உன் மனதைப் பொறுத்து உனக்கு உணர்ச்சிகள் எழலாம்; நீ சேரும் இனத்தைப் பொறுத்தே உன் வாழ்க்கை தீர்மானிக்கப்படும். நெஞ்சம் மகிழ பழக வேண்டும். இதனை வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.
குறள்:
முகம்நக நட்பது நட்புஅன்று; நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு.
பொருள்: பார்க்கும் போது மனம் மகிழாமல் முகம் மட்டும் மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.
எதைச் சார்ந்து நிற்கிறோமோ அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம். உதாரணமாக, செம்மண்ணில் மழை விழுந்தால்,தண்ணீரின் நிறம் சிவப்பு; கரிசல் காட்டில் விழுந்தால் கருப்பு.
நல்லோர் வழி பற்றி இலக்கணம் கூறுவது:
- இலண்டனில் இருக்கம் வரை கீழ்த்தரமானவன் என்று பெயர் வாங்கிய கிளைவ் இந்திய மண்ணுக்கு வந்ததும் வீரனாகி விட்டான்.
- கணிகையாகத் தொழில் நடத்திய ஒருத்தி புத்த பிரானைச் சந்தித்ததும் ஞான தீட்டை பெற்று விட்டாள்.
- ராமனைச் சார்ந்து நின்றதால், ஒரு குரங்குக்குக் கூட நாட்டிலே கோயில் தோன்றிற்று.
- நல்லோர் உறவைப் போல் துணையும் இல்லை; தீயோர் உறவைப் போல் துன்பமும் இல்லை.
பழமொழி கூறுவது:
- பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.
- பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும்.
அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நணபல்லார் நண்பல்லர் எட்டுணையும்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
பொருள்: பாலைக் காய்ச்சினாலும் சுவை குறையாது. சங்கைச் சுட்டு நீறாக்கினாலும் தன் வெண்மை நிறத்தை தரும். அதைப் போல, மேன்மக்கள் துன்பம் வந்த போதும் தம் உயிர் குணத்திலிருந்தும் மாறுபடார். கீழோர் கலந்து பழகினாலும் நணபராகார்.
நம் வாழ்க்கைப்பாதையை தீர்மானிக்கும் மிகப்பெரிய ஒரு உறவு தான் நட்பு, ஆகவே நாம் நல்லோர் வழி நோக்கி நடந்து நலம்பெற வாழ்ந்திடுவோம்.