வீடு, அலுவலகம் இரண்டு இடங்களிலும் வேலை பார்க்கும் பெரும்பாலான பெண்களுக்கு, சூப்பர் வுமன் பிரச்னை உள்ளது. பெண்களில் சிலர் தான் மனதில் முடிவு செய்திருக்கும் லட்சியத்தை அடைவதற்காக போதுமான தூக்கம், சத்துணவு இல்லாமல் கடுமையாக உழைப்பவர்கள். இன்னொரு பிரிவினர் அடுத்தவர் செய்தால் நன்றாக இருக்காது. தான் செய்தால் மட்டுமே பர்பெக்டாக இருக்கும் என்ற எண்ணத்தில் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவர்கள்.
இன்னும் சிலர் மற்றவர்களின் பாராட்டை பெற வேண்டும் என்பதற்காக எல்லா வேலைகளையும் தானே பார்ப்பது. இது மாதிரியான பெண்களில் பெரும்பாலானவர்கள் உடல் நலம் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. உணவில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து வேலை செய்பவர்களுக்கு போதுமான சத்தின்மையால் உடல் சோர்வு ஏற்படும். மேலும் இரும்புச் சத்து குறைபாடு போன்ற பிரச்னைகள் வரும். தானே இழுத்துப் போட்டுக் கொண்டு வேலைகளைச் செய்வதால் அதை யாராவது குறை கூறி விட்டால் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.
மேலும் உழைப்பை யாராவது பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இவர்களுக்கு இருக்கும். சின்னச் சின்ன ஏமாற்றங்கள் கூட இவர்களிடம் பெரிய பாதிப்புகளை உருவாக்கும். எல்லா வேலையும் பர்பெக்டாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் மற்றவர்களது வேலையில் திருப்தியின்றி ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பார்கள். இதன் மூலமும் மன அழுத்தத்துக்கு ஆளாகும் நிலை ஏற்படும். இவர்கள் உடல் நலத்தை முதல் இடத்திலும், வேலைகளை இரண்டாவது இடத்திலும் வைக்க வேண்டும். நேரத்தை சரியாக பிரித்து பயன்படுத்த வேண்டும்.
வேலையை பகிர்ந்து கொடுத்து ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இவர்கள் மன அழுத்தம் அல்லது பதற்றம் ஏற்பட்டால் உடனடியாக மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதன் மூலம் சரி செய்து கொள்ளலாம் என்கிறார் மனநல மருத்துவ நிபுணர் செல்வமணி தினகரன்.
பாதுகாப்பு முறை
இந்தப் பிரச்னை சமாளிக்க ஆலோசனை தருகிறார் உளவியல் நிபுணர் தேவிப்பிரியா.. இப்போதைய லைப் ஸ்டைலை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உடல்நலம், வேலை இரண்டும் முக்கியம்.
வேலைக்கு இடையில் ரிலாக்ஸ் செய்வதற்கு பிடித்த பொழுது போக்கை சேர்த்துக் கொள்ளலாம். குறைவாக சாப்பிட்டாலும் முழுமையான சத்து இருக்கும்படி உணவை மாற்றுவது அவசியம். வீடு, அலுவலகம் இரண்டு இடத்திலும் இருக்கும் பிரச்னைகளை எளிதில் சமாளிக்கும் உக்தியை தனது மனநிலைக்கு தகுந்தபடி உருவாக்க வேண்டும். இது அனுபவத்தில் அல்லது ஆலோசனை பெறுவதன் மூலம் சாத்தியம் ஆகும். தன்னைச் சுற்றியிருக்கும் நெருக்கடிகளைக் குறைத்துக் கொள்வதன் மூலம் ரிலாக்ஸ் ஆகலாம்.
தனது வேலையை பகிர்ந்து கொடுப்பதன் மூலம் டென்ஷனை குறைத்து கொள்ளலாம். பெண்கள் வீட்டில் உள்ளவர்களிடம் தனது பிரச்னைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களும் உதவ வாய்ப்புள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேலைகளை எளிதாக்கிக் கொள்ளலாம். தனது உடல் நலத்தையும், மனநலத்தையும் பாதிக்காத வகையில் வேலைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு லட்சியங்களை எளிதில் அடையலாம்.
வாரம் அல்லது மாதத்தில் ஒருநாள் தனக்கு பிடித்த ஒரு விஷயத்தை மேற்கொள்வது. அது சினிமா, சுற்றுலா அல்லது தூங்குவதாகக் கூட இருக்கலாம். இதன் மூலம் டென்ஷனை குறைத்துக் கொள்ளலாம். பெண்கள் மனநிலையை மாற்றிக் கொள்வதன் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.