Home » சிறுகதைகள் » ஒழுக்கம் அவசியமா?
ஒழுக்கம் அவசியமா?

ஒழுக்கம் அவசியமா?

ஒழுக்கம் என்ற சொல்லே பல இளைஞர்களுக்கு கசப்பான சொல்லாகத் தெரிகிறது. வாழ்க்கையை வாழத் துடிக்கும் வயதில் வாழ்ந்து முடித்த கிழடுகள் தங்களுக்குப் போடும் அனாவசியக் கடிவாளமாக பல இளைஞர்கள் நினைக்கிறார்கள். வாழ்வது ஒரு முறை அதில் அத்தனை அனுபவங்களையும் சுகித்து விட வேண்டாமா என்று நினைக்கிறார்கள். உண்மையில் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை ஒழுக்கத்திற்கு தேவைக்கும் அதிகமாக முக்கியத்துவம் தந்து விடுகிறோமா? விடைக்கு ஒரு கதை…

கதிர் ஒரு கட்டிளங்காளை. மிகவும் ஒழுக்கமானவன். எல்லா விஷயங்களிலும் கட்டுப்பாடுடையவன். தன் உடலை உடற்பயிற்சிகளாலும், யோகாசனங்களாலும் நன்கு பாதுகாக்கிறவன். அவன் ஒரு முறை தங்கள் யோகா வகுப்பினர் நடத்தும் ஒரு சொற்பொழிவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க ஒரு புகழ்பெற்ற மருத்துவரைக் காணச் சென்றான். அந்த மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவரைக் காண அவன் காத்திருந்தான்.

அப்போது அந்த மருத்துவமனைக்கு தள்ளாத வயதுடைய முதியவர் ஒருவர் நுழையக் கண்டான். அந்த வயதிலும் அந்த முதியவர் கைத்தடி எதுவும் இல்லாமல் மருத்துவமனைக்கு தனியாக வந்தது அவனுக்கு வியப்பை அளித்தது. அவர் அவனருகே அமர்ந்தார். மருத்துவரைப் பார்க்க நேரம் அதிகமானதால் பொழுதைப் போக்க இருவரும் பேசிக்கொண்டார்கள்.

அந்த முதியவர் அவனிடம் ஒரு கட்டத்தில் கேட்டார். “நீ புகை பிடிப்பதுண்டா?”

கதிர் பெருமையாகச் சொன்னான். “இல்லை”

அவர் சொன்னார். “நான் தினமும் மூன்று பேக்கட் சிகரெட்டுகள் புகைப்பேன். பன்னிரண்டாம் வயதில் ஆரம்பித்த பழக்கம் அது. நீ மது குடிப்பதுண்டா?”

கதிர் சொன்னான். “இல்லை”

அவர் பெருமையாகச் சொன்னார். “நான் பதினாறாம் வயது முதல் மது குடிக்கிறேன். தற்போது தினந்தோறும் இரண்டு முறை இரண்டு புட்டி மதுவைக் காலையிலும், இரவிலும் குடிப்பேன்.”

கதிருக்கு வியப்பாக இருந்தது.

முதியவர் மிகவும் ரகசியமாகக் கேட்டார். “உனக்கு பெண்களுடன் அனுபவம் எப்படி?”

கதிர் சொன்னான். “எனக்கு இன்னும் திருமணமாகவில்லை…..”

முதியவர் புன்னகையுடன் சொன்னார். “நானும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் பதினெட்டாம் வயது முதல் கணக்கில்லாத பெண்களுடன் உல்லாசமாக இருந்திருக்கிறேன்…..”

முதியவருடன் பேசிக் கொண்டே போனதில் அவருக்கு இல்லாத தீயபழக்கங்கள் இல்லை என்று கதிருக்குத் தெரிந்தது. முதியவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் முழுமையாக அனுபவித்து விட வேண்டும் என்ற வெறியுடன் இருப்பவராகத் தெரிந்தார். எதிலும் எப்போதும் கட்டுப்பாடில்லாமல் அனுபவித்து இத்தனை வருடங்கள் வாழ்ந்த அவர் அவனை ஆச்சரியப்படுத்தினார். ஒவ்வொன்றிலும் கட்டுப்பாடோடு வாழ்ந்ததன் மூலம் நிறைய இழந்து விட்டோமா என்று கூட கதிருக்குத் தோன்ற ஆரம்பித்தது.

“இப்போது எதற்காக மருத்துவரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?” என்று கதிர் கேட்டான்.

சில நாட்களாக மூச்சுத் திணறல், நரம்புத்தளர்ச்சி, பலவீனம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதியவர் கூறினார். இந்த வயதில் இது பெரிய விஷயமல்ல என்று நினைத்த கதிர் ஆவலுடன் அவர் வயதைக் கேட்டான்.

அவர் சொன்னார். “27”

இவ்வளவு நேரம் தன்னுடன் பேசிக் கொண்டிருந்தவர் முதியவரே அல்ல, இளைஞர் தான் என்று தெரிந்த கதிர் அதிர்ச்சி அடைந்தான். இது தான் ஒழுக்கமில்லாத வாழ்க்கையின் முடிவு.

திருவள்ளுவர் ஒழுக்கத்தின் அவசியத்தை ரத்தினச் சுருக்கமாக பல குறள்களில் கூறியுள்ளார். அவற்றுள் சில-

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
(ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதால் அந்த ஒழுக்கம் உயிரையும் விடச் சிறந்ததாகப் போற்றப்படும்)

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பைத் தரும்.
(நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும். தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைத் தரும்)

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அ·தே துணை.
(ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும். பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெரிந்தாலும் உண்மையில் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக நிற்கும்)

இந்தக் குறள்களின் கருத்துகளுக்கு எத்தனையோ உயிருள்ள உதாரணங்களை இன்றும் நம்மால் பார்க்க முடியும். எத்தனையோ அறிவாளிகள், புத்திசாலிகள் கூட ஒழுக்கம் என்ற ஒரு விஷயத்தில் தவறி விட்டு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்க்கையையே கோட்டை விட்டு நிற்பதை நம்மால் காண முடியும். அவர்களை விடக் குறைந்த அறிவிருந்தாலும், குறைந்த கல்வியே பெற்றிருந்தாலும் ஒழுக்கமாக இருப்பவர்கள் எத்தனையோ நிம்மதியாகவும், நிறைவாகவும் வாழ்வதையும் நாம் காணலாம்.

ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருப்பது ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் முடிவில் அது பெரிய பாதுகாப்பு வளையமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே போல் ஒழுக்கமின்மை ஆரம்பத்தில் கிளர்ச்சிகளைத் தரலாம். கடைசியில் அது எத்தனையோ பிரச்னைகளுக்கு வேராக நின்று துன்புறுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை.

ஒழுக்கமான வாழ்க்கை ஏதோ உப்புசப்பில்லாத வாழ்க்கை என்பது போல் சிலர் உருவகப்படுத்தி விடுகிறார்கள். அதில் சிறிதும் உண்மை இல்லை. ஒழுக்கமான வாழ்க்கையில் உண்மையான ஆனந்தத்திற்குக் குறைவில்லை. நல்ல வழியிலேயே இங்கு ஆனந்தம் ஏராளமாக இருக்கிறது. நல்ல இசையிலும், நல்ல புத்தகத்திலும், நல்ல வாழ்க்கைத் துணையிலும் கிடைக்காத ஆனந்தமா புகையிலும், மதுவிலும், தவறான உடலுறவிலும் கிடைத்து விடப்போகிறது? அழகான இயற்கைக் காட்சிகளிலும், மழலைகளின் பேச்சுகளிலும் கிடைக்காத மகிழ்ச்சியா போதையில் கிடைத்து விடப்போகிறது?

மேலும் நல்ல வழிகளில் கிடைக்கும் ஆனந்தம் முடிவில் மனிதனை உயர்த்தி விடுகிறது. தீய வழிகளில் கிடைக்கும் கிளர்ச்சிகள் கடைசியில் மனிதனின் தரத்தை தாழ்த்தி விடுகிறது. இன்னொரு உண்மை என்னவென்றால் ஒழுக்கமாக வாழ்பவன் தான் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தாரையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் கூட நிறைவாக இருக்க விடுகிறான். அதே சமயம் ஒழுக்கமில்லாதவன் தன் குடும்பத்தினருக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும், தீராத மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறான்.

நம்மையும் உயர்த்தி, நம்மைச் சார்ந்தவர்களையும் நிம்மதியாக இருக்க விடும் ஒழுக்கம் மேன்மையா? இல்லை நம்மை சீரழித்து, நம்மைச் சேர்ந்தவர்களைத் துயரத்தில் ஆழ்த்தும் ஒழுக்கமில்லாத வாழ்க்கை தேவையா?

சிந்தித்துப் பார்த்து பதில் சொல்லுங்கள். ஒழுக்கம் அவசியமா? இல்லையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top