Home » படித்ததில் பிடித்தது » எளிமையான கணபதி!!!
எளிமையான கணபதி!!!

எளிமையான கணபதி!!!

விநாயகர் மிக எளிமையானவர். அவரது வழிபாடும் எளிமையானது. ஆனால் ஆழ்ந்த பொருள் கொண்டது.

விநாயகருக்கு கொழுக்கட்டை படைக்கிறோம். மேலே மாவு மூடியிருக்க, உள்ளே வெல்லமும் தேங்காயும் கலந்த பூரணம் இருக்கும். இதன் பொருள் என்ன? மாவுதான் மாயை- அதாவது ஆசை முதலான உலகப்பற்றுகள். அந்த மாயையை விலக்கினால் உள்ளே இருப்பது பூரணம் என்னும் ஆனந்தம்.

அருணகிரியார் கந்தரனுபூதியில், “ஆசாநிகளம் (மாயை) துகள் ஆயினபின் பேசா அனுபூதி பிறந்ததுவே’ என்கிறார்.

கணபதியின் வடிவம் கூறும் பொருள் யாது?
சிறிய கண்கள்- கூர்ந்து கவனி.
பெரிய காதுகள்- நற்கருத்துகளை அகன்று, ஆழ்ந்து கேள்.
நீண்ட துதிக்கை- பரந்த மனப்பான்மையோடு தேடு.
சிறிய வாய்- பேசுவதைக் குறை.
பெரிய தலை- பரந்த அறிவு, ஞானம் தேடு.

பெரிய வயிறு- செயல்களில் சிக்கல்கள், தடைகள், தோல்விகள் வரலாம். அனைத் தையும் ஜீரணித்து முன்னேறு.

கணபதிக்கு சித்தி, புத்தி என்னும் இரு மனைவியர் உள்ளதாகச் சொல்வர். இவர்கள் பிரம்மபுத்திரிகள்- சக்திகள்.

கணபதியை வணங்கினால் புத்திக்கூர்மை அதிகரிக்கும்; எடுத்த காரியங்கள் எல்லாம் சித்திக்கும்- வெற்றியாகும் என்பதே இதன் தத்துவம்.

பல தெய்வங்களுக்குப் புராணங்கள் எழுதியவர் வியாசர். ஆனால் அவர் விநாயக புராணம் எழுதவில்லை. வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதினார் விநாயகர். வினோதம்தானே. (விநாயக புராணத்தை முத்கலர் என்ற முனிவர்  இயற்றினார்.)

வியாசர் கந்தபுராணத்தை எழுதத் தொடங் கும்முன் கீழ்க்கண்ட பதினாறு பெயர்களால் கணபதியைத் துதிக்கிறார்.

ஸுமுகன்- மங்கள முகமுடையவர்.

ஏக தந்தன்- ஒற்றைத் தந்தம் கொண்டவர். (மற்றொன்றை ஒடித்துதான் மகாபாரதம் எழுதினார்.)

கபிலன்- மேக- சாம்பல் வண்ணர்.

கஜகர்ணகன்- யானைக் காதுகள் கொண்டவர்.

லம்போதரன்- பருத்த வயிறு கொண்டவர்.

விகடன்- குள்ளமாக இருப்பவர்.

விக்னராஜன்- இடையூறுகளுக்கு அதிபர்.

விநாயகன்- எல்லாருக்கும் நாயகர்; முதன்மையானவர்.

தூமகேது- அக்னியைப்போல பிரகாசிப்பவர்.

கணாத்யக்ஷன்- பூதங்களுக்குத் தலைவர்.

பாலசந்திரன்- சந்திரனை தரித்தவர்.

கஜானணன்- யானைமுகம் கொண்டவர்.

வக்ரதுண்டன்- வளைந்த துதிக்கை கொண்டவர்.

கும்பகர்ணன்- முறம்போன்ற காதுகள் கொண்டவர்.

ஹேரம்பன்- பக்தர்களுக்கு அருள்புரிபவர்.

ஸ்கந்தபூர்வஜன்- கந்தனுக்கு முன்னவர்.

இந்தப் பதினாறு பெயர்களைத் துதித்துத் தொடங்கினால் எக்காரியமும் வெற்றிபெறும்; எல்லா தடைகளும் விலகும்.

ஒருசமயம் ஔவையார் கணபதி பூஜை செய்துகொண்டிருந்தபோது சுந்தரரும் சேரமானும் கயிலை செல்வதைப் பார்த்தார். உடனே தானும் கயிலை செல்ல விரும்பி அவசரமாக பூஜை செய்தார். அப்போது விநாயகர் “நிதானமாகவே பூஜை செய்யுங்கள்’ என்றார். அதன்படி ஔவை, விநாயகர் அகவல் பாடி கணேசனைப் பூஜித்தார். அடுத்த கணம், சுந்தரர் கயிலை அடையும் முன்னரே ஔவையை கொண்டுபோய் சேர்த்துவிட்டார் விநாயகர். அத்த கைய விநாயகர் அகவலின் சில வரிகளைக் காண் போமா.

“எல்லையில்லா ஆனந்த மளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
சத்தத் துள்ளே சதாசிவம் காட்டி
சித்தத் துள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற் கணுவாய்
அப்பாலுக் கப்பாலாய்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சுஅக்கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறிவித்து
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே.’

அருணகிரியார் தம் திருப்புகழில் ஆனைமுகனை எவ்வாறு துதிக்கிறார் என்று காண்போமா?

“உம்பர்தரு தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத் துணர்வூறி
இன்பரசத் தேபருகி பலகாலும்
எந்தனுக் காதரவுற் றருள்வாயே
தம்பிதனக் காகவனத் தணைவோனே
தந்தைவலத்தால் அருள்கைக் கனியோனே
அன்பர்தமக்கான நிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே.’

வள்ளி கந்தனை அணைந்திட வள்ளி மலைக்கு வந்த ஐந்துகர விநாயகனே! தந்தையை வலம்வந்து கனி பெற்றவனே! உன்னை வணங்கும் அன்பர்களுக்கு நிலைப்பொருளாக  விளங்கி, தேவலோகத்து கற்பகத்தரு, காமதேனு, சிந்தாமணி போன்று கேட்பனவற்றையெல்லாம் தந்து மகிழச் செய்பவனே என்று போற்றுகிறார் அருணகிரி.

தமிழில் “கந்தபுராணம்’ செய்தவர் கச்சியப்ப சிவாச்சாரியார். அவருக்கு “திகடச் சக்கர’ என அடியெடுத்துக் கொடுத்து அருளினார் முருகன். தினமும் தான் எழுதும் பாடல்களை, காஞ்சி குமரக் கோட்டம் கந்தன் சந்நிதியில் வைத்து விடுவார் கச்சியப்பர். காலையில் அவற்றை எடுத்துப் பார்க்கும்போது  முருகப் பெருமான் சில திருத்தங்கள் செய்திருப்பாராம். இவ்வாறாக கந்தபுராணம் எழுதி நிறைவடைந்ததும், அதை ஆலய மண்டபத்தில் கூடியிருந்த புலவர் சபையில் அரங்கேற் றம் செய்ய முனைந் தார் கச்சியப்பர்.

முதல் பாடலான-

“திகடச் சக்கர செம்முகம் ஐந்துளான்
சகடச் சக்கர தாமரை நாயகன்
அகடச் சக்கர விண்மணி யாவுறை
விகடச் சக்கரன் மெய்ப்பதம்  போற்றுவாம்’

என்னும் விநாயகர் துதியை கச்சியப்பர் பாடியதும், அவையிலிருந்த புலவர் ஒருவர், “திகடச் சக்கர’ என்பது இலக்கணப்பிழை என்றார். அதிர்ச்சியடைந்த கச்சியப்பர் மறுநாள் விளக்கம் தருவதாகக் கூறி இல்லம் திரும்பினார். “முருகா! நீ எடுத்துக்கொடுத்த முதலடியையே இலக்க ணப் பிழையென்கிறார்களே… நான் என் செய்வேன்…’ என்று மனமுருகினார். கந்தன் “யாமிருக்கப் பயமேன்’ என்றான்.

மறுநாள் சபைக்குச் சென்றார் கச்சியப்பர். அப்போது ஒரு முதிய புலவர் வடிவில் அங்கு வந்த முருகப்பெருமான், வீரசோழியம் என்ற இலக்கண நூலை ஆதாரம் காட்டி “திகடச்சக்கர’ என்பது இலக்கணப் பிழையல்ல என்பதை நிரூபித்து கச்சியப்பருக்கு தன் திருக்கோலம் காட்டியருளினார்.
“திகடச்சக்கர’ என்பது “திகழ் தசக் கர’ என்பதாகும். அதாவது பத்து கரங்களுடையவன். ஹேரம்ப கணபதிக்கு ஐந்து தலை, பத்து கரங்கள்.

இவ்வாறு பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இறுதியாக ஒரு சுவாரசியம் காண்போமா…

நான் கோவாவில் வசித்துக்கொண்டிருந்த சமயம்… 1981-ல் சங்கராச்சாரியாருக்கு பாதபூஜை நடந்தது. அதை நடத்தி வைத்தவர் ஒரு வைணவப் பெரியவர். பூஜைகள் முடிந்ததும் நான் வைணவப் பெரியவரை வணங்கி, “போய் வருகிறேன்’ என்றேன். அவர், “சுக்லாம் பரதரம் வரப்போகிறது. இரு, சாப்பிட்டுவிட்டுப் போகலாம்’ என்றார். எனக்குப் புரியவில்லை. சற்று நேரத்தில் காபி வந்தது; அருந்தினோம். பிறகு நான் அவரிடம் “சுக்லாம் பரதரம் வருகிறது என்றீர் களே’ என்று கேட் டேன். அவர் “கணபதி- காபி சுலோகம் தெரியாதா?’ என்று கேட்டுவிட்டு இவ் வாறு விவரித்தார்.

“சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்னோப சாந்தயே’

என்பது கணபதி சுலோகம். இது காபிக்கும் பொருந்தும்.

சுக்லாம் பரதரம்- நிறைய வெண்மை (பால்).

விஷ்ணும்- கருப்பு. (டிகாக்ஷன்).

சசிவர்ணம்- சந்தன நிறம். (பாலும் டிகாக் ஷனும் சேர்ந்த நிறம்).

சதுர்புஜம்- நான்கு கரங்கள். (சூடாக இருப் பதால் இரண்டு கைகள் அல்லாது இரண்டு கைக்குட்டையும் தேவை).

பிரசன்ன வதனம்- ஆனந்த முகம். (அத்த கைய காபி குடித்தால் முகம் நன்கு விளங்கும்).

சர்வ விக்னோப சாந்தயே- தடைகள் அகலும். (காபி குடித்தால் சோர்வு எனும் தடை அகன்று மூளை நன்கு வேலை செய்யும்.)

கணபதி சுலோகத்தை காபிக்கும் பொருத்தி விட்டார் அவர். எதிலும் பொருந்தும் எளிய வரல்லவா கணபதி.

ஆதிமுதல்வன் என்று போற்றப் படுபவர் பிரணவ வடிவினரான விநாயகப் பெருமான். “இல்லாத  இடமில்லை’ என்று சொல்லும்வண்ணம், எங்கெங்கும் கோவில் கொண்டுள்ளவர் அவர். அவரது சில திருத்தலங்களைக் காண்போமா….

தமிழகத்திலேயே மலை உச்சியில் தனக்கென தனிக்கோவில் கொண்டு அருள்புரிபவர் திருச்சி மலைக்கோட்டை யிலுள்ள உச்சிப்பிள்ளையார். ஸ்ரீராமபிரான், இலங்கைப் போரில் தனக்கு உதவிபுரிந்த விபீஷணனுக்கு  ஸ்ரீரங்கநாதர் விக்ரகத்தைப் பரிசளித்தார். அதை  தரையில் வைக்கக்கூடா தென்றும் அறிவுறுத்தினார்.

விபீஷணன் அந்த விக்ரகத்துடன் இலங்கை நோக்கிச் செல்லும்போது திருச்சி பகுதிக்கு வந்தான். காவேரியில் நீராடி தன் அன்றாடக் கடமைகளைச் செய்ய எண்ணினான் அவன். ஆனால் விக்ரகத்தைக் கீழே வைக்கக்கூடாதே. என்ன செய்வதென்று அவன் யோசித்தபோது அங்கு விநாயகர் ஒரு சிறுவன் வடிவில் தோன்றினார். சிறுவனைக் கண்டு மகிழ்ந்த விபீஷணன், விக்ரகத்தை சற்றுநேரம் வைத்திருக்குமாறு கூறிவிட்டு நீராடச் சென்றான். சிறிது நேரம் பொறுத்திருந்த விநாயகர் விக்ரகத்தைக் கீழே வைத்துவிட்டார்.

திரும்பிவந்த விபீஷணன் விக்ரகம் தரையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து, அதைப் பெயர்த்தெடுக்க எவ்வளவோ முயன்றான். ஆனால் முடியவில்லை. இப்படி, உச்சிப்பிள்ளையாரின் திருவிளையாடலால் அமைந்ததுதான் ஸ்ரீரங்கம் திருக்கோவில்.காரைக்குடி அருகிலுள்ள பிள்ளையார் பட்டி திருத்தல விநாயகர் வித்தியாசமானவர்.

அவர் குடைவரைக் கோவிலில் எழுந்தருளியுள்ளார். அதாவது பாறையைக் குடைந்து வடிக்கப்பெற்ற உருவம். சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தப் பிள்ளையாருக்கு இரண்டு கைகள் மட்டுமே உள்ளன. வலது திருக்கரத்தில் சிறிய லிங்கத்திருமேனியை வைத்துள்ளார். இடக்கரம் தொந்தியைச் சுற்றியுள்ள கச்சைமீது உள்ளது. வலம்புரி விநாயகரான இவரைச் சுற்றி ஒன்பது சரவிளக்குகள் தொங்குகின்றன.

இந்த ஒன்பது விளக்குகளும் நவகிரகங்களைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள். இவர் இங்கு மூஷிக வாகனம் கொண்டு விளங்கவில்லை. இடப்பக்கம் பெண் யானையைப்போல் தந்தம் குறுகியும், வலப்பக்கம் ஆண் யானையைப்போல் தந்தம் நீண்டும் ஆண் பாதி- பெண் பாதி என்னும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் பேதங்களைக் கடந்தவராகக் காட்சி தருகிறார்.

ஆசியாவிலேயே பெரிய விநாயகர் கோவை புலியங்குளம் திருத்தலத்தில் அருள்புரிகிறார். 19 அடி, 10 அங்குலம் உயரமும்; 11 அடி 10 அங்குலம் அகலமும்; 190 டன் எடையும் கொண்டு ஒரே கல்லில் அமைக்கப்பெற்றவர். வலப்புறம் ஆண் தோற்றமும், இடப்புறம் பெண் தோற்றமும் கொண்டுள்ளார். மாதம்தோறும் சங்கடஹரசதுர்த்தி மற்றும் சித்திரை முதல் தேதியில், பத்து டன் எடையுள்ள பழங்களைக்கொண்டு மாலை அணிவித்து அலங்கரிப்பர்.

திருவையாறு ஐயாறப்பர் கோவிலிலும், திருச்சி பாலக்கரைப் பகுதியிலும், மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலயத்திலும், திருச்சி உத்தமர் கோவிலிலும், ஊட்டி பேருந்து நிலையம் அருகிலும், மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடியிலும், கொல்லிமலை கொல்லிப்பாவைக் கோவிலுக்குச் செல்லும் வழியிலும் மற்றும் சில கோவில்களிலும் ஒரே சந்நிதியில் இரட்டைப் பிள்ளையார்கள் அருள்புரிவதைக் காணலாம்.

இவர்களை தரிசித்தால் இரட்டைப் பலன்கள் கிட்டும் என்பர். மேலும் துவிமுக கணபதி என்ற பெயரில் இரண்டு தலைகளையுடைய விநாயகரை சில கோவில்களின் கோபுரத்தில் சுதை வடிவில் காணலாம்.

மூன்று விநாயகர்கள் ஒரே சந்நிதியில் அமர்ந்து அருள்புரிவதை திருச்சிக்கு அருகிலுள்ள சமயபுரம் கோவிலில் தரிசிக்கலாம். இத்திருக்கோவிலில் அருள்புரியும் மாரியம்மன் ஆரம்பகாலத்தில் கோரைப்பற்கள்  தெரிய, சிவந்த கண்களுடன் மிகவும் உக்கிரமாக இருந்தாள்.

அவள் உக்கிரத்தைக் குறைக்க காஞ்சி மாமுனிவர் யோசனைப்படி, ஆலய நுழைவாயிலின் வலப்புறத்தில் ஒரே சந்நிதியில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி  என்ற மூன்று விநாயகர்களை எழுந்தருளச் செய்தனர்.

பின்னர் அம்மனின் கோரைப்பற்கள் அகற்றப்பட்டு சாந்தசொரூபியாக புதிய தோற்றம் கொண்டாள். 1970-ஆம் ஆண்டு புதிய திருவுருவை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இங்குள்ள மூன்று விநாயகர்களை தரிசிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, சாந்தம், வளமான வாழ்வு கிட்டும் என்பர். இதேபோல் மூன்று விநாயகர் கள் ஒரே சந்நிதியில் எழுந்தருளியிருப்பதை திருப்பரங் குன்றம் முருகன் கோவிலிலும் தரிசிக்கலாம்.

நான்கு தலைகள் கொண்ட விநாயகரை  துவிஜ கணபதி என்பர். இவர் தன் கரங்களில் மின்னல் கொடிபோன்று ஒளிவீசக்கூடிய வளையல்கள் அணிந்தவர்; சந்திரன் போன்ற நிறமுடையவர்; புத்தகம், ஜெபமாலை, தண்டம், கமண்டலம் ஏந்தியவர் என்று விநாயக புராணம் கூறுகிறது.

ஒரே சந்நிதியில் ஐந்து விநாயகர்கள் வரிசையாக அமர்ந்து அருள்புரியும் திருத்தலம் அறந்தாங்கி. ஆவுடையார் கோவிலிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப் புனவாசலிலும் இதுபோல தரிசிக்கலாம். ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவிற்கு அருகிலுள்ள பஞ்சமுக விநாயகர் கோவிலில் ஒரே பீடத்தில் தனித்தனியாக ஐந்து பிள்ளையார்கள் வரிசையாகக் காட்சி தருகின்றனர்.

வரிசையாக ஆறு விநாயகர்கள் எழுந்தருளியிருப்பதை தஞ்சைக்கு அருகிலுள்ள திருக்கண்டியூர் சிவாலயத்தில் காணலாம்.

ஒரே சந்நிதியில் ஏழு விநாயகர்கள் வரிசையாக அருள்புரிவதை நெய்வேலி சிவாலயத்தில் தரிசிக்கலாம். இதேபோல் திருச்சிக்கு  அருகிலுள்ள லால்குடி திருத்தலத் திலுள்ள ஸ்ரீசப்தகிரீஸ்வரர் கோவிலிலும் காணலாம்.

ஒரே சந்நிதியில் ஒன்பது விநாயகர்கள் அருள்புரியும் திருத்தலம், திருவெண்காடு அருகே அமைந்துள்ள திருநாங்கூர் ஆகும்.

வடஆற்காடு மாவட்டம், சேண்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயத்தில் பதினோரு விநாயகர்களை தரிசிக்கலாம். இந்த பதினோரு விநாயகர்கள் லிங்க வடிவில் காட்சி தருகிறார்கள். மேலும் திருவள்ளூர் அருகிலுள்ள திருப்பாசூர் சிவாலயத்திலும் பதினோரு விநாயகர்கள்  ஒரே சந்நிதியில் காட்சி தருகிறார் கள்.

ராமேஸ்வரம் ஸ்ரீசங்கரமட வளாகத்திலுள்ள ஒரு தூண் பீடத்தில் பதினாறுவிதமான விநாயகரின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

திருச்சி மலைக்கோட்டை நுழைவாயிலிலுள்ள ஸ்ரீமாணிக்க விநாயகர் சந்நிதியை வலம் வரும்போது, விமான மண்டபத்தைச் சுற்றி ஒரு பக்கத்திற்கு எட்டு விநாயகர்கள் வீதம் நான்கு  பக்கங்களில் முப்பத்திரண்டு விநாயகர்கள் சுதை வடிவில் காட்சி தருகிறார்கள்.

திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் கோவிலில், வாதாபி கணபதியைச் சேர்த்து 56 கணபதிகள் உள்ளனர்.

108 விநாயகர்கள் ஒரே இடத்தில் வரிசையாக அருள்புரியும் திருத்தலங்கள் தமிழகத்தில் ஒருசில இடங்களில் உள்ளன. அந்த வகையில், திண்டுக்கல் நகரின் மத்தியில்கோபாலசமுத்திரம் குளக்கரையில் அமைந் துள்ள விநாயகர் கோவிலில், 108 விநாயகர்கள் எட்டு அடுக்குகளில் எழுந்தருளியுள்ளார்கள்.

இக்கோவிலில் மூலஸ்தானத்தில் எழுந்தருளி யிருக்கும் விநாயகர் சுமார் 16 அடி உயரத்தில் விஸ்வரூபத்தில் அருள்புரிகிறார். இதேபோல் காரைக்குடியிலிருந்து வயிரவன்பட்டி செல்லும் வழியிலுள்ள சிவன் கோவிலில் 108 விநாயகர்கள் எழுந்தருளியுள்ளனர்.

ஒரே சந்நிதியில் 108 விநாயகர்கள் அருள் புரியும்  திருத்தலம் கோவை பந்தயசாலை (ரேஸ்கோர்ஸ்) பகுதியிலுள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயம். இங்கு ஸ்ரீசக்கர வடிவில் 108 விநாயகர் சிலைகள் உள்ளன. இவையனைத்தும் 108 நாம வழிபாட்டின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த 108 விநாயகர்களும் உருவத்தில் வேறுபாடு கொண்டவர்கள் என்பது தனிச்சிறப் பாகும்.

விநாயகர் யானை முகத் துடன் பெரும்பாலான கோவில்களில் அருள்புரிவதைப்போல், மனித முகம்கொண்ட ஆதிவிநாயகர் நாகை மாவட்டம் செதலபுரி திருத்தலத்தில் அருள்புரிகிறார். இதேபோல் தாராபுரம் தில்லாபுரி அம்மன் கோவிலிலும், திருச்சி துறையூருக்கு அருகிலுள்ள புளியஞ்சோலை என்னுமிடத்திலும் நரமுக கணபதியை தரிசிக்கலாம்.

கோவை, குனியமுத்தூர் கோவிலில் சபரிமலை ஐயப்பனைப்போல் யோக பட்டம் தரித்து, இளஞ்சூரிய நிறத்தோடு, யோக நிஷ்டையில் அமர்ந்துள்ளார் விநாயகர். இடது முன்கையில் அட்சமாலையும், பின்கையில் கரும்பும்; இடது முன்கையில் யோகதண்டமும், பின்கையில் பாசக்கயிறும் ஏந்தி கிழக்கு நோக்கியுள்ளார். இவர் பக்தர்களுக்கு அஷ்ட யோகங்களையும் வழங்குவதாக ஐதீகம்.

விநாயகரின் வாகனம் மூஷிகம் என்று சொல்லப்பட்டாலும் பல்வேறு யுகங்களில் வெவ்வேறு வாகனத்தில் அருள்புரிந்திருக்கிறார்.

கிருதயுகத்தில் விநாயகரின் வாகனம் சிங்கம்; திரேதாயுகத்தில் மயில்; துவாபரயுகத்தில் மூஷிகம்; கலியுகத்தில் இவரது வாகனம் குதிரை என்று சொல்லப்பட்டாலும் அந்த வாகனத்துடன் தரிசிப்பது அரிது.

நாகை நீலாயதாட்சி ஆலயத்தில் பஞ்சமுகங்களுடன் காணப்படும் விநாயகர் சிம்ம வாகனத்துடன் காட்சி தருகிறார். இதேபோல் சென்னை திருவொற்றியூர் குருதட்சிணாமூர்த்தி ஆலயத்திலும் பஞ்சமுகங் களுடன் சிங்கத்தில் அமர்ந்துள்ளார்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலய சுதைச் சிற்பத்திலும், அருப்புக்கோட்டை தாதன்குள விநாயகர் ஆலயத்திலும், திருவானைக்கா ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவிலிலுள்ள ஓவியத்திலும் விநாயகர் மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார்.

கோவை குரூபதேசீகக் கவுண்டர் ஆலயத்திலும், கடலூர் வட்டம், சென்னப்ப நாயக்கன் பாளையத்திலும், மலையாண்டவர் விநாயகர் ஆலயத்திலும் குதிரை வாகனத்தில் காட்சி தருவதைக் காணலாம். திருச்செந்தூர் ஆவுடையார் குளக்கரையில், வைத்தியநாதசுவாமி ஆலயத்திலுள்ள விநாயகருக்கு யானை வாகனமாக உள்ளது.

சுசீந்திரம் தாணுமாலயன் ஆலய விநாயகருக்கு வாகனமாக காளை உள்ளது. இதேபோல் நெல்லை காந்திமதியம்மன் கோவில் விநாயகர் முன்பும் காளை வாகனம்காட்சியளிக்கிறது.

இந்தோனேஷியா நாட்டில் விநாயகரின் வாகனம் ஆமை. பொதுவாக, விநாயகர் திருவுரு வில் நான்கு கரங்கள் இருக்கும். சில கோவில்களில் இக்கரங்கள் மாறு பட்டிருப்பதையும் தரிசிக்கலாம்.

ஒரு கரம், தும்பிக்கை கொண்ட வர் மதுரை, மாத்தங்கரையிலுள்ள கோடாரி விநாயகர் ஆவார்.

இரண்டு கரங்களுடைய விநாயகரை பிள்ளையார்பட்டியில் தரிசிக்கலாம்.

சீனாவில் மூன்று கரங்களுடன் விநாயகர் காட்சி தருகிறார். நான்கு கரங்கள் கொண்ட விநாயகரை பல திருக்கோவில்களில் தரிசிக்கலாம்.

ஆறு கைகள் கொண்ட கணபதி மும்பையில் அருள்புரிகிறார்.

திருச்செந்தூரில் ஏழு கரங்களுடன் காட்சி தரும் விநாயகரை உச்சிஷ்ட கணபதி என்பர்.

நான்கு முகங்கள், எட்டு கைகளுடன் கணபதி சீன நாட்டில் அருள்புரிகிறார்.

ஒன்பது கரங்கள் கொண்ட கணபதியை தருண கணபதி என்பர். சில கோவில் கோபுரங்களில் காணலாம்.

பத்துக் கரங்கள் கொண்ட பஞ்சமுக கணபதியை சேலம் கந்தாஸ்ரமத்திலும், குச்சனூர் திருத்தலத்திலும் தரிசிக்கலாம்.

பதினோரு கரங்களுடைய கணபதி கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் எழுந் தருளியுள்ளார்.

பதினைந்து கரங்கள் கொண்ட ஹேரம்ப கணபதி மும்பையில் பல இடங்களில் கோவில் கொண்டுள்ளார்.

பதினேழு கரங்கள் கொண்ட கணபதியை வீரகணபதி என்பர். பதினெட்டு கரங்கள் கொண்ட கணபதியை தமிழகத்தில் சில கோவில் விமானங்களில் காணலாம்.

விநாயகப் பெருமான் எந்தவிதமான தோற்றத்தில் காட்சி தந்தாலும் பக்தர்கள் கேட்கும் பிரார்த்தனையை நிறைவேற்றி மகிழ்ச்சியை வழங்குவதில் வல்லவர் என்பதில் ஐயமில்லை.

சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி வணங்கும் தெய்வம் விநாயகர். எந்த நல்ல காரியத்தையும் விநாயகரை வணங்கியபின் தொடங்கினால்தான்அக்காரியம் விக்னமின்றி நல்ல முறை யில் நடக்கும். தேவர்களும் வணங்கும் தெய்வம் இவர். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்திதான் விநாயகரின் அவதார தினமாகும்.

நம் துன்பங்களுக்கெல்லாம் காரணம் நமது வினைகள். இந்த வினைப் பயனைத் தீர்ப்பவர்தான் மகாகணபதி. இவர் 18 கணங்களுக்கும் அதிபதி. இவரை மனதால் நினைக்க, வாக்கினால் பாட, உடம்பால் வணங்க வினைகள் யாவும் தீரும். கருணை புரிவதில் இவர் இணையற்றவர். மிகவும் எளிமையானவர். அதிக செலவும் அதிக சிரமமுமின்றி எளிமையாக வணங்கி மிகுந்த பலனடையலாம்.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பர். இந்தியாவில் சிறு கோவில்கூட இல்லாத கிராமத்தைக் காணமுடியாது. ஈடிணையற்ற தெய்வங் களான ஈசன், பெருமாள் இவர்களுக்கு எல்லா இடங்க ளிலும் கோவில் அமைத்துவிட முடியாது. ஆனால் பிள்ளையார் விஷயம் அப்படியல்ல.

தெருக்கோடி, முச்சந்தி, மரத்தடி, குளக்கரை- ஏன் வீட்டில் விளக்கு மாடம் போன்ற சிறு இடத்திலேயேகூட பிள்ளையாரை நிறுவி வழிபடலாம். இதுவன்றி பசுஞ்சாணம், மஞ்சள் பொடி யில்கூட பிள்ளையாரை உருவாக்கிவிடலாம். பிடித்து வைத்தால் பிள்ளையார் தான்.

திதிக்குரிய கணபதிகள்

பொதுவாக விநாயக ருக்கு சதுர்த்தி திதிதான் உகந்தது. என்றாலும் திதி ஒவ்வொன்றிற்கும் அதற்குரிய கணபதிகள் உள்ளனர். அந்தந்த நாளுக்குரிய கணபதியை வழிபடுவ தால் சிறந்த நற்பயன்கள் பெறலாம்.

பிரதமை- பால கணபதி, துவிதியை- தருண கணபதி, திரிதியை- பக்தி கணபதி, சதுர்த்தி- வீர கணபதி, பஞ்சமி- சக்தி கணபதி, சஷ்டி- துவிஜ கணபதி, சப்தமி- சித்தி கணபதி, அஷ்டமி- உச்சிஷ்ட கணபதி, நவமி- விக்ன கணபதி, தசமி- க்ஷிப்ர கணபதி, ஏகாதசி- ஹேரம்ப கணபதி, துவாதசி- லட்சுமி கணபதி, திரயோதசி- மகா கணபதி, சதுர்த்தசி- விஜய கணபதி, அமாவாசை, பவுர்ணமி- நித்ய கணபதி. ஒவ்வொரு நாளிலும் அந்தந்த திதிக்குரிய கணபதியின் நாமத்தை 21 முறையோ, 108 முறையோ ஜெபித்து பக்தியுடன் வழிபட் டால் விக்னங்கள் யாவும் விலகி, சகல வளங்களும் கைகூடும்.

நான்கு வேதங்களும், 18 புராணங்களும், இதிகாசங்களும் விநாயகரைப் போற்று கின்றன. மனிதர்கள் மட்டுமல்ல; தேவர்களும் இவரை வழிபட்ட  பின்பே எச்செயலையும் தொடங்குவார்கள்.

தேவர்கள் பாற்கடல் கடையும்போது கணபதியை வணங்காமல் செய்ததால் முதலில் வெளிப்பட்டது ஆலகால விஷம். அதன்பின் தவறை உணர்ந்த தேவர்கள் உடனடியாக அங்குள்ள கடல் நுரையால் விநாயகர் உருவம் செய்து வணங்கியபின் பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்றனர். கடல் நுரை விநாயகரை திருவலஞ்சுழி தலத்தில் காணலாம்.

சிவபெருமான் திரிபுரம் எரிக்க தேரில் விரைவாகச் சென்றார். வழியில் தேரின் அச்சு முறிந்தது. கணபதியை வழிபடாததால்தான் இப்படியானது என்று, கணபதி வழிபாடு செய்து அதன்பின் திரிபுரத்தை எரித்து முடித்தார் சிவன். அச்சு முறிந்த இடம்தான் சென்னை அருகே யுள்ள அச்சிறுபாக்கம்.

பஞ்சபூத விநாயகர்கள்

திருவண்ணாமலை விநாயகர் நெருப்பையும்; திருவானைக்கா விநாயகர் நீரையும்; சிதம்பரத்திலுள்ள விநாயகர் ஆகாயத்தையும்; திருக்காளத்தி விநாயகர் வாயுவையும்; காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலய விநாயகர் நிலத்தையும் குறிக்கின்றனர். இவர்களை வணங்கினால் பஞ்சபூதங்களால் ஏற்படும் அல்லல் நீங்கும் என்பர்.

தேசிய விழா

ஆதிகாலம் முதலே விநாயகர் சதுர்த்தி விழா இருந்து வந்தாலும், அதை மக்கள் அனைவரும் கொண்டாடும் தேசிய விழா வாகப் பிரபலப்படுத்தியவர் தேசபக்தரும், தியாகியுமான பால கங்காதர திலகர்தான். 1893-ல் விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் விழாவாகக் கொண்டாட வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி பூனாவில் உள்ள தகடுசேத் கணபதி கோவிலில் தான் முதன்முதலில் விநாயகர் சதுர்த்தி விழாவை தேசிய விழாவாகக் கொண்டாடினர். இவ்விழா பத்து நாட்கள் நடந்தன.  இதையே ஆண்டுதோறும் பற்பல இடங் களில் பொதுவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

கணபதி பட்டம்

ஒருசமயம் சிவனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. திருக் கயிலாயத்தில் தன்னை வணங்கி வழிபடும் கணங்கள் அனைத் திற்கும் அதிபதியாக தன் பிள்ளை கள் இருவரில் ஒருவரை நியமிக்க முடிவு செய்தார். யாரை நியமிப்பது என்று யோசித்த வர், முன்பு செய்த ஞானப்பழ திருவிளையாடல் போல் மற்றுமோர் திருவிளையாடலை நடத்த திட்டமிட்டார்.

மகன்கள் இருவரையும் அழைத்து, “”யார் முதலில் உலகைச் சுற்றி வருகிறாரோ அவரே கணங்களின் தலைவர்” எனக் கூறினார். ஏற்கெனவே ஏமாந்த கந்தன் இம்முறை உடனே தாய்- தந்தையரை சுற்றிவர ஆரம்பித்தார்.

பிரபஞ்சமே “ராம’ நாமத்தில் அடங்கியுள்ளது என்ற ரகசியம் அறிந்த பிள்ளையார் தரையில் “ராம’ என எழுதி உடனடியாக அதைச் சுற்றிவந்து முருகனை முந்திவிட்டார்; வெற்றியும் பெற்றார்.

விநாயகரின் புத்திசாலித்தனத்தையும், சமயோசித புத்தியையும் வியந்த ஈசன் கணங் களுக்கு அதிபதி பதவியைக் கொடுத்து, “”விநாயகா, இனி கணபதி என்ற திருநாமத்துடன் விளங்கு வாய்” என்றார்.

கணபதி ஞானத்தின் உருவம். வேதங்களில் உள்ளதுபோல யோக அடிப்படையில் வேதாந்த பூர்வமாக உள்ளவர். மூலாதாரமானவர்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் விதம்

அதிகாலை வீட்டை தூய்மைப்படுத்தி நீராடிவிட்டு, மூஷிக வாகனனை நினைத்து கடைக்குச் சென்று வலம்புரியாகவுள்ள மண் பிள்ளையாரை வாங்கி வரவேண்டும். அலங் காரம் செய்தபின் தொப்பையில் காசு வைத்து, விநாயகருக்கு குடை வைக்கவேண்டும்.

பின் இவரை பூஜையறையில் மனையில் அமர்த்தி, இருபுறமும் விளக்கேற்றி, முன்புறம் இலை யில் 21 வகையான நைவேத்திய பண்டங்களை வைக்கவேண்டும். இதில் மோதகம், சுண்டல் கண்டிப்பாக இருக்கவேண்டும். எத்தனை மலர்மாலை இட்டா லும் அறுகு மாலையும், எருக் கம்பூ மாலையும் கண்டிப்பாக சூட்டவேண்டும்.

“ஓம், ஸ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வரவரத ஸர்வ ஜனம்மே, வஸமாயை ஸ்வாஹா’
என்ற கணபதி மூல மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். அத்துடன்,
“ஸுக்லாம் பரதரம் விஷ்னும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஸாந்தயே’

என்ற விநாயகர் சித்தி மந்திரத்தையும் கூறலாம். முடிந்தால் 21 முறை அல்லது 108 முறைகூட ஜெபிக்கலாம். பின் தூப தீப நைவேத்தியம் முடிந்ததும், பட்சணங்களை மற்றவருக்கு கொடுத்தபின் நாம் உண்ணவேண்டும். விநாயகர் சிலை பின்னப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அன்று முதல் 1, 3, 5, 7-ஆம்  நாட்கள் ஒன்றில் விநாயகரை ஆறு, ஏரி, கிணறு, சமுத்திரம் எங்காவது நீரில் கரைக்க வேண்டும். இதை ஆண்கள்தான் செய்ய வேண்டும். 1, 3, 5, 7 நாட்களில் வெள்ளி, செவ்வாய்க்கிழமை வந்தால் அன்று செய்யாமல் மற்றொரு ஒற்றைப் படை நாளில் கரைக்கலாம். அப்போது விநாய கரைப் பார்த்து, “பிள்ளையாரப்பா! இன்று போய் அடுத்த வருடம் வா’ எனக் கூறவேண்டும்.

கணபதியின் அறுபடை வீடுகள்

முருகனுக்கு உள்ளதுபோல் அண்ணன் கணபதிக் கும் ஆறுபடை வீடுகள் உள்ளன. திருவண்ணா மலை செந்தூர விநாயகர், விருத்தாசலம் ஆழத்துப் பிள்ளையார், திருக்கடவூர் கள்ள வாரணப் பிள்ளையார், மதுரை முக்குறுணிப் பிள்ளை யார், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திரு நரையூர் பொள்ளாப் பிள்ளையார்.

தூர்வா கணபதி விரதம்

சிராவண மாதம் சுக்லபக்ஷ சதுர்த்தியன்று தூர்வா கணபதி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று காலை சுத்தமான ஓரிடத்தில் கோலமிட்டு, தரை முழுவதும் தூர்வை என்னும் அறுகம்புல்லை நிறைய பரப்பி, புல்லின்மீது ஸ்ரீகணபதி விக்ரகம் அல்லது படத்தை வைத்து பூஜை செய்யவேண்டும்.

பூஜையில் செய்யப்படும் ஆவாஹனம் முதலான 16 உபசாரங்களையும் அறுகம்புல்லைக் கொண்டே செய்யவேண்டும். கொப்பரைத் தேங்காய், அவல் நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டி நமஸ்கரித்து பூஜையின் முடிவில், “கணபதயே நம: உமாபுத்ராய நம: அகநாசநாய நம: ஏகதந்தாய நம: இபவக்த்ராய நம: மூஷிகவாஹனாய நம: வினாயகாய நம: ஈசபுத்ராய நம: ஸர்வஸித்திப்ரதாயகாய நம: குமாரகுரவே நம:’ என்னும் பத்து நாமங்களைச் சொல்லி அறுகம்புல்லால் கணபதியை அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறி பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.

கணேஸ்வர கணாத்யக்ஷ கௌரீபுத்ர கஜானன/
வ்ரதம் ஸம்பூர்ணதாம் யாதுத்வத் ப்ரஸாதாத் இபாநந//

இவ்வாறு அறுகம்புல்லால் கணபதியை நியமத்துடன் பூஜிப்பவர்களுக்கு அனைத்துஇடையூறுகளும் விலகி எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும். 10-8-2013

அன்று இந்த விரதநாள் அமைகிறது.

சீதளா சப்தமி விரதம்

சிராவண மாத சுக்ல பக்ஷ சப்தமிக்கு சீதளா சப்தமி என்று பெயர். அம்மனின் பல உருவங்களில் சீதளாதேவி என்னும் வடிவமும் ஒன்று.

அசுரர்களின் தொல்லையால் கடும் வெப்பம் காரணமாக உடலில் கொப்பளங்களுடனும் (வைசூரி) கடும் ஜுரத்துடனும் உடல் வலியுடனும் தேவர்கள் சிரமப்பட்டார்கள். தேவர்களின்துயர் துடைக்க சிவனின் ஜடையிலிருந்த சந்திரனிடமிருந்தும், கங்கையிடமிருந்தும் சுடரொளி ஒன்று தோன்றி அம்மனாக உருப்பெற்றது. அந்த அம்மனே சீதளாதேவி என்று அழைக்கப்படுகிறாள்.

சீதளா சப்தமியன்று சீதளா தேவியை பூஜை செய்து, மாம்பழமும் வெள்ளரிக்காயும் தயிர் சாதமும் நிவேதனம் செய்து அதை தானம் செய்ய வேண்டும். பூஜை செய்ய முடியாதவர்கள் தானம் மட்டுமாவது செய்யலாம்.

அதாவது அன்று காலை நித்யகர்மாவை முடித்துவிட்டு, “மம புத்ரபௌத்ராதி அபிவிருத்தி த்வாரா சீதளா தேவதா ப்ரீத்யர்த்தம் ச்ராவண சுக்ல ஸப்தமி புண்யகாலே ஆம்ரபல கர்கடீபல ஸஹித கர்கடீ பர்ணஸ்தித தத்யோதன தானமஹம் கரிஷ்யே’ என்ற சங்கல்பம் சொல்லி, ஒரு வெள்ளரி இலையில்  தயிர்சாதம் வைத்துக்கொண்டு, ஒரு மாம்பழம், ஒரு வெள்ளரிக்காயுடன் சேர்த்து, “ஸ பரிவார சீதளா தேவதா ப்ரீத்யர்த்தம் இதம் ஆம்ரபல கர்கடீபல ஸஹித கர்கடீ பர்ணஸ்தித தத்யோதனம் சீதளா ப்ரீத்யர்த்தம் ஸம்ப்ரததே’ என்று சொல்லி தெய்வ சந்நிதியில் வைத்து, பின்னர் அதை ஏழைக்குத் தந்து சாப்பிடச் செய்யவேண்டும்.

இதனால் நீண்ட நாட்களாக தீராமல் இருக்கும் நோய்கள் உடனே விலகும். குறிப்பாக அதிக வெப்பத்தாலேற்படும் கட்டிகள், அம்மை, வைசூரி முதலான நோய்கள் விலகும். மேலும் ஒருபோதும் இதுபோன்ற நோய்கள் குடும்பத்தில் யாருக்கும் தோன்றாது என்கிறது ஸ்காந்த புராணம். இது 13-8-2013 அன்று வருகிறது.

அசூன்ய சயன விரதம்

சிராவண மாத கிருஷ்ண பட்ச த்விதியை திதியானது, ஸ்ரீகிருஷ்ணர் மகாலட்சுமியுடன் சுகமாகத் தூங்கும் நாள். அன்று அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று மாலை பூஜையறையில் ஸ்ரீகிருஷ்ணர்- மகாலட்சுமி விக்ரகம் அல்லது படத்தை வைத்து தம்பதிகளாக பூஜை செய்து, காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்து, புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை, தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில் ஸ்ரீகிருஷ்ணரையும் மகாலட்சுமியையும் படுக்க வைக்க வேண்டும். பிறகு,

“லக்ஷ்ம்யா வியுஜ்யதே தேவ ந கதாசித்யதோ பவான்
ததா களத்ர ஸம்பந்தோ தேவமா மே வியுஜ்யதாம்’

(ஹே க்ருஷ்ண! எவ்வாறு மகாலட்சுமியுடன் எப்போதும் தாங்கள் சேர்ந்தே இருக்கிறீர்களோஅப்படி நானும் எனது மனைவியுடன்- கணவனுடன் என்றும் இணைபிரியாமல் ஒன்றுசேர்ந்தே இருக்க அருள்புரிய வேண்டும்) என்னும் ஸ்லோகம் சொல்லி பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும். மறுநாள் காலை மறுபடியும் ஸ்ரீகிருஷ்ணர்- லக்ஷ்மி விக்ரகங்களுக்கு பூஜை செய்து நிவேதனம் செய்து நமஸ்கரித்து, கிருஷ்ணரை படுக்கவைத்த அந்தப் புதிய படுக்கையை தானம் தந்துவிட வேண்டும். இவ்வாறு செய்பவர்களின்  வீட்டில், ஸ்ரீகிருஷ்ணர் அருளால் படுக்கை எப்போதும் கணவன்- மனைவியுடன் சேர்ந்ததாகவே இருக்கும். ஒருபோதும் தம்பதிகள் பிரியமாட்டார்கள். அவர்கள் சொத்தும் பணமும் அவர்களை விட்டுவிலகாது என்கிறது பாத்ம புராணம்.

முழுமுதற் கடவுளான விநாயகரை ஆலயங்களில் யானை முகத்தோனாகவே தரிசிக்கிறோம். சற்று வித்தியாசமான வடிவில் நரமுக விநாயகராக திலதர்ப்பணப்புரியிலும், முகமில்லா விநாயகராக சித்தமல்லியிலும் தரிசிக்கலாம்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில்- திருவாரூரிலிருந்து 18 கிலோமீட்டர்தொலைவில் அமைந்துள்ளது திலதர்ப்பணப்புரி. இங்குள்ள சிவாலயத்தில் தனிச்சந்நிதியில் மேற்கு நோக்கி தும்பிக்கையின்றி மனித முகத்துடன் விநாயகர் அருள்பாலிக்கிறார்.

யானை முகமாகத் தோன்றுவதற்கு முன் பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட உருவம் இது.

முதன்முதலில் உருவானவர் என்பதால் இவ்விநாயகர் ஆதிவிநாயகர் என்றுஅழைக்கப்படுகிறார்.

இத்தலம் பிதுர்தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. திலம்- எள்; தர்ப்பணம்- இறந்தவர்களுக்குச் செய்யப்படும் பித்ருக் கடன்; புரி- தலம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யச் சிறந்த இடம் என்பதால் இத்தலம் திலதர்ப்பணப்புரி என்று அழைக்கப்படுகிறது.

ஆதிவிநாயகர் என்று அழைக்கப்படும் நரமுக விநாயகர் மனித உருவத்தோடு பாசம், அங்குசம், அபயஹஸ்தமாக ஆனந்த முத்திரையுடன் கூடிய கைகளோடு, இடதுகையை இடது காலின்மீது வைத்தபடி காட்சி அளிக்கிறார்.

இவ்வாலயத்து ஈசன் முக்தீஸ்வரர்; இறைவி சொர்ணவல்லித் தாயார்.

ஸ்ரீராமர் தன் தந்தை தசரதருக்கும், தந்தைக்கு நிகராகத் தான் கருதிய ஜடாயுவுக்கும் இத்தலத்தில்தான் பிண்டம் இட்டார். தசரதர் அதை நேரில் பெற்றுக்கொண்டார் என்பதும், ஸ்ரீராமர் வைத்த பிண்டங்கள் சிவலிங்கங்களாக மாறி ஸ்ரீராமருக்கு அனுக்கிரகம் செய்தன என்பதும் வரலாறு. ஆலயத்தில் பிதுர் லிங்கங்களுக்கு நேராக, ஸ்ரீராமர் வலது காலை மண்டியிட்டு தர்ப்பணம் செய்யும் நிலையில் உள்ள சிலை ஒன்று உள்ளது.

இவ்வாலயத்தைப் பற்றி சிறப்பான வரலாறு ஒன்றும் கூறப்படுகிறது.

கோதாவரி நதிக்கரையில் உள்ள போகவதி நாட்டை நற்சோதி என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஒருசமயம் நாரத முனிவர் அவனது அரசவைக்கு வந்திருந்தார். மன்னன் நாரதரிடம், “”இப்பூவுலகில் எந்தத் தலம் மிகவும் சிறந்த புண்ணியம் வாய்ந்த தலம்?” என்று கேட்டான்.

மன்னனே கண்டறிந்து கொள்ளட்டும் என்பதற்காக தலத்தின் பெயரைச் சொல்லாமல் நாரதர், ”எந்தத் தலத்தில் பித்ருக்கள் பிண்ட தானத்தை நேரில் தோன்றி பெற்றுக் கொள்கிறார்களோ அதுவே உத்தம புண்ணியத்தலம்” என்று கூறினார். பின்னர் நாரதர் மன்னனிடம் விடை பெற்றுச் சென்றார்.

நாரதர் கூறியபடி நற் சோதி மன்னன் இந்திய நாட்டிலுள்ள பல தலங்களுக்கும் சென்று திலதர்ப்பணமும், பிண்ட தானமும் செய்துகொண்டு வந்தான். எந்த இடத்திலும் பித்ருக்கள் நேரில் வராத தால் மனம் வருந்திய மன்னன் தன் நாட்டுக்கே திரும்பிச் சென்றுவிடலாம் என முடிவு செய்தான். அப்போது மன்னன் எதிரில் நாரதர் தோன்றி, “”நான் கூறிய புண்ணிய தலத்திற்கு அருகில் வந்துவிட்டாய்.

சில காத தூரத்திற்கு அப்பால் “திலதைப்பதி’ என்ற தலம் இருக்கிறது. அங்கு சென்று அரிசிலாற்றில் நீராடி, உன் பித்ருக்களுக்கு தில தர்ப்பணமும் பிண்ட தானமும் செய்.

அவர்கள் உன் எதிரில் தோன்றி அவற்றை வாங்கி உண்பார்கள்” என்று கூறினார்.

மன்னன் திலதைப்பதி சென்றான். அங்கு தவம் செய்துகொண்டிருந்த காலவ முனிவரை வணங்கி ஆசிபெற்றான். ஆலயத்திற்குச் சென்று இறைவன்- இறைவியை வணங்கினான்.

அமாவாசையன்று அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி நடுப்பகலில் சங்கல்பத்துடன் திலதர்ப்பணம் செய்து பிண்டம் சமர்ப்பித்தான். பித்ருக்கள் அவன்முன் தோன்றி, படைக்கப்பட்டபிண்டத்தை ஏற்று உண்டு மகிழ்ந்து மன்னனுக்கு நல்லாசி வழங்கி மறைந்தனர். மன்னன் மனம் மகிழ்ந்தான்.

திலதர்ப்பணப்புரி தலத்திற்கு வந்து பித்ருசாபம், பித்ருதோஷம் போன்றவை நீங்க தர்ப்பணம் செய்து பரிகாரம் காணலாம். மூதாதையர் இறந்த நாள் தெரியவில்லை என்றாலும், இத்தலத்தில் எப்போது வேண்டுமானாலும் பித்ருக்கடன் ஆற்றலாம்.

பார்வதிதேவி உருவாக்கிய திருமேனியின் தலையை சிவபெருமான் வெட்டியபிறகு உள்ள வடிவில் சித்தமல்லி என்ற தலத்தில் தலையில்லாத விநாயகராக அருள்பாலிக்கிறார்.

யானை முகத்தோனாகிய விநாயகரை மனித முகத்துடன்கூடிய வடிவில் திலதர்ப்பணப்புரி யிலும், தலை வெட்டப்பட்ட நிலையில் உள்ள வடிவில் சித்தமல்லியிலும் வழிபடலாம்

நான்கு வேதங்களும் பதினெட்டுப் புராணங்களும் இரண்டு இதிகாசங்களும் போற்றுவது முழுமுதற் கடவுளான விநாயகரையே. நமது விருப்பங்கள் ஈடேறத் தடையாக இருக்கும் விக்னங்களை அகற்றும் வல்லமை மிக்கவர் விநாயகர். அவருக்காக மேற்கொள்ளும் விசேஷ விரதம்தான் விநாயகர் சதுர்த்தி விரதம். இந்த விரதத்தையும் பூஜையையும் மேற்கொள்வதற்கான சில அடிப்படை விவரங்களைக் காண்போம்.

விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பின் நீராடி வந்து பூஜை அறையில் மணைப் பலகையை வைத்து,அதன்மேல் தலை வாழையி லையை, அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசி யின்மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் “ஓம்’ என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.

நம் வீட்டுப் பிள்ளைகள் மூலமாக, களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி வரச் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்கவேண்டும். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை அணிவித்து, மணைப் பலகையில் இருத்த வேண் டும். குன்றிமணி யால் கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும்.

கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர் கள், பத்ரங்கள் 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. இல்லாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்யவேண்டும். பின்னர்,

“ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே
வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா’

எனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை அல்லது 51 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு நிவேதனப் பட்சணங்களை வழங்கி நாமும் சாப்பிடலாம். வீட்டில் பூஜை முடித்தபின் ஆலயம் சென்று விநாயகரை வணங்கி வரலாம். காலை- மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு.

விநாயகர் சதுர்த்திக்குப் பின், விநாயகர் சிலையை “விவர்ஜனம்’ செய்யவேண்டும். விநாயகர் சதுர்த்தியையும் சேர்த்து,

அன்றைய தினமோ அல்லது ஒற்றைப் படையில் அமையும்படியாக 3, 5, 7-ஆவது நாட்களிலோ இதை மேற்கொள்ளலாம். ஆண்கள் மட்டுமே பிள்ளையாரை நீரில் கரைக்க வேண்டும். விநாயகர் வீட்டில் இருக்கும்வரை அவருக்கு இருவேளை பூஜை, நைவேத்தியம் செய்ய வேண்டும். பிள்ளை யார் சிலை சேதமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

வழியனுப்பும் நாளன்று, “மங்களமூர்த்தி மகாராஜா, அடுத்த வருடமும் வா ராஜா’ எனக் கூறி வழியனுப்ப வேண்டும். தொப்பையில் பதித்த காசை  எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும்; லட்சுமி கடாட்சம் கிட்டும்.

நாத- பிந்து தத்துவம்

ஓங்காரமே உலகின் பிரதான ஒலி. அதனை ப்ரணவ மந்திரம் என்பர். ப்ரணவம் என்பதில் “ப்ர’ என்பதற்கு விசேஷ என்பது பொருள்; “நவம்’ என்பதற்கு புதுமை என்று பொருள். புதுப்புது விசேஷங்களை உள்ளடக்கிய மந்திரமே ப்ரணவ மந்திரம். “ஓம்’ என்பதைப் போன்றே பிள்ளையார் சுழியும் விசேஷமானது. பிள்ளையார் சுழியில் அகரம், உகரம், மகாரம் மூன்றும் அடங்கியுள்ளன. ஒலி வடிவமும் வரி வடிவமும் சேர்ந்துதான் எழுத்தாகிறது. ஒலி வடிவம் நாதம்; வரி வடிவம் பிந்து. உயிரும் உலகமும் உண்டாக இவை யிரண்டும் வேண்டும். நாத பிந்து சேர்க்கையின் குறியீடாகத் திகழும் பிள்ளையார் சுழியை நாம் எழுதத் தொடங்கும்முன் பயன்படுத்தினால், அந்தப் பணி இடையூறின்றி முடியும்.

ஆவணியில் வருடப்பிறப்பு

சூரிய பகவானின் இயக்கத்தை வைத்தே நாம் நாட்களைக் கணிக்கிறோம். சூரியனின் சொந்த வீடு சிம்மம். அங்கிருந்து சூரியன் 12 வீடுகளுக்கும் சென்று வருகிறார். எனவே சூரியன் சிம்மத்திலிருக்கும் ஆவணியே வருடப் பிறப்பாகவும், முதல் மாதமான ஆவணியை, விநாயகரை வணங்கித் தொடங்கும் வழக்கமும் சுமார் 5,000 ஆண்டுகளுக்குமுன் வழக்கில் இருந்துவந்தது. காலமாற்றத்தால் சித்திரையே வருடப் பிறப்பாகிவிட்டது. இன்றைக்கும் கேரளாவில் கொல்லம் ஆண்டு ஆவணியில் தொடங்குவதைக் காணலாம்.

தேசிய விழா

விநாயகர் சதுர்த்தி விழா ஆதிகாலம் முதல் இருந்துவந்தாலும், அதை மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் தேசிய விழாவாகப் பிரபலப்படுத்தியவர் தேசபக்தரும் தியாகியுமான பாலகங்காதர திலகர்தான். 1893-ல் விநாயகர் சதுர்த்தியை மக்கள் விழாவாகக் கொண்டாட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி பூனாவில் அமைந்துள்ள தகடுசேத் கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா முதன்முதலாக விசேஷமாகக் கொண்டாடப் பட்டது.

விநாயகரின் திருக்கோலங்கள்

உருவாய் அருவாய் திருவாய் விளங்குபவன் இறைவன். அனைத்துயிர்களிலும் அவனே குடிகொண்டுள்ளான். எனவே அவனது திருக் கோலங்களை எண்ணுவது சாத்தியமற்றது. இருந்தபோதும் மனிதன் இறைவனை மூர்த்தங்களில் வடித்து வணங்குவதில் பெரிதும் நிறைவடைகிறான்.

அந்த விதத்தில் விநாயகரும், அஷ்ட (8) கணபதி, ஷோடச (16) கணபதி, 21 கணபதி, 51 கணபதி, 108 கணபதி என பல கோலங்களில் வழிபடப்படுகிறார். இத்தகைய சில ஆலயங்கள் குறித்துக் காண்போம்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தி லும் திருவாலங்காடு அருகேயுள்ள பாசூரிலும் 16 அம்ச ஷோடச கணபதிகளைக் காணலாம். தூத்துக்குடியில் இந்த 16 விநாயகர் சிலைகளும் அடுத்தடுத்து வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள் ளன. நடுவில் பதினாறு திரிகளைக் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு செய்கின்றனர். பாசூரில் விநாயகர்கள் வரிசையாக அடுத்த டுத்து காட்சி தருகின்றனர்.

சேலம் சுகவனேஸ்வரர் ஆலயத்தில் 33 விநாயகர்களும், திருவாரூர் ஆலயத்தில் 52 கணபதிகளும் காணப் படுகின்றனர். திண்டுக்கல் சமுத்திரக்கரைத் தெருவில் 108 விநாயகர் கோவில் அமைந்துள்ளது. குளக்கரையில் மண்சுவர்  கட்டடத்தில் இருந்த இக்கோவிலை மீண்டும் எடுத்துக்கட்ட முனைந்தபோதே 108 விநாயகர் கோவிலாக உருவாக்கும் திட்டம் உருப்பெற்றது.

இவற்றுள் 16 விநாயகர்கள் இரண்டரை அடி உயரத்திலும், மற்றவை 12 அங்குல உயரத்திலும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆலய வாசலில் காணப்படும் பிரம்மாண்டமான ஐந்து விநாயகர்களையும் கணக்கில் கொண்டால் 113 விநாயகர்களை தரிசிக்கலாம். இதேபோன்று விதவிதமான விநாயகர் ஓவியங்களை தரிசிக்கும் ஆவல் உள்ளவர்கள் புதுவை மணக்குள விநாயகர் ஆலயத்துக்குச் சென்று வரலாம். ஆலயச் சுவரில் 200 விதமான விநாயகரின் ஓவியங்களைக் கண்டு ரசிக்கலாம்.

“காசியை விட வீசம் உயர்ந்த தலம் கும்ப கோணம் என்று கூறப்படுகிறது. இத்திருத் தலத்தை கோவில் மாநகரம் என்றும் அழைப் பர். புனிதத் தீர்த்தங்கள் ஒன்றுசேர காட்சி யளிக்கும் மகாமகக் குளத்தின் பெருமை சொல்லில் அடங்காது. பல பெருமைகள் பெற்ற இத்தலத்தில், காவேரிக் கரையோரம் மடத்துத் தெருவில் எழுந்தருளியுள்ளார் பகவத் பிள்ளையார்!

இந்தப் பிள்ளையார் ஆரம்ப காலத்தில் தற்போதுள்ள மடத்துத் தெருவிற்கு அருகில், அரசமரத்தடியில் எழுந்தருளியிருந்தார்.

அப்போது வேதாரண்யம் தலத்தில் பகவத் முனிவர் என்பவர் தன் சீடர்களுடன் குடில் அமைத்து வாழ்ந்து வந்தார். இவரின் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறக்கும் தறுவாயில் தன் மகனிடம், “நான் இறந்ததும் என் அஸ்தியை ஒரு கலசத் தில் சேகரித்து புனிதத் திருத்தலங்களுக்கு எடுத்துச் செல். எங்கு என்னுடைய அஸ்தி மலர்களாக மாறி காட்சி தருகிறதோ, அங்கு ஓடும் புனித நதியில் கரைத்து விடு!’ என்று சொல்லிவிட்டு உயிர்துறந்தார்.

அவர் சொன்னது போல், தன் தாயாரின் அஸ்தியை ஒரு மண் கலசத்தில் சேகரித்து, துணியில் மூட்டைபோல் கட்டி வைத்துக் கொண்டார். அதை ஒரு ஓலைக்கூடை யில் வைத்துக் கொண்டு சீடர் களில் ஒருவனை அழைத்துக்கொண்டு பயண மானார்.

காசி புனிதமான திருத்தலம்; அங்கு ஓடும் கங்கை புனிதமானது என்பதால், “காசியில்தான் தன் தாயாரின் அஸ்தி பூக்களாக மாறும்’ என்று கருதிய பகவத் முனிவர் காசி நோக்கிப் பயணமானார். வழியில் கும்பகோணம் திருத் தலத்திற்கு வந்ததும், அங்கு ஓடும் காவேரியில் நீராட விரும்பினார். அஸ்தி கலசக்கூடையை அரசமரத்தடியில் அமர்ந்திருந்த பிள்ளையார் முன்பு வைத்தவர், தன் சீடனைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு காவேரியில் நீராடச் சென்றார்.

குருநாதர் நீராடிக்கொண்டிருக்கும்போது சீடனுக்கு பசியெடுத்தது. கூடையில் ஏதாவது பலகாரங்கள் இருக்கும் என்று எண்ணியவன், மண்பாண்டமான அஸ்திக்கலசத்தை ஆவலுடன் திறந்து பார்த்தான். கலசத்திற்குள் பூக்கள் நிறைந்திருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தவன், மறுபடியும் முன்பிருந்ததுபோல் வைத்து பத்திரப்படுத்திவிட்டு குருநாதருக்காகக் காத்திருந்தான். நீராடிவிட்டு வந்த பகவத் முனிவர் விநாயகரை வழிபட்ட பின், மேற் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.

சில நாட்களில் காசிமாநகரத்தை அடைந்து கங்கைக் கரைக்குச் சென்றார். கங்கையில் நீராடிவிட்டு அஸ்திக்கலசத்தைத் திறந்து பார்த்தார். மண் கலசத்திற்குள்ளிருந்த எலும்பு மற்றும் சாம்பல் (அஸ்தி) அப்படியே இருந்தது. அப்போது பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டி ருந்த சீடன், “கும்பகோணத்தில் கலசத்திலிருந்த பூக்கள் எப்படி அஸ்தியாக மாறியது’ என்று குழப்பமடைந்தான்.

பகவத் முனிவர், “”அஸ்தி மலர்களாக மாறும் என்று நினைத்தேன், மாறவில்லையே” என்று முணுமுணுத்தார். உடனே சீடன், “”குருவே, என்னை மன்னித்துவிடுங்கள். இது அஸ்திக் கலசம் என்று எனக்குத் தெரியாது. தாங்கள் கும்பகோணத்தில் காவேரியில் நீராடும்போது, எனக்கு பசி எடுத்தது. மண்பாண்டத்தில் ஏதாவது பலகாரங்கள் இருக்கும் என்று திறந்து பார்த்தேன். அப்போது இந்தக் கலசத்தில் பூக்கள் மலர்ந்திருந்தன” என்று பயத்துடன் கூறினான்.

“”இதை ஏன் அங்கேயே கூறவில்லை?” என்று கோபித்துக்கொண்ட பகவத் முனிவர், திரும்ப கும்பகோணம் நோக்கிப் பயணமானார். கும்பகோணம் வந்தடைந்ததும் முன்பு நீராடிய இடத்துக்கு வந்து, காவேரியில் நீராடி, அங்கு அரசமரத்தடியில் எழுந்தருளியிருந்த விநாயகர் முன் அஸ்திக்கலசத்தை வைத்து விநாயகரை வேண்டினார். பிறகு கலசத்தைத் திறந்து பார்க்க, அதிலிருந்த அஸ்தி பூக்களாக மாறியிருந்ததைக் கண்டு மகிழ்ந்தார். அந்தப் பூக்களை அதற்குரிய வழிபாடுகள் செய்து காவேரியில் சங்கமம் செய்தார். இதனால்தான் “காசியைவிட வீசம் அதிகம் கொண்ட திருத்தலம்’ என்று கும்ப கோணம் பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

அஸ்தியானது பூக்களாக மாறிய காவேரிக் கரையே பகவத் படித்துறை என்றும், பகவத் முனிவர் வழிபட்டதால் இந்தப் பிள்ளையார் “ஸ்ரீபகவத் விநாயகர்’ என்றும் போற்றப்படுகிறார்.

ஆரம்ப காலத்தில் பகவத் விநாயகர் காவேரிப் படித்துறையையொட்டியே இருந்தார். கால ஓட்டத்தில் காவேரி குறுகி விட்டது. தற்பொழுது, இங்கே கோவில் கிழக்கு நோக்கி தனியாகவும், பகவத் படித்துறை தனியாகவும் உள்ளதைக் காணலாம்.

அரசமரத்தடியிலிருந்த பிள்ளையாருக்கு பகவத் முனிவர் அங்குள்ள பக்தர்கள் உதவியுடன் கோவில் கட்டினார். மிகவும் பழங் காலக் கோவிலான இது தற்பொழுது பலவித மாற்றங்கள் கொண்டு புதுமையாகத் திகழ்கிறது. இத்திருக்கோவிலில் பகவத் முனிவருக்கு விக்ரகம் உள்ளது.

காஞ்சி மகாபெரியவர் கும்பகோணம் சங்கரமடத்திற்கு வரும் போதெல்லாம் இந்த விநாயகரை வழிபடுவது வழக்கம்.

1952-ஆம் ஆண்டு, காஞ்சி சங்கர மடத்திற்குச் சொந்தமான ஸ்ரீசந்திரமௌலீஸ்வரன் என்னும் யானை திருவிசநல்லூரில் இறந்தது. அப்போது காஞ்சி மகாபெரியவர் யானையின் இரண்டு தந்தங்களையும் இந்த விநாயகருக்கு சமர்ப்பித்து வழிபட்டார். மூன்று அடி உயரமுள்ள இரு தந்தங்கள் விநாயகரின் இருபுறமும் அலங்கார மாக வைத்து அருளினார்.  மகாபெரியவர் அளித்த இரண்டு யானைத் தந்தங்களை சங்கட ஹர சதுர்த்தி,  விநாயக சதுர்த்தி மற்றும் சிறப்பு நாட்களில் ஸ்ரீ பகவத் விநாயகருக்கு அருகே வைத்து அலங்கரிப்பார்கள்.

இந்தப் பகவத் விநாயகரை வழிபட்டால் கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்குவதுடன், பாவங்கள் விலகி புண்ணியங்கள் சேரும் என்பது ஐதீகம்.

“கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது ஆன்றோர் வாக்கு. இந்தியாவில் ஒரு சிறு கோவில்கூட இல்லாத கிராமத்தைக் காண்பது அபூர்வம். ஈடிணையற்ற தெய்வங்களான ஈசனுக்கும் பெருமாளுக்கும் எல்லா இடங்களிலும் கோவில் அமைத்துவிட முடியாது. ஆனால் பிள்ளையார் விஷயம் அப்படியில்லை. ஒரு தெருக்கோடியிலோ, முச்சந்தியிலோ விநாயகரை ஸ்தாபித்துவிடலாம். ஏன், வீட்டிலேகூட விளக்கு மாடம் போன்ற சிறு இடத்தில் பிள்ளையார் சிலையை நிறுவி வழிபடுபவர்கள் பலர். பசுஞ்சாணத்தையோ, மஞ்சளையோகூட கையால் பிடித்து பிள்ளையாராக உருவகித்து வழிபடுகிறோம்.

கணபதிக்கு பிரியமான 21

கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ,அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர்.

அதிலென்ன சிறப்பு?

ஞானேந்திரியங்கள்-5; கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள் 5+5=10; மனம்-1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்தி ரியங்களும் கர்மேந்திரியங் களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவு படுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.

மலர்கள் – 21

புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை, சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.

இலைகள் – 21

மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.

அபிஷேகப் பொருட்கள் – 21

தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித் தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர். மேற்கண்ட விவரம் கணபதி பூஜா மந்திரத்தில் உள்ளது.

“பக்கரை விசித்திரமணி’ எனத் தொடங்கும்

அருணகிரிநாதர் பாடலில் விநாயகருக்கு உகந்த 21 வகை நிவேதனப் பொருட்களின் பட்டியலைக் காணலாம்.

நிவேதனப் பொருட்கள் – 21

மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினைமாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்.

திதிக்குரிய கணபதி

பொதுவாக விநாயகருக்கு  சதுர்த்தி திதி உகந்தது என்றாலும், ஒவ்வொரு திதிக்குமே அதற்குரிய கணபதிகள் உள்ளனர். அந்த நாளில் அதற்குரிய கணபதியை வழிபடுவது சிறந்த பலன் தரும் என்பர்.

பிரதமை- பாலகணபதி; துவிதியை- தருண கணபதி; திரிதியை- பக்தி கணபதி; சதுர்த்தி- வீர கணபதி; பஞ்சமி- சக்தி கணபதி; சஷ்டி- துவிஜ கணபதி; சப்தமி- சித்தி கணபதி; அஷ்டமி- உச்சிஷ்ட கணபதி; நவமி- விக்ன கணபதி; தசமி- க்ஷிப்ர கணபதி; ஏகாதசி- ஹேரம்ப கணபதி; துவாதசி- லட்சுமி கணபதி; திரயோதசி- மகாகணபதி; சதுர்த்தசி- விஜய கணபதி;

அமாவாசை, பவுர்ணமி- நித்ய கணபதி.

அந்தந்த திதிக்குரிய கணபதி  நாமத்தை 108 முறை கூறி தோப்புக்கரணம் போட்டு பக்தியுடன் வணங்கி வந்தால், நம் வாழ்வில் எதிர்ப்படும் விக்கினங்கள் விலகி சகல வளங்களும் கைகூடும்.

கணபதி துதிகள்

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.’

“விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.’

“வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்துவரும்
வெற்றிமிகுத்து வேழவனைத் தொழ புத்தி மிகுத்துவரும்
வெள்ளிக்கொம்பின் விநாயகனைத் தொழ
துள்ளி ஓடும் தொடர்ந்த வினைகளே.’

“திருவாக்கும் செய்கருமம் கைகூடட்டும்
செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானை
காதலால் கூப்புவார்தம் கை.’

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம் மேனிநுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கே.’

“அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம் போம்
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்து மேவும்
கணபதியை கைத்தொழுக் கால்.’

“திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைச் சாய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.’

“மண்ணுலகத்தினிற் பிறவி மாசற
எண்ணிற் பொருளெல்லாம் எளிதில் முற்றுற
கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.’

“கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபல கற்பகம் எனவினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரண்மகன் மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிற்றனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு பணிவேளே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த அதிதீரா
அத்துயரது கொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இயமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணமருள் பெருமாளே.’

கணபதியை வணங்காது எந்தச் செயலை செய்யத் தொடங்கினாலும் அது முழுமை அடையாது; பலன் தராது என்பது சிவபெருமான் வாக்கு. வரம் தந்த சிவனே கணபதியை வணங்காது த்ரிபுராசுரனை வதைக்கச் சென்றதால், அவர் ஏறிச் சென்ற தேரின் அச்சு முறிந்தது. இதனை அருணகிரியார்,

“முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம்
அச்சது பொடி செய்த அதிதீரா!’

என்று பாடுகிறார்.

கணபதி இல்லாவிட்டால் அகஸ்தியர் தமது கமண்டத்தில் எடுத்துச் சென்ற காவிரி மீண்டும் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்குமா? காகரூபமாக வந்து கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரியை வெளிப்படுத்தினாரே!

கணபதி இல்லாவிட்டால் ஸ்ரீரங்கநாதர் நமக்குக் கிடைத்திருப்பாரா? அவரது விக்ரகம் இலங்கைக்கல்லவா போயிருந்திருக்கும். கீழே வைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன், ஸ்ரீராமர் தான் வழிபட்ட ரங்கநாதர் விக்ரகத்தை விபீஷணனுக்குக் கொடுத்தார்.

அதைப் பெற்றுக்கொண்டு இலங்கை நோக்கி வந்த விபீஷணன் ஸ்ரீரங்கம் பகுதியை அடைந்தபோது மாலை நேரமாகிவிட்டது. மாலைச் சந்தி கர்மங்களைச் செய்யவேண்டுமே என விபீஷணன் யோசித்தபோது, விநாயகர் ஒரு சிறுவன் வடிவில் எதிரே வந்தார்.

அந்தச் சிறுவனிடம் சற்று நேரம் விக்ரகத்தைக் கையில் வைத்திருக்குமாறு கொடுத்த விபீஷணன் ஆற்றங்கரை நோக்கிச் சென்றான். அவன் திரும்பிவந்து பெற்றுக்கொள்வதற்குள் அதைத் தரையில் வைத்துவிட்டார் விநாயகர். அது அங்கேயே நிலைகொண்டுவிட்டது. விக்ரகத்தைப் பெயர்த்தெடுக்க எவ்வளவோ முயன்றான் விபீஷணன்.

ஆனால் இயலவில்லை. அந்த ஆத்திரத்தில் சிறுவனின் தலையில் ஓடிப்போய் குட்டினான். பின்னர் உண்மையறிந்து வணங்கிச் சென்றான். அவ்வாறு கோவில் கொண்டவரே ஸ்ரீரங்கநாதர். திருச்சி மலைமீதிருக்கும் உச்சிப்பிள்ளையாரே இந்தத் திருவிளையாடல் புரிந்தவர். அவர் தலையில் குட்டுப்பட்ட தழும்பு இருப்பதைக் காணலாம்.

இதேபோன்ற ஒரு நிகழ்வை இராவணனிடமும் நிகழ்த்தினார் பிள்ளையார். இராவணன் தவம் பல புரிந்து சிவனிடம் வரம்பெற்று, அவரிடமிருந்து ஆத்மலிங் கத்தைப் பெற்றுக்கொண்டு இலங்கை திரும்பிக்கொண்டிருந்தான். அவனும் சிறுவன் வடிவில் வந்த விநாயகரிடம் ஆத்மலிங்கத்தைத் தர, அதைத் தரையில் வைத்துவிட்டார் விநாயகர். அதுவே கர்நாடக மாநிலத்திலுள்ள கோகர்ணம். அங்குள்ள கணபதி தலையிலும் இராவணன் குட்டிய வடுவைக் காணலாம்.

பராசக்தி தேவி பண்டாசுர வதத்திற்குக் கிளம்பினாள். ஆனால் விக்ன யந்திரம் அதற்கு இடையூறாக இருந்தது. சக்திதேவி சிவனையும் கணபதி யையும் நினைக்க, கணபதி அந்த விக்ன யந்திரத்தைத் தூளாக்கினார். அதன் பிறகே பராசக்தியால் பண்டாசுர வதம் செய்ய முடிந்தது. இதனை லலிதா ஸஹஸ்ர நாமம்,

“காமேஸ்வர முக ஆலோக
கல்பீத கணேஸ்வரா
மஹாகணேச நிர்பின்ன
விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா’

என்று கூறுகிறது.

கணேச அவதாரமும் ஒரு விசித்ரம். பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, “யாரையும் உள்ளே விடாதே’ என்று கூறிச்சென்றாள். அப்போது சிவன் வர, காப்பா ளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண்டித்து உள்ளே சென்றார் சிவன். தேவி வெகுண்டாள்.

நிலையை உணர்ந்த சிவன் முதலில் தென்பட்ட உயிரினமான யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, ”உன்னை வணங்காமல் எவரும் எது செய்தாலும் அது விக்னம் அடையும். நீயே யாவருக்கும் தலைவன். எனவே விநாயகன்” என்றார்.

விக்னத்தை ஏற்படுத்து பவனும் அவன்; நிவாரணம் செய்பவனும் அவன்; காரிய ஜயம் தருபவனும் அவன். ஆகவேதான் ஒரு விநாயகர் துதி,

“ஸர்வ விக்னஹரம் தேவம்
ஸர்வ விக்ன விவர்ஜிதம்
ஸர்வ ஸத்தி ப்ரதாதாரம்
வந்தே அஹம் கணநாயகம்’
என்று போற்றுகிறது.

அவரது தந்தை, தாயான சிவ- பராசக்தி வணங்கு வதால் அவரது பெயர் “ஜ்யேஷ்டராஜன்’ ஆயிற்று.

ஒருசமயம் மகாவிஷ்ணு வும் கணபதியும் விளையாடி னர். அச்சமயம், கணபதி மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தை வாயில் போட் டுக் கொண்டு விட்டார். எவ்வாறு அதைத் திரும்பப் பெறுவது என்று யோசித்த மகாவிஷ்ணு, மேலும் விளையாடுவதுபோல், இரண்டு காதுகளையும் மாறித்தொட்டுக் கொண்டு, உட்கார்ந்து எழுந்தார். 12 முறை இவ்வாறு செய்யவே, கணபதி மகிழ்ந்து சிரிக்க, சக்கரம் வெளிவந்ததாம். விஷ்ணு அதைப் பெற்றுக்கொண்டார். அதுதான் தோர்பிக் கரணம்- தோப்புக் கரணம் என்று ஆயிற்று. நாம் கணபதி முன்பு அவர் மகிழ- அருள தோப்புக் கரணம் போடுகிறோம்.

மதுரை மீனாட்சி சந்நிதியை அடையுமுன் பிராகாரத்தில் ஒரு பெரிய கணபதியைப் பார்க்கலாம். முக்குறுணிப் பிள்ளையார் என்று பெயர். கோவில் கட்டும்போது “கிடைத்த’ பிள்ளையார் என்பர். சிற்பி செதுக்காத பிள்ளையார் இவர். விநாயக சதுர்த்தி நாளில் முக்குறுணி அரிசி மாவில் பெரிய கொழுக் கட்டை செய்து இவருக்கு நிவேதிப்பர்.

கணபதி இல்லாவிட்டால் நமக்கு வியாசரின் உன்னத இதிகாசமான “மகாபாரதம்’ கிடைத் திருக்குமா என்ன? வியாசர் கூற எழுதியவர் கணபதிதானே!

தம்பி முருகனுக்கு வள்ளியை மணம் முடித்து வைத்தவரும் கணபதியல்லவா!

ஆதிசங்கரர் தனது ஷண்மதத்தின் உருவ வழி பாட்டில் “காணாபத்தியம்’ என்று கணபதி வழி பாட்டை வகுத்தார். புரா ணங்கள் பல எழுதிய வியாசர், கணேச புராணம் என்று தனியாக எழுத வில்லை. காரணம் என்ன? முத்கலர் என்ற மகரிஷி, திருவெண்காட்டில் கணபதி உபாசகராக இருந்து “முத்கல புராணம் அல்லது விநாயக புராணம்’ என்னும் நூலை விரிவாக எழுதியுள்ளார். கணபதி யின் அவதார காரணம் கஜமுகாசுரன் என்கிற அசுரனை அழிப்பதற்காக. இறுதியில் கஜமுகாசுரன் எலி வாகனமாகி கணபதி யைத் தாங்கினான்.

கணபதியை எல்லா தெய்வங்களும் வணங்கினா லும் பிள்ளையார்பட்டி கணபதி கையில் சிவலிங்கம் இருக்கும். அந்த கணபதி சிவனை பூஜிக்கிறா ராம்.

கண்ணன் அர்ஜுனனுக்கு பகவத்கீதையில், “பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யாப்ரயச்சதி’ என்று கூறுகிறார். “இலையோ, பூவோ, பழமோ, நீரோ யார் ஒருவன் பக்தியுடன் அளிக்கிறானோ அதனை மகிழ்வுடன் ஏற்று வரமளிப்பேன்’ என்று சொல்கிறார். அந்த துதி கணபதிக்கும் மிகப் பொருந்தும்.

நலன்களை அருளும் நவக்கிரக விநாயகர் கோயில்
சென்னை-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, படாளம் கூட்டு ரோடு-வேடந்தாங்கல் நெடுஞ்சாலையில், மூசி வாக்கம் மின்வாரிய நிலையத்தில் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீராமானுஜ யோகவனம், படாளம் கூட்ரோடில் இருந்து அரசுப் பஸ், ஆட்டோ போன்றவைகளின் மூலம் இங்கு வர முடியும்.
ஸ்ரீராமானுஜர் தங்கி, யோக நிலையில் இருந்து வழிபட்ட காரணத்தால் இவ்விடம், “ஸ்ரீராமானுஜ யோகவனம்” எனப் பிற்காலத்தில் அழைக்கப்படலாயிற்று. இங்கு ஸ்ரீசீனிவாச பெருமாள், மதுரவல்லி தாயார், ஸ்ரீநவகிரக விநாயகர்,  ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீஆண்டாள் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.
இவையாவும் வேதாந்த ஆகம முறையில் உருவாக்கப்பட்டு, மகாசம்ப்ரோஷணம் கண்டவை. இத்தலத்தில் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான், “ஸ்ரீநவ கிரக விநாயகராக” வீற்றிருந்து, தன்னை நாடி வருகின்ற பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
மனித வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளையும், சோதனைகளையும், சாதனைகளையும் தந்து ஆட்டிப் படைப்பவை நவக்கிரகங்களே! நவக்கிரகங்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படுபவர்கள், தெய்வபலத்தால் மட்டுமே துன்பங்களிலிருந்து விடுபட முடியும். இந்த உண்மையை உணர்த்தும்  விதத்தில் ஸ்ரீநவக்கிரக விநாயகர் அருளாட்சி தருகின்றார்.
சுமார் 8 அடி உயரமுள்ள ஒரே கல்லில் இந்த விநாயகப் பெருமான் திருவுருவம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. விநாயகரின் உடலில் பல்வேறு இடங்களில் நவக்கிரகங்கள் இடம் பெற்றுள்ளன. விநாயகர் நெற்றிப் பகுதியைப் பீடமாகக் கொண்டு சூரிய பகவான் காட்சி அளிக்கிறார். விநாயகப் பெருமானின் வயிற்றுப் பகுதியில் சந்திர பகவான் வீற்றிருக்கிறார்.
கணபதியின் வலது மேல் கையில் சனி பகவான் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். வலது அபய ஹஸ்தத்தில் புதன் தரிசனம் தருகிறார். ஆனை முகத்தானின் வலது காலில் அங்காரகன் வீற்றிருக்கிறார். விநாயக பகவானின் இடது மேல் கையில் ராகு உள்ளார். கஜமுக தெய்வத்தின் இடது கீழ் கையில் சுக்ர பகவான் உள்ளார்.
நவக்கிரக விநாயகரின் தலைப்பகுதியில் குருபகவான் உள்ளார். இடது காலில் கேது பகவான் காட்சி தருகின்றார். இவ்வாறு, தன்னை வணங்குபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் விலகும் என்று உணர்த்தி, தன்னை நாடி வருகின்ற பக்தர்களுக்கு நல்லருளை வாரி வழங்குகின்ற ஞான பகவனாக “நவக்கிரக விநாயகர்” திகழ்கிறார்.
சங்கடஹர சதுர்த்தி தினங்களில் இந்த விநாயக பெருமானுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து, அருகம்புல் மாலை அணிவித்து வணங்கினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். நவக்கிரக விநாயகருக்கு பின்புறம் ஸ்ரீ யோக நரசிம்மர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு “அம்ருதபுரி வாசன்” என அழைக்கப்படுகின்ற ஸ்ரீநிவாசப்பெருமான் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருப்பதி வெங்கடேசப்பெருமாளை போன்று, அலங்காரக் கோலத்துடன் இவர் காட்சி அளிக்கிறார். இங்கு மதுரவல்லி தாயார் என அழைக்கப்படுகின்ற “அலமேலு மங்கை தாயார்” சந்நிதி தனியே உள்ளது.
ஸ்ரீநிவாசப் பெருமாள் சந்நிதிக்கு மிக அருகில் மதுரவல்லி தாயார் கருவறை இருக்கின்றது. இங்கு தமிழ் வருடத்தில் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு நடைபெறுகின்ற திருவிழாக்களில் முக்கியமானது சிரவண தீப விழா.
ஒவ்வொரு மாதமும் திருவோணம் நட்சத் திரம் அன்று, ஆலயத்தில் “சிரவண தீபம்” ஏற்றப்படுகிறது. அன்று காலை ஸ்ரீநிவாசப் பெருமாள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிரவண தீப தரிசனத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.
நடை திறக்கும் நேரம்…..
தினமும் காலை 7 மணிக்கு ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் ஆகியவற்றுடன் கோயில் நடை திறக்கப்படுகிறது. பிறகு பகல் 1 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
விநாயகர் பற்றி இன்னும் சில கதைகள் இருக்கின்றன.
முதலில் நாம் பார்த்தது ஒரு புராணத்தில் உள்ளது என்றால் “பார்கவ புராணத்தில்” வேறு விதமாய் சொல்கிறார்கள். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு மாதிரியாக விநாயகர் பற்றிக் கூறப் படுகிறது. பார்கவ புராணம் என்னும் விநாயக புராணத்தின் படி விநாயகரே முழு முதல் கடவுள். இந்த உலகை மட்டுமல்லாது மும்மூர்த்திகளையும் படைத்து அவர்களுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தொழில்களை செய்யுமாறு கட்டளை இட்டவரும் விநாயகரே ஆவார்.
ஒவ்வொரு கல்பத்திலும் இவ்வுலகம் அழிந்து மறுமுறை சிருஷ்டி ஆரம்பிக்கும் முன் அண்ட சராசரங்களிலும் உள்ள எல்லா ஜீவன்களும் விநாயகருக்குள்ளேயே ஒடுங்கும் என்று பார்கவ புராணம் சொல்லுகிறது. பிரளயத்துக்குப் பின் விநாயகர் வக்ரதுண்ட விநாயகராக அவதரித்து மும்மூர்த்திகளையும் படைத்தார். பின் அவர்களைத் தங்கள் தொழில் செய்யுமாறு கூறி மறைந்தார். இந்த பார்கவ புராணத்தின்படி ஒரு முறை என்ன நடந்தது என்றால்:பிரம்மா ஒரு சமயம் கொட்டாவி விடவே அதில் இருந்து ஓர் அரக்கன் தோன்றினான். அவன் பெயர் சிந்தூரனன் ஆகும். ஏனெனெனில் அவன் சிந்தூர வண்ணத்தில் இருந்தான். அவனுடைய செக்கச் சிவந்த நிறத்தால் பயந்து போன பிரம்மா அவன் கேட்காமலேயே அவனுக்கு சில வரங்களைத் தந்தார். சும்மாவே அரக்கன். அவனுக்கு வரம் வேறே இலவசமாய் வந்தால் கேட்கவேணுமா? மூவுலகையும் ஆட்டிப் படைத்தான்.

யாவரும் செய்வதறியாமல் திகைக்க மும்மூர்த்திகளும் கணபதியைப் பணிந்தனர். விநாயகர் உடனே தோன்றி, “கவலை வேண்டாம். நான் உமா தேவியாரின் திரு வயிற்றில் அவதரிப்பேன்.” எனக் கூறி மறைந்தார். அது போலவே கருவுற்று உமாதேவியாரின் திருவயிற்றில் , காற்று வடிவில் நுழைந்த சிந்தூரானன் குழந்தையின் தலையைத் திருகி எடுத்துக் கொண்டு போய் விட்டான். குழந்தை பிறந்தது தலையே இல்லாமல்.

அனைவரும் பதறவே கலங்காதே என்று சொன்ன சிவபெருமான் முன்பொரு சமயம் கஜமுகாசுரன் கேட்டுக் கொண்டபடி அவனுடைய தலையைத் தன் குழந்தையின் தலை இருக்கும் இடத்தில் பொருத்தினார். அன்று முதல் அந்தத் தெய்வக் குழந்தை “கஜானனன்” என்ற பெயர் பெற்றான்.

உமாதேவியாரிடம் வளர்ந்து வந்த கஜானனன் உரிய காலம் வந்ததும் சிந்தூரனனை அழிக்கப் புறப்பட்டார். சிந்தூரனனைத் தூக்கி எடுத்துத் தன் துதிக்கையால் ஓங்கி அடித்து அவன் ரத்தத்தைத் தன் உடம்பில் பூசிக் கொண்டார். செந்நிறமான விநாயகர் அன்று முதல் “சிந்தூர விநாயகர்” என்ற பெயரும் பெற்றார்.
விநாயகர் உருவரகசியம்

சரி, விநாயகர் பிறந்தாச்சு, அவர் எப்படி இருந்தார்னு பார்ப்போமா? யானை முகம், ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், ஆறு எழுத்துக்கள் உள்ளவர். விநாயகர் என்பது ஆறு எழுத்து இல்லையா? இவரை வழிபடுவோர் ஏழு பிறவிகளில் இருந்தும் விடுபட்டு, எட்டுத் திசைகளும் புகழ, ஒன்பது மணிகளும் பெற்று சம்”பத்து”க்களுடன் வாழ்வார்கள். இவருடைய திருமேனி மூன்று வகையில் ஆனது.

இடைக்குக் கீழே பூத உடம்பு, இடைக்கு மேல் கழுத்து வரை தேவ உடம்பு, தலை மிருகத் தலை, ஒரு கொம்பு ஆண் தன்மை, கொம்பில்லாத பகுதி பெண் தன்மை, யானைத் தலை அஃறிணை, தெய்வ சரீரம் உயர்திணை. இந்த மாதிரித் தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர் திணையாய், அஃறிணையாய் எல்லாமுமாய் விளங்குபவர் விநாயகர். “தத்துவ மசி” என்ற ஆறு எழுத்தின் வடிவமே விநாயகர்.

பிரணவ வடிவினரான விநாயகரின் காது, அகன்ற யானைத் தலை, வளைந்த துதிக்கை ஆகியவை “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் வடிவத்தைக் குறிக்கும். இவரது திருவடிகள் ஞான சக்தியும், க்ரியா சக்தியும் ஆகும். இவருடைய பேழை வயிற்றில் உலகெல்லாம் அடங்கும். ஐந்து கரங்களும் ஐந்து தொழிலகளைச் செய்யும்.

எழுத்தாணி பிடித்த கரம் படைப்பையும், அங்குசம் கொண்ட கை அழித்தலையும், பாசம் வைத்திருக்கும் கை மறைத்தலையும், அமுத கலசம் ஏந்திய துதிக்கை அருளையும் குறிக்கும். மூன்று கண்களோ என்றால் முறையே சூரிய, சந்திர, அக்னியாகும். இவரின் உருவ அமைப்பில் எல்லா உருவங்களும் இருப்பதாய்க் கூறுகிறது “பார்கவ புராணம்” என்னும் விநாயக புராணம். இவருடைய நாடி பிரம்மா, முகம் வி்ஷ்ணு, கண் சிவன், இடப்பாகம் சக்தி, வலப்பாகம் சூரியன் என்று அமைந்திருப்பதாய்க் கூறுகிறார்கள். அடுத்து அவரை வழிபடும் முறை பற்றிப் பார்ப்போமா?

விநாயகர் வழிபாட்டுக்கு அருகம்புல் மிகவும் உகந்தது. பொதுவாக நம் முன்னோர்கள் வழிபாட்டை நம் உடல் ஆரோக்கியத்துடன் சேர்த்தே யோசித்து நமக்குச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். நம் உடலில் வாதம்-பித்தம்- சிலேத்துமம் எனப்படும் கபம் என்று மூன்றுவிதமான தோஷங்கள் இருக்கின்றன. வாதம் நீர்த்தன்மை கொண்டது. வாதம் உள்ளவர்கள் எப்போதும் வெயிலையே விரும்புவார்கள் எனச் சொல்லப் படுவது உண்டு.

நாராயணன் நீர் மேல் இருப்பவன். அவன் எப்போதும் நீர் மேல் இருப்பதால் அவன் வழிபாட்டுக்குச் சூடு உள்ள துளசியை வைத்திருக்கிறார்கள். பரமசிவனோ என்றால் எரிக்கும் சுடுகாட்டில் வசிப்பவர். அங்கே இன்னும் சூடு உதவுமா? அவரின் வழிபாட்டுக்கு வில்வம், குளிர்ச்சியைக் கொடுக்கும். இந்த சிலேத்துமம் ஒரு இரண்டுங்கெட்டான் நிலைமை. அதற்காகத் தான் அருகம்புல். அருகம்புல் மூலிகை வைத்தியத்தில் முதன்முதல் பயன்படுத்தப் பட்டதாய்ச் சிலர் சொல்கிறார்கள். இது நம் உடலில் படிந்திருக்கும் அதிகப் படியான உப்பைக் கரைத்து வெளியேற்றி ரத்தத்தைச் சுத்தமாக்கி நீரின் அளவை மிதப் படுத்தும்.

அதனால் தான் விநாயகர் வழிபாட்டுக்கு அருகம்புல் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. இதைத் தவிர நம் தமிழ்நாட்டில் விநாயகர் பிரம்மச்சாரி என்பதால் எருக்கம் பூ மாலையை அணிவிக்கிறார்கள். அது போல வன்னி மர இலைகளாலும் விநாயகரை வழிபடலாம். வன்னி மர இலைகளும் மருத்துவ குணம் மிகுந்தது.

நச்சுத் தன்மையை முறியடிக்கும், அத்கோடு இல்லாமல சருமப் புண்களை இந்த மரத்தின் இடையே புகுந்து வரும் காற்று நீக்கும் தன்மை கொண்டது. விஷக்கடி, சொறி, சிரங்கு, அலர்ஜி போன்றவை குணமாக வன்னி மரத்தின் இலை, காய், பட்டை ஆகியவற்றை உலர்த்திப் பொடி செய்து தேனோடு கொடுப்பது உண்டு, அல்லது சொறி, சிரங்குகளில் தேங்காய் எண்ணெய் கலந்து தடவுவதும் உண்டு. இலையைச் சுத்தமான பசும்பாலில் அரைத்து உட்கொண்டால் கடும் நோய்கள் குணம் ஆகும்.

விநாயகரை வலம் வரும்போது ஒரு முறை வலம் வந்தால் போதுமானது. விநாயகரை வழிபடுவதால் ஏழரைச் சனி உள்ளவர்களுக்கு அதன் தாக்கம் குறைவாக இருக்கும். அது போல் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பதிலும் ஒரு பெரும் தத்துவம் அடங்கி இருப்பதாய்ப் பரமாச்சாரியார் அவர்கள் கூறி உள்ளார். தேங்காய்க்கு மூன்று கண்கள் உண்டு. இது ஈஸ்வரனுக்குச் சமமாகக் கருதப் படுகிறது.

ஈஸ்வரனைப் போன்ற மூன்று கண்கள் உடைய காயை விநாயகருக்கு நிவேதனம் செய்வதின் மூலம் நம்மை விட உயர்ந்த ஒன்றை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் தத்துவமும், அதனாலும், நம் மனத்தில் உள்ள ஆணவம் அகன்று மனம் நிர்மலம் ஆகவும் சிதறுகாய் போடுகிறோம். மண்டை ஓட்டைப் போலக் கெட்டியான தேங்காயை உடைத்துச் சிதற அடிக்கிறோம் அல்லவா? அதன் அர்த்தமே நம் மனதில் உள்ள ஆணவமும் அதுபோல் சிதறிப் போய்த் தேங்காயின் உள்ளே உள்ள இனிப்பான நீர்போல் இனிமை நிரவ வேண்டும் என்பதற்கும் தான்.

விநாயக வழிபாடு நம் நாட்டில் மட்டும் இல்லாமல் வடமாநிலங்களிலும் உண்டு என்று அறிந்து கொண்டிருப்பீர்கள்.

அது தவிர, பர்மாவில் “மகாபிணி” என்றும், மங்கோலியாவில் “தோட்கர்” என்றும், திபெத்தில் “சோக்ப்ராக்” என்றும், கம்போடியாவில் “பிரசகணேஷ்” என்றும், சீனாவில் “க்வான்ஷிடியாக்” என்றும், ஜப்பானில் “விநாயக் ஷா” என்றும் வணங்கப் படுகிறார்.

சயாமில் விநாயகருக்கு ஆமை வாகனமும், இந்தோனேஷியாவில் சதுர்முக கணபதி என்றும், ஜப்பானிலும், சீனாவிலும் அர்த்தநாரி (பாதி பெண், பாதி ஆண்) உருவத்திலும் விநாயக வழிபாடு நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top