”சேவை செய்ய வேணாம்னு நான் உங்களைச் சொல்லல்லை. ஆனா நம்ம பிஸினஸிலே கூடுதல் கவனம் தந்தா, நம்ம பொருளாதார நிலை வளருமில்லே?” என்று நீலா ஹரிஹரனிடம் கேட்டாள்.
களைத்து வந்திருந்த ஹரிஹரன் மனைவியை
நோக்கினார். ‘செய்து வந்த சேவையைப் பார்த்துத் தான் இவள் என்னை விரும்பி மணந்தாள்; இன்று இப்படி மாறிவிட்டாளே!’ என எண்ணியபடி உண்ண ஆரம்பித்தார்.
ஒரு நடுத்தரக் குடும்பத்தின் நாயகன் ஹரிஹரன். நடுத்தரமான சிந்தனைகள் உடையவள் நீலா.
”நீலா, இன்னைக்கு மட்டும் ஒரு பத்துப் பள்ளிகளிலே ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழ் நடத்தும் ’விவேகானந்தர் தின’த்தைக் கொண்டாட ஏற்பாடு செஞ்சோம்…’’ என்றார் ஹரிஹரன் உற்சாகமாக.
“உங்களை மாதிரியே பத்துப் பேர் உடன் வந்தாங்களா?’’ என்று கேட்டாள் லேசான அதிருப்தியுடன்.
“ஆமா… நீலா, நான் பிஸினஸ்லே கவனம் வைக்கல்லேன்னு நீ நினைக்கிறியா?’’
“கொஞ்சம் அதிகமா கவனிங்கன்னு சொல்றேன்’’.
“பிசினஸும் பாக்குறேனே நீலா. ஆனா சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டான இந்தக் காலகட்டத்திலே எங்கேயும் சுவாமிஜியோட பிரஸன்ஸ் (சாந்நித்தியம்) கூடுதலா இருக்கு. அதனால தான் ‘சக்தி பெற சுவாமிஜியை முழங்கு’ன்னு ஒவ்வொரு பள்ளியிலும் விவேகானந்தருக்கு விழா எடுக்கச் சொல்லி வர்றோம். அவரது பொன்மொழிகளை இளைஞர்களின் மனங்களில் பதிய வைக்கிறோம். நீலா, பிஸினஸ் எப்போ வேணும்னாலும் செய்யலாம், சம்பாதிக்கலாம். ஆனா…’’
நீலா விரக்தியாகக் கணவனைப் பார்த்தாள்.
“வீரமொழிகளை மாணவர்கள் சேர்ந்து முழங்கும்போது ஏற்படும் விவேகானந்தரோட அதிர்வலைகள் அந்தந்தப் பள்ளிகளுக்குப் புது ‘பவரை’த் தரும். சமுதாயத்துக்குப் புது ஊக்கத்தைக் கொடுக்கும்…” என்று ஹரிஹரன் தொடர்ந்தார்.
நீலா கணவனின் உற்சாகத்தைப் பொருட்படுத்தாத குரலில், “நான் ஒண்ணு கேட்டா தப்பா நெனக்க மாட்டீங்களே? சேவை செய்றதாலே உங்களுக்கு என்ன நன்மை கெடைக்குது?’’ என்று கேட்டாள்.
ஹரிஹரன் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் சமாளித்தபடி, “விவேகானந்தர் பெயரில் நாங்க ஊருக்குச் சேவை செய்றது, நமக்கு என்ன நன்மை கிட்டும்னு எதிர்பார்த்து இல்லை’’ என்றார்.
“பின்னே?”
“சுயநலத்தை விட்டு சேவை செய் -என்கிறார் சுவாமிஜி. எல்லாரும் சுயநலமாகச் சொந்த வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தா அந்தச் சமுதாயம் சீக்கிரமே நொடிஞ்சிப் போகும். இப்போ நம்ம சமுதாயம் அப்படித்தான் ரொம்ப சிரமப்படுது…”
-இவ்வாறு கூறிவிட்டு, சேவை செய்தால் என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதைப் பல உதாரணங்களுடன் விளக்கிக் கூறினார் ஹரிஹரன்.
எல்லாம் கேட்டுவிட்டு நீலா, “என் கேள்விக்கு நீங்க சரியா பதில் சொல்லல்ல” என்று கூறிவிட்டுப் படுக்கச் சென்றுவிட்டாள்.
ஹரிஹரன் புரண்டு புரண்டு படுத்தார். தூக்கம் வரவில்லை. அவளிடம் சேவை பற்றி அவ்வளவு சொல்லியும் கடைசியில் அப்படிச் சொல்லிவிட்டுப் போய்விட்டாளே என்று தவித்தார்.
‘ஆமாம், சேவை செய்வதால் எனக்கு என்ன நன்மை கிடைக்கிறது?’ இந்தக் கேள்வி மனதைக் குடைய ஆரம்பித்தது. என்ன இது? இது மனைவியின் கேள்வி மட்டுந்தானா? அல்லது எனக்கான விடையை நானே உணராமல் உள்ளேனா?
சோர்வானாலும் சஞ்சலம் வந்தாலும் சுவாமிஜியைப் படிப்பது ஹரிஹரனின் வழக்கம். நூலை விரித்தார். விரிந்தது விவேகானந்தரின் வரலாறு.
***
அமெரிக்கா, லாஸ் ஏஞ்சலிஸ். 1900, பிப்ரவரி. சுவாமி விவேகானந்தர் இரண்டாம் முறையாக அமெரிக்கா சென்று பல வேதாந்தச் சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார்.
பக்தர்களுக்கு குருவாகவும், அறிவுஜீவிகளுக்கு அறிவை வழங்கும் ஆசானாகவும், நலம்விரும்பிகளின் நீண்ட கால நண்பனாகவும், குழந்தைகளுக்கு ஒரு தாயாகவும் இருந்து வந்தார் சுவாமிஜி.
அமெரிக்காவில், சுவாமிஜியை மிகவும் நேசித்தவர்களுள் மீட் சகோதரிகளின் குடும்பம் மிக முக்கியமானது. தந்தை, தாய், மூன்று சகோதரிகள் என்று அனைவரும் சுவாமிஜியைத் தங்களது குடும்பத்தின் ஓர் அங்கத்தினராகவே கருதினர்.
அவர்களுள் நடு சகோதரியான திருமதி ஆலிஸ் மீட் ஹேன்ஸ்ப்ரோ ஓர் அருமையான படைப்பு. சுவாமிஜிக்குச் சில மாதங்களே அவர் சேவை செய்தாலும் அவர் பெற்ற நிறைவு அலாதியானது.
சிகாகோ சொற்பொழிவு செய்த ஆன்மிகப் பெருந்தகை தங்கள் வீட்டில் வந்து தங்குவார் என்று அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
வாராது வந்த மாமணியான சுவாமிஜியின் தொண்டிற்குத் தன் பங்காக ஹேன்ஸ்ப்ரோ உடல் உழைப்பு, நேரம், முழு ஈடுபாடு என்று பலவும் நல்கி, பக்தியுடன் சேவை செய்தார்.
சுவாமிஜி உரையாற்ற ஏற்பாடு செய்வது, அதற்கான அரங்கு, வரும் ஆட்களைக் கவனித்துக் கொள்வது, சுவாமிஜியின் உயரிய கருத்துகளை உலகிற்கு வழங்கச் செய்வது – இந்த வகையில் ஹேன்ஸ்ப்ரோ சுவாமிஜியின் அருமையான ஒருங்கிணைப்பாளர்.
இந்தியாவின் நலத்திற்காக சுவாமிஜி நிதி திரட்டினார். வரும் பணத்தை அவர் ஹேன்ஸ்ப்ரோவிடம் தந்து விடுவார். அதனால் ஹேன்ஸ்ப்ரோ சுவாமிஜியின் நேர்மையான கணக்காளர்.
சுவாமிஜியின் உரை பற்றிய பத்திரிகை விளம்பரம், உரைக்குப் பின்வரும் ‘கவரேஜ்’ அவரது பேட்டிக்கான ஏற்பாடு போன்ற பணிகள் செய்வதில் சுவாமிஜிக்கு அவர் ஒரு தேர்ந்த காரியதரிசி.
அதோடு, பலர் சுவாமிஜியை ஏமாற்றிவிடுவதுண்டு. அப்போது அந்த ஆதங்கத்தை அவர் அமைதியான ஹேன்ஸ்ப்ரோவிடம் தான் காட்டுவார். ‘எனக்கு மிகவும் பிரியமானவர்களைத் தானே நான் கடிந்துகொள்ள முடியும்’ என்பார் சுவாமிஜி ஒரு சிறுவனைப் போல.
இவை தவிர, சுவாமிஜியின் ஆடைகளைத் தினமும் தயார்ப்படுத்தி வைப்பது, முக்கியமாக அவருக்காகச் சமைப்பது, அவரைக் காண வருபவர்களுக்கு உணவோ, தேநீரோ பரிமாறுவது என்று சுவாமிஜிக்
காகப் பம்பரமாகச் சுற்றினார் ஹேன்ஸ்ப்ரோ.
உலக மக்களின் நன்மைக்காக விவேகானந்தர் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்தபோது, அவருக்காக அவரது அன்றாடத் தேவைகளுக்காக நன்கு உழைத்தார் ஹேன்ஸ்ப்ரோ.
‘வேலை செய்’ என யாரையும் விரட்டும் சுவாமிஜியே ஒருமுறை, ”ஹேன்ஸ்ப்ரோ, நீ பேய் போல் வேலை செய்கிறாய்!” என்றார்.
ஹேன்ஸ்ப்ரோ பல பணிகளைச் செய்ய முடிந்ததற்கு சுவாமிஜியின் ஓர் உபதேசமே காரணம்:
“ஒன்றைச் செய்யும்போது அதில் முழு இதயத்தையும் ஈடுபடுத்து; உன்னை எதுவும் தடுக்க முடியாது.”
சுவாமிஜியுடன் இருந்தது, தனது குடும்பத்திற்கு ஓர் ஒப்பற்ற ஆன்மிக அனுபவமாகக் கருதினார் ஹேன்ஸ்ப்ரோ.
‘ஏசுநாதரே எங்கள் வீட்டில் வந்து எங்களுடன் தங்கியதுபோல் உணர்ந்தோம்’ – இது ஹேன்ஸ்ப்ரோவின் நம்பிக்கை.
தமக்காகப் பணி புரியும் ஒருவருக்காக சுவாமிஜி என்ன செய்வார்?
ஒரு நாள் ஹேன்ஸ்ப்ரோ ஏனோ உற்சாகம் இழந்து சோர்ந்திருந்தார். அதைக் கண்ட சுவாமிஜி, ”வா, அமர், நாம் இருவரும் தியானிப்போம்’’ என்றார்.
”நோ சுவாமிஜி, நான் தியானமே செய்ததில்லை’’ என்றார் ஹேன்ஸ்ப்ரோ பரபரப்புடன். சுவாமிஜி ஒரு தந்தைக்குரிய வாஞ்சையுடன், ”அதனால் என்ன? வந்து என் பக்கத்தில் உட்கார். நான் தியானிக்கிறேன்’’ என்றார்.
சுவாமிஜியின் அருகில் அமர்ந்து ஹேன்ஸ்ப்ரோ கண்களை மூடினார். ஒரு கணம் தான், அவர் எங்கேயோ மிதப்பதுபோல் உணர்ந்தார்; பயத்துடன் விரைந்து கண்களைத் திறந்து சுவாமிஜியைப் பார்த்தார்.
காவியுடையில், பத்மாசனத்தில், கர மலர்களைச் சேர்த்து மடி மீது வைத்து, விழி பாதி மூடிய நிலையில் சுவாமிஜி ஒரு செப்புச்சிலையாக தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.
தனக்கும் இப்படி தியான நிலை சித்திக்குமா? என்று ஹேன்ஸ்ப்ரோ ஒரு கணம் ஏங்கினாரோ!
மற்றொரு நாள் சுவாமிஜி தியான வகுப்பு நடத்தினார். அதற்காகப் பல அன்பர்கள் ஹேன்ஸ்ப்ரோவின் வீட்டிற்கு வந்திருந்தனர். சுவாமிஜியின் திருமுன்பு அமர்ந்து தியானிக்கும் அனுபவமே தனி தான். அதனை அவரே கூறுகிறார் :
”தியான வேளையில் நான் என் மனதை ஓர் ஆனந்த நிலைக்கு உயர்த்துகிறேன். பிறகு அதே நிலையை உங்கள் (அன்பர்கள்) மனதிலும் உருவாக்க முயற்சி செய்கிறேன்.’’
சுவாமிஜி தியான வகுப்பு நடக்கும் கூடத்திற்குச் செல்வதற்காகத் தமது அறையில் இருந்து புறப்பட்டார்.
தினமும் ஹேன்ஸ்ப்ரோ சுவாமிஜிக்காக சூப் ஒன்றைத் தயாரித்து வைத்துவிட்டு, வகுப்பில் கலந்துகொள்வார். அந்த சூப் தயாரிக்க ஓரிரு மணி நேரம் ஆகும். அன்று அவரால் வேலையை முடிக்க இயலவில்லை.
வகுப்பிற்குக் கிளம்பிய சுவாமிஜி ஹேன்ஸ்ப்ரோவிடம், ”என்ன, நீ தியானத்திற்கு வரவில்லையா?’’ என்று கேட்டார். வகுப்பிற்கு வர முடியாததைச் சொன்னார் ஹேன்ஸ்ப்ரோ. ஒருகணம் சுவாமிஜி, தனக்காக, தனது சக்திக்கு மீறி சேவை செய்யும் அந்தக் கர்மயோகியைக் கவனித்துப் பார்த்தார்.
குருவின் தேக நலனைப் பாதுகாத்தால், குரு, சீடனின் ஆன்ம நலனைப் பாதுகாக்கிறார் என்கிறது சநாதன தர்மம். அதை, மனதில் கொண்டு சுவாமிஜி, ”பரவாயில்லையம்மா. நீ எனக்காக வேலை செய்கிறாய்; நான் உனக்காகத் தியானிக்கிறேன்’’ என்று கூறிவிட்டுச் சென்றார்.
ஆறுதலாக ஏதோ கூறுகிறார் என எண்ணி ஹேன்ஸ்ப்ரோ தனது வேலையில் மும்முரமானார். ஆனால் ஆச்சரியம்!
வெளியில் பரபரப்பாகப் பல வேலைகள் செய்து கொண்டிருந்தாலும், தனக்குள் அதுவரை அனுபவித்தறியாத ஓர் ஆற்றல், அக அமைதி, எல்லையற்ற ஆனந்தத்தை உணர்ந்தார் அவர். வகுப்பு முடியும் வரை ஹேன்ஸ்ப்ரோ இந்தத் தியான அனுபவத்தில் இருந்தார். சுவாமிஜி உண்மையில் தனக்காகத் தியானம் செய்தார் என்பதை அவர் புரிந்து கொண்டார்.
அதன் பிறகு, ஹேன்ஸ்ப்ரோவின் பக்தி தீவிரமானது. தமது கடைசிக்காலம் வரையிலும் சுவாமிஜியின் புனித நினைவுகளில் திளைத்து வந்தார் அவர்.
பிற்காலத்தில் இதை நினைவுகூர்ந்த ஹேன்ஸ்ப்ரோ, ”அன்று மட்டுமல்ல, இன்றும் அவர் எனக்காகத் தியானம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை நான் என்றும் உணர்கிறேன்” என்றார்.
***
திடீரென கண்விழித்த ஹரிஹரன் ஒரு கணம் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனார். ‘பெட் சுவிட்சை’ சுவிட்சை அழுத்தினார். ‘டேபிள் ஃபேன்’ சுற்றிக் கொண்டிருந்தது.
அந்தக் காற்றில் ஹரிஹரன் இரவு வாசித்துக் கொண்டிருந்த நூலான ‘சுவாமி விவேகானந்தர் – 2 – ஆம் பாகம், பக்கம் 356’ விரிந்து கிடந்தது.
உடனே ஹரிஹரன் புத்துணர்வுடன் விழித்தார். சுவாமிஜியின் சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் முன் தனக்குள் அவற்றை நன்கு கிரகித்துக்கொள்ள, தியானத்தில் அமர்ந்தார்.
”வேலை செய்யுங்கள், நான் உங்களுடன் உள்ளேன். நான் மறைந்த பிறகு என் ஆன்மா உங்களுடன் வேலை செய்யும்” என்ற சுவாமிஜியின் தெய்வீகக் குரல் அவரது இதயத்தில் ஒலித்தது!
.