Home » சிறுகதைகள் » யானை எடை
யானை எடை

யானை எடை

அன்றைக்கு ஒரு புது சாஃப்ட்வேர் புராஜெக்ட் ஆரம்பமாகிறது. எல்லோரும் பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். 10 மணிக்கு கஸ்டமர் தரப்பிலிருந்து ஏழு பேர் வந்தார்கள். கூட்டம் ஆரம்பமானது. வந்தவர்களில் சீனியராகத் தோன்றிய ஒருவர் படபடவென்று பேசத் தொடங்கினார். ‘இப்போ எங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்குன்னு ஏற்கனவே விளக்கமா சொல்லிட்டோம். அதையெல்லாம் உங்க சாஃப்ட்வேரால் தீர்க்க முடியுமா?’

அந்த சாஃப்ட்வேர் கம்பெனியின் முக்கிய பிரமுகர் புன்னகையோடு பதில் சென்னார். ‘முடியலாம்’.

‘என்னது? முடியலாமா? உங்களால் முடியும்னு நம்பித்தானே லட்சக்கணக்கில் காசைக் கொட்டியிருக்கோம். இப்போ இப்படி சொன்னா என்ன சார் அர்த்தம்?’

‘பதற்றப்படாதீங்க சார். கொஞ்சம் நிதானமா பேசுவோம்’ என்றவர், ‘ஒரு ஜென் கதை சொல்றேன், கேட்கறீங்களா?’ என்றார்.

‘ஜென் கதையா?’ இது சாஃப்ட்வேர் கம்பெனியா இல்லை சாமியார் மடமா? என்று கிண்டலடித்ததைப் பற்றி கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசினார் சாஃப்ட்வேர் கம்பெனியின் பிரமுகர். ‘இப்போ உங்ககிட்ட நான் ஒரு கயிறைக் கொடுக்கறேன். அதில ஒரு முடிச்சு விழுந்திருக்கு. நீங்க அந்தக் கயிறை அறுக்காம அந்த முடிச்சை அவிழ்க்கணும். உங்களால முடியுமா?’

‘நிச்சயமா முடியும்?’ என்றவரிடம் ‘எப்படி அவிழ்ப்பீங்க?’ என்றதற்கு, ‘முடிச்சு எப்படி விழுந்திருக்குன்னு பார்ப்பேன். அதற்கு நேர் எதிர் திசையில கயிற்றை நகர்த்தினா முடிச்சு தானா அவிழ்ந்துடப் போகுது!’ என்றார். ‘ஆக, முடிச்சு இருக்குன்னு தெரிஞ்சா மட்டுமே அதை அவிழ்த்துட முடியாது. அந்த முடிச்சு எதனால விழுந்ததுன்னு கவனிச்சுப் புரிஞ்சுக்கணும். அப்புறம் தான் அதை அவிழ்க்க முடியும். கரெக்டா?’ என்ற சாஃப்ட்வேர் பிரமுகர், ‘சாஃப்ட்வேர் தத்துவமும் இதே தான்!’ என்ற படி ‘உங்க பிரச்சனைகளை மட்டும் சொன்னாப் போதாது நீங்க என்ன செஞ்சதால அந்த பிரச்சனைகள் வந்ததுன்னு நாங்க கேட்டு, பார்த்து, கவனிச்சுப் புரிஞ்சுக்கணும். அப்புறம் எங்க சாஃப்ட்வேர் மூலமா அதற்கு எதிர் திசையில் போய் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சி பண்ணனும், எதையும் அவசரப்பட்டுச் செய்யமுடியாது’ என்றார். வந்தவர்களும் நம்பிக்கையுடன் சொன்றார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு, சாஃப்ட்வேர் கம்பெனியின் பிரமுகர் தன்னுடைய பணியாளர்களிடம் அந்த புராஜெக்ட் பற்றி கேட்டதற்கு, ‘அது பெரிய பிரச்சனையுள்ளது. அவ்வளவு பிரச்சனைகளையும் தீர்ப்பதென்பது மிகவும் கடினம். எங்களால் சரி செய்ய முடியாது’ என்று பதிலளித்தனர். தன்னுடைய பணியாளர்கள் புராஜெக்டில் உள்ள பிரச்சனையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதை உணர்ந்தவராக, பணியாளர்களுக்கு ஒரு யானைக் கதையைக் கூறினார்.

‘அரசர் ஒருவருக்கு திடீரென்று ஒருநாள் தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்த காலத்தில் எடை மேடைகளோ, யானைகளை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசோ கிடையாது என்பதால் எப்படி அளப்பது என்று அமைச்சரிடம் கேட்க அவருக்கும், யாருக்கும் அதற்கான வழியே தெரியவில்லை. அந்த சமயத்தில் அமைச்சரின் 10 வயது மகன், ‘நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்’ என்றான். எல்லோரும் கிண்டலாகச் சிரித்தனர். ஆனாலும் மன்னர் ஒரு வாய்ப்புக் கொடுத்தார்.

சிறுவன் யானையை நதிக்கு அழைத்துச் சென்று பெரிய படகில் ஏற்றினான். யானை ஏறியதும் தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே தண்ணீர் நனைந்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான்.

பிறகு, யானையைப் படகில் இருந்து இறக்கிவிட்டு பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும்வரை கற்கள் ஏற்றப்பட்டன. கற்களை மன்னனிடம் காட்டி, ‘அவற்றின் எடைதான் யானையின் எடை’ என்ற சிறுவனைப் பார்த்து அனைவரும் வியந்தனர்.

அங்கிருந்தவர்கள் எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத் தான் பார்த்தார்கள். ஆகவே அவர்களால் தான் எடையைக் கணிக்க முடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.

அதுபோல தான் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், செயலாக இருந்தாலும் அதனைச் சின்னச்சின்ன செயல்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த ஒவ்வொரு செயலையும் செவ்வனே செய்து முடிக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒட்டுமொத்த திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்என்று முடித்தவர், தன்னுடைய பணியாளர்களுக்கு அந்த புராஜெக்டின் பிரச்சனைகளை சிறுசிறு பகுதியாகப் பிரித்துக் கொடுத்து அவற்றிற்குத் தீர்வு காணச் செய்தார். எளிமையான தீர்வு கிடைத்தது. அவற்றை ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைத்து புராஜெக்டை வெற்றியாக்கிக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top