மெக்ஸிக்க மணித்துளிகள்
மெக்ஸிக்கோ. மாயன் மற்றும் ஆஸ்டெக் என்னும் பழம்பெரும் செவ்விந்திய நாகரீகங்கள் தழைத்த நாடு. ஸ்பானிஷ் காலனீய ஆதிக்கத்தின் கீழிருந்த நாடு. வெகுமக்களின் புரட்சி கண்ட நாடு. ஆக்டேவியோ பாஸ் எழுதிய நாடு. அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் முதலிய பல தளங்களிலும் தனக்கான அடையாளங்களைத் தக்க வைக்க முயலும் நாடு. பழையதும் புதியதும் வறுமையும் வளமையும் இயற்கை எழிலும் சூழல் மாசும் கலந்த நாடு. ஒரு மெக்ஸிக்கோவினுள் பல மெக்ஸிக்கோக்கள்.
தொழில் மற்றும் குடும்ப விடுமுறைக் காரணங்களுக்காக மெக்ஸிக்கோவின் பல பகுதிகளுக்கும் போவது வழக்கம். நான் கண்ட பல நாடுகளில் எனக்கு மிகப் பிடித்தமானவை எவையென்று வரையறுப்பது கடினம். ஆனால், மீண்டும் மீண்டும் போக வேண்டுமென விரும்பும் நாடுகள் பட்டியலில் மெக்ஸிக்கோவும் அடக்கம்.
மெக்ஸிக்கோவின் கேன்கூன் போன்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திட்டமிட்டு வளர்க்கப்பட்டவை. பெரும்பாலான பயணிகள் அண்டை நாட்டு அமெரிக்கர்கள். அமெரிக்க ஷெரட்டன்களும் ஹில்ட்டன்களும், அமெரிக்க டாலர் விலைக்கு மெக்ஸிக்கன் மாறுவேடத்தில் அமெரிக்க வசதிகளைப் பரிமாறும். இவர்களுக்குச் சற்றும் சளைக்காத மெக்ஸிக்கன் விடுதிகள், அமெரிக்க டாலர் விலைக்கு மெக்ஸிக்கன் வாசமுள்ள அமெரிக்க வசதிகளைப் பரிமாறும். இத்தகைய முதல் அனுபவங்கள் ஏமாற்றமளிப்பவை. இன்றைய அமெரிக்க/உலகப் பயணி எங்கும் எதிர்கொள்ளும் முதன்மைச் சவால்: அயல்நாடுகளின் அமெரிக்க/மேற்கத்திய அரிதார மேல்பூச்சை விலக்கி, ஒவ்வொரு தேசத்தின் ஆன்மாவையும் அதனதன் தளத்தில் புரிந்து அனுபவிக்க முயலுவதே (இயலுமானால்!)
3000 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கிறது மாயன் நாகரீகம். மாயன் மக்களின் தோற்றமூலம் தெளிவாகத் தெரியவில்லை. மாயன் பேரரசு ரோமாபுரிப் பேரரசை விட ஆறு மடங்கு அதிகமான காலத்துக்கு, செல்வச் செழிப்புடன் நீடித்திருக்கிறது. இன்றைய வருடம் போன்ற கால அளவை, ‘ஸீரோ ‘ உள்பட்ட உயர் கணிதவியல், சூரிய-சந்திரக் கிரகணங்களையும் வெள்ளிக் கிரகத்தின் நீள்வட்டச் சுற்றுப்பாதையும் கணிக்குமளவு விண்ணியல் வளர்ச்சி, நுட்பமான பிரமிடுகளும் கோவில்களும் கல்வெட்டுச் சிற்பங்களும் விண்ணியல் ஆராய்ச்சி நிலையங்களும் உள்ளடக்கிய கட்டடக் கலை என்றிருந்த நாகரீகம். இது 16-ஆம் நூற்றாண்டை ஒட்டி ஏனோ மறைய ஆரம்பிக்கிறது. துப்பாக்கிகளும் அம்மைவியாதியுமாய் உள்ளே நுழையும் ஸ்பானிஷ்காரர்கள், ஏற்கெனவே பலவீனமான மாயன் பேரரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்கள். ஸ்பானிஷ் காலனீய ஆதிக்கம் துவங்குகிறது.
ஸ்பானிஷ் காலனீயவாதிகள், வன்முறைப் பயமுறுத்தல்கள் மூலம் மாயன் மக்களைக் கத்தோலிக்கக் கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றுகிறார்கள். அடிப்படை மாயன் கலாச்சாரத்தை வேரறுக்கும் பொருட்டு, முக்கிய மாயன் புத்தகங்களை எரிக்கிறார்கள்; மிஞ்சும் நான்கு புத்தகங்களில் மூன்றை ஐரோப்பாவுக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள். ஸ்பானிஷ்காரரர்கள் மேல்தட்டிலும், வெள்ளை-கறுப்பின-செவ்விந்தியக் கலப்பினங்கள் நடுத்தட்டுகளிலும், செவ்விந்தியர்கள் அடித்தட்டிலும் இருக்கும் ஆறடுக்கு இனவாதச் சமூக அமைப்பு உருவாக்கப்படுகிறது; இதுவே பின்னாளில் வன்முறை நிரம்பிய இனவிடுதலைப் போர்கள் நடக்கக் காரணமாகிறது.
அந்நியக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படும் மாயன் மக்கள் அதை எதிர்கொண்ட விதம் குறிப்பிடத்தக்கது. மதம் மாறியவர்கள் தங்களது மாயன் கடவுளர்களைக் கத்தோலிக்கப் புனிதர்களாய்ப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். கத்தோலிக்க மதச் சடங்குகளில் தமது கலாச்சாரச் சடங்கு அம்சங்களைச் சேர்க்கிறார்கள். தமது கதைகளை, கலைகளை, நம்பிக்கைகளை, வாழ்க்கைமுறையை, வெளியிலிருந்து வந்திறங்கிய கலாச்சாரத்துடன் விரிசலின்றி இணைக்கிறார்கள். இன்றைய நவீன மெக்ஸிக்கக் கலாச்சாரத்தின் அடித்தளம் எழுகிறது.
இன்றும் பழைய மாயன் நாகரீகத்தின் தடங்கள் காணக் கிடைக்கின்றன. கோவிலாகவும் கலங்கரை விளக்கமாகவும் செயல்பட்ட துலும் சிதைவுகள். வெவ்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்ட ஐந்து அடுக்குகள் கொண்ட எட்ஸ்னா பிரமிடு சிதைவுகள். மாயன் நாகரீக உச்சத்தில் கட்டப்பட்ட பாலென்க் நகரச் சிதைவுகள்.
சயில் சிதைவுகள். இன்னும் பல. பிரமிடு படிகளில் ஏறும்போதும், பாலெங்க்கின் அரண்மனை மாடத்திலிருந்து ஊரைப் பார்க்கும் போதும், கடலலைகள் மோதும் துலும் சிதைவுகளினூடே அலைந்து திரியும் போதும், எகிப்தின் பிரமிடுகளினுள்ளே நடக்கும் போது ஏற்படும் அதே உணர்வு: இந்த நாகரீகச் சமுதாயத்துக்கும் ஆழமான தத்துவங்கள் இருந்திருக்கின்றன. சரித்திரக் கனவுகள் இருந்திருக்கின்றன. இந்த நாகரீகச் சமுதாயமும் காலத்தின் கருக்கலில் மங்கிப் போயிருக்கிறது.
இன்று பன்னாட்டுச் சுற்றுப்பயணிகள் வந்திறங்கும் கேன்கூனை ஒட்டிய கடற்பகுதியில்தான், 1517-இல் மாயன் படைகள் ஒரு ஸ்பானிஷ் கடல்படையை விரட்டியடித்தன. கேன்கூனும் அதன் சுற்றுப்புறங்களும் இயற்கையழகு நிறைந்தவை. வெண்மணல் கடற்கரைகள். நம் கண்ணுக்குப் புலப்படக் கூடிய அத்தனை நீலங்களும் பச்சைகளும் அடுக்கடுக்காய்ப் படர்ந்திருக்கும் கடற்பரப்பு. கரையோரக் கடலின் எந்த ஆழத்திலும் அடிப்படுகையைப் பார்க்க முடியுமளவு தெளிந்த நீர். ஆனால், தங்கும் விடுதிகளின் கடற்கரையோரத்து நீச்சல்குளங்களும் நிரம்பி வழியும். அழகிய நீலப்பச்சைக் கடல் சில அடி தூரத்திலேயே இருக்கையில், கான்க்ரீட் குளங்களில் நீந்த விரும்பும் மனங்கள்!
கேன்கூனிலிருந்து பல மைல் தூரத்திலிருக்கும் கோஸுமெல் தீவு நீர்மூழ்கிக் கப்பல் இன்னொரு வகை அனுபவம். கடலுக்கடியே சுமார் முன்னூறடி ஆழத்துக்குக் கப்பல் மெல்ல இறங்குகையில், பிறப்பு பின்னோக்கி நிகழ்வது போன்ற உணர்வு. மேலே தெரியும் கடற்பரப்புச் சூரிய ஒளி மெல்ல மெல்லச் சிறுத்துப் புள்ளியாகி மறையவும், மனம் சற்றுப் பதறுகிறது. இப்போது இல்லாமலான ஒளிப் புள்ளியைக் கண்கள் தாமாகவே தேடுகின்றன. கப்பலுக்குக் கீழே பவளப்பாறைக் குன்றுகள். அவற்றின் பொந்துகளில் புகுந்து விளையாடும் பல்வேறு மீனினங்கள். கப்பலின் வட்டச் சன்னல் கண்ணாடிகளினருகே நீந்தித் தொடரும் மீன் வகைகள் பற்றி ஒலிபெருக்கிக் குரல் சன்னமாகப் பாடம் எடுக்கிறது. திடாரென்று ஓர் அறிவிப்பு: இந்த இடத்தில் கடல் படுகை மூவாயிரம் அடிகளுக்கு இறங்குகிறதாம்; முன்னூறடி ஆழத்திலேயே கொஞ்ச தூரம் போய்விட்டு, வந்த வழியில் திரும்புவோமாம். (ஒப்பீட்டுக் குறிப்பு: பசிஃபிக் பெருங்கடலின் சராசரி ஆழம் சுமார் 15,000 அடி.)
கடல்தரை அப்படியே செங்குத்தாக மலைச்சுவர் போல் கீழே இறங்குவது தெரிகிறது. அதைக் கடந்த பின் ஒன்றுமே கண்ணுக்குத் தெரியவில்லை. அடர்ந்த இருளான நீரைத் தவிர. என் மூதாதையர் அனைவருக்கும் முற்பட்ட ஆதி உயிர்வடிவைப் பிறப்பித்த நீர்க்கருவறையின் எச்சம் இந்தக் கடல். இன்று நான் அதனின்றும் தனிப்பட்டு நிற்கிறேன்; அதனுள் புக விஞ்ஞானமும் பொறியியலும் தொழில்நுட்பமும் எனக்குத் தேவைப்படுகின்றன. என்னவொரு பிரம்மாண்டம். இனந்தெரியாத உணர்வு. ஹிமாலயத்தை முதன்முதலாய்ப் பார்க்கும் கணத்தில் ஏற்படும் உணர்வு.
நீர்முழ்கிக் கப்பல் பயணம் முடிந்து கரையேறியதும் வெளியுலகம் அந்நியமாய், அதிக ஒளியும் ஒலியுமுள்ளதாய், அதீத அலங்காரமானதாய் முகத்தில் அறைகிறது. நடைபாதையில் வரிசையாய் நிற்கும் நகைக்கடைச் சிப்பந்திகள், பல்வண்ண மணிகள் பதித்த வெள்ளி நகைகளைக் காண்பித்து, தத்தம் கடைகளுக்குத்தான் நாம் போக வேண்டுமென்று போட்டியிட்டு அழைக்கிறார்கள். செவ்விந்தியக் கைவினைஞர்கள் கண்ணைக் கவரும் வண்ணக் கைநெசவுத் துணிகளை உதறிக் காட்டுகிறார்கள்.
உணவகங்களிலிருந்து பல்வேறு மணங்கள் மிதந்து வருகின்றன. கர்ரிபியன் சடையலங்காரம் செய்யக் கூப்பிடுவோர் கைகளில் வண்ணப்பாசிகள் கிலுகிலுக்கின்றன. அங்கங்கே துள்ளும் மெக்ஸிக்கன் இசையினூடே காக்கைகள் விட்டு விட்டுக் கரைகின்றன. எல்லாவற்றையும் எல்லாரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே பன்னாட்டு மக்கள் திரள் மெல்ல நகருகிறது.
நடைபாதையில் ஒரு மேசை-நாற்காலி போட்டு, எங்கள் மகளுக்குக் கர்ரிபியன் சடையலங்காரம் செய்யும் இளம்பெண்ணுக்குக் கொஞ்சம் ஆங்கிலம் தெரியும். எனக்குக் கொஞ்சம் ஸ்பானிஷ் தெரியும். இடைவெளியைப் புன்னகைகள் நிரப்புகின்றன. சடையலங்காரம் பற்றி அவர் விளக்குகிறார்.
நீர் தெளித்த தலைமுடியைப் பல கால்களாய்ப் பிரித்து, ஒவ்வொரு பிரிவையும் சடையாய்ப் பின்னி, ஒவ்வொரு சடைநுனியிலும் பல்வண்ணப் பாசிகள் கோர்த்து…. அந்தப் பெண்ணின் கைவிரல்கள் பறக்கும் வேகத்தில் சடை பின்னுவது துரிதமாய் முடிகிறது. நுனிகளில் பாசி கோர்க்கத் தொடங்கும் போது மெல்லப் பேச்சுக் கொடுக்கிறேன். இது உங்கள் குடும்பத் தொழிலா. இல்லை, பிள்ளையுண்டாக்கி விட்டு ஓடி விட்டான் பாவி, பிழைக்க வேண்டாமா. என் கணவருக்கும் எனக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை; சம்பிரதாய ஆறுதல் வார்த்தைகளால் கொச்சைப்படுத்தும் விஷயமல்லவே இது. எனக்காகக் கவலைப்படாதீர்கள், இவள் இருக்கிறாள் என்கிறார் அப்பெண்.
மேசைவிரிப்பை உயர்த்தி மேசைக்கடியே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையைக் காண்பிக்கிறார். பெருவிரலைச் சப்பிச் சிரிக்கிறது குழந்தை. அடுத்த முறையும் அதற்கடுத்த முறையும் போன போது அந்தப் பெண்ணும் குழந்தையும் அங்கே இல்லை. அங்கிருக்கும் பிற பெண்களுக்கு அவர்களைப் பற்றித் தெரியவில்லை. தாயின் மடியிலிருந்து சிரித்துக் கையாட்டிய குழந்தையின் முகம் இன்னும் மனதில் நிற்கிறது. அது இப்போது என்ன செய்து கொண்டிருக்குமென்று அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன். ஞாபக மறதியும் கற்பனை வறட்சியும் தரும் பாதுகாப்பு எனக்கு வாய்க்கவில்லைதான்.
மெக்ஸிக்கப் பெண்கள் பற்றி அதிகம் சிந்திக்க வைத்தது, மத்திய மெக்ஸிக்கோவின் ஒரு குக்கிராமத்தில் நான் சந்தித்த ஹுவானிட்டாவும் பிற பெண்களும்.
அதுவொரு தொழில்முறைப் பயணம். மெக்ஸிக்கோவின் உள்பகுதியிலுள்ள ஒரு சிற்றூருக்குப் போக வேண்டும். அங்கே விமானம் இறங்குவதற்கான வசதிகள் கிடையாது. நானும் என்னுடன் வேலை பார்ப்போர் சிலரும் தலைநகரான மெக்ஸிக்கோ ஸிட்டிக்குப் பறந்து, பின் இரண்டு ஜீப்புகளில் போவது வழக்கம். சுற்றுலாத் தளமோ பெருநகரமோ அல்லாத மெக்ஸிக்கோவில் வாகனப்பயணம் என்பது வித்தியாசமான அனுபவம். சாலையின் தவறான பக்கத்தில் திடாரென்று தோன்றும் பேருந்துகள் அலறியவாறே ஒதுங்கி முறைத்து வழிவிடும். உணவுக்காக அங்கங்கே நிறுத்துகையில் மொழிபெயர்ப்பாளர் வழியே கிராமவாசிகளின் அன்பான விசாரிப்பும் விருந்தோம்பலும் நடக்கும்.
ஒவ்வொரு சிறு கிராமத்தைக் கடக்கும் போதும் உற்சாகமான சிறுவர் கூட்டம் கூச்சலுடன் கையாட்டியவாறே ஜீப்பைத் தொடரும். மார்பின் குறுக்கே தோட்டாப் பட்டையும், கையில் துப்பாக்கியும் ஏந்திய ராணுவக்காரர்கள் நிறைந்த திறந்த லாரிகள் புழுதி கிளப்பியவாறு கடந்து போகும். குண்டும் குழியுமான சாலைகள் ஆளை உலுக்கியெடுத்து விடும்.
ஆனாலும், மங்கிய நட்சத்திர ஒளியில் தூரத்து மலைத்தொடர் வரை பரந்து கிடக்கும் தரிசு நிலத்தில் ஏதோ அழகு தெரியும். கரும்பொட்டுகளாய்ச் சிதறிக் கிடக்கும் முள்புதர்கள். குட்டைப் பனை போல் தலைவிரிக்கும் மரங்கள். ஊடே நெளிந்து வகிடெடுக்கும் ஒற்றையடிப் பாதைகள். புழுதிப் படலத்தினூடே அங்கங்கே கண்ணைப் பறிக்கும் பச்சை, மஞ்சள், நீல வண்ண வீடுகள். வண்ணமற்ற குடிசைகள். யாருடைய கடவுளர்களோ என்றோ கைகோர்த்து உலாவிய நிலப்பரப்பு. பல சமயங்களில் எங்கே இருக்கிறோம் எப்பொழுதில் இருக்கிறோம் என்பதையே மறக்கடிக்கும் நிலப்பரப்பு. மலைகளின் உயரத்துக்கும் வானின் நீலத்துக்குமிடையே வெறுமையாய்ப் படரும் நிலப்பரப்பு. உயிர் துவங்குவதற்கு முன்னான வெறுமை. ‘நான் ‘ என்பது அர்த்தமிழந்து கரையத் துவங்கும் வெறுமை.
தவிர்க்க இயலாத காரணங்களால் திட்டமிட்டபடி ஊர் போய்ச் சேர முடியவில்லை. வழியில் ஒரு குக்கிராமத்தில் தங்க நேர்கிறது. குக்கிராமத்து மேயர் அனுமதியுடன் அங்கிருப்பவர்கள் எங்களை வரவேற்று, எங்கள் தங்கலுக்கான ஏற்பாடுகள் செய்கிறார்கள். அன்றைக்கு நடைபெறப் போகும் (கத்தோலிக்கத்) திருவிழாவில் கலந்து கொள்ள மேயர் அழைக்கிறார்.
மெக்ஸிக்கோவில் திருவிழாக்கள்/ஃபியெஸ்டாக்கள் அதிகம். தனிமனிதர் தாம் விரும்பும் நேரத்தில் விரும்பும் காரியங்களைச் செய்து அனுபவிக்கப் பொருள் வசதியில்லாத சமுதாயங்களில் இது இயல்புதானோ ? செல்வந்தச் சமுதாயங்களின் தனிப்பட்ட விருந்துகள், நாடகம்/திரைப்படம்/கச்சேரி, விடுமுறைப் பயணம் முதலியவற்றின் இடத்தை இங்கே கூட்டுவிழாக்கள் நிரப்புகின்றன போலும். இங்குள்ள கிறிஸ்தவம் அதற்கு முற்பட்ட செவ்விந்தியக் கலாச்சாரச் சாயலை உள்வாங்கிக் கொண்டது.
எனவே, திருவிழாக்களும் தனித்துவமான மெக்ஸிக்க அடையாளத்தைக் கொண்டிருக்கின்றன. இறைவணக்கம், விருந்து, பலியிடுதல், குடிப்பது, உரத்துப் பேசிப் பாடிச் சிரிப்பது, கண்ணைப் பறிக்கும் வண்ணங்கள், வினோதமான உடையலங்காரங்கள், உணர்ச்சிகரமான இசை, நடனங்கள், வாணவெடிகள், சடங்குகள், இன்னும் பல கோலாகலமான அம்சங்கள். திருவிழா நாளில் விதிமுறைகள் தளர்கின்றன; உணர்ச்சிகள் பொங்கி வழிகின்றன; எல்லாச் சமூக வித்தியாசங்களும் கூட்டத்தினுள் கரைந்து விடுகின்றன. மெக்ஸிக்க மக்கள் அனைவரும் நேரடியாய்க் கடவுளுடன், தேசத்துடன், நண்பர்களுடன், உறவுகளுடன், உரக்கக் கலந்து பேசுவது போன்ற உணர்வு.
உடைமாற்றிக் கொண்டு நானும் என் சகாக்களும் போய்ச் சேருவதற்குள் கிராமத்துத் திருவிழா களைகட்டியிருக்கிறது. கம்பத்தில் கட்டியிருக்கும் ஒலிபெருக்கிப் பாட்டுகள், நிறைவேறாத காதலினால் மைதானத்தை நிறைக்கின்றன. அக்கார்டியன் சகிதமாக ஒரு ‘மாரியாச்சி ‘ இசைக்குழுவும் வந்திருக்கிறது. ‘டெக்கீலா ‘ உள்ளே இறங்க இறங்க, ஆண்கள் கூட்டத்தின் உரத்த சிரிப்பும் பாடலும் அதிகரிக்கின்றன. அந்நியரென்று எழுதி ஒட்டிய முகங்களில் மரியாதைப் புன்சிரிப்புடன் என் சகாக்கள் ஒரு தனிக்குழுவாய் நிற்கிறார்கள். மதுவருந்தும் பழக்கம் இல்லாத நான் வேறு வகையில் தனிப்பட்டுப் போகிறேன்.
மைதானத்தின் இன்னொரு பக்கத்தில் பெண்கள் தனியாகக் குழுமுகிறார்கள். திறந்தவெளிச் சமையல் துவங்குகிறது. ஒரு கொழுத்த வான்கோழியின் கழுத்தைத் திருகிக் கொல்கிறார்கள். கொதிக்கும் நீரில் முக்கியெடுத்த பின் இறகுகள் பிடுங்குவது எளிதாகிறது. பூண்டு, வெங்காயம், உப்புச் சேர்த்த நீரில், வான்கோழித் துண்டங்கள், தலை, கால், உள்ளுறுப்புகள் எல்லாம் சேர்ந்து கொதிக்கின்றன. வெங்காயமும் பூண்டும் தக்காளியும் மிளகாயும் கொத்துமல்லியும் கிராம்பும் உலர்திராட்சையும் சிறு சிறு குன்றுகளாய் மேசைமேல் குவிந்திருக்கின்றன.
நானும் பெண்கள் கூட்டத்தில் சேர்ந்து கொள்ளுகிறேன். பெண்கள் முகங்களிலும் என் சகாக்கள் முகங்களிலும் சிரிப்புகள்–எனக்காவது வெங்காயமும் பூண்டும் உரிக்கத் தெரியுமாவது. ஒரு வழியாகக் கொத்துமல்லிக் கீரை ஆயும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்படுகிறது; என்னை இந்தப் பெண்கள் நம்பப் போவது அவ்வளவுதான். என் சகாக்களின் நட்பான சிரிப்பு இன்னும் கொஞ்சம் பெரிதாகிறது. நானும் சேர்ந்து சிரிக்கிறேன். எனக்குப் புரியாமலில்லை: சகாக்கள் மனதிலிருக்கும் என் தொழில்முறைப் பிம்பம் கொத்துமல்லிக் கீரை ஆய்ந்ததில்லை. இது வரை.
இன்றைய மனித வாழ்வின் ஒரு சிதைவுக்கூறு துவங்கும் புள்ளி இதுதானோ என்று சகாக்களும் நினைத்துப் பார்த்திருக்கக் கூடும்: நாம் ஒருவரையொருவர் முழு மனிதராய்ப் பார்ப்பதில்லை. நாம் ஒவ்வொருவரும் விதிக்கப்பட்ட கடமைகளின், அடையாளங்களின் தொகுப்புகள்; கண்ணுக்குத் தெரியாத மாபெரும் இயந்திரத்தில் பொருந்திச் செம்மையாய் இயங்கும் சிறு சிறு உதிரிப் பாகங்கள்.
இந்தப் பெண்களுடன் சேர்ந்து கீரை ஆய்வதிலும் காய்கறி அரிவதிலும் கொதிப்பதைக் கிளறுவதிலும் ஏதோவோர் உற்சாகம். இயல்பான ராகமுள்ள மொழியில் பேசிக் கொண்டே, சிரித்துக் கொண்டே, இரகசியங்களைப் பகிர்ந்து கொண்டே, பாடிக் கொண்டே, சமையலும் இதர வேலைகளும் செய்யும் பெண்கள். இந்தச் சூழலில் சில அர்த்தமுள்ள நெகிழ்வான கணங்கள் உருவாகின்றன. கூட்டுக் கணங்கள்.
என் பாட்டியும் பெரியம்மாவும் அத்தைமாரும் சேர்ந்து அடுப்பங்கரை வேலைகளைக் கவனித்த இன்னொரு கிராமத்து மண்ணின், இன்னொரு காலம் நினைவில் நிழலாடுகிறது–பாட்டுகளும் கதைகளும் சிரிப்புகளும் ஆறுதல்களுமாய். அவர்களுக்கும் இத்தகைய கூட்டுக் கணங்கள் இருந்திருக்கக் கூடும். வீட்டுப் பின்கட்டுக்கு வெளியே ஓரடி கூட எடுத்து வைக்க முடியாத நிலையில், இக்கணங்களின் இதமே அவர்களின் வலிமைக்கு ஓர் அடிப்படையாகியிருக்கக் கூடும். இத்தகைய பெண்களின் வேதனை சாதனைகள் சரித்திரத்தால் அறியப்படாதவை.
என்னைச் சுற்றிச் சிரிக்கும் பெண்களைப் பார்க்கையில் ஏதோவொரு நெகிழ்வு.
சாப்பாடு முடிந்ததும் நானும் சகாக்களும் மேயரிடம் நன்றி சொல்லிவிட்டு நடக்கிறோம். நாளை அதிகாலையில் புறப்பட வேண்டும். திருவிழாச் சப்தங்களையும் மீறி, ஒரு குட்டிச்சுவருக்கு அப்பாலிருந்து ஓர் அலறல். அடிகள். மீண்டும் அலறல்கள். எங்களைப் பார்த்ததும் ஹுவானிட்டாவின் கணவன் அடிப்பதை நிறுத்தி, அடித்தொண்டையில் ஓர் உறுமலுடன் விலகிப் போகிறான். அவள் எங்களைப் பாராதவள் போல் இன்னொரு திசையில் போகிறாள். அடி கொடுப்பதும் கொள்வதும் சகஜமான நிகழ்வு என்பதை அவர்களது உடல்மொழி உணர்த்துகிறது. என் சகாக்களும் நானும் மெளனமாய் நடக்கிறோம்.
திருவிழா உற்சாகம் வடிந்து போகிறது. சிக்காகோவில் என் அக்கா கணவனும் இப்படித்தான், ‘கெளன்ஸலிங் ‘ எல்லாம் செய்தும் மாறாததால் அக்கா அவனை விட்டு விலகி விட்டாள், இந்தப் பெண்ணும் இங்கிருந்து வெளியேற வேண்டும், இல்லையானால் அவளுக்குத்தான் ஆபத்து என்கிறான் டாம். நாம் அதற்கு உதவி செய்யலாம் என்கிறான் மைக். வேற்றுக் கலாச்சாரச் சூழலுக்குள் குறுக்கிடுவது பற்றிய கேள்விகள் நெருடுகின்றன. இரவு யாரும் சரியாய்த் தூங்கவில்லை.
அதிகாலையில் ஜீப்பில் ஏறும்போது கிராமத்து மக்கள் வழியனுப்ப வருகிறார்கள்; இரவு முழுதும் விழித்திருந்து திருவிழாக் கொண்டாடிய உற்சாகம் முகங்களில் மிச்சமிருக்கிறது. ஹுவானிட்டா என் பக்கம் வந்து நிற்கிறாள். பின்னால் சற்றுத் தள்ளி அவள் கணவன், கண்களில் சோர்வுடன் உடம்பைக் குறுக்கிக் கொண்டு நிற்கிறான். டாம் சொல்லுவது போல் இவனை இவளால் முழுதாய் ஒதுக்கி விட முடியுமா ? ஹுவானிட்டா என் கைக்குள் எதையோ திணிக்கிறாள். வெண்டைக்காய்ப் பிஞ்சு அளவிலான, கையால் செய்த மெக்ஸிக்கன் சிறுமிப் பொம்மை. கருகருவென்ற நீளப் பின்னலில் சிவப்பு ரிப்பன்களும், மஞ்சள்-சிவப்புச் சாயம் தோய்த்த சாக்குத்துணிப் பாவாடை சட்டையுமாக அழகாய் இருக்கிறது.
எங்கள் மகளுக்குப் பிடிக்கும்–எனக்குத் தெரிந்த ஸ்பானிஷ்ஷில் நன்றி சொல்லுகிறேன். அவள் வெட்கப் புன்னகையுடன் சிறிதாய் மேடிட்ட தன் வயிற்றைத் தடவிக் காண்பிக்கிறாள். இந்த நிலைமையிலும் அவன் அடித்திருக்கிறான் என்று மனம் அதிர்கிறது. அவள் என்னை அணைத்து இரு கன்னங்களிலும் முத்தமிட்டு வழியனுப்புகிறாள்; என் சகாக்களிடம் கையசைக்கிறாள். நேற்றிரவு டாமும் மைக்கும் செல்பேசி வழியே தேடிக் கண்டுபிடித்த பாதிக்கப்பட்ட பெண்கள் உதவி மைய முகவரியையும், என் முகவரியையும் அவள் கைக்குள் திணிக்கிறேன். என் உள்ளுணர்வுக்குத் தெரியும், அவள் யாருக்கும் எழுதப் போவதில்லை. இதுதான் அவள் உலகம். இதுதான் அவள் வாழ்க்கை. அவள் வயிற்றை மெல்லத் தடவிக் கொடுத்து விடைபெறுகிறேன்.
மெக்ஸிக்க எழுத்தாளர்-கவிஞர்/ 1962-68 காலகட்டத்து மெக்ஸிக்கோவின் இந்தியத் தூதர்/ 1990 இலக்கிய நோபெல் விருதாளரான ஆக்டேவியோ பாஸ் எழுதுகிறார்: ‘மெக்ஸிக்கோவில் பெண்களைத் தெய்வமாக்கி விடுகிறார்கள். இயற்கையை வழிபட்ட அவர்களது மூதாதையர் கலாச்சாரத்து அம்சம் இது; இன்னும் உயிர்த்திருக்கிறது. பெண் என்பவள் ஆழமான இரகசியமான அமைதியான பிறவி. அவள் அகிலத்து உயிர்மூலத்தின் மனித வடிவம். உயிர்மூலத்துக்குத் தனிப்பட்ட உணர்வுகள் கிடையாது; எனவே, பெண்ணின் உணர்வுகளும் அவளது தனிப்பட்ட, அந்தரங்க உணர்வுகளாய் இருக்க முடியாது. அவளுக்கென்று தேடல்கள் இல்லை; அவள் தேடப்படுபவள்…. மெக்ஸிக்கப் பெண்ணுள்ளிருக்கும் மன உளைச்சல்களைப் பார்த்தால், இந்தக் கருத்துருவாக்கம் எவ்வளவு பொய்யென்பது புரியும்.
இனத்தின் தொடர்ச்சிக்கும் சமநிலைக்கும் குறியீடாகப் பெண்ணை நிறுத்தி, அவளுக்கு அதிக மதிப்புத் தருவதாய் நாம் சொல்லுகிறோம். சமூகக் குறியீடாகவோ உயிர்மூலமாகவோ நடத்துவதை விட, ஒரு மனித உயிராக என்னை நடத்துங்களேன் என்று அவள் சொல்லுவாள். ‘ எல்லாத் துன்பங்களையும் மெளனமாய் ஏற்றுக் கொள்ளும் பெண், — அத்தகைய ஆணுமே கூட, — தெய்வமாய் ஆகக் கூடும்; அல்லது, தனக்குத் தொடர்ந்து இழைக்கப்படும் கொடுமைகளால் மெளனமாய் இறுகி, தன் துன்பம்/பிறர் துன்பம் பற்றிய மெல்லுணர்வை இழந்து மரத்து, மனிதமே இற்றுப் போனவராகும் உளவியல்ரீதியான சாத்தியமும் உள்ளது. மீண்டும் ஹுவானிட்டாவின் முகம் நினைவுக்கு வருகிறது. அவள் பின்னால் சோர்ந்து நின்ற கணவன் முகமும்.
மெக்ஸிக்கோவை வறிய நாடென்று பொருளாதார நிபுணர்கள் சொல்லுவார்கள். இருக்கும் வறுமையும் வளரும் மத்திய வர்க்கமும் உண்மை. பல பகுதிகளுக்கும் நேரில் போய்ப் பார்த்த பின், இன்னும் நுகர்வு அதீதமாகாத தேசமென்று வர்ணிக்கத் தோன்றுகிறது எனக்கு. வறுமை வேறு, அதீதமற்ற வாழ்க்கைமுறை என்பது வேறு.
மெக்ஸிக்கோவில் சந்திக்கும் சமூக உயர்மட்டத்தினரின் வாழ்க்கையோ முற்றிலும் வேறு. ரசனையுடன் அலங்கரிக்கப்பட்ட பழைய அரண்மனைகள் அல்லது அரண்மனை போன்ற புது வீடுகள் உள்பட, இவர்கள் இன்னோர் உலகத்தில் தனித்து வாழ்பவர்கள். ஒரு சிறு காரியத்தைக் கூடத் தானே செய்யாமல் ‘வேலைக்காரரை ‘ இவர்கள் அழைப்பதும், அவர்களைத் தாழ்ந்த பிறவிகள் போல் நடத்துவதும், அமெரிக்க வாழ்க்கைமுறையில் வளர்ந்தோருக்கு அதிர்ச்சியளிப்பவை (சங்கடத்தையும்). உடலுழைப்புக்குச் சமூக மரியாதையும் தகுந்த சம்பளமும் தராத சமுதாயங்களில் பிரிவினைக் கீறல்கள் ஆழமாவது இயல்புதானோ.
மலிவான சம்பள அமைப்பால் ஈர்க்கப்படும் சில அமெரிக்கப் பெருநிறுவனங்கள் மெக்ஸிக்கோவில் உற்பத்திக் கிளைகளை நிறுவுகின்றன. அமெரிக்கத் தொழிலாளர்களுக்குக் கொடுப்பதில் ஒரு சிறு பங்குச் சம்பளத்தை மெக்ஸிக்கத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கின்றன. அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை அமெரிக்கச் சந்தைக்கு அனுப்பி விற்கின்றன. இப்படி வேலைகள் எல்லை தாண்டிப் போவது பற்றி அமெரிக்கத் தொழிலாளர் சங்கங்கள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பியும் பயனிருப்பதாய்த் தெரியவில்லை.
மீண்டும் ஆக்டேவியோ பாஸ்: ‘மெக்ஸிக்கோவின் ஒரு பாதி–ஒழுங்கான உடையில்லாமல், கல்வியில்லாமல், உணவில்லாமல்–அதன் மறுபாதி வளருவதைப் பார்த்துக் கொண்டு நிற்கிறது. ‘ ‘வளராத பாதி ‘யின் சில மக்கள் குறைந்த அமெரிக்கச் சம்பளத்துக்கு — மெக்ஸிக்கத் தரநிர்ணயப்படி உயர்ந்த சம்பளத்துக்கு — உழைத்து, அமெரிக்காவுக்கான பொருள்களைச் செய்கிறார்கள்.
ஒரு மெக்ஸிக்க நிறுவனத் தலைவருடன் இந்தப் பிரச்சினையின் பல முகங்களை விவாதிக்கையில் அவர் சொன்னது: ‘நீங்கள் உடனடி யதார்த்தத்தை மறக்கக் கூடாது. அமெரிக்க நிறுவனங்கள் இங்கு பல இலட்சம் வேலைகளை உருவாக்கித் தந்திருக்கின்றன. எண்ணெய்க்கு அடுத்தபடியாக அமெரிக்க டாலர்களை மெக்ஸிக்கோவினுள் கொணருவது இத்தகைய உற்பத்தி ஏற்பாடுகளே. ‘
ஒரு மெக்ஸிக்கத் தொழிலாளப் பெண்ணின் பார்வை: ‘எல்லையில் போதைப்பொருள் கடத்தல் நடப்பது நம் இரண்டு நாடுகளுக்கும் தெரியும். அது மாதிரி இல்லாத சுத்தமான வேலை கிடைத்ததால் நான் செய்கிறேன். அது தப்பா ? அமெரிக்கத் தொழிலாளர்கள் வேலையை நான் பிடுங்கியதாய் ஏன் அவர்கள் சொல்கிறார்கள் ? அமெரிக்கர்கள்தானே இங்கே வந்து ஆளெடுப்பதும்…. ? ‘ மெக்ஸிக்க மக்களில் சிலர் அமெரிக்காவில் பொருளாதாரப் புகலிடம் தேடுகிறார்கள்; ஒவ்வொரு நாளும் சில இலட்சம் பேர் சட்டரீதியாகவும், பல இலட்சம் பேர் சட்டத்துக்குப் புறம்பாகவும் மெக்ஸிக்கோவிலிருந்து அமெரிக்காவினுள் நுழைகிறர்கள். இவர்களின் புகலிடக் கதைகள் தனி.
மெக்ஸிக்கோ பற்றிய புரிதல், அதன் முன்கொலம்பிய/செவ்விந்திய-ஸ்பானிஷ்-அமெரிக்கப் பாதிப்புள்ள சரித்திரத்திலும் சமகால வரலாற்றிலும் ஆரம்பமாகிறது. இவை எல்லாமுமாய்ச் சேர்ந்து, இவை எல்லாவற்றிலிருந்தும் வேறுபட்ட, பன்முகமுள்ள தேசத்தை உருவாக்கியிருக்கின்றன.பல பயணங்களுக்குப் பின்னும் கூட எந்த நிலப்பரப்பும் தன் புதிரை முற்றுமாய் அவிழ்ப்பதில்லை என்பது அனுபவப் பாடம்.
நன்றி:காஞ்சனா தாமோதரன்.