கையெழுத்தில் நான் அசட்டையாக இருந்து
விட்டதன் பலனை இப்பொழுதும் அனுபவித்துக்
கொண்டு வருகிறேன். கையெழுத்து நன்றாக
இருக்க வேண்டும் என்பது படிப்பில் ஒரு
பகுதியல்ல என்ற கருத்து எனக்கு எங்கிருந்து
உண்டாயிற்று என்று தெரியவில்லை.
நான் இங்கிலாந்துக்குப் போகும் வரையில் இந்தக்
கருத்தே எனக்கு இருந்தது. பிறகு முக்கியமாகத்
தென்னாப்பிரிக்காவில் இளம் வக்கீல்களும்,
தென்னாப்பிரிக்காவில் பிறந்து, அங்கேயே படித்த
இளைஞர்களும் மிக அழகாக எழுதுவதைக்
கண்டபோது என்னைக் குறித்து நானே
வெட்கப்பட்டதோடு ஆரம்பத்தில் அசிரத்தையுடன்
இருந்து விட்டதற்காக வருத்தப்பட்டேன்.
கையெழுத்து நன்றாக இருக்கும்படி செய்ய பிறகு
முயன்றேன். ஆனால், அதற்குக் காலம் கடந்துவிட்டது.
இளமையில் அசட்டையாக இருந்துவிட்டதனால்
ஏற்பட்ட தீமையைப் பிறகு என்றுமே நிவர்த்தி
செய்துகொள்ள இயலவில்லை.
ஒவ்வோர் இளைஞனும், இளம் பெண்ணும் என்னைக்
கண்டாவது எச்சரிக்கையுடன் இருக்கட்டும்.
கையெழுத்து நன்றாக இருக்க வேண்டியதும்
படிப்பின் ஒரு பகுதி என்பதை அறியட்டும்.
குழந்தைகளுக்கு எழுத்துகளை எழுதக் கற்றுக்
கொடுப்பதற்கு முன்னர் ஓவியம் வரையக் கற்றுக்
கொடுக்க வேண்டும் என்று இப்பொழுது கருதுகிறேன்.
பூக்கள், பறவைகள் போன்றவற்றைக் குழந்தைகள்
பார்த்தே தெரிந்து கொள்வதைப்போல எழுத்துகளையும்
அவர்கள் பார்த்தே தெரிந்து கொள்ளட்டும்.
பொருள்களைப் பார்த்து அவற்றை வரையக் கற்றுக்
கொண்ட பிறகு எழுத்துகளை எழுதக் கற்கட்டும்.
அப்பொழுது குழந்தைகளின் கையெழுத்து அழகாக
அமையும்.
மகாத்மா காந்தியடிகள்
“சத்திய சோதனை’ நூலிலிருந்து.