Home » பொது » ஷாஜகான்!!!
ஷாஜகான்!!!

ஷாஜகான்!!!

துருக்கிய வீரனுக்கும், மங்கோலிய பெண்ணிற்கும் கலப்பு திருமணம் நடந்தேறியது, இந்த தம்பதிகளுக்கு பிறந்தவன்தான் பாபர், இந்த பாபர் மிகப்பெரிய வீரனாக வளர்ந்து, டெல்லியை தலைமையாகக் கொண்ட மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பினான், இவன் எட்டு பெண்களை திருமணம் செய்தானாம், திருமணம் செய்யாமலேயே பல தென் ஐரோப்பிய அழகிகளும் அந்தபுரங்களில் வசித்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இவனுக்கு பிறந்தது பதினேழு குழந்தைகள் என்றாலும் அதில் எட்டு எமலோகம் சென்றுவிட்டதாம். இந்த துருக்கி வீரனுக்கும் மங்கோலிய பெண்ணிற்கும் பிறந்த பாபர் இனத்தை மொகலாயர்கள் என்றே அனைவரும் விளித்தார்களாம்.

பாபருக்கு பிறகு பாபரின் மகன் ஹூமாயூன், தனது தலைமையில் டெல்லியை ஆட்சி செய்தான், இவனும் மது மாதுகளின் மீது மிகுந்த போதைகொண்ட மன்னனாகவே இவரது போக்கையும் வரலாறு கூறி இருக்கிறது, பாபரைபோல் திறமையான ஆட்சியினை இவன் மேற்கொள்ளவில்லை என்றாலும், பல சோதனைகளையும் வென்று தனது ஆட்சியை நிலைநாட்டியதாக வரலாறுகள் கூறுகின்றன, மேலும் இவனுக்கு இரக்ககுணம் மிகுந்து காணப்பட்டதாம், அதாவது யார் காலில் விழுந்து மன்னிப்பு கோரினாலும் உடனே இவன் மனம் இறங்கிவிடுமாம்.

ஹூமாயூன் இறந்த பிறகு அவரது மகன் அக்பர் 1556 பிப்ரவரி 14 லில் அரியணை ஏறினான். அக்பர் பற்றி நீங்கள் எல்லோரும் அறிந்து இருப்பீர்கள், அதோடில்லை அக்பரோடு இருந்த பீர்பால் பற்றியும்கூட அறிந்து இருப்பீர்கள்.

அக்பருக்கு சலீம் என்கிற ஜஹாங்கீர், முராத், தானியேல் என்கிற மகன்களும் இருந்தார்களாம். அக்பருக்கு பிறகு ஆட்சியைப் பிடித்தவன் ஜஹாங்கீர் ஆகும். இவன் இருபது கல்யாணம் செய்துகொண்டவனாம், முந்நூறுக்கும் மேற்பட்ட அழகிகள் அந்தபுரங்களை ஆக்கிரமித்து இருந்தாக வரலாறுகள் பேசுகின்றன.

சலீம் என்கிற ஜாஹன்கீருக்கு முதலில் குஸ்ரு என்றமகனும், அடுத்து குர்ரம் என்ற மகனும் பிறந்தார்களாம். இந்த குர்ரம்தான் இன்று நமது கட்டுரையின் நாயகன். ஆம் இந்த குர்ரம் தான் அந்த தாஜ்மஹாலை கட்டி எழுப்பிய ஷாஜஹான்.

ஜஹாங்கீர்கு அடுத்தபடியாக, ஆட்சிக்கட்டில் ஏறியவன்தான் ஷாஜஹான்.இவன் தனது பாட்டன் அக்பரைபோல திறமையாக ஆட்சி நடத்தியதாக சில வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

டெல்லியை தலைநகரமாகக் கொண்டு ஒருகுடையின்கீழ் பல நகரங்களை திறமையாக ஆண்டுகொண்டு இருந்தான் ஷாஜஹான். பாபரில் இருந்து தொடங்கிய இந்த மொகலாய ஆட்சி ஆளுமை செம்மையாக நீண்டுகொண்டு இருந்தது. மொகலாயர்கள் இந்தியாவில் நுழைந்து, இந்தியாவை ஆள தொடங்கியபிறகு, இஸ்லாமிய இனம் நல்ல வளர்ச்சியை கண்டது. இவர்களை எதிர்த்து இந்திய குறுநில மன்னர்களால் எதுவுமே செய்ய இயலவில்லை.

மொகலாயர் ஆட்சியில், அரண்மனையில் வருடத்திற்கு ஒரு முறை சந்தை வளாகத்தை ஏற்படுத்தி, அங்கே பலப் பெருட்களை வைத்து விற்பனை செய்யும் வழக்கம் அரசகுல பெண்களிடம் இருந்து வந்ததாம். அப்படிதான் அன்றும் ஒருநாள் சந்தை நடந்துகொண்டு இருந்தது, சந்தையைக்காணச் சென்ற ஷாஜஹான் அங்கே சந்தைக்கு வந்த ஒரு கிளியை கண்டுவிட்டான், அப்பொழுதே மனதை அவளிடம் இழந்துவிட்டான்.

அந்த கிளியின் பெயர் அர்ஜுமான் பானு பேகம் என்பதாம், அர்ஜுமான் பானு பேகத்தின் அழகில் அசந்துபோன நம்ம ஷாஜகான். தனது தந்தை ஜஹாங்கீரின் சம்மதத்தோடு திருமணம் செய்துகொள்கிறான். திருமணத்திற்கு பிறகு அந்த அர்ஜுமான் பானு பேகம் மும்தாஜ் என்று அழைக்கப்படுகிறாள்.

தனது மனைவி மும்தாஜ் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தான் ஷாஜஹான். உடலாகவும் உயிராகவும் இருவரும் இல்லறவாழ்க்கையை இன்பமாக அனுபவித்தனர். இருவரும் நண்பர்களைப்போல பழகினார்கள். அரச ரகசியங்களையும், அரியணை இயக்கங்களையும் தினமும் தனது மனைவியிடம் பகிர்ந்துகொள்வது ஷாஜகானின் வழக்கம். அதேபோல் ஷாஜகான் எங்கு சென்றாலும் மும்தாஜ் அவனோடு செல்வது வழக்கம். ஷாஜகானை பிரிந்து மும்தாஜ் தனியாக இருந்ததில்லை என்றே கூறலாம். இப்படி அன்பும் பாசமும் நேசமுமாய் இருந்த அந்த தம்பதியரின் வாழ்க்கைக்கு கிடைத்த மொத்த பரிசு பதினாலு குழந்தைகள். இதில் துருதிஸ்டவசமாக ஏழு எமலோகம் போய்விட்டதாக வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன.

அன்று 1631 ஜூன் 7 ஆம் தேதி, பீஜப்பூர் சுல்தானை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கத்தோடு, அந்தநாட்டின் எல்லைப்பகுதியான ஒரு காட்டில் தனது படை பரிவாரங்களோடு, முகாமிட்டுருந்தான் ஷாஜகான். அப்பொழுது அவனுடன் சென்றிருந்த மும்தாஜ் தனது பதினாலாவது குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் உடம்பு சிலீரால் தூக்கி தூக்கி போட்டதாம், இதைக்கண்ட ஒரு தாதிப்பெண் ஓடிவந்து ஷாஜகானிடம் கூற, பதறிப்போன ஷாஜகான் ஓடிச்சென்று அவளை தூக்கி தனது மடியில் கிடத்தி இருக்கிறான், அடுத்தகணமே மும்தாஜியின் உயிர் உடலைவிட்டு பிரிந்து போனதாம்.

மனைவியின் இழப்பை தாங்கமுடியாமல் கதறி அழுத ஷாஜகான், அந்த இழப்பின் பிடியில் இருந்து மீள இரண்டு வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. தனது இயல்பான அரசர்க்குரிய ஆடை அலங்காரங்களை முற்றிலும் அவன் விரும்பாமல், சாதாரணமாகவே இருந்து வந்தான். அவன் என்னாம் எப்பொழுதும் மும்தாஜ்யையே வட்டமிட்டுகொண்டு இருந்தது. ஒரு நாள் நெருங்கிய சிலரோடு உரையாடிக்கொண்டு இருக்கையில், மும்தாஜ் பற்றி பேசி இருக்கிறார்கள், மனைவியின் நினைவினால் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட ஷாஜகான் அவளுக்காக ஒரு நினைவு மண்டபம் கட்டவேண்டும் என்றாராம், அந்த எண்ணம் மிக வலுவடைந்தது. மும்தாஜ் இறந்த ஓராண்டிற்கு பிறகு தாஜ்மகால் கட்டும்பணி தொடங்கப்பட்டது. பல கட்டிடக்கலை வல்லுனர்களின் கூட்டுமதி நுட்பத்தினாலும், அவர்களின் இருபது ஆண்டுகால உழைப்பினாலும் தாஜ்மஹால் விண்ணோக்கி எழுந்தது நின்றது.

பாரசீகம், ரஷ்யா, திபெத் போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் வைரம், வைடூரியம், முத்து, பவளம், கோமேதம் போன்ற விலைமதிப்பற்ற செல்வங்கள் வாங்கிவந்து தாஜ்மஹாலில் பதிக்கப்பட்டன. ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பில் இருக்கும்பொழுது அந்த செல்வங்கள் எல்லாம் ஆங்கிலேயர்கள் நோண்டி எடுத்துக் போனது இன்னொரு வரலாறு ஆகும்.

ஒரு கணவன் தன் உயிருக்கு உயிரான மனைவிக்கு கட்டிய கல்லறைதான் இந்த உலக புகழ்பெற்ற புனித தாஜ்மஹால் ஆகும். மொகலாயர்களின் ஆட்சியின் காலங்களில் தாஜ்மஹாலுக்குள் செல்ல இஸ்லாமியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக தகவல். இந்த தாஜ்மஹாலை கண்டு பொறாமைகொண்ட ஆங்கிலேயர்கள் இதை இடித்துவிட செய்த சதியில் இருந்து அதிஸ்டவசமாக தப்பிவிட்டதால், இன்று உலக அதிசயங்களில் ஒன்றை நாம் இழந்துபோய்விடாமல் இருக்கிறோம்.

ஆக்ரா கோட்டை அகழியுடன் கூடிய அழகுமிகு கோட்டை. பேரரசன் ஷாஜகான், மகன்  ஔரங்சீப் அவர்களால் இந்த கோட்டையில் சிறை வைக்கப்பட்டு தாஜ்மகாலை பார்த்தே இறந்ததாக சரித்திரம் கூறுகிறது. மழைநீர் சேமிப்பிற்கு சிறப்பான அமைப்புக்களை ஏற்படுத்தி அந்த காலத்திலேயே யமுனை ஆற்றிலிருந்து நீர் கொண்டுவரப்பட்டு மேல் நிலை தொட்டிகளில் நிரப்பி அவற்றிலிருந்து செயற்கை நீருற்றுக்கு நீர் சென்றதாக கல்வெட்டு கூறுகிறது.

இன்றும் இந்த நீர்யேற்று முறை புதிர்தான். ஷாஜகான் ஆக்ரா கோட்டையில் இருந்தபோது யமுனை ஆற்றிலிருந்து வரும் நீரைத்தான் அருந்துவார். ஆற்று நீர் அந்த காலகட்டங்களில் குடிப்பதற்கு ஏற்றதாயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மகனுடன் சண்டையிட்ட  போது அந்த நீர் வரும்  வழியை மகன் ஔரங்சீப் மறித்ததால் வேறு வழியின்றி  ஷாஜகான் ஜூன் 8 – 1658 வருடம் சரண்டைந்ததாக அங்குள்ள கல்வெட்டில் பார்த்தேன். உலக புகழ்மிக்க தாஜ்மகாலை கட்டிய பேரரசன் வீழ்ந்த வரலாற்றின் பின்னால் தண்ணீர்தான் இருக்கிறது என்றால் வியப்பாகத்தான் உள்ளது.

தனது தந்தை ஷாஜகானால், தனக்கு வரப்போகிற ஆட்சி அரியணை, தனது சகோதரனுக்கு போய்விடுமோ என்று எண்ணிய ஒவ்ரங்கசீப் தனது தந்தையை, தந்தை என்றும் பாராமல் சிறையிலடைத்து வைத்துவிட்டு அரசகட்டில் அமர்ந்தான். இந்த ஒவ்ரங்கசீப்தான் ஷாஜகானின் மூன்றாவது மகன் என்பதை கருத்தில்கொள்ள வேண்டும்.

மும்தாஜ் நினைவோடு தனது வாழ்நாளை சிறையில் கழித்த ஷாஜகானுக்கு அனைத்துமே மறுக்கப்பட்டன, அவரது அறையில் தாஜ்மஹாலை பார்பதற்காக மட்டும் ஒரே ஒரு ஜன்னல் திறந்து வைக்கப்பட்டு இருந்தது. எப்பொழுதும் அவர் தனது மனைவி புதைக்கப்பட்ட கல்லறையான தாஜ்மஹாலை ஜன்னல் சிறைகளுக்குள் இருந்து பார்த்து பார்த்து தனது காலத்தை போக்கினார்.

1666 ஜனவரி 22 ஆம்நாள் 74 வயதான அந்த உத்தம புருஷன் இந்த மண்ணுலகைவிட்டு விடைபெற்றார், தனது தந்தை ஷாஜகானையும் அந்த மும்தாஜ் புதைக்கப்பட்ட தாஜ்மஹாளுக்குள்ளே புதைத்தான் ஒவ்ரங்கசீப். இப்பொழுதும் அந்த தாஜ்மஹாலுக்குள் ஒரு உன்னதமான கணவனும் மனைவியும் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள் அமைதியாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top