இயற்பியல் விதிகள் தெரியும், உலகியல் விதிகள் தெரியுமா? –
அவர் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு ஏழை விவசாயி. அவரது விவசாய நிலத்துக்கு அருகில், சதுப்பு நிலம் ஒன்று உண்டு. ஒரு நாள் தனது வயலில் அவர் வேலையில் இருக்கும்போது ஒரு பெரும் கூக்குரலை கேட்கிறார். ஆபத்தில் இருப்பவர்கள் எழுப்பும் அபயக்குரல் அது. தனது வேலையை விட்டுவிட்டு சத்தம் வந்த திசைக்கு ஓடிச் சென்று பார்க்கிறார்.
பார்த்தால், அங்கு ஒரு சிறுவன் புதைசேற்றில் மாட்டிக்கொண்டு கொஞ்ச கொஞ்சமாக மூழ்கிக்கொண்டிருக்கிறான். உடனடியாக பலவித முயற்சிகள் செய்து அந்த சிறுவனை காப்பாற்றுகிறார்.
அடுத்த நாள், ஒரு பெரிய கோச் வண்டி இவரது குடிசையின் முன்னே நிற்கிறது. அதிலிருந்து ஒருவர் இறங்குகிறார். பார்க்கும்போதே தெரிகிறது அவர் ஒரு மிக பெரிய செல்வந்தர் என்பது.
விவசாயி காப்பாற்றிய சிறுவனின் தந்தை என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அவர், மிக பெரிய வெள்ளித் தட்டில் ரூபாய் நோட்டுக்களும் நகைகளும் தந்து “முதலில் இந்த மரியாதையை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் செய்த உதவிக்கு நிச்சயம் ஏதேனும் கைம்மாறு செய்யவேண்டும். என்ன வேண்டுமோ கேளுங்கள்!” என்றார்.
“ஆபத்தில் இருக்கும் ஒருவரை காப்பாற்றுவது என் கடமை. என் கடமையை செய்ததற்கு நான் கூலியை வாங்குவேனா? மாட்டேன்!” என்று மறுத்துவிடுகிறார் விவசாயி. இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே விவசாயின் சொந்த மகன் சிறுவன் குடிசையிலிருந்து வெளியே வந்தான்.
“உங்கள் மகனா?” “ஆம்!” “நான் ஒன்று செய்கிறேன். என் மகனை எப்படி சகலவசதிகளுடனும் படிக்க வைக்கிறேனோ அப்படியே உங்கள் மகனையும் படிக்கவைக்கிறேன். அதற்காகவாவது ஒப்புகொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் நற்குணங்கள் அவனுக்கும் நிச்சயம் இருக்கும். உங்கள் பெயரை காப்பாற்றும்படி அவனும் நிச்சயம் வளர்வான்!” அந்த சிறுவன் நாட்டிலேயே மிகச் சிறந்த பள்ளியில் படிக்கும் வாய்ப்பை பெற்றான்.
பள்ளிப் படிப்பு முடிந்ததும் லண்டனில் உள்ள செயிண்ட் மேரீஸ் மருத்துவப் பள்ளியில் (St.Mary’s Hospital Medical School) மருத்துவமும் மருந்தியலும் படித்தான். மருத்துவக் கல்வியில் சிறந்து விளங்கிய அவன், வேறு யாருமல்ல..
மருத்துவு உலகில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்திய மருந்தான பென்னிசிலினை கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளெமிங்! அடுத்த சில ஆண்டுகளில், இவர் தந்தை யாரை காப்பாற்றினாரோ அந்த மிகப் பெரிய செல்வந்தரின் மகனுக்கு நிமோனியா காய்ச்சல் வந்தது.
இந்த முறை அவரது உயிரை காப்பாற்றியது அந்த விவசாயின் மகன் அலெக்சாண்டர் பிளெமிங்! தனது கண்டுபிடிப்பான பென்னிசிலின் மூலமாக!! அந்த செல்வந்தர் பெயர் ராண்டால்ப் சர்ச்சில். அவர் மகன் யார் தெரியுமா? வின்ஸ்டன் சர்ச்சில்.
இங்கிலாந்தின் மிகச் சிறந்த பிரதமர்களுள் ஒருவராக திகழ்ந்தவர். சரித்திரம் பல அற்புதங்கள் நிறைந்தது. நீங்கள் இந்த உலகிற்கு என்ன அளிக்கிறீர்களே அதுவே உங்களுக்கு பன்மடங்கு திரும்பி வரும். ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு நீங்கள் செய்யும் உதவியானது உங்களுக்கு நீங்களே செய்வது. நற்செயலும் சரி; தீச்செயலும் சரி. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்விளைவு உண்டு.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. (குறள் 102)
மேலே நாம் விளக்கிய சம்பவத்துக்கு இதை விட பொருத்தமான குறள் இருக்க முடியாது. இந்த குறளில் ஒன்றை கவனித்தீர்களா? காலத்தினாற் செய்த உதவி என்று தானே கூறவேண்டும் காலத்தினாற் செய்த ‘நன்றி’ என்று ஏன் வள்ளுவர் குறிப்பிடுகிறார் தெரியுமா?
ஒருவருக்கு நீங்கள் செய்யும் உதவியானது, உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் உதவியே! அது நன்றியுடன் உங்களுக்கே திரும்ப வரும் என்பதை கூறுவதற்கு தான். இயற்பியல் விதிகள் போல, உலகியலுக்கும் சில விதிகள் உண்டு.
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதன்படி தான் அனைத்தும் நடக்கும். நடந்தே தீரும்.