இன்றைய நவீன உலகில் சிறியவர் முதல் பெரியவர் வரை குறைவான உழைப்பில் நிறைவான செல்வம் பெற நினைக்கிறோம். இந்தச் சூழலில் எந்த ஒரு மனிதனும் சிறிய தோல்வியைக் கூட தாங்கிக் கொள்ளும் மன தைரியம் இல்லாதவராய் இருக்கின்றனர். பணத்தால் மட்டுமே பலமானவன் என்று நினைப்பது தவறாகும். மனத்தாலும் பலமானவன் என்பதே உண்மையான பலமாகும்.
மனதில் பலமில்லாமல், கோழைத்தனமான மனதுடன் பலவீனமாக இருப்பதால் தான் தற்கொலைகள் என்ற நச்சுக் காற்று வேகமாக வீசி வருகிறது. ஆதலால் பலத்தால் வாழ்க்கை என்பதையும், பலவீனத்தால் மரணம் என்பதையும் சுவாமி விவேகானந்தர் பார்வையில் இங்கு நாம் காண்போம்.
எழுந்திருங்கள், விழித்திருங்கள், விரும்பிய லட்சியத்தை அடையும் வரை நில்லாது செல்லுங்கள். நம் முன்னர் எல்லா வழிகளும் திறக்கின்றன. தைரியசாலியாக இருங்கள்; பயப்படாதீர்கள். நம்முடைய சாஸ்திரங்களில் மட்டுமே கடவுளுக்கு அபீ: அபீ – ‘பயமற்றவர்’ என்ற அடைமொழி தரப்பட்டுள்ளது. நாமும் பயமற்றவர் ஆக வேண்டும்; அப்போது நம் காரியங்கள் நிறைவேறிவிடும்.
எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! ஏனெனில் தாய்நாட்டிற்கு இந்த மகத்தான தியாகம் தேவைப்படுகிறது. இளைஞர்களால் தான் இதைச் செய்ய முடியும். இளமைத் துடிப்பு நிறைந்த, ஆற்றல் மிக்க, வலிமை வாய்ந்த, உரமேறிய உடல் கொண்ட, அறிவு நிறைந்த இளைஞர்களுக்குத் தான் வேலை இருக்கிறது.
உன் எண்ணத்தையும், பேச்சையும் நீ முழுமையாக ஒன்றுபடுத்தி விட்டால், உன் பேச்சும், செயலும் ஒன்றாக இருக்குமெனில், இந்த உலகமே உன் காலடியில் வந்து விழும்.
எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் எண்ணிக் கொண்டிருப்பவனால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. உண்மையானது, நல்லது என்று நீ எதனைப் புரிந்து கொண்டாயோ அதனை உடனே நிறைவேற்று. எதிர்காலத்தில் இது வருமா? வராதா? என்று கணக்குப் பார்ப்பதில் என்ன பயன்? வாழ்க்கை மிகவும் குறுகியது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று கணக்குப் பார்த்து வேலை செய்வதனால் எதையும் சாதிக்க முடியாது. கடவுள் ஒருவர் தான் பலன்களைத் தருவார். அதை அவரிடம் விட்டுவிட்டு எல்லா வேலைகளையும் செய். பலன்களைக் கணக்கிடுவதால் நீ என்ன பெறப் போகிறாய்? அந்த வழியைப் பின்பற்றாதே. எப்போதும் வேலை செய்து கொண்டே இரு.
நமது நாட்டுக்கு இப்போது வேண்டுவது, இரும்பாலான தசையும், எஃகாலான நரம்புகளும், அவற்றுடன் இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளையும், ரகசியங்களையும் ஊடுருவிப் பார்க்கவும், அவசியமானால் அதற்காகக் கடலின் அடியாழம் வரை சென்று மரணத்தையும் நேருக்கு நேராக சாதிக்கக் கூடிய மகத்தான சக்தி வாய்ந்த, யாராலும் தடுக்க முடியாத சங்கல்பமும் தான் நமக்கு இப்போது தேவை.
வலிமை, வலிமை என்பதையே உபநிடதங்களின் ஒவ்வொரு பக்கமும் கூறுகின்றன. நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் இது. நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட ஒரு பெரிய பாடம்: ‘வலிமை, வலிமை, ஓ மனிதா! பலவீனமாக இருக்காதே’. மனித பலவீனங்களே இல்லையா என்று மனிதன் கேட்கின்றான், உண்டு என்று பதிலளிக்கின்றன உபநிடதங்கள். அதனால் அதிக பலவீனத்தால் பலவீனத்தைப் போக்க முடியுமா? அழுக்கால் அழுக்கைப் போக்க முடியுமா? பாவத்தால் பாவம் தொலையுமா? என்று கேட்கின்றன.
‘வலிமை, ஓ மனிதா! வலிமையுடன் எழுந்து நில், வலிமை பெறு!’ என்று அவை சொல்கின்றன. உலக இலக்கியங்களுள் இதில் மட்டுமே ‘அபீ: பயமின்மை’ என்ற வார்த்தை அதிக அளவில் காணப்படுகிறது. வேறு எந்த சாஸ்திரத்திலும் கடவுளுக்கும் சரி, மனிதனுக்கும் சரி இந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை- அபீ: பயமின்மை.
எதையும் கண்டு பயப்படாதீர்கள். நீங்கள் மகத்தான காரியங்களைச் செய்வீர்கள். எந்த விநாடி பயப்படத் துவங்குகிறீர்களோ, அந்த விநாடியில் இருந்து நீங்கள் ஒன்றுமே இல்லாதவர்களாகி விடுகிறீர்கள். உலகத்தில் மிக அதிகமான துன்பங்களுக்கெல்லாம் காரணம் இந்த பயம் தான். இந்த பயம் தான் எல்லா மூட நம்பிக்கைகளுக்கும் காரணம். பயமற்ற தன்மை ஒரு விநாடியில் சொர்க்கத்தைக் கொண்டு வருகிறது.
எனவே எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், குறிக்கோள் அடையப்படும் வரை நில்லாதீர்கள்.
-இவை தான் சுவாமி விவேகானந்தரின் வீர முழக்கங்கள் ஆகும்.
‘அபயம் ப்ரதிஷ்டாம்’ – பயமின்மையின் இருப்பிடம். தன்னைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக உள்ளவன் அடிக்கடி ஆபத்தில் விழுகிறான்; மானம் போய்விடுமோ என்ற பயத்திலேயே உள்ளவன் அவமானத்தையே அடைகிறான்; நஷ்டத்தையே எண்ணி அஞ்சிக் கொண்டிருப்பவன் நஷ்டமே அடைகிறான் – இது தான் நான் வாழ்க்கையில் கண்டது…
உங்கள் அனைவருக்கும் மங்களம் உண்டாகுக! வேலை செய்து கொண்டே இருங்கள்! தைரியமாக இருங்கள்! எதுவானாலும் சரி, துணிவாகச் செய்யுங்கள்.
இவை தான் சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகள்.