Home » விவேகானந்தர் » சிகாகோ சொற்பொழிவுகள் – நிறைவு நாள் உரை
சிகாகோ சொற்பொழிவுகள் – நிறைவு நாள் உரை

சிகாகோ சொற்பொழிவுகள் – நிறைவு நாள் உரை

செப்டம்பர் 27, 1893

சர்வசமயப் பேரவை சிறப்பாக நிறைவுற்று விட்டது. இதை உருவாக்க முயற்சி செய்தவர்களுக்கு இறைவன் துணை நின்று, அவர்களுடைய தன்னலமற்ற உழைப்பிற்கு வெற்றி வாகை சூட்டியுள்ளார்.

இந்த அற்புதமான கனவை, முதலில் கண்டு, பிறகு அதை நனவாக்கிய, பரந்த இதயமும், உண்மையில் பற்றும் கொண்ட உத்தமர்களுக்கு என் நன்றி, என் மீது ஒரு மித்த அன்பு காட்டியதற்காகவும், சமயங்களுக்கு இடையே நிலவுகின்ற அதிருப்தியைத் தணிப்பதற்காகக் கூறப்பட்ட கருத்துக்களைப் பாராட்டியதற்காகவும் அறிவு சார்ந்த சபையினருக்கு என்நன்றி. இந்த இன்னிசையில் அவ்வப்போது சில அபசுவரங்கள் கேட்டன. அவர்களுக்கு என் சிறப்பான நன்றி. ஏனெனில் அவர்கள் தங்கள் மாறுபட்ட ஒலியால், இன்னிசையை மேலும் இனிமை ஆக்கினர்.

சமய ஒருமைப் பாட்டிற்குரிய பொது நிலைக்களம் பற்றி திகம் பேசப்பட்டது. இதைப் பற்றி என்சொந்தக் கோட்பாட்டை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த ஒருமைப்பாடு ஏதாவது ஒருமதத்தின் வெற்றியாலும், மற்ற மதங்களின் அழிவாலும் கிட்டும் என்று இங்குள்ள யாரேனும் நம்பினால், அவரிடம் நான், ‘சகோதரா! உனது நம்பிக்கை வீண்’ என்று சொல்லிக் கொள்கிறேன். கிறிஸ்தவர் இந்துவாகி விட வேண்டும் என்பது என் எண்ணமா? கடவுள் தடுப்பாராக! இல்லை, இந்துவோ பெளத்தரோ கிறிஸ்தவராக வேண்டுமென எண்ணுகிறேனா? கடவுள் தடுப்பாராக!

விதை தரையில் ஊன்றப்பட்டு, மண்ணும் காற்றும் நீரும் அதைச் சுற்றி போடப்படுகின்றன. விதை மண்ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ ஆகிவிடுகிறதா? இல்லை. அது செடியாகிறது. தனது வளர்ச்சி விதிக்கு ஏற்ப அது வளர்கிறது. காற்றையும் மண்ணையும் நீரையும் தனதாக்கிக் கொண்டு, தனக்கு வேண்டிய சத்துப் பொருளாக மாற்றி, ஒருசெடியாக வளர்கிறது. மதத்தின் நிலையும் இதுவே. கிறிஸ்தவர் இந்துவாகவோ பெளத்தராகவோ மாற வேண்டியதில்லை. அல்லது இந்து, பெளத்தராகவோ கிறிஸ்தவராகவோ மாற வேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிக் கொண்டு, தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு, தன் வளர்ச்சி விதியின் படி வளரவேண்டும்.
இந்த சர்வசமயப்பேரவை உலகத்திற்கு எதையாவது எடுத்துக் காட்டியுள்ளது என்றால் அது இதுதான்: புனிதம், தூய்மை, கருணை இவை உலகின் எந்த ஒரு பிரிவுடையதின் தனிச் சொத்து அல்ல என்பதையும், மிகச்சிறந்த ஒவ்வொரு சமயப்பிரிவும் பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் தோற்றுவித்து இருக்கிறது என்பதையும் நிரூபித்துள்ளது.

இந்த சாட்சியங்களுக்கு முன்பு, தம் மதம் மட்டும் தான் தனித்து வாழும், மற்ற மதங்கள்அழிந்துவிடும் என்று யாராவது கனவு காண்பார்களானால் அவர்களைக் குறித்து நான் என் இதய ஆழத்திலிருந்து பச்சாதாபப் படுவதுடன், இனி ஒவ்வொரு மதத்தின் கொடியிலும், ‘உதவி செய், சண்டை போடாதே’, ‘ஒன்றுபடுத்து, அழிக்காதே’, ‘சமரசமும் சாந்தமும் வேண்டும், வேறுபாடு வேண்டாம்’ என்று எழுதப்படும் என்று அவருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சுவாமி விவேகானந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top