விக்கிரமாதித்தன் கதை
பூலோகத்தில் கந்தர்வப் பெண்
தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிக் கொண்டு இருந்த உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும் போது, அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனைப் பார்த்து, “மன்னா! உன்னைப் போல் விடாமல் முயற்சி செய்யும் சிலர் கடைசி நிமிடத்தில் தங்கள் கொள்கையைக் கைவிட்டு, அதுநாள் வரை செய்த முயற்சியை வீணாக்குகின்றனர். அத்தகைய ஒரு பெண்ணின் கதையை நான் உனக்கு இப்போது கூறப் போகிறேன். கவனமாகக் கதையைக் கேள்!” என்று கதை சொல்லலாயிற்று.
வைசாலி ராஜ்யத்தில் திரிசங்கம் எனும் ஊரில் கலாதரன் என்ற ஒரு தெய்வீக சிற்பி வசித்து வந்தான். அவன் கல்லில் வடிக்கும் சிற்பங்கள் உயிருள்ளவைபோல் தத்ரூபமாக இருக்கும். ஒருநாள் இரவில் பௌர்ணமி நிலவொளியில் மொட்டை மாடியில் அவன் உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய கனவில் மிக அழகான ஓர் இளமங்கை தோன்றி “சிற்பியே! என்னுடைய உருவச்சிலையை நீ கல்லில் செதுக்க வேண்டுமென நான் மிகவும் விரும்புகிறேன். என் ஆசையை நீ நிறைவேற்றுவாயா?” என்று கேட்டாள்.
அதிரூப சுந்தரியான அந்தப் பெண்ணின் அழகில் தன் மனத்தைப் பறிகொடுத்த கலாதரன், “கண்டிப்பாக வடிக்கிறேன். அடுத்த பௌர்ணமி இதே நேரம் உன் சிலையை நீ காண்பாய்!” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினான். அக்கணமே அவன் கனவும், தூக்கமும் கலைந்தன. கனவுதான் கலைந்ததே தவிர அந்த ரூபவதியின் அழகு அவன் மனத்திரையில் நன்றாகப் பதிந்து விட்டது. உடனே, தன் ஊரின் எல்லையில், மலைகள் சூழ்ந்த பகுதியில், ஒரு நீர் வீழ்ச்சியருகே அமர்ந்து ஒரு பாறையில் இரவும், பகலுமாகப் பாடுபட்டு அடுத்த பௌர்ணமிக்குள் அவளுடைய உருவச்சிலையை செய்து முடித்தான்.
கலாதரனின் கனவில் தோன்றிய அந்த அழகி ஒரு கந்தர்வ லோகத்துப் பெண். அவள் பெயர் நீலாஞ்சனா! ஒவ்வொரு பௌர்ணமி இரவிலும் அவள் தன் தோழிகளுடன் பூலோகத்தில் சஞ்சாரம் செய்வதுண்டு. அத்தகைய ஓர் இரவில்தான் உறங்கிக் கொண்டிருந்த கலாதரனின் கனவில் தோன்றித் தன்னை சிலை வடிக்குமாறு வேண்டினாள். பிறகு அடுத்த பௌர்ணமி இரவில் வழக்கப்படி அவள் தன் தோழிகளுடன் பூலோக சஞ்சாரத்திற்குப் புறப்பட்டாள். நேராகத் தன் தோழிகளுடன் வைசாலி ராஜ்யத்துத் திரிசங்கத்தை அடைந்து, கலாதரன் வடித்திருந்த சிற்பத்தைக் காட்டி நடந்தவற்றைக் கூறினாள்.
சிலையைக் கண்டு வியந்த நீலாஞ்சனாவின் தோழிகளில் ஒருத்தி, “இதற்கு உயிர் இருந்தால் இன்னொரு நீலாஞ்சனா பூலோகத்தில் தோன்றி விடுவாள்,” என்றாள். மற்றொருத்தி, “நீலா… நீ இதற்கு உயிர் கொடுத்து விடு!” என்றாள். மற்றொருத்தி, “உன்னுடைய அறிவையும், மனத்தையும் இதற்கு அளித்து விடு!” என்றாள். அதற்கு நீலாஞ்சனா, “சிலைக்கு என் உயிரைத் தந்து விட்டால் நான் என்ன ஆவது?” என்றாள்.
“இல்லை. கந்தர்வர்களாகிய நமக்கு அபூர்வ சக்திகள் உண்டு. நீ சிறிது காலம் உன் உயிரையும், மனத்தையும், புத்தியையும் சிலைக்கு அளிப்பாய். அதே சமயம் உன் உயிர், மனம், புத்தி ஆகியவை உன்னிடமும் இருக்கும். கந்தர்வலோகத்திலும் பூலோகத்திலும் இரட்டைப் பிறவிகள் போல் இருப்பீர்கள்!” என்றாள் இன்னொரு தோழி.
“இது என்ன விபரீத விளையாட்டு?” என்று நீலாஞ்சனா கூற, “சிறிது காலம் நீ உன் அறிவினால் பல காரியங்களை சாதித்தபின், பூலோக நீலாஞ்சனாவை அழித்துவிடு!” என்றனர் தோழிகள் அனைவரும். நீலாஞ்சனாவிற்கு அந்த யோசனை பிடித்திருந்தது. உடனே அவள் தன் சக்தியினால் சிலைக்கு உயிர் கொடுத்து, அதனுடன் தன் புத்தியையும், மனத்தையும் பகிர்ந்து கொண்டாள்.
சிலை உயிர் பெற்று பூலோக நீலாஞ்சனாவாக மாறியது. உறக்கத்திலிருந்து எழுந்தவள் போல் உயிர்த்தெழுந்த பூலோக நீலாஞ்சனா, நகரத்திற்குச் சென்று தன் திறமையைக் காட்டுவோம் என்று எண்ணி இரவு முழுவதும் நடந்தாள். காலையில் ஒரு காட்டை அடைந்தாள். அங்கு புதரிலிருந்து ஒரு புலி அவள் மீது பாய, அடுத்த கணம் புலியின் மீது ஓர் அம்பு பாய்ந்தது. தன்னைக் காப்பாற்றியது யார் என்று நீலாஞ்சனா சுற்றுமுற்றும் பார்க்க, தொலைவில் வில், அம்புகள் ஏந்தி ஓர் இளைஞன் குதிரையின் மீது வருவதைக் கண்டாள். அவளருகில் வந்ததும் அவன், “நீ இந்தக் காட்டில் என்ன செய்கிறாய்?” என்று கேட்டான்.
முதல் பார்வையிலேயே அவனிடம் மனத்தைப் பறிகொடுத்த நீலாஞ்சனா, “நான் பிழைப்பைத் தேடி தலைநகரம் செல்லும் வழியில் இந்தப் புலி குறுக்கிட்டது. என் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி! ஆனால் என்னிடம் வாள் இருந்திருந்தால், நானே புலியைக் கொன்று இருப்பேன்” என்றாள்.
“அட! பெண்ணான உனக்கு வாள் வீசத் தெரியுமா?” என்று வியப்புடன் அவன் கேட்க, “என் பெயர் நீலாஞ்சனா! எனக்கு எல்லாப் போர்க்கலைகளும் தெரியும். நான் வைசாலி மன்னரை சந்தித்து என்னைப் படையில் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டுவேன்! உங்கள் பெயர் என்ன?” என்று அவள் கேட்டாள்.
“என் பெயர் பிரபாகரன்!” என்ற அந்த இளைஞன், “நீ மிகவும் அறிவாளி என்று தோன்றுகிறது. ஆனால் பெண்ணான உன்னைப் படையில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் நீ ஆண் வேடம் தரித்துக் கொள்! நானும் படையில் சேரத்தான் செல்கிறேன். அவந்தி ராஜ்ஜிய மன்னர் நமது ராஜ்யத்தின் மீது படையெடுத்துள்ளார். அதனால் நம் மன்னர் ஏராளமான வீரர்களைத் திரட்டுகிறார். என்னுடன் வா! உன்னை அழைத்துச் செல்கிறேன்!” என்றான்.
பிறகு இருவரும் தலைநகரம் சென்று சேனாதிபதியை சந்தித்து, படையில் சேர்ந்தனர். ஒருநாள் யுத்தகளத்தில் மன்னர் சேனாதிபதியுடன் யுத்தம் நடத்தும் விதத்தைப் பற்றி ஆலோசனை செய்து கொண்டுஇருக்கையில், நீலாஞ்சனா அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்து, “மகாராஜா! பகைவர்களின் படை நம்முடையதை விடப் பலமடங்கு பெரியது! அவர்களை நேருக்கு நேர் மோதி வெற்றி காண முடியாது. எதிரிப்படையில் குழப்பம் உண்டாக்கினால் அவர்களைத் தோற்கடிக்க முடியும். அதற்கான திட்டம் என்னிடம் இருக்கிறது” என்று தன் திட்டத்தை மன்னருக்கு விளக்கினாள்.
அதைக் கேட்டு மன்னர் வியந்து போனார். உடனே, தன் படையில் ஒரு சிறிய பகுதியைப் பிரித்தெடுத்து, அதற்கு அவளை உபதளபதி ஆக்கினார். அவளும் தன் படையை வழிநடத்திச் சென்று, போர்க்களத்தின் இருபுறமும் இருந்த மலைகள் மீதேறிப் பதுங்கிக் கொண்டாள். மறுநாள் போர் தொடங்கியதும், பகைவர் படை மீது எங்கிருந்தோ பாம்புகளும், தேள்களும் வந்து விழுந்தன.
மற்றொரு மலையில்இருந்து, தீப்பந்தங்கள் அவர்கள் மீது விழுந்தன. இதனால் பகைவர் படையில் ஒரே குழப்பம் ஏற்பட்டது. அந்த சமயம், வைசாலி ராஜ்ய வீரர்கள் அவர்களைத் தாக்க, பகைவர்கள் சரிவர போர்புரியாமல் பின்வாங்கி ஓடிப் போயினர். அந்த வெற்றிக்கு முழுக்காரணமான புத்திசாலி இளைஞனைப் பாராட்ட மன்னர் அவனைத் தன் அரண்மனைக்கு அழைத்தார். மன்னர் தனிமையில் இருந்தபோது, தன் ஆண்வேடத்தைக் கலைத்தாள் நீலாஞ்சனா.
“மகாராஜா! உண்மையில் நான் ஒரு பெண்! உங்களிடம் வேலைக்கு சேர்வதற்காக ஆண் வேடம் போட்டேன். என்னை மன்னிக்கவும்” என்றாள். அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக, மன்னருக்கு அபார வியப்பும், மகிழ்ச்சியும் உண்டாக, வாரிசில்லாமலிருந்த அவர் நீலாஞ்சனாவைத் தன் மகளாக ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டு, அவளை இளவரசியாக்கி அவள் விரும்புவதை அறிந்து பிரபாரகரை திருமணமும் செய்வித்தார்.
இவ்வாறு, தன் புத்திகூர்மையினால் பூலோகத்தில் வைசாலி ராஜ்யத்தின் இளவரசியான நீலாஞ்சனாவைப் பார்த்து, கந்தர்வலோக நீலாஞ்சனா மனம் பூரித்தாள். தன் தோழிகளிடம் தன்னுடைய பிரதிநிதியைப் பற்றிக் கர்வத்துடன் கூறினாள். ஆக, தாங்கள் ஆரம்பித்த விளையாட்டு முடிவுற்றது என்று கந்தர்வலோகப் பெண்கள் கருதினர். அவளை மீண்டும் பழையபடி சிலையாக்குவதற்காக, கந்தர்வலோக நீலாஞ்சனா இளவரசியிடம் வந்தாள். அவள் யார் என்ற உண்மையை இளவரசிக்கு எடுத்துரைத்து, அவளது உயிரை எடுக்கப் போவதாகக் கூறினாள். ஆனால் அவள் அதற்கு இளவரசி மறுத்துவிட்டாள்.
“சொல்வதைக் கேள்! நாம் இருவரும் நிரந்தரமாக ஒரே சமயத்தில் வாழ முடியாது. நான் என் உயிரை தற்காலிகமாக உனக்குக் கொடுத்தேன். அதைத் திருப்பி எடுத்துக் கொள்ள என்னை அனுமதி!” என்றாள் கந்தர்வ நீலாஞ்சனா. “கந்தர்வப் பெண்ணே! நீ தனிமையாக வாழ்கிறாய். ஆனால் நான் என் வாழ்வை என் கணவடன் பிணைத்துள்ளேன். என் மீது அன்பைப் பொழியும் என் கணவர் நானின்றி உயிர் வாழ மாட்டார். நான் இப்போது வைசாலியின் இளவரசி! நான் மறைந்து போவதை குடிமக்களும் விரும்ப மாட்டார்கள்!” என்றாள் பூலோக நீலாஞ்சனா.
அவள் கடைசியாகக் கூறிய சொற்கள் கந்தர்வ நீலாஞ்சனாவின் மனத்தை உருக்கி விட்டன. ஆகையால் தனது இதயத்திலிருந்து தீ உருவாக்கி, அந்தத் தீயில் எரிந்து மறைந்து போனாள்.
இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், “மன்னா! கந்தர்வப் பெண் நீலாஞ்சனாவின் மதிகெட்ட செயலைப் பார்! பூலோக நீலாஞ்சனாவிற்கு உயிர் கொடுத்ததே அவள்தான். அதுவும் தற்காலிகமாகத்தான். தன்னுடைய புத்திகூர்மையை தன் பிரதிபிம்பத்தின் மூலம் பூவுலகில் நிரூபித்துக் காட்டியபின், மீண்டும் அதைத் திருப்பி எடுத்துக் கொள்வதாக இருந்தாள்.
ஆனால் கடைசி நிமிடத்தில் புத்தி பேதலித்து, தன் பிரதிபிம்பத்தை உயிருடன் வாழ அனுமதித்து விட்டு, தான் உயிர் நீத்தாள். இதை முட்டாள்தனம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? என்னுடைய இந்த சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்திருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகும்” என்றது.
அதற்கு விக்கிரமன், “கந்தர்வப் பெண்ணான நீலாஞ்சனா தன் புத்தி சாதுர்யத்தை நிரூபிப்பதற்காக சிலைக்குத் தன் உயிரை தற்காலிகமாகக் கொடுத்தது உண்மைதான்! ஆனால் கடைசி நிமிடத்தில் அவள் மனம் மாறி தன்னுயிரைத் தியாகம் செய்தது முட்டாள்தனத்தினால் அல்ல, அவளுடைய தயாள குணத்தினால்தான்! விளையாட்டாகத் தொடங்கிய நாடகத்தில், பூலோக நீலாஞ்சனா போர்க்களத்தில் தன் தந்திரமான திட்டத்தால் வெற்றி பெற்றாள்.
அவள் தான் விரும்பிய பிரபாகரனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு விட்டாள். மன்னருக்கும், பட்டத்து ராணிக்கும் ஸ்வீகாரப் பெண்ணாகி விட்டாள். குடிமக்களின் மனம் கவர்ந்த இளவரசியாகி விட்டாள். அவள் உயிரைப் பறித்தால் அவளைச் சார்ந்துள்ள அனைவரும் பெரும் துக்கத்தில் மூழ்குவர். ஆகையால் தான் உயிர் நீப்பதே சிறந்தது என்றும், தன் பிரதிபிம்பமாவது மகிழ்ச்சியுடன் வாழட்டும் என்றே அவள் மேற்கூறிய முடிவெடுத்தாள்” என்றான்.
விக்கிரமனது சரியான பதிலால் அவன் மவுனம் கலையவே, வேதாளம் தான் சுமந்து வந்த உடலுடன் பறந்து போய் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.