அதிகாரத்திற்கு வளையாத இறைவன் அடியவருக்கு வளைந்தார்!!!
தூய்மையான, தன்னலமற்ற பக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் நாயன்மார்கள். நம் மண்ணில் நம்மிடையே வாழ்ந்து மறைந்தவர்கள். எத்தனை சோதனை வந்தாலும் தாங்கள் எடுத்துக்கொண்ட தொண்டிலும், கடமையிலும் பக்தியிலும் குறை வைக்காதவர்கள். சிவனடியாரும் சிவனும் வேறு வேறு அல்ல என்று கருதி, அடியார்களையே இறைவனாக தொழுதவர்கள்.
வேதத்தை முழுவதும் கற்று ஓதுவதற்கு இணையானது இவ்வடியார்களின் வரலாற்றை படிப்பது.
ஆவணி மூலம். குங்கிலயக் கலய நாயனாரின் குருபூஜை. அவர் இறைவனோடு இரண்டறக் கலந்த நாள். இந்நன்னாளில் அவரது புனித வரலாற்றை பார்ப்போம்.
காவிரி பாயும் சோழவளநாட்டில் திருக்கடவூர் என்ற ஒரு தலம் உண்டு. அது சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட அட்ட வீரட்ட தலங்களில் ஒன்று.
அட்ட வீரட்ட தலங்கள் முறையே 1) திருக்கண்டியூர் பிரமன் சிரம் கொய்தது. 2) திருக்கோலூர் அந்தகாசுரனை அழித்தது. 3) திருவதிகை திரிபுரத்தை எரித்தது 4) திருப்பரியலூர் தக்கன் சிரம் கொய்தது. 5) திருவிற்குடி கவந்தராசுரனை வதைத்தது 6) வழுவூர் யானையை உரித்தது 7) திருக்குறுக்கை காமனை அழித்தது 8) திருக்கடையூர் எமனை உதைத்தது.
இதில் கடைசியாக உள்ள திருக்கடையூரில் மறையவர்கள் சிறந்து வாழ்வார்கள். அவர்களுள் கலயனார் என்ற பெரியார் ஒருவர் இருந்தார். அவர் சிவனடிபேணும் சிறந்த அன்புடையவர். நல்லொழுக்கத்திற் சிறந்தவர். அத்தலத்தே எழுந்தருளியிருக்கும் அமிர்தகடேஸ்வரருக்கு, பாலன் மார்கணடருக்காகக் காலனை காலால் உதைத்த கருணையை நினைத்து, ஆலய விதிப்படி தினமும் தூபம் இடும் திருப்பணியை செய்து வந்தார். ஆதலால் அவரைக் குங்கிலயக்கலயர் என்று ஊரார் அழைத்தனர்.
எந்த சூழலிலும் தனது குங்கிலியம் இடும் தொண்டை நிறுத்தாத இவரது பெருமையை உலகறியச் செய்ய திருவுளம் பூண்ட இறைவன், இவருக்கு கடும் வறுமையை ஏற்படுத்தினான். அதன் பின்னரும் அத்திருப்பணியை வழுவாது செய்து வந்தார். வறுமை மிகவே தமது நிலம் தோட்டம் துரவு என அனைத்தையும் விற்றுப் பணிசெய்தார்.
வறுமை மேலும் பெருக தாமும், மனைவி, மக்களும் சுற்றமும் இரண்டு நாள் உணவின்றி வருந்தினார்கள். இது கண்ட அவரது துணைவியார், தனது தாலிக்கயிற்றை கழட்டிக் கொடுத்து, “இதை கொண்டு உணவு சமைக்க நெல் வாங்கி வாருங்கள்” என்று அனுப்பினார்.
அதனைக் கொண்டு அவர் நெல்கொள்ளச் சென்றபோது எதிரில் ஒரு வணிகன் ஒப்பில்லாத குங்கிலியப் பொதியை சுமந்துகொண்டு வந்தான். அதனை அறிந்த கலயனார் “இறைவனுக்கேற்ற மணமுடைய குங்கிலியம் இதுவாயின் இன்று நல்ல பேறு பெற்றேன். பெறுதற்கரிய இப்பேறு கிட்ட வேறுகொள்ளத்தக்கது என்ன உள்ளது?” என்று துணிந்து பொன் பெற்றுக்கொண்டு குங்கிலியப் பொதியினைத் தருமாறு வணிகனைக் கேட்டார்.
அவனும் மகிழ்ந்து அவர் தந்த தாலியைப் ஏற்றுக்கொண்டு குங்கிலியப் பொதியை கொடுத்துச் சென்றான். கலயனார் சிந்தை மகிழ்வுடன் விரைந்து சென்று கோயிற் களஞ்சியத்தில் அப்பொதியின் குங்கிலியத்தைச் சேமித்து வைத்தார். மனைவி மக்கள் அங்கே பசித்திருப்பதை மறந்து தூபத் திருப்பணி செய்துகொண்டு சிவசிந்தையுடன் அங்கேயே தங்கினார்.
அன்று இரவு மனைவியாரும், மக்களும் பசியால் மிகவருந்தி இவர் வருகையை எதிர்பார்த்து ஏமாந்து பின்னர் தண்ணீரை அருந்திவிட்டு அயர்ந்து தூங்கினர். அப்போது இறைவனுடைய கட்டளைப்படி குபேரன் தனது செல்வத்தைப் பூமியில் கொண்டுவந்து நிறைத்து கலயனாரது வீடு முழுவதும் பொற்குவியலும் நெற்குவியலும் அரிசி முதலிய பிற எல்லா வளங்களுமாக குவித்தான்.
இதனை இறைவன் அம்மையாருக்குக் கனவில் தோன்றி உணர்த்த, அவர் எழுந்து செல்வங்களைப் பார்த்தார். அவற்றை இறைவரின் அருள் என்று கண்டு கைகூப்பித் தொழுதார். தனது கணவருக்கு திருவமுது சமைக்கத் தொடங்கினார்.
திருக்கோயிலில் இருந்த கலயனார்க்கு “நீ பசியோடு இருக்கிறாய்… உடனே உன் வீட்டுக்கு சென்று அமுதுண்டு பசி நீங்குக!” என்று என்று இறைவர் கட்டளை இட்டு அருளினார். அத்திருவருளை மறுப்பதற்கு அஞ்சிக் கலயனார் வீட்டுக்கு வந்தார். தன் வீடு முழுக்க செல்வம் குவிந்திருப்பதை கண்டு, மனைவியிடம் விசாரித்தார்.
அவர் “திருநீலகண்டராகிய எம்பெருமானது அருள்” என்றார். கலயனார் கைகூப்பி வணங்கி “என்னையும் ஆட்கொள்ள எம்பெருமான் திருவருள் இருந்தபடி இதுவோ? என்று துதித்தார்.
இவ்வாறு இறைவரருளால் உலகில் நிறைந்த செல்வமுடையவராகி அடியவர்களுக்கெல்லாம் நல்ல இனிய அமுதூட்டியும் உதவியும் வாழ்ந்திருந்தனர்.
அதற்கு ஏற்றாற்போல் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலே, பாரே வியக்கும் அளவிற்கு ஒரு சம்பவத்தை ஏற்படுத்தினார். திருப்பனந்தாள் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு மலர்மாலை அணிவிக்க வந்தாள் ஆதி சைவப் பெண்ணொருத்தி ! அவள் பெயர் தாடகை. இறைவழிபாடு முடிந்த பிறகு இறைவனுக்கு மாலையை அணிவக்கப் போகும் சமயத்தில் அம்மங்கை நல்லாளின் ஆடை சற்று நெகிழ்ந்தது.
ஆடையை இரண்டு முழங்கைகளினாலும் இறுகப் பற்றிக்கொண்டு, இறைவனுக்கு மாலையைப் போட முயன்ற அப்பேதைப் பெண் மாலையை இறைவனுக்கு அணிவிக்க முடியாமல் தவித்தாள். அப்பொழுது இறைவன், அப்பெண்ணுக்காக இரங்கிச் சற்றுச் சாய்ந்து கொடுத்தார். மங்கையும் மாலையை அணிவித்து, மகிழ்வோடு சென்றாள்.
அது முதல் அங்கு சிவலிங்கம் சற்று சாய்ந்த வடிவமாகவே தோற்றமளித்து வந்தது.அதனைச் சாய்வுபோக்கி கண்டு கும்பிட வேண்டுமென்று ஆசை கொண்ட சோழமன்னன் யானைகளையும் சேனைகளையும் பூட்டித் திருமேனியினை நிமிரப்பண்ண முயன்றான்.
ஆனாலும் இறைவன் நிமிரவில்லை. யானைகளும் இளைத்து வீழ்ந்தன. அரசன் மிகவும் கவலையோடிருந்தான். இதனைக் கேள்வியுற்ற கலநாயனார், நாதனைக் நேர்காணும் பணியில் நின்ற அரசனை விரும்பித் திருக்கடவூரிளிருந்து நேராக திருப்பனந்தாள் சென்றார்.
இறைவனை நிமிர்த்த நடைபெற்ற முயற்சியில் சேனைகள் இளைத்து வீழ்ந்து எழமாட்டா நிலைகண்டு மனம் வருந்தினார். பொருளுக்கு உழைத்து இளைப்பதைவிட, இதுவன்றோ இளைப்பு… நானும் இந்த முயற்சியிலே பங்குகொண்டு இளைபுறவேண்டும் என்று துணிந்தார்.
நாரினால் கெட்டியாகக் கட்டப்பட்ட ஒரு மாலையை சிவனுக்கு அணிவித்தார். வளைந்திருந்த பக்கத்திற்கு எதிர்ப்புறத்தில் நின்று கொண்டார். தன் கழுத்தில் சுருக்குப் போட்டுக் கொண்டார். அந்தக் கயிற்றினை லிங்கத்துடன் கட்டினார். லிங்கத்தை நிமிர்த்த முயன்றார்.
யானைகளும் சேனைகளும் சேர்த்து இழுத்தபோதும் நிமிர மறுத்த இறைவனுக்கு தற்போது தர்மசங்கடம் ஏற்பட்டது. குங்கிலியக் கலயனார் சுருக்குக் கயிறாக இறைவனை கட்டியிருந்தமையால், இழுக்க இழுக்க சுருக்கு இறுகிக்கொண்டே வந்தது.
இன்னும் கயிறு சற்று இறுகினால் போதும், கலயனார் மூச்சை நிறுத்திவிடுவார். கலயனாரின் அன்பும் வைராக்கியமும் ஆண்டவனை அசைத்தது. அதிகாரத்திற்கு வளையாத இறைவன் அடியவருக்கு வளைந்தான்.
‘நண்ணிய ஒருமை அன்பின் நார் உறு பாசத்தாலே
திண்ணிய தொண்டர் கூடி இளைத்த பின் திறம்பி நிற்க
ஒண்ணுமோ கலயனார்தம் ஒருப்பாடு கண்டபோதே
அண்ணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார்’
என்கிறார் சேக்கிழார் பெருமான்.
மிகப் பெரும் சேனைகளை கட்டி இழுத்தபோது கூட நிமிராத சிவலிங்கம், இவர் கையிற்றை கட்டி இழுத்தபோது நிமிர்ந்தது. அன்புக் கயிற்றுக்கு இறைவன் அசைந்து தானே ஆக வேண்டும். அக்கணமே சாய்வு நீங்கி நேரே நிமிர்ந்தார். கலயனார் கழுத்தில் போடப்பட்டிருந்த கயிற்றின் சுருக்கு, அவருக்குப் பூமாலையாக மாறியது.
எம்பெருமான் திருமேனியாம் சிவலிங்கத்தின் மீதும், கலயனாரால் கட்டப்பட்டிருந்த பூங்கச்சோடு சேர்ந்த கயிறு, கொன்றைப்ப பூமாலையாக காணப்பட்டது. குங்குலியக் கலயனாரின் பக்தியையும், இறைவனைக் கட்டுப்பட வைத்த அன்பின் திறத்தினையும் கண்டு மன்னனும் மக்களும் களிப்பெய்தினர். தேவர்கள் விண்ணில் ஆரவாரித்துப் பூமழை பெய்தனர். வாடியசோலை தலைமழை பெய்து தழைப்பது போல யானை சேனைகள் களித்தன.
சோழ மன்னன் கலயனாரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி மேருவை வில்லாக வளைத்துப் புரமெரித்த கடவுளின் செந்நிலை காணச் செய்தீர்! ஐயனே! உங்கள் அன்பின் திறத்தினை என்னென்பது ! திருமாலும் அறியப்படாத எம்பெருமானின் மலரடியை அன்புமிக்க அடியார்கள் அல்லாது வேறு யாரால் அடைய முடியும் ? உம்மால் யாம் உய்ந்தோம். எம் குடி மக்களும் உய்ந்தனர்.
உலகத்திற்கே உய்வு காலம் தங்களால்தான் ஏற்பட்டது என்றார். கலயனார் இறைவனையே நினைத்து நின்றார் ! அரசன் ஆலயத்திற்குத் திருப்பணிகளும், திருவிழாக்களும் நடத்தினான். கலயனாருக்கு மானியங்கள் கொடுத்து கவுரவப்படுத்தினான். பின்னர் மன நிறைவோடு தன்னகர் அடைந்தான்.
திருக்கடவூரிலே தூபத்திருப்பணிசெய்திருக்கும் நாளில் ஒருமுறை கலயனார், திருக்கடவூர்க்கு எழுந்தருளிய சீர்காழிப் பெருமானுக்கும் திருநாவுக்கரசருக்கும் திருவமுது செய்யும் பேறு பெற்று மகிழ்ந்தார்.
மண்மடந்தையின் மடியில் சிவத்தொண்டு புரிந்து பல காலம் புகழ்பட வாழ்ந்த குங்குலியக் கலயனார், இறுதியில் இறைவன் திருவடி நீழலை இணைந்த பேரின்ப வாழ்வைப் பெற்றார்.மிக்க மகிழ்ச்சி பொங்கக் கலயனார் அவர்களை எதிர்கொண்டு அழைத்துவந்தார்.
தமது இல்லத்தில் அவர்களுக்கு இன்னமுது அளித்து வழிபட்டார். அதனால் அவர்களது அருள் மட்டுமின்றி இறைவரது அருளும் பெற்றார். இவ்வாறு கலயனார் அரசனுக்கும், அடியவர்களுக்கும் ஏற்றனவாய்த் தமக்கு நேர்ந்த பணிகள் பலவும் செய்து வாழ்ந்திருந்து ஆவணி மூல நட்சத்திரத்தன்று சிவபெருமானது திருவடி நிழலிற் சேர்ந்தார்.
குருபூஜை: குங்குலியக்கலய நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.