அப்போது, நகரசபை, அங்குள்ள நிலங்களை வாங்கி, காலி மனைகளாக மக்களுக்கு விற்றது.சாஸ்திரியின் நண்பர், அவருக்குத் தெரியாமல், தனக்கும், சாஸ்திரிக்கும் காலி மனைகளை வாங்கினார்.
1930 ல் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக பேசி இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். பின்னர் காந்தியடிகள் நடத்திய எல்லா போராட்டங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று ஓராண்டு சிறைத்தண்டனையும்,வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் இரண்டாண்டு சிறைத்தண்டனையும் அனுபவித்தார்.
தனக்கென்று எந்த வேலையையும் தேடிக்கொள்ளாமல் மக்கள் பணிச்சங்கம் அளித்த 60 ரூபாயில் குடும்பத்தை நடத்தினார்.
இந்திய விடுதலைக்காகப் பல போராட்டங்களில் கலந்துக் கொண்டு கைதான இவர் தன் வாழ்நாளில் 9 வருடங்களைச் சிறையில் கழித்தார். இந்திய விடுதலைக்குப் பிறகு உத்திரப் பிரதேச மாநிலத்தின் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரது காலத்தில் தான் இந்தியாவில் முதன் முறையாக பெண் நடத்துனர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். 1951ஆம் ஆண்டு நேருவின் அமைச்சரவையில் ரயில்வே மற்றும் போக்குவரத்து மந்திரியாக நியமனமானார்.
சாஸ்திரி ரயில்வே அமைச்சராக இருந்தபோது, மதுரையில் நடக்கவிருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார். மதுரையில் அவர் தங்குவதற்கு, ரயில் நிலையத்திலேயே உள்ள விடுதியில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தை விட சீக்கிரமே ரயில் மதுரையில் சேர்ந்ததால் அவரை வரவேற்க ஒருவரும் வந்திருக்கவில்லை.
ரயிலைவிட்டு இறங்கிய சாஸ்திரி, விசாரித்துக்கொண்டு, தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கு சென்ற போது அங்கே நின்றிருந்த காவலாளி அமைச்சருக்காக ஒதுக்கப்பட்ட அறையில் பிறரை அனுமதிக்க முடியாது என்று கூறி அனுமதி மறுத்து விட்டார். தான்தான் அந்த அமைச்சர் என்று சாஸ்திரி எடுத்துச் சொல்லியும், காவலாளி அசையவில்லை.
இதற்குள், விவரம் அறிந்துகொண்டு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் அங்கு வந்து சாஸ்திரியை அழைத்துச் சென்றனர். இவ்வளவு குழப்பத்துக்கு இடையிலும் சாஸ்திரி அந்தக் காவலாளியின் கடமை உணர்வை பாராட்டிவிட்டுச் சென்றார்.
சில மாதங்களுக்குப் பிறகு நிகழ்ந்த அரியலூர் ரயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகினார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு உள்துறை அமைச்சரான சாஸ்திரி, இக்காலகட்டத்தில் மலிந்திருந்த ஊழலுக்கெதிரான பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1964ல் நேருவின் மரணத்துக்கு பின் காமராசரால் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
பிரதமராக பொறுப்பேற்றபின் இந்தியாவின் விவசாயப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இயன்றவர்கள், வார நாட்களில் ஒரு வேளை உணவை விலக்கி உண்ணாவிரதம் இருந்தால் நாட்டில் பல கோடி ஏழைகள் சாப்பிட முடியும் என்று அறிவுறுத்தினார்.
1965ம் ஆண்டு பாகிஸ்தானின் காஷ்மீர் ஆக்கிரமிப்பை எதிர்த்து பல முறை எச்சரித்தும் எடுபடாததால் அந்நாட்டுடன் போர் தொடுத்து ஆக்கிரமிப்பைத் தடுத்தார். இப்போரின் போது, உணவுத் தட்டுப்பாட்டைப் போக்க, இவர் எழுப்பிய ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ முழக்கம் பெரும் எழுச்சிப் பெற்றது.
இந்தியாவில் ஏற்பட்ட ‘பசுமை புரட்சி’யின் விளைவால் பல கிராமங்கள் அழிவிலிருந்து மீண்டு வந்தன. அதே போன்று இவர் ‘வெண்மைப் புரட்சி’ எனும் பால் பண்ணைப் பொருட்கள் உற்பத்தியைப் பெருக்கவும் வழிவகுத்தார். 1965 செப்டம்பர் மாதம் ரஷ்யாவின் தலையீட்டால் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
1964 ஆம் ஆண்டு ஜூன் 2 – ஆம் நாளில் இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 1966 ஜனவரி 10 – ஆம் நாள் ரஷ்யாவின் தாஷ்கண்டில் நடைபெற்ற இந்திய பாக்கிஸ்தான் சமரச பேச்சின்போது நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்தது வரை ஒன்றரை ஆண்டுகளே பிரதமராக இருந்தாலும் அவர் புகழ் ஓங்கி நிற்கிறது. அவரது எளிமை, நேர்மை, உண்மை, உழைப்பு, தியாகம் ஆகியவையே குன்றா புகழை தேடித்தந்துள்ளது.
நாடு சுதந்திரம் பெற்றபோது 1947 – ல் போக்குவரத்துத் துறை அமைச்சரானார். 1952 ல் ரயில்வே அமைச்சரானார். 1957 – ல் செய்தித்துறை,போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், 1961 – ல் உள்துறை அமைச்சராகவும் ஆனார். 1965 – ல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரின் போது பாரதத்தின் பிரதமராக விளங்கிய லால் பகதூர் இந்திய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி வெற்றிக் கண்டார். தன் வாழ்வு பற்றி கவலைப் படாது பாரதத்தின் நல் வாழ்வுக்காக உழைத்த அந்த உத்தமரை நினைவில் கொள்வோம்.