Home » தன்னம்பிக்கை » அந்த 100 நிமிடங்கள்! ஆளுமைத் திறன் !!
அந்த 100 நிமிடங்கள்! ஆளுமைத் திறன் !!

அந்த 100 நிமிடங்கள்! ஆளுமைத் திறன் !!

வாழ்க்கையில் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய குணம்பற்றிய ஒரு வரித் தலைப்பு. அதற்கு உதாரணமாக, ஒரு நிமிடத்துக்குள் படித்துவிடக்கூடிய குட்டிக் கதை. அவ்வளவுதான். இதுபோல 100 தலைப்புகள். வேறு எந்தத் தத்துவ உபதேசங்களும், ஆளுமை வளர்க்கும் அறிவுரைகளும் இல்லை. டாக்டர். எல்.பிரகாஷ் எழுதிய ‘100 MINUTES That’ll change THE WAY YOU LIVE’ புத்தகத்தில் இருந்து சில நிமிடங்கள் மட்டும் இங்கே…

எதை மறக்கக் கூடாது என்பதில் கவனம் தேவை!

ஆனந்த் தனது ஐந்தாவது திருமண நாள் கொண்டாட்டங்களுக்குத் தனது நண்பர்கள், உறவினர்களை அழைத்திருந்தான். பெண்கள் டி.வி. அறையில் அரட்டை அடிக்க, ஆண்களின் கச்சேரி ஹாலில் களைகட்டிஇருந்தது. பேச்சுவாக்கில் முந்தைய நாள் ஹோட்டல் டின்னர்பற்றி சிலாகித்த ஆனந்த், ”அந்த ஹோட்டல் இங்கேதான் அண்ணா நகர் ரவுண்டானாகிட்டே… பேருகூட நல்ல பேருப்பா! ஆங்… மறந்துருச்சே. இது இந்த ராக்கெட்ல நிலவுக்குப் போச்சே ஓர் அமெரிக்கப் பொண்ணு… அட ‘கஜினி’ படத்துலகூட அசின் பேருப்பா!” என்று யோசிக்க, ‘கல்பனா கல்பனா!’ என்று எடுத்துக் கொடுத்தார் நண்பர் ஒருவர். ”ஆங்! கல்பனா.” என்று பிரகாசமான ஆனந்த், உள்ளே டி.வி. அறை நோக்கித் திரும்பி, ”கல்பனா… கல்பனா மை டார்லிங். நேத்து நாம சாப்பிட்ட ஹோட்டல் பேர் என்னடா குட்டி? சட்டுனு மறந்துருச்சு!” என்றார்!

எல்லாமே நல்லதாக இருந்தால், எங்கோ… ஏதோ தப்பு!

உலகின் ஐந்தாவது பணக்காரர் அவர். நியூயார்க் ஏர்போர்ட்டில் அவர் நுழைந்தபோது தூக்க முடியாமல் இரண்டு சூட்கேஸ்களைக் கைக்கு ஒன்றாகச் சுமந்தபடி சிரமப்பட்டு நடந்துகொண்டு இருந்த ஒருவனைக் கண்டார். அவனிடம் இவர், ”மணி எத்தனை?” என்று கேட்டார். உடனே அவன், அந்த இரண்டு பெட்டிகளையும் கவனமாகக் கீழேவைத்துவிட்டு, தன் முழுக்கை சட்டைக்குள் ஒளிந்திருந்த டிஜிட்டல் கடிகாரத்தில் இருந்து உலகத்தின் முக்கிய நகரங்களின் நேரங்களைத் துல்லியமாகச் சொன்னான். மில்லியனர் ஆச்சர்யம் காட்டவும், ‘இதில் செய்திகளும் வரும்!’ என்று அதன் சின்ன ஸ்க்ரீனில் லைவ் நியூஸ் காண்பித்தவன், அந்த வாட்ச்சில் இருந்தே தன் மனைவியின் செல்போனுக்கு அழைத்துப் பேசினான். பிறகு, அந்த மில்லியனருடன் அந்த வாட்ச்சிலேயே போட்டோ எடுத்துக்கொண்டு அதை அவருக்கு அந்த வாட்ச்சிலிருந்தே இ-மெயில் செய்தான். அசந்துபோன மில்லியனர் எந்தப் பேரத்துக்கும் இடம் கொடுக்காமல், அவன் சொல்லிய விலையைக்காட்டிலும் இரு மடங்கு கொடுத்து அந்த வாட்ச்சை வாங்கிக்கொண்டார். பெருமையாக அந்த வாட்ச்சை கையில் கட்டிக்கொண்டு மில்லியனர் நடக்கத் துவங்க, அவரைத் தடுத்து நிறுத்திய அவன், ”நீங்கள் அந்த வாட்ச்சின் பேட்டரியை மறந்துவிட்டுச் செல்கிறீர்கள்!” என்று அந்தக் கனத்த இரண்டு சூட்கேஸ்களைக் காட்டினான்!

சத்தியம் செய்யும் முன் சகலமும் யோசி!

கண்ணாடிக் கடையில் கண்ணின் பவர் பரிசோதிக்கப்படக் காத்திருந்த பெரியவர், கடைச் சிப்பந்தியிடம், ‘புதுக் கண்ணாடி மாட்ட எவ்வளவு நேரம் ஆகும்?’ என்று கேட்டார். ‘அதிகபட்சம் ஒரு மணி நேரம் ஆகும்!’ ‘நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். ஒரு மணி நேரம்தான் ஆகுமா? ஒரு மணி நேரத்துக்குப் பிறகு நான் இந்தப் புத்தகத்தை எழுத்துக் கூட்டி வாசிக்க முடியும்தானே?’ என்று கையில் இருந்த புத்தகத்தைக் காட்டி உறுதி கேட்டார். ‘ம்ம்… 15 நிமிடம் முன்னே பின்னே இருந்தாலும், அதிகபட்சம் ஒன்றரை மணி நேரத்துக்குள் நீங்கள் கண்ணாடி அணிந்து வாசிக்க முடியும்!’ என்றார் சிப்பந்தி. இருக்கையில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்துகொண்ட அந்தப் பெரியவர் இறுமாப்போடு முணுமுணுத்தார்… ‘யாரை ஏமாத்தாப் பாக்குறாய்ங்க… நான் எழுத்துக் கூட்டி வாசிக்க ஆறுல இருந்து எட்டு மாசம் ஆகும்னு முதியோர் கல்வி வாத்தியார் சொன்னானே. கண்ணாடி கைக்கு வரட்டும். வெச்சுக்குறேன் அவனை!’

எதிர்பார்ப்புகளுக்கும் உண்டு எல்லை!

கசக்கிக் கட்ட கந்தைகூட இல்லாத ஏழை அவன். தன் வறுமையைப் போக்க இறைவனிடம் வரம்வேண்டி இமயமலைக்குச் சென்று தவம் இருந்தான். முழுதாக 36 வருடங் கள் கழித்து அவன் முன் தோன்றி னார் இறைவன். ‘அடக் கடவுளே! 36 வருடங்களுக்குப் பிறகுதான் என் பக்தி உன்னை எட்டியதா?’ என்று அவன் கேட்க, மெலிதாகச் சிரித்தார் இறைவன். ‘பக்தா தேவ லோகத்தில் நாளும், நேரமும் மிக மிக மெதுவாகத்தான் பயணிக்கும். பூலோகத்தின் 36 வருடங்கள் தேவலோகத்தில் ஒரு நொடிக்கும் குறைவான நேரம். என்னைப் பொறுத்தவரை நீ தவத்துக்கு என அமர்ந்ததுமே நான் உன் முன் தோன்றிவிட்டேன்!’ உடனே வியப்படைந்த பக்தன், ‘ஆஹா… அப்போ இதேபோல செல்வத்தின் மதிப்பும் பூலோகத்தைக் காட்டிலும் பெருமளவு வேறுபடுமா?’ என்று ஆர்வமாகக் கேட்டான். ‘நிச்சயம் பக்தா. தேவலோகத்தின் ஒரு தங்கக் காசை வைத்து இந்த பூமியையே விலைக்கு வாங்கிவிடலாம்!’ என்றார். உடனே கண்கள் மின்ன, ‘ஆஹா! சாமி இதற்காகத்தானே காத்திருந்தேன்… எனக்கு இரண்டே இரண்டு தங்கக் காசுகள் மட்டும் கொடுங்களேன்!’ என்றார் அந்த பக்தன். ‘ஒரே ஒரு நிமிஷம் பொறு பக்தனே. இதோ வருகிறேன்!’ என்று விஷ்ஷ்ஷ்க்கென மறைந்தார் கடவுள். காத்திருக்கத் தொடங்கினார் பக்தன்!

கண்மூடித்தனமாக யாரையும் பின்பற்றாதீர்கள்!

ஆளை மூழ்கடிக்கும் வேகத்துடன் வெள்ளம் பாயும் ஓர் ஆற்றங்கரை. மூன்று ஜென் துறவிகள் அமர்ந்து ஜெபம் செய்துகொண்டு இருக்கிறார்கள். மடத்தில் புதிதாகச் சேர்ந்த இளந்துறவியும் அவர்களைப் பார்த்து அங்கேயே அமர்ந்து ஜெபம் செய்கிறார். சீனியர் துறவிகளில் ஒருவர் திடீரென எழுந்து ஆற்றின் மீது நடந்து சென்றார். சிறிது நேரத்தில் மற்ற இருவரும் அப்படியே நடந்து செல்கிறார்கள். அதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட இளந்துறவி, தன்னாலும் அப்படி நடக்க முடியும் என்று முடிவெடுத்து ஆற்றுக்குள் கால்வைக்கிறார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறார். அதைப் பார்த்த சீனியர் துறவி ஒருவர் மெல்லிய குரலில் முணுமுணுக்கிறார், ‘ஆற்றுக் குள் கால்வைத்து நடக்க எங்கெங்கு கற்கள் புதைந்திருக்கின்றன என்பதை நாம் அவருக்குச் சொல்லிஇருக்க வேண்டும்!’

எதிர்மறை விளைவுகளுக்கும் தயாராக இருங்கள்!

அவனுக்கு அன்றுதான் திருமணம் முடிந்தது. தன் மனைவியை உயர் ரக அரபுக் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழைத்துச்சென்றுகொண்டு இருந்தான். பாதையில் ஒரு குழியில் விழுந்து எழுந்தது சாரட் வண்டி. ‘முதல் எச்சரிக்கை!’ என்றவன், குதிரையின் முதுகில் சாட்டையில் ஒரு இழு இழுத்தான். சிறிது நேரம் கழித்து, மீண்டும் ஒரு பள்ளத்தில் விழுந்து எழுந்தது வண்டி. ‘இரண்டாவது எச்சரிக்கை!’ என்றவன் மீண்டும் சாட்டையால் குதிரையை அடித்தான். மூன்றாவது முறையும் சாரட் பள்ளத்தில் விழுந்து எழ, கோபத்துடன் சாரட்டை விட்டுக் கீழே இறங்கினான். துப்பாக்கியை எடுத்து குதிரை யைச் சுட்டுக் கொன்றுவிட்டான். அதிர்ச்சியடைந்த மனைவிசாரட்டை விட்டு இறங்கி, ‘உனக்கு அறிவே இல்லையா? அந்தக் குதிரை எத்தனை காஸ்ட்லி தெரியுமா?’ என்று கேட்டாள். அவளை நிமிர்ந்து பார்த்தவன், ‘முதல் எச்சரிக்கை!’ என்றான். அதன்பிறகு 40 வருடங்கள் தங்களுக்குள் எந்தச் சண்டையும் இல்லாமல், அந்தத் தம்பதி சந்தோஷமாகக் குடும்பம் நடத்தினார்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top