ஓர் ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அந்த வட்டாரத்தில் உள்ள செல்வந்தர்களின் சொத்து மதிப்பைக் கணக்கிட்டால், அவர்தான் முதலிடம் பெறுவார். அந்த அளவுக்கு அவருக்கு சொத்துக்களும், செல்வமும் இருந்தன. அதாவது அசையும் சொத்து, அசையாச் சொத்து ஆகியவை அளவிட முடியாத அளவுக்கு இருந்தன.
இவ்வளவு செல்வக் குவியலோடு இருந்த அந்தச் செல்வந்தர் தனது பெற்றோர் மற்றும் மனைவி, மகன்கள், மகள்களுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். தனது மகனோ, மகளோ எதை விரும்பிக் கேட்டாலும், அடுத்த நொடியிலேயே அதை வாங்கிக் கொடுத்து விடுவார்.
தனது மகள்களுக்குத் திருமணம் செய்து மருமகன்களை வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக் கொண்டார். மகன்களுக்கும் அவ்வாறே திருமணம் செய்து மருமகள்களையும் தனது வீட்டிலேயே வைத்துக் கொண்டார். எல்லா வசதிகளும் பெற்ற நிலையில், அந்த ஊரிலேயே மிகப் பெரிய கூட்டுக் குடும்பமாக அச்செல்வந்தரின் குடும்பம் இருந்தது.
குடும்பத்தில் எவ்விதக் குறையும் இல்லாமல் அனைவரது விருப்பங்களையும், தேவைகளையும் பூர்த்தி செய்து வந்தார் செல்வந்தர்.
செல்வந்தரின் நடவடிக்கையால் உச்சி குளிர்ந்து போன குடும்பத்தில் உள்ளவர்கள், “”நீங்கள் இல்லையென்றால் நாங்கள் இல்லை; நீங்களே எங்கள் கடவுள். உங்களுக்காக, நாங்கள் உயிரையும் கொடுப்போம்,” என்று கூறி, செல்வந்தரின் புகழ்பாடத் தொடங்கினர்.
குடும்பத்தார் இவ்விதம் கூறும் போதெல்லாம் செல்வந்தர் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்று விடுவார். குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். உறவுகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு பேரானந்தம் அடைந்தார் செல்வந்தர். இப்படியாக நாட்களை ஆனந்தமாக செல்வந்தரும், அவரது குடும்பத்தாரும் வாழ்ந்து வந்தனர்.
அன்று செல்வந்தருக்குப் பிறந்தாள். வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள், நண்பர்கள், பிரமுகர்கள், ஊர்மக்கள் என்று ஒரு மாபெரும் மக்கள் வெள்ளத்தில் செல்வந்தரின் வீடு மிதந்து கொண்டிருந்தது. வந்தவர்கள் பல்சுவை விருந்துண்டு அவரை வாழ்த்திவிட்டுச் சென்றனர்.
அன்று இரவு விதவிதமான சாப்பாட்டு வகைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் புசித்து ருசி பார்த்துவிட்டார் செல்வந்தர். வகை வகையான உணவைக் கண்டதும் செல்வந்தரால் வாயை அடக்க முடிய வில்லை. விளைவு, நள்ளிரவு நேரம் அவருக்கு இடதுபக்க மார்பு லேசாக வலித்தது. சிறிது நேரத்தில் வலி அதிகமானது. வாய் விட்டு அலற முயன்றும் முடியவில்லை.
செல்வந்தர் தனியாகப் படுத்துறங்கும் பழக்கம் கொண்டவர். அதனால், அவருக்கு உதவிக்கு அருகில் யாருமில்லை. அரைகுறை மயக்க நிலைக்குச் சென்றுவிட்டார். எமனின் பாசக்கயிறு தனது கழுத்துக்கு எதிரே தொங்குவது பால் அவருக்குத் தோன்றியது. சிறிது நேரத்தில் தனக்கு மரணம் என்பதை உணர்ந்துக்கொண்டார் செல்வந்தர்.
பயந்து போன செல்வந்தர் எமனிடம் கெஞ்சினார்; அழுதார். அவரது கூக்குரலை எமன் தன் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. இருப்பினும், செல்வந்தர் கதறி அழுதபடியே எமனிடம் உயிர் பிச்சைக்காகக் கெஞ்சிக் கொண்டே இருந்தார்.
“”எமனே! என்னுடைய செல்வம் அனைத்தையும் நீ எடுத்துக்கொள். என்னை விட்டு விடு,” என்று கெஞ்சினார் செல்வந்தர்.
“”முடியவே முடியாது… உனது வாழ்க்கை முடிந்துவிட்டது,” என்று கூறினான் எமன்.
“”என்னுடைய அசையும் சொத்துக்களோடு, அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் தந்துவிடுகிறேன். என் மீது கருணை காட்டுங்கள்,” என்று மீண்டும் கெஞ்சினார் செல்வந்தர்.
“”அற்பனே! அழிந்து போகக்கூடிய சொத்துக்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்?” என்று கேட்டான் எமன்.
செல்வந்தர் அவரிடம் மிகவும் கெஞ்சினார்.
“”செல்வந்தனே! உன்னைப் பார்த்தால், எனக்குப் பாவமாக இருக்கிறது. அதற்காக என் கடமையிலிருந்து தவறி உன்னை என்னால் விட்டுவிட முடியாது. ஆனால், ஒன்று செய்…” எமன் தனது பேச்சைப் பாதியில் நிறுத்தினார்.
“”நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள். செய்கிறேன். எப்படியோ நான் உயிர் பிழைத்தால் போதும்!” என்று கூறினார் செல்வந்தர்.
“”செல்வந்தரே! உனக்காக ஒருநாள் அவகாசம் தருகிறேன். உனக்காக வேறு யாராவது உயிரைக் கொடுக்க முன் வந்தால், நீ உயிர் பிழைத்துக் கொள்ள முடியும். முடிந்தால் அதற்கான ஏற்பாட்டைச் செய்து கொள்,” என்று செல்வந்தரிடம் எமன் கூறினான்.
எமன் இவ்வாறு கூறியதைக் கேட்டதும், செல்வந்தரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. மரண பயம் அவரை விட்டுப் போய்விட்டது. ஏனெனில், அவருக்காக உயிரைக் கொடுப்பதற்குக் குடும்பத்தில் ஒரு பட்டாளமே இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருந்தார் செல்வந்தர். அதனால் தான் அவருக்கு அத்தனை மகிழ்ச்சி!
மரண பயத்திலிருந்து விடுபட்டு முக மலர்ச்சியுடன் காணப்பட்ட செல்வந்தரைப் பார்த்து வியப்புடன், “”சில மணி நேரங்களில் சாகப் போகிற நீ எப்படிச் சந்தோஷமாக இருக்கிறாய்?” என்று கேட்டான் எமன்.
“”எமனே! உனக்கு விஷயம் தெரியாதா? நான் சொத்தும், செல்வமும் படைக்கப் பெற்றவன் மட்டுமல்ல… எனக்கு ஒரு ஆபத்து என்றால், எனக்காக உயிரையும் கொடுக்கிற தியாக உள்ளம் கொண்ட சிறந்த மக்களை நான் பெற்றிருக்கிறேன். அவர்கள் எனக்காக எதையும் செய்வர்,” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் செல்வந்தர்.
“”அதையும் பார்த்து விடுவோமே… நாளை வருகிறேன்,” என்று சொல்லிவிட்டு எமன் புறப்பட்டுச் சென்று விட்டான்.
அன்றிரவு மகிழ்ச்சியாக இருந்தார் செல்வந்தர். பொழுது விடிந்ததும் குடும்பத்தினர் அனைவரையும் தனது அறைக்கு வரும்படி அழைத்தார். அனைவரும் அங்குச் சென்று அவரைச் சுற்றி நின்றுகொண்டனர்.
“”அப்பா, எங்களை எதற்காக அழைத்தீர்கள்?” என்று மகன்களும், மகள்களும் கேட்டனர்.
இதே கேள்வி அனைவரது வாயிலிருந்தும் வெளிவந்து, செல்வந்தரின் செவியில் நுழைந்தது.
நள்ளிரவில் நடந்த சம்பவத்தைச் சொன்னார் செல்வந்தர். அனைவரும் அதை ஆவலுடன் கேட்டனர். விவரத்தைச் சொல்லி முடித்ததும் செல்வந்தர் அவர்களைப் பார்த்து கேட்டார்.
“”எனக்காக உயிரைக் கொடுப்பதற்குத் தயாராக உள்ளவர்கள் உங்களில் யார்?” என்று கேட்டார்.
செல்வந்தரின் இக்கேள்வியைச் செவிமடுத்த அனைவரும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்தனர். செல்வந்தருடைய செல்வச் செழிப்பில் இது காறும் ஊறித் திளைத்து உல்லாச வாழ்வு வாழ்ந்த அவர்கள் தங்களது உயிரைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தனர்.
அவர்கள் அனைவரும் ஒரு சேர, செல்வந்தரைப் பார்த்து, “”நீங்கள் எதை வேண்டுமானாலும், கேளுங்கள். உடனே கொடுக்கத் தயாராக உள்ளோம். ஆனால், உயிரை மட்டும் கேட்காதீர்கள். அதனை எங்களால் கொடுக்க முடியாது. ஏனெனில், செல்வம் போனால், திரும்பி வந்து விடும்.
உயிர் போனால் திரும்பி வராது. இது உங்களுக்கே தெரியும். தயவு செய்து எங்களது இயலாமைக்கு எங்களை மன்னித்து விடுங்கள்,” என்று கூறி விட்டு, செல்வந்தரின் அறையை விட்டு ஒவ்வொருவராகப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.
புறப்படும் முன்பு அவர்கள் செல்வந்தரிடம் சொத்துக்களைப் பிரித்துக் கொடுக்கும்படி கேட்டனர். அவர்கள் கூறியதைக் கேட்ட செல்வந்தர் கதிகலங்கிப் போனார். அனேகமாக அவருக்குப் பாதி உயிர் போய்விட்டது. நடைப்பிணமாக படுக்கையில் தனியே கிடந்தார். நம்பியவர்கள் எல்லாம் கைவிட்டு விட்டதை எண்ணி மனம் நொந்தார்.
“”இவர்கள் மீதா இவ்வளவு நம்பிக்கை வைத்தோம்,” என்று நினைத்து கண்களை மூடினார். தூக்கம் வரவில்லை. ஆனால், இரவுதான் வந்தது. எமனும் வந்தார்.
செல்வந்தரின் காலக்கெடு முடிந்து விட்டதால், அவரது உயிரைப் பறித்துக் கொண்டு தனது இருப்பிடம் நோக்கிச் சென்றார் எமன்.
வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை. ஆனால், அதே சமயம் நிரந்தரமாக நிலைக்கும்படி நம்மால் சிலவற்றைச் செய்ய முடியும் என்பதை உணருங்கள்.