மனிதனில் ஏற்கனவே இருக்கின்ற பரிபூரணத்துவத்தை வெளிப்படுத்துவது கல்வி. கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றார் ஒளவையார். கல்வி கல்லாதவர் மிருகத்துக்கு சமம். கல்வி கற்றால் எங்கு சென்றாலும் நமக்கு மதிப்பு உண்டு. ஆனால் சாதாரணமான கல்வியை சுவாமி விவேகானந்தர் எதிர்பார்க்கவில்லை. ஒழுக்கக் கல்வியுடன் கூடிய ஆன்மிகக் கல்வியைத் தான் சுவாமி விவேகானந்தர் எதிர்பார்த்தார். அத்தகையக் கல்வி தான் ஒரு மனிதனை உருவாக்கும்.
கற்க கசடற…
கல்வியை ‘கற்க கசடற’ என்றார் வள்ளுவர். கல்வியானது ஒரு மனிதனை மட்டும் உயர்த்தவில்லை. ஒரு சமுதாயத்தையே மாற்றக் கூடியது. இத்தகைய கல்வி இந்தியாவிற்குத் தேவை என்றார் சுவாமிஜி. கல்வி இல்லாததால் தான் சாதாரண பாமர மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். மற்றும் உயர்ந்தவர் மட்டும் தான் கல்வி கற்க வேண்டும்; தாழ்ந்தவர் கல்வி கற்கக் கூடாது என்ற வேற்றுமை உணர்வு நம்மிடையே இருந்தது. நம்முடைய நாட்டின் பெருங்குறை கல்வி இல்லாதது தான். இதை மாற்ற என்ன வழி என்று யோசித்தார் சுவாமிஜி.
மறுமலர்ச்சிக்கான வழி!
சுவாமி விவேகானந்தர் ஐரோப்பாவில் யாத்திரை சென்றபோதெல்லாம், அங்குள்ள வசதிகளையும், கல்வியையும் கண்டு நம் நாட்டு ஏழைகளின் கல்வி அறியாமையை எண்ணி அழுதுள்ளார். இந்த வேறுபாட்டுக்கு அவர் கண்ட முடிவு மக்களுக்கு கல்வியைப் புகட்டுவது தான். நம் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். சமுதாயச் சீர்திருத்தத்துக்கும் கூட முதலில் செய்ய வேண்டிய கடமை கல்வி அளிப்பது தான்.
நம் தாய்நாடு மீண்டும் எழுச்சி பெற்று புத்துணர்வுடன் கூடிய நாடாக விளங்க வேண்டுமேயானால், சாதாரண பாமர மக்களுக்கு முதலில் கல்வியைப் புகட்ட வேண்டும். நமது பணி முக்கியமாக கல்விப்பணியாக இருக்க வேண்டும். அதிலும் ஒழுக்கம், கல்வியறிவு, ஆன்மிகம் இவற்றைச் சேர்த்து புகட்டினால் கண்டிப்பாக இந்தியா மறுமலர்ச்சி பெற்றே தீரும்.
ஆன்மிகக் கல்வி!
மனிதனில் இருக்கின்ற பூரணத்துவத்தை வெளிப்படுத்துவது தான் கல்வி. கல்வி என்பது என்ன என்றால் அது வெறும் புத்தகப் படிப்போ, அறிவை மட்டும் தேடிக் கொள்வதோ இல்லை. சங்கல்பத்தின் போக்கையும், வெளிப்பாட்டையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பயன் அளிக்குமாறு செய்கின்ற பயிற்சியே கல்வி. சங்கல்பத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டுமென்றால் கல்வியுடன் சேர்ந்த ஆன்மிகம் அதாவது ஆன்மிகக் கல்வி புகட்டப்பட வேண்டும்.
ஒழுக்கக் கல்வி!
கல்வி என்பது ஏராளமான உண்மைகளை மனதில் நிறைப்பது அல்ல. மனதை பூரணமாக்கி முழுவதுமாக அதை அடக்குவதே கல்வியின் நோக்கம். கல்வியின் சாரம் மன ஒருமைப்பாடே தவிர வெறும் தகவலைச் சேகரிப்பது அல்ல. வாழ்க்கையை வளப்படுத்தக் கூடிய, மனிதனை உருவாக்குகின்ற, நல்ல குணத்தை மேம்படுத்துகின்ற, கருத்துக்களை ஜீரணம் செய்யத்தக்க கல்வியே நாம் வேண்டுவது. சிறந்த குணத்தை உருவாக்கக் கூடிய, மனவலிமையை வளரச் செய்யக் கூடிய, அறிவை விரியச் செய்கின்ற, சொந்தக் காலில் நிற்கச் செய்யக் கூடிய கல்வியே தேவை.
ஒழுக்கமும், ஆன்மிகமும் சேர்ந்து கல்வியாக உருமாறும் போது தான் பாரதத் திருநாட்டு மக்கள் விழிப்பு பெறுவர். அப்போது தான் பாரதம் பாருக்கு எல்லாம் நல்ல வழிகாட்டியாக அமையும். சுவாமி விவேகானந்தர் கூறியபடி கல்வியை பாமர ஏழைக்கும் சொந்தமாக்க வேண்டும். ஆதலால், ஏழைகளுக்கு நம்மால் முடிந்த கல்விப் பணியை செய்வோமாக!