ஒரு சிறந்த வில்வித்தை அறிந்த குருவிடம் பயிற்சி பெற்ற ஒருவன் தான் சிறப்பாகக் கற்றுக் கொண்டதாகக் கர்வம் கொண்டான்.குரு அவனை அழைத்துக் கொண்டு மலைப் பகுதிக்கு சென்றார், இரண்டு மலை உச்சிக்கு இடையே ஒரு பலகை மட்டும் வைக்கப் பட்டிருந்தது. கீழே அதலபாதாளம். குரு அநதப் பலகையில் விறுவிறுவென நடந்து நடுவில் நின்று கொண்டு தன் வில்லை எடுத்து வானத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு பறவையைக் குறி வைத்து அடித்து வீழ்த்தினார்.
பின் சீடனை அவ்வாறே செய்யச்சொன்னார்.முதலில் ஆர்வமுடன் சென்ற அவன் நடுப்பகுதிக்கு சென்றவுடன் பயத்துக்கு உள்ளானான். கால்கள் நடுங்க ஆரம்பித்தன.அவன் வில்லை எடுத்து ஒரு பறவையைக் குறி வைத்தான். ஆனால் அவன் எங்கே கீழே விழுந்து விடுவோமா என்ற அச்சத்துடன் இருந்ததால் அவனால் சரியாகக் குறி பார்க்க முடியவில்லை. பதட்டத்துடன் குருவிடம், ”ஐயோ, என்னைக் காப்பாற்றுங்கள். நான் கீழே விழுந்து இறந்து விடுவேன். என்றுஅலறினான்.
குருவும் சாதாரணமாக பலகையில் நடந்துசென்று அவனைக் கையைப் பிடித்து அழைத்து வந்தார். திரும்ப அவர்கள் இருப்பிடத்திற்கு வந்து கொண்டிருந்தபோது இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் கர்வம் அழிந்த அந்த சீடன் நினைத்துக் கொண்டான், ”வில் அம்பை முழுமையாக வென்றால் மட்டும் போதாது, நம் மனதையும் வெல்ல வேண்டும். அதுதான் முக்கியம்.”