Home » படித்ததில் பிடித்தது » பல்கலை வித்தகன் அதிசய மன்னன்!!!
பல்கலை வித்தகன் அதிசய மன்னன்!!!

பல்கலை வித்தகன் அதிசய மன்னன்!!!

வீரமும் கொடையும் மண்ணை ஆளும் மன்னர்களுக்கே உரிய மகத்தான மாண்புகள். அப்படிப்பட்ட மன்னர்களில் முதன்மையானவன் போஜராஜன். பாரதத்தின் பழம்பெறும் சக்கராவர்த்திகளில் ஒருவனான போஜராஜன். பரமார வம்சத்தில் தோன்றிய போஜன், 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாளவ தேசத்து மன்னன். வட இந்தியாவில் தன் ஆளுமையின் கீழ் இருந்த பிரதேசத்தையும், அதில் வாழ்ந்த மக்களையும் புலவர்களையும் அன்பால் அரவணைத்து வாழ்ந்தவன். இவன், சகலக் கலைகளையும் கற்றதுடன், அந்தந்தத் துறை நிபுணர்களையும் அழைத்துச் சிறப்புச் செய்யும் வள்ளலாகத் திகழ்ந்தவன். எழுத்துத் துறையில் அதிக ஆர்வம் கொண்ட போஜராஜன், கவி இயற்றுவதிலும் பாடல் புனைவதிலும் திறன் படைத்தவன் என்பது, ஏடுகள் எடுத்துரைக்கும் தகவல்களில் ஒன்று.

கவிதா ரஸிகர்களைக் கொண்ட உலகின் ஒரே தேசம் 

உலகிலேயே சரித்திரத்தில் நாம் காணும் எந்த தேச மன்னனும் நினைக்கக் கூட முடியாத ஒரு அபூர்வத்தை நிகழ்த்திக் காட்டிய ஒரே மன்னன் போஜராஜன். இன்றைய போபால் (போஜன் நிறுவிய போஜபாலே இன்று போபால்!)அந்தக் காலத்தில் போஜ சாம்ராஜ்யமாகத் திகழ்ந்தது. தாரா என்ற நகரைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி நடத்திய போஜராஜன்,

விப்ரோபி யோ பவேன்ன மூர்க்க: ச புராத்ஹிரஸ்து மேI                      கும்பகாரோபி யோ வித்வான் ச திஷ்டது புரே மமII“

என்று பிரகடனம் செய்தான்!

(இதன் பொருள்:-“அந்தணன் என்றாலும் படிப்பறிவற்றவன் என் தேசத்தில் வசிக்க வேண்டாம். குயவனாக இருந்தாலும் கற்றறிந்தவன் என் தேசத்தில் வசிக்கட்டும்”) அதே போல அங்கு வாழ்ந்த மக்கள் அனைவரும் உன்னதமான கவிதையை ரசிக்கும் திறன் கொண்டவராகத் திகழ்ந்தனர்.

84 அபூர்வ நூலைப் படைத்தவன் 

போஜராஜன் பல் கலை வித்தகன் . அஸ்வ சாஸ்திரம் சங்கீதம்,இசை, ஜோதிடம்,வானியல் உள்ளிட்ட ஏராளமான கலைகளில் வல்லவனாததால் இவனை பஹ¤வித்யா விஷாரத் (பல்கலை வித்தகன்) என அறிஞர்கள் அழைத்துப் போற்றினர். சுமார் 84 அரிய நூல்களைப் படைத்தவன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறையின் தலையாய நூலாகத் திகழ்வதோடு அந்தத் துறையில் வேத கால ரிஷிகள் தொட்டு அன்றைய வரை இருந்த மேதைகள் அந்த துறை பற்றி கூறியவற்றைத் தொகுத்துக் கூறும் களஞ்சியமாகவும் திகழ்கிறது. அவன் இயற்றிய நூல்களில் சில:

சரஸ்வதி கண்டாபரணா:

வடமொழி இலக்கணம் பற்றியது;

சமராங்கத சூத்ரதாரா:

ஆகாயவிமான வகைகள் அவைகள் கட்டும் விதம் பற்றிய தொழில்நுட்ப நூல்;

தத்வ ப்ரகாசா: சிவன் குறித்த சித்தாந்த தந்த்ர சாஸ்த்ரம் பற்றியது;

ரஸராஜ ம்ரிகங்கா: இரசாயன நூல் யுக்திகல்பதரு: கப்பல் எப்படிக் கட்டுவது, கப்பல் வகைகள் பற்றியது;

தர்மசாஸ்த்ர விருத்தி: தர்மசாஸ்திரம் பற்றியது; சம்புராமாயணம்:காளிதாஸனுடன் இணைந்து பாடியது;

ராஜமார்த்தாண்ட வ்ருத்தி அல்லது போஜ விருத்தி: பதஞ்சலி யோக சூத்ர விரிவுரை;

ச்ருங்காரப்ரகாசா: இந்த அரிய நூலில் சிருங்கார ரஸமே பிரதான ரஸம் என்பதை போஜராஜன் சுட்டிக் காட்டுகிறான். (இந்த நூல் மட்டும் 1926லிருந்து 2007 முடிய 25 பதிப்புகளைக் கண்டிருக்கிறது. உலகின் 74 நூலகங்களில் இது தனியிடம் பெற்றுள்ளது!)

பிரபல வரலாற்று ஆசிரியரான வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் உள்ளிட்ட ஏராளமான மேலை நாட்டு அறிஞர்கள் போஜராஜனைப் பற்றியும் அவனது வாழ்க்கை வரலாறுகள் பற்றியும் நூற்றுக் கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி அவனை வெகுவாகப் புகழ்ந்துள்ளனர்.

காளிதாஸனோடு இயற்றிய போஜ சம்பூ 

மஹாகவி காளிதாஸனின் உயிர் நண்பன் போஜன், போஜனைப் பற்றிய நூற்றுக் கணக்கான சம்பவங்களில் முக்கியமான ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

தன்னைப் பற்றிய காளிதாஸனின் உண்மையான மதிப்பீட்டை அறிய விரும்பிய போஜன் காளிதாஸனை தன் பேரில் ஒரு சரம கவி பாடுமாறு வேண்டிக் கொண்டான். சரம கவி என்பது ஒருவர் இறந்தவுடன் துக்கம் தாளாமல் அவரைப் பற்றி மனம் நெகிழ்ந்து பாடும் கவிதை. காளிதாஸன் திடுக்கிட்டான்.

பொய்யா வாக்கை உடைய தான் சரம கவி பாடினால் தன் ஆருயிர் நண்பன் உயிரை இழந்து விடுவானே! மனம் நடுங்கிய காளிதாஸன் அந்தப் பாட்டைப் பாட முடியாது என்று மறுத்து விட்டான். இதனால் கோபமடைந்த போஜன் காளிதாஸனிடம் என் முகத்தில் விழிக்காதே, போ என்று கூறி விட்டான்.

மனம் நொந்த காளிதாஸன் ஒரு சந்யாசி வேடம் பூண்டு நாடெங்கும் சுற்றலானான். சில நாட்களிலேயே காளிதாஸன் இல்லாத வாழ்க்கை சாரமற்றுப் போக போஜன் அவனைத் தேடி மாறுவேடம் பூண்டு அலையலானான். ஒரு நாள் தற்செயலாக காளிதாஸனை ஒரு மண்டபத்தில் சந்திக்க இருவரும் அளவளாவினர். சந்யாசி வேடம் பூண்டவன் காளிதாஸனே என்பதைக் கண்டு கொண்ட போஜன் தான் யார் என்பதைத் தெரிவிக்கவில்லை.தான் தாரா நகரத்திலிருந்து வருவதாக அவன் தெரிவித்துக் கொண்டான்.

உடனே மனம் நெகிழ்ந்த காளிதாஸன், “அங்கே போஜ மன்னர் சௌக்கியமாக இருக்கிறாரா?” என்று ஆவலுடன் கேட்டான். தன் எண்ணம் நிறைவேற இது தான் சரியான சமயம் என்று எண்ணி மனம் மகிழ்ந்த போஜன்.”அடடா, உங்களுக்கு விஷயம் தெரியாதா? போஜ மன்னர் இறந்து விட்டார்!” என்று கூறினான். உடனே மனம் கலங்கி அழுத காளிதாஸனிடமிருந்து அற்புதமான சரம கவிதை வெளிப்பட்டது:

“அத்ய தாரா நிராதாரா நிராலம்பா சரஸ்வதி I                                    பண்டிதா கண்டிதா சர்வே போஜராஜம் திவம் கதே II”

(இன்று தாரா நகரம் நிராதரவாகி விட்டது; சரஸ்வதி ஆதரவற்றுப் போனாள். பண்டிதர்கள் அனைவரும் போஜராஜன் சொர்க்கம் அடைந்ததால் சிதறிப் போனார்கள்) இதைக் கேட்டவுடன் மனம் மகிழ்ந்தான் போஜன்.

ஆனால் கவி வாக்கு பொய்க்காது என்பதால் அவன் உடனே கீழே விழுந்து உயிரை விட்டான். தன் நண்பன் போஜ ராஜனே தன் பாட்டைக் கேட்டு உயிரை விட்டான் என்பதை அறிந்த காளிதாஸன் அவன் உயிர் பிழைக்க  மாற்றுப் பாடலைப் பாடி அவன் உயிர் பிழைக்க வைக்குமாறு காளி தேவியை இறைஞ்சினான்.

“அத்ய தாரா சதாதாரா சதாலம்பா சரஸ்வதி I                                      பண்டிதா மண்டிதா சர்வே போஜராஜம் புவம் கதே II”

(போஜன் பூமியை அடைந்ததால்   தாரா நகரம் எப்போதும் ஆதரவுடன் திகழ்கிறது. சரஸ்வதிக்கு நிரந்தர ஆதரவு உள்ளது.பண்டிதர்கள் அனைவரும் மிகவும் ஆதரிக்கப்படுகின்றனர்)

பாடலைக் கேட்ட போஜன் உயிர் பிழைத்து எழுந்தான். நேரில் பிரசன்னமாகிய காளி அவன் விதி முடிந்தாலும் காளிதாஸனின் பாடலுக்காக மூன்றே முக்கால் நாழி அவன் உயிர் வாழ்வான் என்று அருளினாள். மீதமிருக்கும் ஒரு கணத்தையும் வீணடிக்காத போஜன் வாழ்வாங்கு வாழ ராமாயணத்தைத் தானும் காளிதாஸனும் சேர்ந்து பாடி இலக்கியம் படைக்க விரும்பினான். இருவருமாக இணைந்து பாடிய காவியம் போஜ சம்பூ என்றும் சம்பு ராமாயணம் என்றும் பெயரிடப்பட்டு நாடெங்கும் புகழ் பெற்றது. இன்றும் படிக்கக் கிடைக்கிறது.

கஜினியை விரட்டியவன்

கி.பி. 1000ம் ஆண்டு முதல் 1050 முடிய அவன் செய்தஅரசாட்சி அனைவரையும் வியக்க வைத்தது! இன்றைய மத்யபிரதேசத்தில் உள்ள போபாலிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போஜ்பூரை அவனே ஸ்தாபித்தான். போஜேஸ்வர ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களை அவன் நிறுவினான்.இன்று தார் என்று கூறப்படும் நகரில் அவன் நிறுவிய வடமொழி மையம் ஒன்று போஜ்சாலா என்ற பெயரில் பல் கலைகளையும் கற்பித்தது. புஜபலா மற்றும் பீம பராக்ரம என்ற விசேஷ விருதுகளால் உலகினரால் அவன் அழைக்கப்பட்டதால் பாண்டவ பீமனைப் போன்ற அசாத்திய பலமும் வீரத்தையும் அவன் பெற்றிருப்பது தெரிய வருகிறது!மாபெரும் வீரனான போஜன் முகம்மது கஜினியைத் தாக்கி ஓட ஓட விரட்டினான். ஹிந்து மதத்தைப் பாதுகாத்த தீரனாகத் திகழ்ந்தான்.

போஜ ப்ரபந்தம்

போஜராஜனின் மூளையில் ஒரு கட்டி இருந்ததாகவும் அதை அறுவை சிகிச்சை மூலமாக எடுத்து அவனை வைத்தியர்கள் குணப்படுத்தியதாகவும் வரலாறு கூறி அதிசயிக்கிறது! இந்த அறுவைசிகிச்சையைத் தாங்கி போஜன் உயிர் பிழைத்து அரும் பெரும் செயல்களைப் புரிந்தான் என்பதையும் வரலாறு குறிப்பிடுகிறது!

போஜனின் சரித்திரம் பற்றி போஜ சரித்ரம் மற்றும் போஜப்ரபந்தம் ஆகிய இரு நூல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.இவற்றில் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் சுவை பட சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை காலகட்டங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அனைத்து மன்னர்களும் கவிஞர்களும் வீரர்களும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தது போல எழுதப்பட்டுள்ளன என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்!

பின்னால் 17ம் நூற்றாண்டில் பல்லாள தேவர் எழுதிய போஜ ப்ரபந்தம் போஜனின் வாழ்க்கை வரலாற்றை நன்கு சித்தரிக்கிறது. இதன் படி சிந்துலர் முஞ்சர் ஆகிய இருவர் அண்ணன் தம்பிகள். சிந்துலரின் மகனாக போஜன் பிறந்தார். தன் தம்பிக்கு மகுடம் சூட்டி உரிய வயது வரும் போது போஜனுக்கு முடி சூட்டி அரியணையில் ஏற்றுமாறு கூறி சிந்துலர் முடி துறந்தார். ஒரு நாள் அரண்மனைக்கு வந்த ஜோதிடர் போஜனின் ஜாதகத்தைப் பார்த்து

“பஞ்சாஸர் பஞ்சவர்ஷாணி ஸப்தமாஸாதிநத்திரியம்                          போஜராஜோ போக்த வ்யஹ கௌடோதக்ஷ¢ணாபத’ என்றார்.

அதாவது இந்த போஜன் 55 வருடம் 7 மாதம் 8 நாள் கௌடதேசம் உள்ளிட்ட தென்னாட்டை பெரும் புகழுடன் ஆளப் போகிறான் என்று கூறினார். இதனால் கலக்கம் அடைந்த முஞ்ச ராஜன் போஜனைக் கொல்லுமாறு தன் பணியாளரிடம் உத்தரவிட்டான். குருகுலத்திலிருந்த போஜன் கொலை செய்வதற்காக அழைத்து வரப்படும் போது தன்னை முஞ்ச ராஜன் கொலை செய்ய ஆணை பிறப்பித்திருப்பதை அறிந்து ஒரு ஓலை நறுக்கைக் கொடுத்து அதை முஞ்ச ராஜனிடம் கொடுத்துத் தனது கடைசி ஆசையை நிறைவேற்றுமாறு வேண்ட கொலை செய்ய வந்தவர்கள் அதை முஞ்ச ராஜனிடம் சென்று தந்தனர்.

அந்த ஓலை நறுக்கில் ஒரு சுலோகம் இருந்தது.அதில் மகா புத்திசாலியான போஜன், “சத்யயுகத்தில் இருந்த உலகின் ஜ்வலிக்கும் மணி என்று கருத்தப்பட்ட சக்கரவர்த்தி மாந்தாதா இறந்து போனான். கடல் மீது பாலம் கட்டி ராவணனைக் கொன்ற ராமரும் இப்போது இல்லை! யுதிஷ்டிரர் போன்ற சக்தி வாய்ந்த அரசர்கள் இந்த பூவுலகை ஆண்டுள்ளனர். ஆனால் இந்த பூமி அவர்கள் இல்லாமல் கூட இன்னும் இருக்கிறது. ஓ முஞ்ச ராஜனே! இந்த பூமி நீ நிலையாக இருக்க, தான் போக விரும்புகிறது போலும்!” என்று  எழுதி இருந்தான்!

இதைப் பார்த்தவுடன் முஞ்ச ராஜனுக்கு ஞானம் வந்து அவன் அரசைத் துறந்து போஜனையே அரசனாக்கினான். இளைஞனாக இருந்த போதே இப்படி அபாரமான கவித் திறமையையும் கூர்மையான புத்தியையும் கொண்டிருந்த போஜன் எப்படி நாட்டை ஆண்டிருப்பான் என்பதை நாம் யூகித்து உணர்ந்து கொள்ளலாம்!

ஜோதிட நூல் வித்வத்ஞான வல்லபா 

பூபாலக்ருத்ய சமுச்சயா என்னும் அவனது நூல் பல்வேறு விரதங்களை எப்படி எந்த திதியில் அனுஷ்டிப்பது என்பதையும் அதற்கான பலன்களையும் விவரிக்கிறது.கார்த்திகை சுக்ல ஏகாதசி அன்று விஷ்ணுவை எழுப்ப வேண்டும் என்றும் ஆஷாட சுக்ல ஏகாதசி அன்று அவர் நித்திரைக்குச் செல்வார் என்றும் இந்த நூல் விவரிக்கிறது.

இது போன்ற ஏராளமான ரகசியங்களை ஜோதிடத்தின் அடிப்படையிலான திதி, நாள் முதலியவற்றால் இது விவரிப்பதால் போஜனது பரந்துபட்ட ஜோதிட மற்றும் ஆன்மீக அறிவு விளங்குகிறது!விலக்க வேண்டிய கறிகாய்கள், பழங்கள், உப்புகள். தாம்பத்ய உறவைத் தவிர்க்க வேண்டிய நாட்கள் உள்ளிட்ட நுட்பமான விஷயங்களை இதில் போஜன் விவரிப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என்று  மேலை நாட்டு ஆய்வாளர்கள் வியந்து கூறுகின்றனர்.

அடுத்து ஜோதிட சாஸ்திரத்தை விரிவாக விளக்கி வித்வத்ஞானவல்லபா என்ற அற்புதமான ஜோதிட நூலையும் அவன் எழுதியுள்ளான். 1970ல் பரோடா பல்கலைக் கழகத்தால் இந்த நூல் பிரசுரிக்கப்பட்டது. உலகின் தலை சிறந்த 31 பல்கலைக்கழகங்களில் இந்த நூல் இருக்கிறது.தஞ்சாவூர் சுவடிகள் காடலாக்கில் இந்த நூல் 14வது தொகுதியில் 11604 கேடலாக் எண்ணாகக் குறிப்பிடப்பட்டு அங்கு இருப்பதை உறுதி செய்கிறது!

சுருக்கமாகச் சொல்லப் போனால் இராமாயண மஹாபாரதம் மற்றும் புராணங்கள் சித்தரிக்கும் மாபெரும் மன்னர்களுக்கு நிகராக போஜன் தர்ம சாஸ்திரம் நூலை எழுதியதோடு அந்த தர்மத்தின் படி வாழ்ந்த  பல்கலை வித்தகன் என்று போற்றிப் புகழ்ந்து வணங்கலாம்!

சிவனைப் பற்றி விசித்திரக் க(வி)தை!


போஜ ராஜன் என்ற மன்னன் மாபெரும் அறிவாளி. கற்றோரைக் காமுறும் பெரும் புலவன். புலவர்களுக்குப் புரவலன். காளிதாசன் போன்ற பெரும் புலவர்களின் இனிய நண்பன். இத்தகைய மன்னன் காலத்தில் ஒரு ஏழைப் புலவனும் வாழ்ந்தான். ஏதேனும் பாட்டு எழுதிச் சென்றால் போஜ மான்னன் தனது போஜனத்துக்கு வழி செய்வானே என்று பரிதவித்தான்.

அவனுக்கு கவிதை எழுதத் தெரியாது என்பதல்ல. கவி மழை பொழிய வல்லவனே. ஆனால் எல்லாப் புலவர்களும் எல்லாவற்றையும் பற்றி எழுதிப் பரிசு வாங்கிவிட்டார்களே, நான் எதைப் பற்றி எழுதுவேன் என்று அங்கலாய்த்தான். தருமி என்னும் ஏழை அந்தணனுக்கு கவிதை எழுதித்தந்த சிவ பெருமான் இவனுக்கு கவிதை எழுதித் தரவில்லை!

ஏழைப் புலவனுக்கு திடீரென ஒரு யோஜனை பளிச்சிட்டது. அதுவும் சிவன் அருள்தான், ஏனெனில் அது சிவனைப் பற்றிய கவிதை! ஆனால் அரைத்த மாவையே அரைக்காத புதுக் கவிதை, அதாவது புது விதமான கவிதை. சிவன் இறந்த கவிதை. இதைக் கேட்டால் போஜன் கட்டாயம் பரிசு தருவான் என்ற நம்பிக்கை ஊட்டிய கவிதை.

இதோ அந்தக் கவிதை:

ஒரு பாதி மால் கொள மற்றொரு பாதி உமையவள் கொண்
டிருபாதியாலும் இறந்தான் புராரி இரு நதியோ
பெரு வாரிதியில் பிறை வானில் சர்ப்பம் பிலத்திற் கற்ப
தருவான போச கொடையுடன் கையோடென்கை தந்தனனே (தனிப்பாடல்)

பொருள்:
சிவ பெருமானுடைய ஒரு பாதியை உமா கவர்ந்துவிட்டாள் (அர்த்தநாரீஸ்வரர்), மற்றொரு பாதியை திருமால் (சங்கர நாராயணன்) கவர்ந்துவிட்டார். இவ்வாறு இருவரும் உடலைப் பங்கிட்டதால் சிவ பெருமான் என்பவரே இல்லை என்றார்.

இதைக் கெட்ட அரசனுக்கு திருப்தி வரவில்லை. கேள்விகள்தான் வந்தன. போஜராஜன் கேட்டான்: புலவரே, சிவன் இறக்கவே முடியாது. அப்படியானால் சிவனின் தலை மீதிருந்த கங்கை எங்கே? தலையில் அணிந்த இளம் பிறை எங்கே? அவர் கழுத்தில் நிலவும் பாம்பு எங்கே? அவருடைய கையில் இருந்த திருவோடுதான் எங்கே? என்றான்.

முதலில் மன்னனின் கேள்விகளைக் கேட்டுவிட்டு திடுக்கிட்டுப்போன புலவன் மீண்டும் சுதாரித்துக்கொண்டு கதை, இல்லை, கவிதை, விட்டார். அடடா! சொல்ல மறந்துவிட்டேனே, அவர் மீதிருந்த பிறைச் சந்திரன் வானத்திற்கு ஓடிப் போய்விட்டான். பாம்போ பூமிக்குள் இருந்த துளையில் புகுந்துவிட்டது. கங்கை கடலில் கலந்துவிட்டாள். சிவன் கை திருவோடு என் கைக்கு வந்து விட்டது. சிவ பெருமானின் மாபெரும் கொடைத் தன்மை போஜராஜன் என்ற மன்னனிடம் போய்விட்டது என்று போட்டார் ஒரு போடு! போஜ மன்னனுக்கு பெரு மகிழ்ச்சி. ஏழைப் புலவன் திருவோட்டில் தங்கக் காசு மழை பெய்தான்.

இந்தியப் புலவர்கள் மேதாவிகள். சமயத்துக் கேற்றவாறு கவி மழை பெய்து, தங்க மழையில் நனைவார்கள். மற்றொரு புலவர் ராமநாத சேதுபதியிடம் பொன்முடிப்பு வாங்கச் சென்றார். அவர் தங்கத் தட்டில் பணமுடிப்பு வைத்துத் தந்தார். பண முடிப்பை எடுத்துக் கொண்டு தட்டைத் திருப்பித் தருவது வழக்கம். அவர் புத்திசாலித் தனமாக பணத் தட்டு மன்னனுக்கோ? ஏழைப் புலவருக்கோ? என்றார். மன்னன் சிரித்துக் கொண்டெ ‘உமக்கே’ என்றான். புலவருக்கு அன்று இரட்டை போனஸ்!

(பணத்தட்டு என்றால் பண முடை, பணம் போதாத நிலை என்ற அர்த்தமும் உண்டு).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top