Home » பொது » இந்திரா காந்தி!!!
இந்திரா காந்தி!!!

இந்திரா காந்தி!!!

இந்திரா காந்தி (1917 – 1984)

இந்திய நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் இவரும் ஒருவர். உலக வரலாற்றில் பெண்களினாலும் ஒரு நாட்டை நிர்வகிக்க முடியுமென்ற நிலையை ஆணித்தனமாக நிரூபித்து இந்திய நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பதவி வகித்த பெருமைக்குரியவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி.

கடந்த 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜவஹர்லால் நேருவிற்கும் கமலா நேருவிற்கும் மகளாக பிறந்தார் இந்திரா காந்தி என அழைக்கப்பட்ட இந்திரா பிரியதர்ஷனி. இவரின் தந்தையான ஜவஹர்லால் நேரு இந்திய நாட்டின் முதல் பிரதமரும் சிறந்த கல்வி மாமேதையும் ஆவார். மேலும் சுதந்திர போராட்டங்களில் காந்தியுடன் இணைந்து செயற்பட்ட ஜவஹர்லால் நேரு மக்களிடம் பெற்ற நன்மதிப்பை அடிப்படையாக வைத்து பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

அதேபோல் தனது தந்தையின் வழியை பின்பற்றி இந்திரா காந்தி அரசியலில் நுழைந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை இந்திரா காந்திக்கும் மகாத்மா காந்திக்கும் எவ்வித இரத்த உறவுகளும் இல்லையென்பதும் அவர் மரியாதை நிமித்தம் காந்தி எனும் பெயரை தன் பெயருக்கு பின்னால் இணைத்துக்கொண்டமை  இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. கடந்த 1936 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் தாயார் கமலா நேரு உயிரிழந்த பின்னர் இந்திரா காந்தி நிலையானதொரு குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கவில்லை.

இந்நிலையில் அவர் தனது இளமைக் காலத்தில் இங்கிலாந்தின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுகொண்டிருந்த காலத்தில் லண்டனை மையமாகக் கொண்ட தீவிர சுதந்திரத்திற்கு ஆதரவான இந்திய குழுவின் உறுப்பினராகவும் செயற்ப்பட்டார். இதனிடையே அவர் கல்விகற்ற காலப்பகுதியில் பிரோசு காந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் தனது கல்வியை முடித்துக்கொண்ட அவர் அரசியலில் கால்பதித்தார். அதற்கமைய 1959 ஆம் ஆண்டு மற்றும் 60 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர ;பதவிக்காக போட்டியிட்டு வெற்றிபெற்றார். எனினும் அவர் தனது தந்தையான நேருவின் பிரதிநிதியாகவே பதவியில் நடிக்க வேண்டியிருந்ததை அவருக்கு பெரிதாக ஈடுபாடின்றி காணப்பட்டது. பின்னர் சில காலங்களாக தனது சிறந்த அரசியல் திட்டம் காரணமாக பல அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு அவர் கடந்த 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று இந்திய நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பதவியேற்றார்.

அவர் 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி முதல் கடந்த 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை பிரதமர் பதவியில் திகழ்ந்தார். எனினும் கடந்த 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரின் பிழையான அரசியல் நகர்வுகள் மற்றும் அதிகார பகிர்வில் ஏற்ப்பட்ட சிக்கல் நிலை காரணமாக மிகப்பெரிய தோல்வியை தழுவினார். அதன்பின்னர் தனது அயராத உழைப்பினாலும் திடமான நம்பிக்கையினாலும் கடந்த 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம 14 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்று கடந்த 1984 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்படும் வரை பதவியில் நீடித்தார்.

ஒரு பிரதம மந்திரியாக அவருக்கு கிடைத்த அனைத்து வளங்களையும் அவதானமாக பயன்படுத்தி தனது பலத்தையும் அதிகாரத்தையும் பலப்படுத்திக் கொண்டார். மேலும் அவருக்கு இருந்த அதிகாரத்தை பயன்படுத்தி வலு குறைந்த அமைச்சரவைகளை அமைத்து;க்கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.  மேலும் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பலம்மிக்க மூத்த தலைவர்களை புறந்தள்ளியதன் காரணமாக இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக பிளவுப்பட்டது. அதன்காரணமாக பிளவுபட்ட கட்சியின் ஒரு பகுதி இந்திரா காங்கிரஸ் எனவும் அழைக்கப்பட்டது.

இதனிடையே கடந்த 1971 ஆம் ஆண்டு மேற்கு கிழக்கு பாகிஸ்தான்களுக்கிடையில் ஏற்ப்பட்ட மோதல்களை கவனத்திற்கொண்டு கிழக்கு பாகிஸ்தானின் தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவாக பாகிஸ்தானுடன் போரை நடாத்தி மேற்கு பாகிஸ்தானை தோற்கடித்து பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்படும் பங்களாதேசைப் பிரித்து தனிநாடாக அமைக்க உதவிபுரிந்தார்.

மேலும் கடந்த 1975 ஆம் ஆண்டு அவசரகால சட்டத்தை அறிவித்த இந்திரா காந்தி அரசியல் சட்டத்தில் தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக்கொண்டார். மேலும் குறித்த விடயமானது எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையென அவர் மீது வழக்கு தொடரப்பட்டு சுமார் 19 மாதங்கள் அவர் வழக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் குறித்த விடயமானது அவரது செல்வாக்கை பாதித்த நிலையில் கடந்த 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தில் படுதோல்வியடைந்தமைக்கு அதுவும் காரணமாக அமைந்தது.

இதனிடையே இவரின் பல்வேறு அரசியல் நகர்வுகள் பல மூத்த அரசியல்வாதிகளை மூக்கின் மீது விரல் வைக்கும் அளவிற்கு மெய்சிலிர்க்க வைத்தது. இதேவேளை இவரின் ஆட்சிக்காலத்திலேயே இந்தியா முதலாவது அணுவாயு சோதனையை நடத்தியது. கடந்த 1967 ஆம் ஆண்டு ஒரு தேசி அணுசக்தி திட்டம் தொடங்கப்பட்டது. அது கடந்த 1974 ஆம் ஆண்டு சிரிக்கும் புத்தர் எனும் இரகசிய பெயருடன் இராஜஸ்தானில் நிலத்திற்கடியில் குறித்த அணு சோதனை நடாத்தப்பட்டது. குறித்த அணு சோதனை இந்தியாவை உலகில் இளம் அணுசக்தி அதிகாரமுள்ள நாடாக பிரதிபலித்தது.

மேலும் 1960 ஆம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில் இந்திரா காந்தியினால் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சி திட்டம் நிலவி வந்த உணவுப் பற்றாக்குறை நீக்க உதவியது. மேலும் இந்தியாவின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க செய்வதற்கும் அவரின் பசுமைப் புரட்சி; உதவியது. இன்றைய தினமும் குறித்த பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றமை அவரின் சிறந்த அரசியல் முன்னெடுப்புகளுக்கு சான்றாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்திரா காந்தி சீக்கிய தீவிரவாதம் வளர்ந்து வந்த காலப்பகுதியில் தீவிரவாதிகளை இல்லாதொழிக்கும் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். இந்நிலையில் இந்தியா பஞ்சாப் மாநிலத்திலுள்ள பொற்கோயிலுக்குள் முகாமிட்டிருந்த தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு  இந்திய இராணுவத்திற்கு பொற்கோயிலுக்குள் சென்று தாக்குதல் நடாத்த இந்திரா காந்தி அனுமதி வழங்கினார். குறித்த விடயமானது இந்திரா காந்தி மீது சீக்கியர்கள் சினம்கொள்வதற்கு பிரதான காரணமாக அமைந்தது.

மேலும் சீக்கிய தீவிரவாதிகள் மீது இந்திரா காந்தி தொடர்ச்சியாக மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக அவர் மீதான வெறுப்பு சீக்கியர்களுக்கு மேலும் அதிகரித்தது. இந்நிலையில் கடந்த 1984 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி புதடில்லியிலுள்ள தனது தலைமைஅமைச்சர் இல்லத்தில் வைத்து தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில் அவர் தனது முதலாவது புதல்வரான சஞ்சய் காந்தியை தனது தேர்ந்தெடுக்கப்படட அரசியல் வாரிசாக வளர்த்து வந்தார். எனினும் அவர் ஒரு விமான விபத்தில் இறந்த பின்னர் விமான ஓட்டியாக கடமையாற்றிய தனது 2 ஆவது மகனான ராஜீவ் காந்தியை அரசியல் வாரிசாக இந்திரா காந்தி அறிமுகப்படுத்தினார். அதற்கமைய இந்திரா காந்தியின் மரணத்தின் பின்னர் ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக பதவியேற்று கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் படுகொலை செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்த்க்கது.

மேலும் ராஜீவ் காந்தியின் மனைவியான சோனியா காந்தி  தற்போது இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயற்ப்பட்டு வருவதோடு தான் தேர்தலில் வெற்றிபெற்ற போதும் மன்மோகன் சிங்கை பிரதமராக தெரிவு செய்து தனது அரசியல் வாழ்வை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றார்.

இந்திய வரலாற்றில் முதல் பெண் பிரதமர் என்ற அந்தஸ்தை பெற்று இந்திய வரலாற்றில் சர்வதேச ரீதியில் வல்லமைமிக்க ஒரு நாடாக மாற்றிய பெருமைக்குரியவர். மேலும் இந்திய நாட்டில் பல தலைவர்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் இந்திரா காந்தி இந்திய நாட்டின் இரும்புப் பெண்மணி என்று சொல்லும் அளவிற்கு தனது சீரான ஆட்சியை மேற்கொண்டு உலகளாவிய ரீதியில் அனைவரது மனத்pலும் இடம்பிடித்த தலைவர்களில் ஒருவராவார்.

”பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!” – மகாகவி பாரதி.

நெஞ்சுரமும், நேர்மைத்திறமும், நேர் கொண்ட பார்வையும்  அஞ்சா நெஞ்சமும் கொண்ட மாதர் குல திலகம் , ‘இரும்பு பெண்மணி’, இந்திரா பிரியதர்சினி, அவதரித்தது, ஜவஹர்லால் நேரு மற்றும் கமலா நேரு என்ற புகழ்பெற்ற பெற்றோரின் கருவில். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய முப்பெரும் நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் அலகாபாத் நகரில். மற்ற குழந்தைகளைப் போன்று பெற்றோரின்  முழுமையான அரவணைப்பில் கடந்ததல்ல அவருடைய இளம் பிராயம்.

பிறந்த இரண்டாண்டுகளில், 1919 ஆம் ஆண்டு நம் தேசத் தந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பியவுடன், நேரு குடும்பத்தின் அடிக்கடி தொடர் சந்திப்பின் மூலமாக இந்திய சுதந்திர தாகத்தை எழுச்சியூட்டி, அவர்களை முழுமையாக ஈடுபடச் செய்தார். அவருடைய நான்காம் வயதில், தந்தை ஜவஹர்லால் நேருவும், தாத்தா மோத்திலால் நேருவும் முதல் முறையாக சிறை சென்ற போது.

பின்பு தாயும் இணைந்து கொள்ள, போகப்போக அதுவே வாடிக்கையாகிவிட்டிருக்கிறது. பிற்காலங்களில் தம் இளம் பிராயத்தை நினைவு கூர்கையில் இளம் வயதில் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு தனக்கு இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். தாயின் மெல்லிய உடல் வாகையையும், தந்தையின் கூரிய நாசியும், துணிவும் கொண்டவர்.

அவர் பிறந்த நேரம் முதல் உலகப் போர் முடிந்த நேரம். தந்தையும், தாத்தாவும் சிறையில் அடைபட,, குடும்பத்தின் மற்ற பெண்களுடன் குழந்தை இந்திராவும் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் தங்க வேண்டிய கட்டாயம். ஆசிரம வாழ்க்கை புதிய அனுபவத்தையும், சுதந்திரப் போராட்ட வித்தையும் விதைத்தது. அதன் காரணமாக பால்யகால விளையாட்டே மேடைப்பேச்சு, கைது, கூட்டம் ஆங்கிலப் போர் வீரர்களை போரிட்டு முறியடிப்பது என்பது போல் அமைந்தது, அவருடைய பிற்கால வாழ்க்கை முறைமைகளுக்கு அடித்தளமாக அமைந்தது. இதுவே அவர் ஒரு சுதந்திர உணர்வுள்ள , உறுதியான இதயம் கொண்ட ஒரு பெண்ணாக வளர வழி வகுத்தது.

அவருடைய குழந்தைப்பள்ளி தில்லியிலும், பள்ளிப்படிப்பு முதலில் அலகாபாத் நகரில் ஒரு கான்வெண்ட் பள்ளியிலும் பின்பு ஒரு தங்கும் பள்ளியிலும் தொடர்ந்தது. புத்தகம் படிப்பதில் ஆழ்ந்த விருப்பம் கொண்டவராக வளர்ந்தார். தந்தை வாங்கி வைத்திருந்த பெரும்பாலான புத்தகங்களை வாசித்திருக்கிறார். கவிஞர், எழுத்தாளர், ஓவியர் என பல்வேறு முகங்கள் கொண்ட ரவீந்திரநாத் தாகூரின், சாந்தி நிகேதன் பள்ளியில் , சேர்க்கப்பட்டார்.

இதைப்பற்றிக் கூறும் போது அவர், “ தந்தையின் முயற்சியால் ஏற்கனவே எனக்கு இலக்கியத் தொடர்பு இருப்பினும், சாந்தி நிகேதனுக்குச் சென்றவுடன் தாகூர் மூலமாக கலையுலகின் கதவு தானாகத் திறந்தது” என்றார். தன்னுடைய 11வது வயதில் இராமாயணக் காப்பியத்தில் வருவது போன்று, வானரப் படையை நிறுவ முயன்றார். தன் வயதொத்த சிறுவர் சிறுமியரை இணைத்து, வானரசேனை என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்து வைத்தார்.

வானரசேனை என்ற இந்த அமைப்பு பல அரும் பணிகளைச் செய்தன. அதாவது, சுதந்திரப் போராட்ட வீரார்களுக்கு உணவு, குடிநீர் விநியோகம் செய்வது, கொடிகள் தைத்துக் கொடுப்பது, கல்வியறிவற்றவர்களுக்கு தேவையான மடல்கள் எழுதிக் கொடுப்பது, விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டு தலைமறைவாக வாழ்பவர்களுக்கு மடல் கொண்டு சேர்க்கும் சேவையைச் செய்தல், சமையல் செய்து கொடுத்தல் போன்ற எண்ணற்றப் பணிகள் செய்து வந்தனர்.

இவையனைத்தும் அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகளின் தாக்கம்தான் என்பதை அவரே, 1930 இல் பூனாவில் ஒரு பள்ளியில் படிக்கும் போது, ” காந்தியடிகள் என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருந்தார். என் ஒவ்வொரு செயல்களிலும் முன்னேற்றங்களிலும்  அவருக்கு பெரும் பங்கு உண்டு”  என்ற சொற்கள் மூலம் அதை உறுதிபடுத்தினார்.

”பாலசர்க்கா சங்கம்” என்ற நிறுவனத்தை , காந்தியடிகளின் அறிவுரைப்படி நிறுவி, சிறுவர், சிறுமியுடன், நூற்பு வேள்வியை மேற்கொண்டார். ஆனந்த பவனம் என்ற தம்முடைய மாளிகையின் மூத்த பணியாளர் ஒருவருக்கு தம் இளம் வயதிலேயே கல்வி கற்பிக்கும் பணியும் மேற்கொண்டார். தம் இல்லத்திற்கு சற்று அருகாமையில் இருந்த ஒரு தொழுநோய் இல்லத்திற்கு அடிக்கடி சென்று தன்னால் ஆன சேவைகளைச் செய்ய முற்பட்டிருக்கிறார்.

இந்திரா தம்முடைய 17 வது வயதில் தன் தாய் கமலா நேருவிற்கு காசநோயினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட காரணத்தினால், அவருடைய மருத்துவத்திற்காக அவருடன் சுவிட்சர்லாந்து செல்லவேண்டி வந்தது. அந்த நேரத்தில் தந்தையும் சிறைச்சாலையில், ஆனால் 1936 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 28ஆம் நாள் தாய் கமலா நேரு இறந்தபோது தந்தை விடுதலை செய்யப்பட்டு, உடனிருந்தார்.

இந்தியாவிற்கு திரும்பியபோது, மிக அழுத்தமான ஒரு சூழலில் சிக்குண்டு இருந்தார். வேதனை, கவலை, அனைத்திற்கும் மேலாக தனிமை!  இந்த நேரத்தில் தம் பால்ய கால நண்பரான பிரோஸ்காந்திதான் இவருக்கு உடனிருந்து ஆறுதலளித்து வந்தார். நேரு குடும்பத்தின் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர் இவர். இரண்டாம் உலகப் போர் தொடங்கப் போகும் சில காலம் முன்னர்தான் அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் சேர்ந்தார்.

மோதிலால் நேரு தம் பெருஞ்செல்வத்தை தேசத்திற்காக அளித்துவிட்டார். நேரு தாம் எழுதிய புத்தகத்தின் மூலமாகக் கிடைத்த வருமானத்தைக் கொண்டுதான் தம் மகளைப் படிக்க வைத்தார்.

ஒரு ஆண்டிற்குள்ளாக அங்கு அவருடைய உடல் நிலை பாதிக்கப்பட்டு, சுவிட்சர்லாந்து சென்று மருத்துவம் பார்க்க வேண்டி வந்தது. நோயின் கொடுமையும், தனிமையும் ஒரு சேர வாட்ட, அந்த நேரத்தில் பிரோஸ்காந்தி அவருக்குத் துணையாகவும், ஆதரவாகவும் இருந்துள்ளார். 1939 இல் இரண்டாம் உலகப்போர் ஆரம்பமானவுடன், இந்திரா, கப்பல் மூலமாக, பிரோஸ்காந்தியுடன் இந்தியா வந்து சேர்ந்தார்.

தன் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பிரோஸ்காந்தியை 1941 ஆம் ஆண்டு,மார்ச் மாதம் அலகாபாத்தில் அவரை மணந்து கொண்டு, லக்னோவில் தம் திருமண வாழ்க்கையைத் துவங்கினார். நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கையில் மேலாளராக பணி புரிந்தார் பிரோஸ்காந்தி.  அப்பத்திரிக்கையின் பெண்கள் பகுதியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் இந்திராவிற்குக் கிடைத்தது. 1944 ஆகஸ்ட் 20 ஆம் தேதி மும்பையில் ராஜீவ் காந்தியைப் பெற்றெடுத்தார் இந்திரா.

பிரோகம் மும்பையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரசு கமிட்டி கூட்டத்திற்கு இந்திராவும் சென்றார். ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற இயக்கமும் இங்குதான் துவக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில், நேருஜி, இந்திரா காந்தி மற்றும் பிரோஸ்காந்தி மூவரும் கைது செய்யப்பட்டு , சிறை வைக்கப்பட்டனர்.

நம் இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திருநாளும், ஆகஸ்ட் 15 ஆம் நாள் 1947 ஆம் ஆண்டு வந்தது. ஆனாலும் இந்திய – பாகிஸ்தான் பிரிவினையும் உடன்  வந்தது, மகாத்மாவை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. மத வெறியும், வகுப்புக் கலவரங்களும் நாட்டில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தின. மக்கள் பாகிஸ்தானிலிருந்து கூட்டம் கூட்டமாக அகதிகளாக வந்தனர். இந்த அகதிகள் முகாமிற்கு அன்னை இந்திரா நேரிடையாகச் சென்று, அவர்களுக்கு உணவு, உடை என எந்த குறைவும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். இஸ்லாமியர்கள் வாழ்ந்த பகுதிக்கும் எந்த அச்சமுமின்றி சென்று வந்தார்.

சுதந்திர இந்தியாவின் பிரதம மந்திரியாக பதவியேற்ற ஜவஹர்லால் நேரு, தம் இறுதிக் காலமான 1967 வரை பதவியில் இருந்தார். அந்த காலகட்டத்தில், தாய் உயிருடன் இல்லாத காரணத்தினால் , குடும்பப் பராமரிப்பிற்காக இந்திராவும் , தம் கணவர், குழந்தைகளுடன் மும்மூர்த்தி இல்லத்தில் (Teen Murthi House) தங்க வேண்டி வந்தது.

உலக நாடுகளின் அழைப்பை ஏற்ற தந்தையுடன் பல நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கும், பல அரசியல் பிரபலங்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது அவருக்கு. 18 ஆண்டு காலம் தந்தையுடன் கற்ற அரசியல் நெளிவு சுளிவுகள், இந்திராவை ஒரு பெரும் ராஜதந்திரியாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும் பண்படுத்தியது.

பாரிசில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திற்கும், காமன்வெல்த் மாநாட்டிற்கும், மற்றும் அமெரிக்காவிற்கும் தன் தந்தையுடன் சென்று வந்தது பல அனுபவங்களைக் கொடுத்தது. எலிசபெத் மகாராணியின் மகுடாபிஷேகதிற்கான அழைப்பை ஏற்று அங்கு சென்றபோது, வின்ஸ்டன் சர்ச்சிலையும் சந்தித்தார். 1952 இல்  தீன் மூர்த்தி பவனுக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி திருமதி ரூஸ்வெல்ட்டைச் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

1959 இல், பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி இந்திராகாந்தி அம்மையாரை செய்தி  ஒலிபரப்புத் துறை அமைச்சராக நியமித்தார். குறைந்த விலையில் வானொலி தயாரிப்பதையும், குடும்ப நலத்திட்டத்தையும் துவக்கி வைத்தார். பிரோஸ்காந்தி பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956 முதல் 1960 வரை அகில இந்திய காங்கிரசின் இளைஞர் அணித்தலைவராக இருந்தார் இந்திரா காந்தி. 1960 ஆம் ஆண்டு பிரோஸ்காந்தியின் திடீர் மறைவு இந்திராவை மிகவும் பாதித்தது.

1964 ஆம் ஆண்டு, புவனேசுவரம் காங்கிரசு மாநாட்டில் மயக்கமுற்று விழுந்த தந்தை நேருஜியை கண்ணும் கருத்துமாக மகள் கவனித்துக் கொண்டாலும், காலன் அவரையும் விட்டு வைக்காமல் மே மாதம் 27ஆம் நாள் அதே வருடத்தில் அழைத்துக் கொண்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் , வலுவடைந்திருந்த நேரம், தமிழ் நாட்டிற்கு வந்திருந்த அன்னை இந்திரா மக்களின் நல்லாதரவையும் பெற்றிருந்தார். தேசிய ஒருமைப்பாட்டை மிகவும் நேசித்த அன்னையின் சேவையைப் பாராட்டும் விதமாக அவர்தம் பிறந்த நாளை தேசிய ஒருமைப்பாட்டு தினமாகக் கொண்டாடுவதும்  சிறப்பு

பாகிஸ்தான் படை வீரர்களின் காஷ்மீர் ஊடுறுவல் கலவரத்தை ஏற்படுத்தியது. இந்திராகாந்தி ஸ்ரீநகர் சென்று பல பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார். போர் உருவாகி, நிறுத்தமும் ஏற்பட்டது. சிப்பாய்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஊக்கமளித்தார். பாகிஸ்தானுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக லால் பகதூர் சாஸ்திரி ரஷ்யாவிலுள்ள தாஷ்கண்டிற்கு சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்பு அங்கேயே லால் பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் காலமானார். அவர் மறைவிற்குப் பிறகு 1966 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 25ம் நாள் இந்தியாவின் பிரதமர் ஆனார். காமராசரின் உறுதுணை பெரும் பலமானது இவருக்கு. பிரதமராக இவர் ஆற்றிய தொண்டு பாரே புகழும் வண்ணம் இருந்தது!

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து இலட்சக்கணக்கான அகதிகள் சாரிசாரியாக இந்தியா நோக்கி வர ஆரம்பித்தார்கள்.

இது பெரும் பிரச்சனையாக உருவெடுக்க ஆரம்பித்த நேரம், இந்திராவின் நண்பர் ஒருவர், தான் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டிற்கும், அந்தக் கோடை விடுமுறையில் செல்லப் போவதாக சொன்னபோது, அன்னை சற்றும் தயங்காது, “ பலர் உங்களிடம் வந்து இந்தியாவில் என்ன நடக்கிறது என்று கேட்பார்கள். அப்போது நீங்கள், இன்னும் ஓர் ஆண்டு காலத்தில் மேற்கு வங்காளத்திலிருந்து இந்திய மண்ணிற்கு வரும் அகதிகளே இருக்க மாட்டார்கள் என்று இந்தியப் பிரதமர் ,அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகச் சொல்லுங்கள்”என்றார்.

மேற்கு வங்க இடதுசாரிகளின் கிளர்ச்சியைத் துணிவுடன் எதிர்கொண்டு ஜனநாயக முறையில் சமாளித்தார். கேரளாவில் உணவுப் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் தலை தூக்கிய நேரம் அது. வாஷ்ங்டன் சென்று ஜனாதிபதியுடன் பேசிக் கொண்டிருந்த போது, “ என் நாட்டு மக்களுக்காக விடம் அருந்தச் சொன்னாலும், தயங்காமல் அருந்துவேன்” என்று சொன்னது அவர் நாட்டின் மீது கொண்டிருந்த அபரிமிதமான பற்றைக் காட்டியது. அவருடைய துணிச்சலான போக்கு பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டது.

“ இந்து மதத்தின் வேதாந்தத் தத்துவங்களில் எனக்கு நல்ல நம்பிக்கை இருந்தாலும், மனித குலத்தைப் பிரிக்கும் அந்த மதவெறியைத் தீவிரமாக எதிர்க்கிறேன்” என்ற தெளிவான சிந்தனை கொண்டிருந்தார். உலகளவில், பொதுவுடைமை அல்லாத 70 நாடுகள் பங்கு கொண்ட, வாக்கெடுப்பில், உலகப்புகழ் பெற்ற தலைவராக இந்திரா காந்தி அம்மையாரே தேர்ந்தெடுக்கப்படது குறிப்பிடத்தக்கது. இவர் செய்த பல அரிய சாதனைகளே இதற்குக் காரணம்.தன் ஆட்சிக் காலத்தில் நாணயத்தின் மதிப்பைக் குறைத்தார். உச்சநீதி மன்ற தலைமைப் பதவி நியமனத்தை மூப்புரிமை அடிப்படையில் செய்யும் மரபை மாற்றியமைத்தார்.

பஞ்சாப் கலவரம் தீவிரமான வேளையில் அவர்களை ஒடுக்க பொற்கோவிலுக்குள் இராணுவத்தை அனுப்பினார். 1984 ஆம் ஆண்டில், ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்”  தீவிரவாதிகளை ஒடுக்க வைத்ததோடு பிந்த்ரன்வாலே கொல்லப்பட்டார். இந்த நேரத்தில்தான் சீக்கிய மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி வந்தது அவருக்கு.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த வேண்டி வந்தது. 1969 இல் பதினான்கு மிகப்பெரிய வங்கிகள் தேசிய உடமையாக்கப்பட்டது. பத்திரிக்கை தணிக்கை முறை ஒழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மன்னர்களுக்கு அளிக்கப்பட்ட மானியங்கள் நிறுத்தப்பட்டது. பஞ்சாப் மட்டுமன்றி, காஷ்மீர், மணிப்பூர், அஸ்ஸாம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட பிரிவினை வாதமும் முடக்கப்பட்டது. இப்படி பல்வேறு சோதனைகளைக் களைந்து சாதனைகளாக மாற்றிய பெருமை அம்மையாரையேச் சேரும்.

அவருடைய பல்வேறு நாட்டு நலப்பணித்திட்டங்கள் ,மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் முக்கியமானது இருபது அம்சத் திட்டம். இத்திட்டத்தின் மூலம், மலை சாதி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், கிராமப்புற, வறுமைக் கோட்டின் கீழே உள்ள மகளிர், ஆகியோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அறிவியல் துறையும், வான் ஆய்வு மையங்களும் பெரும் வளர்ச்சி கண்டது அம்மையாரின் ஆட்சிக்காலத்தில்.

பொருளாதாரமும் நல்ல வளர்ச்சியடைந்தது. நம் இந்திய நாட்டு விஞ்ஞானிகளின் தனிப்பட்ட முயற்சியால் அணு ஆய்வு சோதனையிலும் வெற்றி கண்டதும் குறிப்பிடத்தக்கது. பல ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்பட்டன. தொலைத்தொடர்பிற்கென பல கோள்கள் செலுத்தப்பட்டன. இன்சாட் A, B விண் வெளிக்கலங்கள், அணுமின் நிலையங்கள், பெரிய தொழிற்சாலைகள் என அனைத்தும் வெற்றிகரமாக செயல்பட்டன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளை சீரிய முறையில் நடத்தியமைக்காக 1982 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் கழகத்தின் விருது இவருக்கு வழங்கப்பட்டது. தொள்ளாயிரத்தைம்பது நாடுகள் இணைந்த கூட்டுச் சேரா இயக்கத்தின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னுடைய அன்பான போக்கினாலும், சாமர்த்தியமான செயல்களினாலும், நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களைத் தீர்த்து வைத்தார்.

ஓயாத உழைப்பும், உன்னத முயற்சியும், நாட்டை உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கும் அவரை உச்சாணியில் ஏற்றி வைத்த வேளையில், துரதிருஷ்டவசமாக, அக்டோபர் 31ந்தேதி, 1984 ஆம் ஆண்டு, அவருடைய இரண்டு சீக்கிய மெய்க்காப்பாளர்களான பியாந்த்சிங் மற்றும் சத்வந்த்சிங் என்பவர்களால் ஈவு இரக்கமின்றி, சுட்டுக் கொல்லப்பட்டார். தன்னிகரில்லா அந்தத் தியாகச்சுடரின் அஸ்தி நாற்பது கலசங்களில் சேகரிக்கப்பட்டு, மக்களின் அஞ்சலிக்காக நாட்டின் பல முக்கிய தலைநகரங்களில் வைக்கப்பட்டிருந்தது. யமுனை ஆற்றங்கரையில் அவர்தம் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.

நல்ல பல குறிக்கோள்களை , பல்வேறு சோதனைகளுக்கிடையேயும் நிறைவேற்றிக் காட்டிய சாதனைப் பெண்மணி அன்னை இந்திரா. மனிதாபிமானம், சகோதரத்துவம், அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் துணிச்சல், சகமனிதர்களிடம் அன்பு, நாட்டுப்பற்று, விடாமுயற்சி இப்படி ஆக்கப்பூர்வமான நல்லெண்ணங்கள் மூலமாகவே நாட்டில் பல அரிய நற்பணிகள் செய்து தம் இன்னுயிரையும் ஈந்தார். அவருடைய சாதனை வாழ்க்கை பல்லோருக்கும் முன்னுதாரணமாக இருப்பதில் அதிசயமில்லை. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வாழ்ந்து காட்டியவர் அன்னை இந்திரா காந்தி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top