Home » உடல் நலக் குறிப்புகள் » ‘வழுக்கைக்கு குட் பை!’
‘வழுக்கைக்கு குட் பை!’

‘வழுக்கைக்கு குட் பை!’

ஆரோக்கியத்துக்கும் ஒருபடி மேலாக அழகுக்கு அக்கறை செலுத்தும் காலம் இது! அந்த வகையில், ஆண் – பெண் இருவருக்குமே ‘தலை’யாயப் பிரச்னையாக இருப்பது தலைமுடி பராமரிப்பு!

ஆண்களுக்கு ‘வழுக்கை விழுவதும்’ பெண்களுக்கு ‘முடி உதிர்வதும்’ தீராத தலைவலி! விளம்பரங்களைப் பார்த்து விதவிதமான ஷாம்பூ வகைகளைத் தேடிப் பிடித்து வாங்கித் தலையில் தேய்த்துக் கொள்வது, ஆயிரக்கணக்கில் செலவுசெய்து அறுவைச் சிகிச்சை செய்துகொள்வது… என்று முடிவில்லாமல் தொடர்கிறது ‘முடி’ப் பிரச்னை!

‘சாதாரணத் தலைமுடிப் பிரச்னைக்கு இந்தளவிற்கு யாராவது தலையைப் பிய்த்துக் கொள்வார்களா என்ன?’ என்ற சந்தேகக் கேள்வி இங்கு எழலாம். ஆனால், வழுக்கைப் பிரச்னையால், முதலில் தலைமுடியை இழந்து…. தோற்றப் பொலிவின்மை, மன உளைச்சல், மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை… என அடுத்தடுத்து பல்வேறு மனச் சங்கடங்களுக்குள் சிக்கி சரிவுக்குள்ளானவர்களின் பட்டியல் மிக நீளமானது.

தொழிற்துறைகளில் சாதனைகள் பல படைத்த ஜாம்பவான்கள் கூட, தங்களது வழுக்கைப் பிரச்னைக்கு சரியானத் தீர்வு கிடைக்காத விரக்தியில், மன உளைச்சலுக்கு ஆளாகி, தாழ்வு மனப்பான்மையால் தொழில் மற்றும் மன ரீதியாக பெரும் சரிவைக் கண்டிருக்கிறார்கள்!

‘முடியின் மீது நாம் வைத்திருக்கும் மூட நம்பிக்கைகளை முதலில் உடைத்தெறிந்தாலே, அநாவசியச் செலவோ, உடல் உபாதையோ நிச்சயம் இருக்காது!’ என்று நம்பிக்கையை நடுகிறார் தோல்நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரத்னவேல்!

‘தலை முடி வளர்வதற்காக மூலிகை வேர்-கீரைகள் ஊறப்போட்ட எண்ணெய்யை தேய்த்துக் கொள்வதால், எந்தப் பயனும் இல்லை; தலைக்கு எண்ணெய் தேய்ப்பதென்பது முடியைப் படிய வைப்பதற்கு மட்டுமே உதவும். இன்னும் சொல்வதானால், தலைப் பொடுகை உண்டு பண்ணும் கிருமிகள் இந்த எண்ணெய்யைத் தின்றுதான் வளர்கிறது. அதனால் பொடுகு இருப்பவர்கள் எண்ணெய் தேய்க்காமல் இருப்பதே நல்லது.

இன்னும் சிலர் முடி வளர்வதற்கும் உதிர்வதைத் தடுப்பதற்கும் எலுமிச்சை, முட்டை, தயிர், மாவு வகைகள்….. என்று சாப்பிட வேண்டிய சத்தான உணவுப் பொருட்களை எல்லாம் அரைத்து, வழித்து தலையில், தேய்த்துக் கொள்கிறார்கள். இதனால் எந்தப் பயனும் இல்லை. சாதாரணமாக ஒரு நாளைக்கு எழுபதில் இருந்து நூறு முடிகள் வரை உதிர்வதும் முளைப்பதும் இயல்பானது.

இதுதவிர கண்டிஷனர், புரோட்டீன், வைட்டமின் கலந்த ஷாம்பூ வகைகளையும் தேய்க்கிறார்கள். ஷாம்பூ வகை எல்லாமே முடியில் உள்ள அழுக்கை அகற்றத்தான் பயன்படுமே தவிர முடிக்கு எந்தவித ஊட்டச் சத்தையும் அளிக்காது. ஷாம்பூ போட்டபின் ஊறவைக்காமல், உடனே குளித்துவிடுவது நல்லது. மற்றபடி தினமும் ஷாம்பூ பயன்படுத்துவதாலோ, ஹெல்மெட் அணிவதாலோ முடி கொட்டிவிடும் என்பதில் கொஞ்சமும் உண்மை இல்லை!

மனித உடம்பு முழுக்க ஐந்து லட்சம் முடிகள் இருக்கின்றன. தலையில் மட்டும் ஒரு லட்சம் முடி! தினமும் குறைந்த அளவில் உதிரும் முடிகளுக்கு இணையாக அதே எண்ணிக்கையில் புதிய முடிகள் முளைக்க வேண்டும். அப்படி முளைக்காது போனால்…. அதுதான் முடி உதிர்தல் பிரச்னை. பொடுகு மற்றும் டைபாய்டு காய்ச்சலால் அதிக அளவில் முடி உதிரும். ஆனால், இது நிரந்தரமானது அல்ல. சத்தான உணவு வகைகள் சாப்பிட்டு உடல் நலமான பின்பு பழைய மாதிரியே அடர்த்தியாக முடி வளர்ந்துவிடும்.

ஆன்ட்ரஜன் ஹார்மோனின் ஒரு உபபொருள்தான் முன் தலையில் உள்ள முடியின் வேர்ப் பகுதியை அரித்து ஒட்டுமொத்தமாகக் காலி செய்து விடுகிறது. இதனை ‘ஆன்ட்ரோ ஜெனிடிக் அலோபேசியா’ என்கிறோம். இதை மாத்திரை, பிரத்யேக தைலம் மூலம் சரி செய்யலாம். ஆனால், வழுக்கை விழ ஆரம்பித்ததுமே நிறைய பேர் செயற்கையாக முடியை நட்டுக் கொள்ளும் அறுவைச் சிகிச்சையைத்தான் செய்துகொள்கிறார்கள்; இது தேவையற்றது. ஒரு முறை முடியை நடுவதற்கு நாற்பதாயிரம் ரூபாய் வரை செலவாகிறது. முடியை நட்டபின்பும் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், நட்ட முடியானது உதிர்ந்து விடும். எனவே ஆயிரக்கணக்கிலான செலவு முறைகளைத் தவிர்த்து வெறும் நான்கு ரூபாய் செலவில் மாத்திரையை உட்கொண்டு சரிசெய்வதே நல்ல பலன், புத்திசாலித்தனம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top