Home » சிறுகதைகள் » யார் தலைவன்?
யார் தலைவன்?

யார் தலைவன்?

ஒரு மிகப் பெரிய கம்பெனியின் நிர்வாகி ஓய்வு பெறும் ஆகும் காலம் வந்தது. அது அவரது சொந்தக் கம்பெனி. அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையை ஆரம்பித்த அவர் சிறியதாக ஆரம்பித்த அந்தத் தொழிலை தன் கடுமையான உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் மிக லாபகரமான கம்பெனியாக வளர்த்திருந்தார். தனக்குப் பின் அந்தக் கம்பெனியின் நிர்வகிக்க யாரை நியமிப்பது என்று நிறைய யோசித்தார். தன் பிள்ளைகளில் ஒருவரையோ, இருக்கும் டைரக்டர்களில் ஒருவரையோ தலைமை ஏற்கச் சொல்வதற்குப் பதிலாக, நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.

தன் கம்பெனியில் எல்லாத் துறைகளிலும் அதிகாரிகளாக இருக்கும் திறமையான இளைஞர்களையும் அழைத்து சொன்னார். “அடுத்த வருடம் நான் சேர்மன் பொறுப்பில் இருந்து விலக்ப் போகிறேன். உங்களில் தகுதி வாய்ந்த ஒருவரை அந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுத்து என் கம்பெனியின் சேர்மனாக நியமித்து விட்டு ஓய்வு பெற நினைக்கிறேன்…”

அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. அவர் தொடர்ந்தார்.

“உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதை தரப் போகிறேன். அது ஒரு தனித்தன்மை வாய்ந்த விதை. அதை நீங்கள் விதைத்து நீருற்றி ஒரு வருடம் வளர்க்க வேண்டும். சரியாக ஒரு வருடம் கழித்து, அடுத்த வருடம் இதே நாளில் ஒவ்வொருவரும் வளர்த்த செடியைக் கொண்டு வர வேண்டும். நீங்கள் கொண்டு வரும் செடிகளை வைத்து உங்களை எடை போட்டு அதில் சிறந்த ஒருவரை சேர்மனாகத் தேர்ந்தெடுப்பேன்”

சொல்லி விட்டு அவர் ஒவ்வொருவருக்கும் ஒரு விதை தந்தார்.  அந்த இளைஞர்களில் மிக நல்லவனும், நாணயமானவனுமான ஒரு இளைஞன் அதை மிகுந்த் ஆர்வத்துடன் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். நல்ல பெரிய மண்சட்டியை வாங்கி அதில் நல்ல வளமான மண்ணைப் போட்டு அந்த விதையை விதைத்து நன்றாகத் தண்ணீர் ஊற்றி வந்தான்.

மூன்று வாரங்களான பின்னும் அந்த விதை முளைக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் மற்றவர்களோ கம்பெனியில் தங்கள் விதைகள் துளிர்க்க ஆரம்பித்து விட்டது என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேச்சைக் கேட்ட போது அவனுக்கு கவலையாக இருந்தது. சேர்மன் ஒரு தனித்தன்மை வாய்ந்த விதை என்றாரே அதை சரியாகப் பராமரிக்காமல் விட்டு விட்டோமோ என்று அவனுக்கு சந்தேகம் வந்தது. நல்ல உரம் எல்லாம் வாங்கிப் போட்டான். ஆனால் காலம் போன பின்னும் எந்த மாற்றமும் அவன் விதையில் இல்லை.

கம்பெனியிலோ அவரவர்களின் விதைகளின் வளர்ச்சியைப் பற்றியதாகவே பேச்சு இருந்தது. அவன் மேலும் பல முயற்சிகள் எடுத்துப் பார்த்தான். ஆனாலும் பயனில்லை.

ஒரு வருடம் கழித்து அந்த முக்கிய நாளும் வந்தது. பலரும் நன்றாக செழிப்பாக வளர்ந்திருந்த செடிகளோடு வந்திருந்தார்கள். போட்டி கடுமையாக இருக்கும் போலத் தான் அவனுக்குத் தெரிந்தது. அவன் ஒருவன் தான் வெறும் சட்டியைக் கொண்டு வந்தவன். பலரும் அவனை இரக்கத்துடன் பார்த்தார்கள். அவனுக்கு அவமானமாக இருந்தது. எல்லோருக்கும் பின்னால் கடைசியாக நின்றான்.

சேர்மன் வந்தவர் ஒவ்வொரு செடியின் வளர்ச்சியையும் பார்த்து பாராட்டிக் கொண்டே வந்தார்.  வெறும் மண்சட்டியோடு நின்ற அவனைப் பார்த்தவுடன் அவர் கேட்டார். “என்ன ஆயிற்று?”

அவன் கூனிக் குறுகிப் போனாலும் நடந்ததைச் சொன்னான். தான் எடுத்துக் கொண்ட முயற்சிகளை எல்லாம் சொல்லி, அத்தனை செய்தும் பலனில்லாமல் போயிற்று என்று ஒத்துக் கொண்டான்.

சேர்மன் அவனையே அடுத்த சேர்மனாக அறிவித்தார். அவன் உட்பட அனைவரும் அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தார்கள். அவர் சொன்னார்.

“நான் உங்கள் அனைவருக்கும் தந்தது நன்றாக வேக வைத்துப் பின் உலர வைத்த விதைகள். அவைகள் கண்டிப்பாக செடிகளாக வளர வாய்ப்பே இல்லை. உங்கள் விதைகள் துளிர்க்காமல் போன போது அதற்கு பதிலாக வேறு புது விதைகள் போட்டு வளர்க்க ஆரம்பித்து விட்டீர்கள். இவர் ஒருவர் மட்டும் தான் அப்படி ஏமாற்றப் போகாமல் நேர்மையாக இருந்திருக்கிறார்.”

“நீங்கள் அனைவரும் திறமையானவர்களே. அதில் எனக்கு சந்தேகமில்லை. அந்தத் திறமை இல்லாதிருந்தால் உங்களுக்கு என் கம்பெனியில் வேலையே கிடைத்திருக்காது. ஆனால் தலைவனாக ஆவதற்குத் திறமையுடன் இன்னொரு தகுதி கண்டிப்பாக வேண்டும். அவன் எதற்குத் தலைவனாக இருக்கிறானோ, அதற்காவது உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பவன் தலைமையில் தான் ஒரு நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைய முடியும். அப்படிப்பட்ட ஒருவராவது என் கம்பெனியில் இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இவர் கையில் இந்தக் கம்பெனியை ஒப்படைத்தால் இந்தக் கம்பெனி கண்டிப்பாக நல்ல வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

அவனிடம் தலைமைப் பொறுப்பைத் தந்து விட்டு திருப்தியுடன் அவர் ஓய்வு பெற்றார்.

இது ஒரு நிறுவனத்திற்கு மட்டுமல்ல, கட்சி, அமைப்பு, கூட்டம், நாடு எல்லாவற்றிற்கும் பொருந்தும். அவன் அரிச்சந்திரனாக எல்லா விஷயங்களில் இருக்கிறானோ இல்லையோ, யாருக்குத் தலைவராக ஆகிறானோ அவர்களுக்காவது உண்மையாக இருக்க வேண்டியது அவசியம். அப்படி இருப்பவன் தான் அவர்களுக்கு நல்லது செய்ய முடியும். அவனே தலைவன், அப்படி இருக்க முடியாதவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top