ஆயிரங்கால் மண்டபம் – மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் மற்ற மண்டபங்களைவிட மிகப் பெரியது.
வாயிலின் மேல் விதானத்தில் தமிழ் வருடம் அறுபதையும் காட்டும் சக்கரம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது.
மண்டபத்தின் உள்ளே சிற்பங்கள் நிறைந்த 985 தூண்கள் உள்ளன. இத்தூண்களை எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும் ஒரே வரிசையில் காட்சி அளிப்பது வியப்பான அமைப்பாகும்.
எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் நேராக இருப்பது போன்ற தூண்களைக் கொண்டது மதுரை மீனாட்சியம்மன்ஆலயத்தின் ஆயிரங்கால் மண்டபம்.
ஓவியங்கள், சிலைகள், தூண்கள் எனக் கலைகளின் சங்கமமாகத்திகழ்கிறது. மொத்தம் 985 தூண்களே! திருநெல்வேலி,நெல்லையப்பர் ஆலயத்தின் மண்டபத்தை மாதிரியாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டது.
வீரவசந்த மண்டபத்திற்கு இடதுபுறம் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. ஆயிரங்கால் மண்டபம் இந்தக் இடத்தின் சிறப்புகளுள் ஒன்று என்று சொல்லித்தான் ஆகவேண்டும். மற்ற மண்டபத்தில் இல்லாத சிறப்பான வேலைப்பாடுகள் ஆயிரங்கால் மண்டபத்தில் காணலாம்.
சுந்தரேசுவரர் சன்னதிக்குக் கிழக்கில் பெரிய இடப்பரப்பில் பல மண்டபங்கள் உள்ளன. வீர வசந்தராயர் மண்டபம் மற்றும் ஆயிரம்கால் மண்டபம் இரண்டும் இதில் பெரியவை.
ஆயிரம்கால் மண்டபத்தில் 985 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அழகாக செதுக்கப்பட்டு, 73×76மீட்டர் கூரையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த மண்டபத்தின் அழகை நம் எண்ணங்களால் மட்டுமே விவரிக்க முடியும். சொற்களால் அல்ல. மக்கள் கூட்டம் ஒரே சமயத்தில் வழிபாடு செய்ய இத்தகைய மண்டபங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.
கற்தூணில் செதுக்கப்பட்ட ஆண் பெண் தெய்வ மற்றும் மனித உருவங்கள் திராவிடச் சிற்பக்கலையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இந்தச் சிலைகள் கருப்பு மார்பிளை ஒத்த கற்களில் செதுக்கப்பட்டு முடிந்தவரை மெருகேற்றப்பட்டுள்ளன.
தென்னிந்தியாவில் எங்கும் காணமுடியாத உணர்ச்சிகளை இந்த சிலைகளில் வடித்துள்ளனர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவற்றில் சில சிற்பங்கள் நம் மக்களின் கைவண்ணத்தால் கை, கால், மூக்கினை இழந்திருந்தாலும் அதன் சிறப்பு குறையாமல் உள்ளது.
16ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் இவ்வாறு பெரிய தூண்கள் கொண்ட மண்டபத்தைக் கட்டுவதில் ஆர்வமுற்றிருந்தனர். அதனால் கல் உடைக்கவும் பெரிய தூண்கள் தடையில்லாமல் செய்யவும் தனியாகக் கூடங்களே தொடங்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.
மண்டபத்தின் நுழைவாயிலில் புகழ் பெற்ற விசுவநாத நாயக்கரின் அமைச்சரான ஆரிய நாயக்கர் சிலை ஒன்று உள்ளது. அவரது பணிச்சிறப்புக்கு உதாரணமாக இந்த மண்டபம் உள்ளது. மீனாட்சியம்மன் கோயிலின் பழங்கால இடங்களுள் இதுவும் ஒன்று.
இந்நாளில் ஆயிரங்கால் மண்டபத்தில் கோவிலின் கலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அதில் 1200 கால தென்இந்திய கோயில் கட்டடக்கலையை விளக்கும் சிலைகள், புகைப்படங்கள், ஓவியங்களை வைத்துள்ளனர்.
உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் ஆயிரம் கால் மண்டபம் உள்ளது !
மாயா நாகரீக நகரமான மெக்சிகோ நாட்டு சிசன் இட்சாவில் ஆயிரம்கால் மண்டபம் உள்ளது! !!
விஜய நகர சாம்ராஜ்யம் முழுதும் ஆயிரம் கால் மண்டபங்கள் பட்டொளி வீசிப் பிரகாசிக்கின்றன !!!
மேலே படியுங்கள்!!
தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள உலக அதிசயங்கள் பற்றி நிறைய பேருக்குத் தெரிவதே இல்லை. லண்டனில் வாழும் எங்களுக்கு ‘இந்த அரசனின் மேஜை’ ,’அந்த அரசனின் செருப்பு’, ‘மஹாராணியின் உடை’, ‘திருமண கவுன்’ — என்றெல்லாம் காட்டிக் காசு பறிக்கிறார்கள்.
அப்படியே ஏதேனும் பார்க்கத்தக்க அதிசயம் இருந்தாலும் அதெல்லாம், வெள்ளைக்காரன்கள் கொள்ளை அடித்துக் கொண்டுவந்த கோஹினூர் வைரம், திப்புசுல்தானின் புலி, குப்தர் காலத் தங்கக் கசுகள் என்ற வகையில் வந்துவிடும்.
ஆனால் அத்தனையையும் அழகாகப் பாதுகாத்துக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துக் காட்டும் அழகே அழகு!!!! இந்த மஹா திருடர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு!!! உண்மையில் நிறையவே உண்டு!!!!!!
அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள மியூசியங் களுக்கும், பிரபுக்களுக்குச் சொந்தமான தனியார் வீடுகளுக்கும் போய்ப் பார்த்தால் தமிழ்நாட்டுத் திராவிடக் கொள்ளைக்கரர் ஆட்சியில் கடத்திவரப்பட்ட அற்புதமான சிலைகளைக் காணலாம்.
நியூயார்க் மியூசியத்தில் நான் பார்த்த ஒரு சிலை இந்திய மியூசியத்தில் அப்படியே இருக்கிறது. எது ‘ஒரிஜினல்’, எது ‘போலி’ என்பது அந்த சிலைக்குள் ஒளிந்திருக்கும் இறைவனுக்கே வெளிச்சம்!!
“கோயில் பூசை செய்தான் சிலையைக் கொண்டு விற்றல் போலும்………. ஆயிரங்களான நீதி அவை உணர்ந்த தருமன்…………………. சீச் சீ !சிறியர் செய்த செய்கை செய்தான்”………… என்ற பாரதியாரின் பாஞ்சாலி சபத பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.
“திராவிடங்களின் ஆட்சி”யில் கோவில் நகைகளில் இருந்து உண்மையான மாணிக்க, மரகத, வைரக் கற்களை எடுத்துக் கொண்டு செயற்கைக் கற்களை வைத்ததாகவும் “பெரியவர்கள்” சொல்லிக் கேள்வி. சிவன் சொத்துக் குல நாசம் என்பர். அது பலிக்கட்டும்.
எதற்கு இவ்வளவு முத்தாய்ப்பு என்கிறீர்களா? நல்ல வேளை, ஆயிரங்கால் மண்டபங்கள் முதலியன கருங்கற்காலால் ஆனதால் இந்தக் கொள்ளைக்கார மஹாபாவிகளால் ஒன்றும்செய்ய முடியவில்லை. படையெடுத்துவந்த முஸ்லீம் வெறியர்கள் சேதப்படுத்தியது போக மிச்சம் மீதி இன்னும் இருக்கிறது.
மதுரை, ஸ்ரீரங்கம், திருநெல்வேலி, சிதம்பரம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் முதலிய பல ஊர்களிலும் ஆந்திரத்தில் வாரங்கல் ஹனுமகொண்டா, கர்நாடகத்தில் மூடுபித்ரி போன்ற இடங்களிலும் ஆயிரங்கால் மண்டபங்கள் உள்ளன. பல இடங்களில் ஆயிரங்கால் மண்டபங்கள் என்று சொன்ன போதிலும் சில நூறு தூண்களையே காணமுடியும்.
மதுரையிலும் ஸ்ரீரங்கத்திலும் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரம் தூண்களைக் காண முடியும். இவை இரண்டும் உலக மஹா அதிசயங்கள். இன்று இப்படி ஒரு கட்டிடத்தை எழுப்ப பல கோடி– கோடி ரூபாய் தேவைப்படும்.
பல்லாயிரம் ஊழியர்கள் வேலை செய்யவேண்டி வரும். பெரிய பெரிய எஞ்சினீயர்கள் ஆயிரம் வரை படங்களைத் தயாரித்து ஆராய்ச்சிக் கூட்டங்கள் போட வேண்டியிருக்கும். 600 முதல் 800 ஆண்டுகளுக்கு முன் காகதீய வம்சமும் நாயக்க வம்சமும் இவைகளைக் கட்டிய காலத்தில் என்ன வசதி இருந்தது? – இன்றுள்ள ஒரு வசதியும் கிடையாது. ஆயினும் எப்படி அற்புதமாக அமைத்துவிட்டனர். எண்ணி எண்ணி இறும்பூது எய்வோம்
ஆயிரங்கால் மண்டபங்கள் ஒவ்வொன்றும் சிற்பக்கலை மியூசியங்கள். வெள்ளைகாரன் நட்டில் இவைகள் இருந்தால் ஒவ்வொரு தூணுக்கும் கண்ணாடிப் பெட்டி வைத்து, ஆயிரம் ஆராய்ச்சிப் புத்தகம் வெளியிட்டு, ஒவ்வொன்றையும் படம் பிடித்து, கீ செயின் (சாவிக்கொத்து), பட அட்டைகள் (வியூ கார்ட்ஸ்), காந்த அட்டைகள் (மாக்னெட்) என்று விற்றுக் கோடி கோடியாக சம்பாதித்திருப்பான்.
நாமும் பயன்படுத்தாமலா இருந்தோம்? புளியோதரை சாப்பிட்டுவிட்டு அதில் கையைத் துடைத்தோம். நம்முடைய பெயர்கள் காலாகாலத்துக்கும் நீடிக்க அதில் நமது பெயர்களை கூரான கற்கள் ,உலோகக் கம்பிகள், சாவிக்கொத்துகள் வைத்து எழுதினோம். கடவுள் நம்மை மன்னிப்பாராக.
மதுரை ஆயிரம் கால் மண்டபத்தில் சிறு வயதில் ஓடிப் பிடித்து விளையாடியது என் நினைவுக்கு வருகிறது. இப்போது அங்கே ஒரு மியூசியம் வைத்துப் “பாதுகாக்கிறார்கள்”. அற்புதமான சிலைகள் இருக்கின்றன.
இதை அமைத்த அரியநாத முதலியார் (1569) பெயர், ‘கின்னஸ் சாதனைப் புத்தக’த்தில் இடம்பெறவேண்டும். ஏன் தெரியுமா? உலகிலேயே நீண்ட காலம் அமைச்சர் பதவி வகித்தவர் அவர்தான். 71 ஆண்டுகளுக்கு நான்கு நாயக்க மன்னர்களுக்கு தளபதியாக-மந்திரியாக (கி.பி.1529—1600) இருந்தவர்! மண்டப முகப்பில் அவர் குதிரையில் சவாரி செய்கிறார்.
இந்த மண்டபத்தில் சுமார் ஆறு அடி உயரம் உடைய 26 சிற்பங்கள் இருக்கின்றன. குறவன் – குறத்தி, ரதி மன்மதன், அர்ஜுனன், பாண்டவ சகோதரர்கள், அரிச்சந்திரன் சந்திரமதி – இன்னும் எத்தனையோ!! குறவன் குறத்தி ஒரு அற்புதமான கலைப் படைப்பு.
குறத்திக்கு மூன்று குழந்தைகள்:
ஒன்று முதுகில் , மற்றொன்று கூடைக்குள், இன்னொன்று பால் குடிக்க நெஞ்சில்! குறவன் – அவனுக்கே உரித்தான அத்தனை நகைகளையும் அணிந்து சர்வ ஆபரண பூஷணனாக விளங்குகிறான். மண்டபத்துக்குள் உள்ள 22 தூண்கள் வெவ்வேறு இன்னிசை ஒலி எழுப்புகின்றன.
மதுரையில் 985 தூண்களே இருக்கின்றன. மீதி 15 தூண்கள் இருக்குமிடத்தில் சபாபதி கோவில் இருக்கிறது. ஆக மொத்தம் ஆயிரம்! இதன் நீளxஅகலம்= 76 மீட்டர் x 72 மீட்டர். மண்டப முகப்பில் விதானத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் உள்ளது.
ஸ்ரீரங்கம் ஆயிரம் கால் மண்டபம், மதுரையை விட அளவில் பெரியது. ஆயிரங்கால் மண்டப நீள x அகலம் = 152 x 48 மீட்டர். அங்கே 953 தூண்கள் உள்ளன. மதுரையைப் போலவே ஒவ்வொன்றிலும் அழகிய சிற்பங்கள். இந்த ஆயிரம் கால் மண்டபம் பற்றியே தனி ஆராய்ச்சிப் புத்தகம் எழுதலாம். பொருள் வசதி இருந்தால் நானே அதைச் செய்வேன்!
இதுவும் நாயக்கர் காலத்தில் எழுந்ததே. முஸ்லீம் படையெடுப்பில் வீழ்ந்த எல்லாவற்றையும் மீண்டும் புனர் நிர்மாணம் செய்து உலகப் புகழ் பெறும்படி செய்தவர்கள் விஜய நகர சாம்ராஜ்யமும் அவர்கள் வழிவந்த நாயக்க வம்சமும் ஆகும்.. சுந்தரத் தெலுங்கினில் பாட்டு அமைத்து அவர் புகழ் பாடுவோம்! தலை வனங்குவோம்!
வாரங்கல் ஆயிரம் கால் மண்டப கோவில்
தெலுங்கானாவில் வாரங்கல் அருகே ஹனுமகொண்டாவில் ஒரு கோவில் இருக்கிறது .ஆனால் இந்தச் சிவன் கோவிலில் சுமார் 300 தூண்களே இருப்பதாக ஆய்வாளர் கூறுவர். ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது போல தூண்கள் காட்சி தருகின்றன.
இது மற்ற எல்லாவற்றையும் விட மிகப் பழையது. தமிழ்நாட்டைத்தவிர மற்ற இடங்களில் உள்ளவை ஆயிரம் தூண்கள் உடையவை அல்ல. நிறைய தூண்கள் இருந்தால் ஆயிரம் என்று சொல்லி விடுவர். தசரதனுக்கு நிறைய பெண்டாட்டிகள் என்பதால் 60,000 பேர் என்று நாம் சொல்லுவது போல! இது ருத்ர தேவன் (கி.பி1163) காலத்தில் உருவாக்கப்பட்டது.
கர்நாடகத்தில் மூடபித்ரி என்னும் இடத்தில் ஜைன கோவில் ஒன்றிலும் “ஆயிரம் கால்” மண்டபம் உள்ளது.
ராமாயணத்தில் ஆயிரம் கால் மண்டபம்:
சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலத்தில் ராவணனுக்கு தெய்வய் சிற்பியான மயன் நீண்ட தூன்கள் ஆயிரம் கொண்ட அழகிய மண்டபத்தை உருவாக்கினான். பிரம்மா கூட அதைப் பார்த்து வெட்கம் அடையும் படி அது அமைக்கப்பட்டது.
வந்தான் நெடு வான் உறை தச்சன் மனத்து உணர்ந்தான்
சிந்தாவினை அன்றியும் கைவினைஅயாலும் செய்தான்
அம்தாம நெடுந்தறி ஆயிரத்தால் அமைத்த
சந்து ஆர்மணி மண்டபம் தாமரையோனும் நாண.
யார் சொன்ன ‘ஐடியா’?
காகதீய, நாயக்கர்களுக்கு யார் இந்த எண்ணத்தைத் தோற்றுவித்தனர்? எப்படி அவரகளுக்கு 1000 தூண்களுடன் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது? வேதத்திலேயே 1000 கால் மண்டபம் பற்றிய கருத்து எழுந்துள்ளது.
10, 100, 1000, லட்சம், கோடி என்ற தசாம்ச ‘டெசிமல்’ முறையையும் 1.2,3…. 10 என்ற எண்களையும் உலக மக்களுக்குக் கற்பித்தது இந்துக்களே. இதை நாம் உலகிற்குக் கற்பித்திராவிடில் கம்யூட்டர்களோ ராக்கெட்டுகளோ உருவாகி இருக்காது! இதற்கு வேதம் முதல் லீலாவதி அல்ஜீப்ரா பற்றி ஸ்லோகம் எழுதிய காலம் வரை ஆயிரக் கணக்கான குறிப்புகள் உண்டு.
ரிக்வேதத்தில் மித்ரன் – வருணன் மேலான துதியில் (5-62-6) ஆயிரம் கால் உடைய பரப்பு (பகுதி /பிரதேசம்) பற்றிய பாடல் வருகிறது. இது போன்ற துதிகளே நம் சிற்பிகளை ஊக்குவித்தது என்றால் மிகையாகாது.