Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » தூக்கமின்மை ஒரு ‘டைம்பாம்’!

தூக்கமின்மை ஒரு ‘டைம்பாம்’!

பின் தூங்கி முன் எழுவதை சிலர் பெருமையாகவே கூறிக்கொள்வது உண்டு. ஆனால் இது 6 மணி நேரத்திற்கும் குறைவாக போனால் மாரடைப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று அபாய சங்கை ஊதுகிறது ஆய்வு ஒன்று!

“நீங்கள் என்ன உண்கிறீர்கள் அல்லது அருந்துகிறீர்கள் என்பது மட்டுமே உங்களது உடல் நலத்தை தீர்மானிக்கப்போவதில்லை; தூக்கமும்தான்!” என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்!

மாரடைப்பு உள்ளிட்ட இருதய சம்பந்தமான நோய்கள் குறித்து சமீப காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தூக்கமின்மையும் அதற்கு ஒரு முக்கிய காரணமாக உருவெடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

லண்டனில் அண்மையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், இரவில் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு, இருதய நோயால் அல்லது மாரடைப்பால் உயிரிழப்பதற்கு மற்றவர்களை காட்டிலும் 48 விழுக்காடு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சி சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் இயந்திர வாழ்க்கையில் உழலும் பின் தூங்கி முன் எழுபவர்களுக்கும் பொருந்தும் என்கிறார்கள் சென்னை மற்றும் மும்பையை சேர்ந்த முன்னணி இருதய நோய் மருத்துவ நிபுணர்கள்!

இது தொடர்பாக மும்பையை சேர்ந்த பிரபல இருதய சிகிச்சை நிபுணரான பின்டோ, பின் தூங்கி முன் எழும் பழக்கமுடைய தமது நண்பரின் 43 வயது மகன் ஒருவர் அதிகாலை 5 மணி அளவில் ஜாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென மார்பை பிடித்து சுருண்டு விழுந்தபடியே உயிரை விட்டதை நினைவு கூறுகிறார்.

இரவில் பின் தூங்குவதும், அதே சமயம் உடற்பயிற்சி கட்டாயம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாலை எழும்-அதாவது 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும்-பழக்கம் நமது இளைய தலைமுறையினரிடையே தற்போது மிக அதிகமாக காணப்படுகிறது.உடற்பயிற்சிக்காக தூக்க நேரத்தை குறைக்கும் இவர்களுக்கு அதில் உள்ள ஆபத்து புரிவதில்லை.ஏழு மணி நேரம் மிக நல்லது.முடியாவிட்டால் 6 மணி நேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும்.அது இல்லாமல் போனால் ஆபத்தை அதுவே உணர்த்திவிடும்” என்கிறார் பின்டோ.

அதேப்போன்று மற்றொரு இருதய சிகிச்சை நிபுணரான மேத்தா,”முதல்முதலாக மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட 60 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர்,குறைவான நேரம் தூங்குபவர்களாகவும்,அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்களாகவுமே இருப்பது தெரியவந்துள்ளது” என்கிறார்.

இதுமட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகளில், சுமார் 4.7 லட்சம் பேரிடம் வார்விக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விலும் இது உண்மைதான் என்பது நிரூபணமாகியுள்ளது.

“ஒருவர் இரவில் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினாலோ அல்லது தூக்கம் பாதிக்கப்பட்டாலோ அவருக்கு மற்றவர்களை காட்டிலும் இருதய நோயால் இறப்பதற்கான வாய்ப்பு 48 விழுக்காடு அதிகமாக உள்ளது.மேலும் ‘ஸ்ட்ரோக்’கால் இறப்பதற்கான வாய்ப்பும் மற்றவர்களை காட்டிலும் 15 விழுக்காடு அதிகமாக உள்ளது” என்று தெரியவந்துள்ளதாக கூறும் அந்த ஆய்வறிக்கை,”பின் தூங்கி முன் எழுவது உடலிலேயே கட்டிக்கொண்டிருக்கும் ‘டைம்பாம்’ க்கு சமமம் என்று எச்சரிக்கிறது.

இது ஒருபுறம் இருக்க”ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் சர்க்கரை நோயும், உடல் பருமனும் இணைந்த டயப்ஸிட்டி – diabesity (diabetes and obesity) – என்ற நோய் வர அதிக வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top