கிறிஸ்துவ மதத்தை உலகின் பெரிய மதமாக அறிவிக்க வேண்டும் என்ற ஆசையோடும் அனைத்து மதப் பிரிவுகளையும் சமத்துவமாக ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடும் அமெரிக்காவில் உலக மதங்களின் பாராளுமன்றம் என்ற அமைப்பு ஒரு கூட்டத்தை 1893-ல் ஏற்பாடு செய்தது.
அந்த நேரத்தில் விவேகானந்தர் சென்னையில் இருந்தார். பச்சையப்பன் பள்ளியில் ஆசிரியரான அவரது நண்பர் அளசிங்கர் அமெரிக்க மாநாட்டுக்கு விவேகானந்தர் போகவேண்டும் என்றார். விவேகானந்தர் சம்மதித்தார். ஏதேனும் ஒரு மதப் பிரிவின் பிரதிநிதி என்ற சான்று இருந்தால்தான் மாநாட்டில் பங்கேற்க முடியும்.
அடையாறில் பிரம்ம ஞான சபை இருந்தது. அதன் தலைவரும் அமெரிக்கருமான கர்னல் ஆல்காட் தனது சபையில் சேர்ந்தால் சான்று தருகிறேன் என்றார். விவேகானந்தர் மறுத்துவிடடார். தேவையான பணத்தைத் திரட்ட நடந்த முதல் முயற்சி தோற்றுப்போனது. இரண்டாவது முயற்சியில் விவேகானந்தர் சான்று இல்லாமலேயே அமெரிக்கா போய்விட்டார்.
பரிச்சயம் இல்லாத நாட்டில்
ஆனால் மாநாட்டை ஒருமாதம் தள்ளிவைத்துவிட்டார்கள் என்பது அங்கு போன பிறகுதான் தெரிந்தது. தெரிந்த ஒருவர்கூட இல்லாத அமெரிக்காவில் ஏறக்குறைய வெறுங்கையாய் இருக்கிறவர் எப்படி ஒரு மாதம் தள்ளுவது?
அவரது காவி சாமியார் உடை மக்களின் கேலிக்கு ஆளாகி அவரது நடமாட்டத்தை ஆபத்துக்குள்ளாக்கியது. யாசகம் கேட்பது அமெரிக்காவில் சட்ட விரோதம். ரயில் பயணத்தில் பழக்கமான கேத்தரின் என்பவர் விவேகானந்தருக்குத் தங்க இடம் அளித்தார். கேத்தரின் மூலம் அறிமுகமான ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரைட்ஸ் அவரைப் பல்கலைக்கழகத்தில் பேசவைத்தார்.
அவருக்குச் சான்று அளித்து மதங்களின் பாராளுமன்றத்தில் உரையாற்ற ஏற்பாடு செய்தார். இதற்கிடையே அளசிங்கர் தன் மனைவியின் நகைகள் முதலான தங்கள் உடமைகளை விற்று மறுபடியும் பணம் அனுப்பி விவேகானந்தரைப் பாதுகாத்தார்.
மக்களைக் கவர்ந்த விவேகானந்தர்
மாநாட்டுக்குள் விவேகானந்தர் நுழைந்தார். பேச்சின் தொடக்கத்தில் அமெரிக்க சகோதர, சகோதரிகளே என அழைத்தார். அனைவரையும் கவர்ந்தார். உலகின் மிகப் பழமையான துறவிகளின் பிரதிநிதியாக, மதங்களின் தாயான இந்தியாவின் பிரதிநிதியாக, வந்திருப்பதாக அறிவித்தார்.
அனைத்து மதங்களும் ஒன்றே என்னும் பகவத் கீதையின் மொழி மாநாட்டின் நோக்கத்தோடு இணைகிறது என்ற அவர் மதவெறியும் பிரிவினைவாதமும் பிசாசுகளைப் போல மனித ரத்தத்தைக் குடித்துப் பல நாடுகளை அழித்துவிட்டன. அவை இல்லாமல் இருந்தால் மனித இனம் மேலும் முன்னேறி இருக்கும் என்றார்.
இன்னொரு நாள் கிணற்றுத் தவளையின் கதையைச் சொன்ன விவேகானந்தர், இந்து மதம் உள்பட எல்லா மதங்களும் கிணற்றுத் தவளைகளாய் உள்ளன. இந்த மாநாடு அதை மாற்ற வேண்டும் என்றார்.
இந்து மதம் பற்றிய தனது ஆய்வுரையை மாநாட்டுக்கு அவர் சமர்ப்பித்தார். கால வெள்ளத்தின் வேகத்தை எல்லாம் இந்து மதம் உள்வாங்கியுள்ளது. இந்து மதத்தில் எல்லாவற்றுக்கும் இடம் உண்டு. இவை எல்லாவற்றுக்குமான மையமானதாக வேதங்கள் உள்ளன.
வேதங்கள் ஆன்மிகச் சட்டங்கள்
வேதங்கள் வெறும் புத்தகங்கள் அல்ல. அவை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்மிகச் சட்டங்கள் எனும் புதையல் என்றார்.
இந்தியாவின் பழங்கால ரிஷிகளில் பெண்களும் உண்டு என்றார். நான் என்பது உடல் அல்ல. எனது ஆன்மா.உடல் அழியும், ஆன்மா அழியாது என்கிறார். புவி ஈர்ப்பு விசை கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னாலும் அது இருந்ததுபோலத் தனி ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்குமான உறவுகள் அவற்றைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே இருந்தன என்று வாதித்தார்.
தற்போது பசித்து வாழும் நிலையில் உள்ள கோடிக்கணக்கான எனது சகோதரர்களுக்குத் தேவை மதம் அல்ல என்றார். பசிக்கிற மக்களிடம் மதபோதனை செய்வது அவர்களை அவமதிப்பது ஆகும் என்றும் உரைத்தார்.
அமெரிக்காவில் ஏற்பட்ட தாக்கம்
விவேகானந்தரின் ஆன்மிக உரை அதுவரை இந்து மதம் பற்றி வெளிநாட்டினர் கொண்டிருந்த கருத்துகளை மாற்றியது. ஆழமான தத்துவ விவாதங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அமெரிக்கப் பத்திரிகைகள் அவரது உரைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தன.
16 நாட்கள் நடந்த மாநாட்டுக்குப் பிறகு அவர் மிகவும் புகழ்பெற்றவராகிவிட்டார். தினமும் பல திசைகளிலிருந்து அவருக்கு அழைப்புகள் குவிந்தன. அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்குச் சென்ற விவேகானந்தர் முதிர்ந்த நிலையில் இருந்த பேராசிரியர் மாக்ஸ்முல்லரைச் சந்தித்தார். தனது ஆன்மிக வாரிசான சகோதரி நிவேதிதாவை அங்கேதான் உருவாக்கினார்.
முகவரி இல்லாதவராக அங்கு சென்றவர் தனது ஆன்மிக நிலையத்தை அங்கே உருவாக்கினார். நான்கு ஆண்டுகள் அங்கே ஆன்மிகப் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பினார். இந்து மதம் பற்றிய பல்வேறு தத்துவ அம்சங்களை மாக்ஸ்முல்லர் போன்ற ஐரோப்பிய மேதைகள் அறிந்து அங்கே பரப்பிக்கொண்டு இருந்தாலும் விவேகானந்தரின் கருத்துகள், ஒரு ஆன்மிகத் துறவி என்ற வகையில் சொந்த அனுபவங்களாக அவர் வெளியிட்டவை, பெரிய தாக்கத்தை உலகளவில் ஏற்படுத்தின.
சக மனிதனுக்குத் தொண்டு செய்வதன் மூலம்தான் மோட்சம் அடைய முடியும் என இந்து ஆன்மிகத்தை மறுவார்ப்பு செய்தார்.