முருகப் பெருமானின் பெயற்காரணங்கள்:-
நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகள் முருகனின் பிறப்புக்கு கருவாக அமைந்ததால் அவர் “அக்னிகர்ப்பன்’ எனப்பட்டார். அப்பொறிகள் கங்கையில் தவழ்ந்ததால் “காங்கேயன்’ என்ற பெயர் வந்தது.
சரவணப்பொய்கையில் வளர்ந்ததால் “சரவணபவன்’ எனப்பட்டார். இதுவே முருகனுக்கு மந்திரப்பெயராக விளங்குகிறது. பக்தர்கள் ஆறெழுத்து மந்திரமான “ஓம் சரவணபவ’ என்று ஜெபிப்பர்.
குழந்தைவடிவில் இருந்த ஆறுகுழந்தைகளை வளர்க்கும் பணியில் கார்த்திகைப்பெண்கள் ஈடுபட்டனர். அவர்களின் பெயரால் முருகனுக்கு “கார்த்திகேயன்’ என்ற பெயர் ஏற்பட்டது.
தெய்வங்களிடம் இருக்கும் ஆயுதங்களைக் குழந்தைகளுக்கு பெயரகா இடும் வழக்கம் இல்லை.
சூலம், உடுக்கை, ஈட்டி என்று யாராவது பெயர் வைக்கிறார்களா?
ஆனால், முருகனின் வெற்றி வேலைச் சிறப்பிக்கும் விதத்தில், வெற்றிவேல், கதிர்வேல், தங்கவேல், சக்திவேல்,வடிவேல், முத்துவேல், வேலாயுதம் என்று பெயரிடுகிறார்கள்.
கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தில் முருகனை வணங்கும்போது, “திருக்கைவேல் போற்றி போற்றி!” என்று ஒருமுறைக்கு இருமுறை போற்றுகிறார்.
முருகனுக்கு ஆறுமுகங்கள் இருப்பதைப் போல வேலுக்கும் ஆறு முகங்கள் உண்டு.
சூரியனும், சந்திரனும், முருகனும்:-
முருகன் சிவந்தமேனியுடன், கையில் வேல் தாங்கியிருப்பார்.
வலதுபக்கம் வள்ளியும், இடப்புறம் தெய்வானையும் காட்சியளிப்பர்.
சூரியன் முருகனின் வலக்கண்ணாகவும், சந்திரன் இடக்கண்ணாகவும் உள்ளது. சூரியனைக் கண்டு தாமரை மலரும். சந்திரனைக் கண்டு நீலோத்பலம் என்னும் குமுதமலர் மலரும்.
அதனால், சித்திரம் தீட்டும்போது வலப்புறம் இருக்கும் வள்ளிக்கு தாமரையும், இடப்புறம் இருக்கும் தெய்வானைக்கு குமுத மலரும் வரைய வேண்டும்.
முருகனின் பார்வையால் இம்மலர்கள் மலர்வதைப் போல பக்தர்களின் வாழ்வும், எப்போதும் மலர்ந்திருக்கும்.
தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று
தண் நிலவின் சாறெடுத்து வார்த்த முகம் ஒன்று
பால் மனமும் பூ மனமும் படிந்த முகம் ஒன்று
பாவலர்க்குப் பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று
வேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்று
வெள்ளி ரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்று.
இறைவனும் அபிஷேகங்களும் :-
அபிஷேகத்தினால் இறைவன் குளிர்ந்து ஆசிர்வதிப்பான் என்பது புராணங்களின் கருத்து. சில தலங்களில் வித்தியாசமான அபிஷேகங்கள் இறைவனுக்கு செய்யப்படுகின்றன.
அவற்றில் சில:
கொடுங்கல்லூர் பகவதி அம்மன் தவிடு அபிஷேகம் மேற்கொள்கிறாள்.
திருப்புறம்பியம் பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் ஒரு குடம் தேன் அபிஷேகம் செய்கிறார்கள்.
தில்லைக்காளிக்கு நல்லெண்ணெயால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.
திருச்சூர் வடக்கு நாத சுவாமிக்கு தினசரி நெய்யால் மட்டுமே அபிஷேகம்.
எப்போதும் அருவியின் ஓசை கேட்டுக் கொண்டே இருப்பதால் குற்றாலநாதருக்கு தலைவலி வராமல் இருக்க இவருக்கு தைல அபிஷேகம்.
திருவாரூர் மாவட்டம் பொன்னிலை அகஸ்தீஸ்வரருக்கு பங்குனி உத்திரத்தன்று நெல்லிப்பொடியால் அபிஷேகம் செய்கிறார்கள்.
சென்னை குரோம்பேட்டை செங்கச்சேரி அம்மனுக்கு பௌர்ணமியன்று மருதாணி இலையால் அபிஷேகம்.
திருப்பழனம் பழனத்தப்பர், ஐப்பசி பௌர்ணமி நாளன்று காய்கறி அபிஷேகம் ஏற்கிறார்.
திருநெய்த்தானம் நெய்யாடியப்பருக்கு நெய் அபிஷேகம் செய்தபின்பு இளவெந்நீரால் அபிஷேகம் நடக்கிறது.
தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு மிளகாய் அபிஷேகம் நடத்தப்படுகிறது.
தருமபுரி ஹரிஹரநாதகோயில் அருகே உள்ள அனுமனுக்கு தினமும் காலையில் தேன் அபிஷேகம் செய்கிறார்கள்.
உறையூர் வெக்காளி அம்மனுக்கு வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாம்பழங்களால் அபிஷேகம் விமரிசையாக நடத்தப்படுகிறது.
சென்னிமலை முருகனுக்கு தயிரால் அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. அந்த தயிர் புளிப்பதில்லை என்பது அதிசயம்.
உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்:-
1) தலை நடுவில் (உச்சி)
2) நெற்றி
3) மார்பு
4) தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
5) இடது தோள்
6) வலது தோள்
7) இடது கையின் நடுவில்
8) வலது கையின் நடுவில்
9) இடது மணிக்கட்டு
10) வலது மணிக்கட்டு
11) இடது இடுப்பு
12) வலது இடுப்பு
13) இடது கால் நடுவில்
14) வலது கால் நடுவில்
15) முதுகுக்குக் கீழ்
16) கழுத்து
17) வலது காதில் ஒரு பொட்டு
18) இடது காதில் ஒரு பொட்டு
பலன்கள்
————-
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை,
உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம்,
நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும்
பெற்று சிறப்புடன் வாழலாம்.
உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும்,
தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப்
பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோட்சம் செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே..
முருகனும் தமிழும் :-
1.தமிழ் மொழி என்றும் இளமை மாறாத மொழி. எம்பெருமான் முருகன் என்றும்
அகலாத இளமையுடயவன்.
2.தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு, முருகப் பெருமானின்
தோள்கள் பன்னிரெண்டே.
3.முருகனுக்குத் திருமுகம் ஒவ்வொன்றிலும் மூன்று கண்களாக மொத்தம்
பதினெட்டு நயனங்கள். தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு.
4.முருகவேளின் முகங்கள் ஆறு. வீடுகள் ஆறு.பிரணவ மந்திர எழுத்து
ஆறு(ச,ர,வ,ண,ப,வ) தமிழில் இன எழுத்துக்கள் ஆறு.(வல்லினம், மெல்லினம்,இடையினம் ஆகியவை ஆறு ஆறு எழுக்கள்).
5.முருகனின் ஆயுதம் வேல். இது எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிநிலை
ஆயுதமாகும். தமிழில் ஆயுத எழுத்து(ஃ) தனிநிலை. அதுமட்டுமல்ல, ஆயுதஎழுத்தின் மூன்று புள்ளிகளையும் பாருங்கள், வேல் வடிவில் அமைந்து இருக்கும்.இந்த ஆய்த எழுத்து போல் தனிநிலை எழுத்து வேறெந்த மொழியிலும் இல்லை.
6.முருகன் என்றாலே அழகன். தமிழ் என்றால் அழகு.
எனவே, முருகன் வேறு, தமிழ் வேறு அல்ல.. முருகனே தமிழ், தமிழே முருகன்..!!
ஓம் சரவணபவ…!