விக்கிரமாதித்தன் கதை
கடுமையான முயற்சி
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான்.
பின்னர் அவன் கீழேஇறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! இரவு, பகல் பாராமல் இந்த மயானத்தில் நீ இத்தனை கடுமையான முயற்சி செய்வது யாருக்காக?
உன்னுடைய ஏதாவது லட்சியம் நிறைவேறுவதற்கா, அல்லது வேறு யாருக்காகவோ செய்கிறாயா? கிருபானந்தா என்ற வஞ்சக யோகி ஒருமுறை மூவரை சிரமப்படச் செய்தான்.அவன் கதையைக் கூறுகிறேன், கேள்!” என்றது. ஒரு கிராமத்தில் ராமன், பீமன், சோமன் என்று மூன்று வாலிபர்கள் நண்பர்களாக இருந்தனர். ராமன் கல்வியறிவு உள்ளவன்! பீமன் மல்யுத்தத்தில் கெட்டிக்காரன்.
சோமன் தண்ணீரில் மூழ்கிப் பல வித்தைகளை செய்யக் கூடியவன்! மூவரும் தங்களுடைய பலவித வித்தைகளின் திறமையினால் அந்த கிராமத்து மக்களின் ஆதரவுடன் சொற்ப வருமானம் பெற்றுக் காலம் கழித்தனர். ஒரு சமயம் கிராமத்தில் பஞ்சம் ஏற்பட்டதால், அவர்கள் வேலை தேடி ஸ்ரீநகரை அடைந்தனர்.
ஸ்ரீநகரில் ஈஸ்வரன் என்ற ஜமீன்தார் வசித்து வந்தார். ஒரு சமயம் அவர் வீட்டிற்கு கிருபானந்தா என்ற யோகி வருகை தந்தார். ஜமீன்தாரின் உபசாரங்களினால் திருப்தியடைந்த யோகி “உன் மருமகள் விரைவிலேயே ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பாள்” என்று வாழ்த்தினார். உடனே, ஈஸ்வரனின் மனைவி, “சுவாமி! எங்களுக்குக் குழந்தையே இல்லை. அப்படியிருக்க பேரன் எப்படிப் பிறப்பான்?” என்று கேட்டாள்.
சற்று நேரம் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்த யோகி, “அம்மா! அது தெய்வ வாக்கு. நீங்கள் யாராவது ஒரு வயது வந்த வாலிபனை தத்து எடுத்து அவனுக்குத் திருமணம் செய்து வையுங்கள். அவனுக்கு விரைவிலேயே குழந்தை பிறக்கும்!” என்றார் யோகி. சரியாக அந்த சமயத்தில் ராமன், பீமன், சோமன் ஆகிய மூவரும் ஈஸ்வரன் வீட்டுக் கதவைத் தட்டினார்கள்.
ஈஸ்வரன் கதவைத் திறந்ததும், அந்த மூவரும் தங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கு முன்பாகவே, கிருபானந்த யோகி அவர்களைப் பெயரிட்டு அழைத்து அவர்கள் அங்கு வந்திருப்பதன் நோக்கத்தையும் கூறினார். அதை அவர்கள் மூவரும் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருக்க யோகி தொடர்ந்து, “இந்த ஜமீன்தாருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.
அவருடைய மனைவி கர்ப்பமாக தசரத மலையில் உள்ள வசிஷ்ட மரத்திலிருந்து பழம் கொண்டு வந்து கொடுங்கள். அதை சாப்பிட்டால் அவள் தாயாவாள்! ஆனால் தசரத மலையைப் பற்றிய ஒரு சிறிய தகவல் மட்டும் என்னால் தரமுடியும். அது மேற்குத் திசையில் இல்லை.
அதனால் மற்ற மூன்று திசைகளிலும் ஆளுக்கு ஒரு திசையாகச் சென்று தேடுங்கள். இரண்டு மாதக்காலத்திற்குள் யார் முதலில் அந்த வசிஷ்டமரத்திலிருந்து பழம் கொண்டு வருகிறானோ, அவனுக்கு ஜமீன்தார் தனது சொத்தில் பாதியையேக் கொடுத்து விடுவார். மூன்று மாதக் காலத்திற்குள் ஒருவராலும் கொண்டு வர முடியவில்லையெனில், மூவரும் திரும்பி வந்து விடுங்கள்.
மூவரில் யார் மிகவும் கடுமையாக முயற்சி செய்தானோ அல்லது கஷ்டமான வேலை செய்தானோ, அவனை ஜமீன்தார் தனது சுவிகாரப் புத்திரனாகத் தத்து எடுத்துக் கொள்வார்” என்றார். அவர்கள் உடனே யோகியை விழுந்து வணங்கிவிட்டு அங்கிருந்துப் புறப்பட்டுச் சென்றனர். ராமன் வடக்குத் திசையில் சென்றான். போகுமிடமெல்லாம் தசரத மலையைப் பற்றி விசாரித்துக் கொண்டே சென்றான்.
ஆனால் யாரும் சரியாக பதில் சொல்லவில்லை. வழியில் ஒரு கிராமத்தில் கோவிந்தன் என்ற வியாபாரி தனக்கு அந்த மலையைப் பற்றித் தெரியும் என்றான். உடனே ஆவலுடன் ராமன் அவனை விசாரிக்க, அவன், “என் வீட்டில் ஆறு வாரங்கள் எடுபிடி வேலை செய்! நீ நன்றாக வேலை செய்பவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பதாகத் தெரிந்தால், பிறகு நான் அந்த மலையைப் பற்றி விவரம் கூறுவேன்!” என்றான்.
உடனே, ராமன் வியாபாரியின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தான். நன்கு கல்வி கற்றிருந்த அவனை, அந்த வியாபாரி வேலைகளில் ஈடுபடுத்தினான். தனது தகுதியையும், செய்யும் வேலையையும் நினைத்து ராமன் தினமும் மனம் வருந்தினான். இருந்தாலும் தசரத மலையைப் பற்றிய விவரத்தை அறிய வேண்டும் என்பதற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டான்.
ஆறு வாரங்கள் வேலை செய்து முடித்தப்பின், வியாபாரியிடம் தசரத மலையைப் பற்றி ராமன் கேட்டதும், “நீ உழைப்பாளி என்பதில் சந்தேகம்இல்லை. ஆனால் மாடு போல் உழைத்த உன்னை எப்படி புத்திசாலி என்று கூறுவது? அதனால் உனக்கு சொல்ல மாட்டேன்” என்றான் வியாபாரி.
காலக்கெடுவில் பாதி முடிந்து விட்டதை அலைவதில் பயனில்லை என்று உணர்ந்த அவன் ஸ்ரீநகர் திரும்பத் தீர்மானித்தான். மூவரில் இரண்டாமவன் ஆன பீமன் தெற்குத் திசையை நோக்கிச் சென்றான். விசித்திரபுரி என்ற கிராமத்தில் அவன் தன் மல்யுத்தத் திறமையைக் காட்டியபோது, அந்த கிராமத்து ஆட்களில் ஒருவனான சூலபாணி “தம்பி! உன்னைப் போன்ற ஓர் ஆள் நான் பல நாள்களாய்த் தேடிக் கொண்டிருந்தேன்.
நான் மலை ஏறுவதில் விருப்பம் உள்ளவன்! அஞ்சனமலை என்று ஒன்று அருகில் உள்ளது. அதன்மீது ஏறிப்பார்க்க எனக்கு ஆசை! ஆனால் உன்னைப் போன்ற ஓர் ஆள் என்னுடன் வந்தால் தைரியமாகச் செல்வேன். யார் கண்டது? நீ தேடும் தசரத மலைகூட அங்கிருக்கலாம்!” என்றான்.
உடனே, பீமன் உற்சாகத்துடன் சூலபாணியோடு கிளம்பினான். அந்த மலைப் பிரதேசத்தில் ஏற்பட்ட பல இடையூறுகளை பீமன் தனது புஜபலத்தினாலும், மல்யுத்தத் திறமையினாலும் அவனுக்கு ஏற்பட்ட இடையூறுகளையும் வெற்றிகரமாக சமாளித்தான். அதற்குள் ஆறு வாரங்கள் ஆகிவிடவே, பீமன் ஸ்ரீநகருக்கு வந்தான். மூன்றாமவன் சோமன் கிழக்குத் திசையை நோக்கிச் சென்றான்.
செல்லும் இடமெங்கும் தசரத மலையைப் பற்றி விசாரித்தும் அவனுக்குத் தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஒருநாள், முல்லையாற்றங்கரையில் அமைந்திருந்த மல்லிகாபுரி கிராமத்தில் ஆடிப்பெருக்கு விழாவில் கலந்து கொண்ட சோமன், ஆற்றில் குதித்து நீச்சலடித்துப் பல வித்தைகளைக் காட்டி அங்கிருந்தவர்களை பிரமிக்க வைத்தான். அங்கு இருந்தவர்களில் மேகநாதன் என்பவன், “தம்பி! முல்லையாறு கடலில் கலக்கும் இடத்தில், கடலில் மகரத்தீவு என்று ஒரு மிக அழகான தீவு உள்ளது.
அங்கு செல்லவேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை! ஆனால் சங்கமப் பிரதேசத்தில் ஏராளமான முதலைகள் இருப்பதால், யாரும் என்னுடன் வரத்தயாராக இல்லை. நீ வருகிறாயா? ஒருக்கால், மகரத்தீவின் அருகிலே நீ தேடும் தசரத மலை இருக்கலாம்!” என்றான். அது கேட்ட சோமன் உற்சாகத்துடன் மேகநாதனோடுப் புறப்பட்டான்.
இரண்டு நாள்கள் முல்லையாற்றில் மேகநாதனுடன் படகில் பயணம் செய்த பிறகு, ஆறு கடலில் சேருமிடம் வந்தது. திடீரென ஏராளமான முதலைகள் அவ்விருவரையும் சூழ்ந்து கொண்டுத் தாக்க ஆரம்பித்தன. சோமன் அத்தனை முதலைகளையும் படகோட்டும் துடுப்பினால் அடித்துப் படுகாயப் படுத்தினான். முதலைகள் இடமிருந்துத் தப்பி, இருவரும் மகரத்தீவை அடைந்தனர்.
அந்தத்தீவில் வாழ்ந்தப் பழங்குடியினர் இருவரையும் சிறைப் பிடித்துத் தங்கள் தலைவன் முன் நிறுத்தினர். பழங்குடியினத்தினரின் தலைவன் அவர்கள் இருவரையும் நோக்கி, “மகர தேவி எங்கள் குலதேவதை! அவளுக்கு நாங்கள் நரபலி கொடுப்பது வழக்கம்! உங்களைப் போல் பயணிகளைத்தான் நாங்கள் பிடித்து வந்து பலியிடுவோம்! இங்கு ஒரு முதலைக்குளம் உள்ளது. உங்கள் இருவரையும் அதில் வீசி எறிவோம்! மகரதேவி முதலையின் உருவில் வந்து உங்களைக் கடித்து உண்ணுவாள்!” என்றான்.
அதைக்கேட்டு, இருவருக்கும் இதயமே நின்று விடும் போலிருந்தது. ஆனால் சற்று நேரத்தில் சமாளித்துக் கொண்ட சோமன், “தலைவா! முதலில் என்னைக் குளத்தில் அனுப்பு! அங்குள்ள முதலைகளிடமிருந்து நான் தப்பி விட்டால், எங்களை எங்களை விட்டுவிடு!” என்றான். அதற்குத் தலைவனும் சம்மதித்தான்.
உடனே, சோமன் முதலைக் குளத்தில் வீசி எறியப் பட்டான். அங்கு பல முதலைகள் அவனைக் கடித்துத் தின்ன முயன்றும், சோமன் அவற்றுக்கு மிக சாமர்த்தியமாகப் போக்குக் காட்டி மின்னலென நீந்திக் கரைக்கு வந்துவிட்டான். தலைவனும் மகரதேவி அவர்களை பலியாக விரும்பவில்லை என்று நம்பி விட்டுவிட, இருவரும் மல்லிகாபுரி திரும்பினர். அங்கிருந்து சோமன் ஸ்ரீநகர் திரும்பினான்.
ஆக, தசரத மலையைக் கண்டு பிடிக்க முடியாமல், மூவரும் ஸ்ரீநகர் திரும்பினர். நடந்ததை எல்லாம் கேட்ட பின்னர் யோகி, “முன்னமே நான் சொன்னபடி, தசரத மலையைக் கண்டு பிடிக்க மிகக் கடுமையாக முயற்சிசெய்தவனை, ஜமீன்தார் தத்து எடுத்துக் கொள்வார் என்று சொல்லி இருந்தேன்.
அதன்படி, உங்களில் ராமன்தான் மிகவும் கஷ்டப்பட்டவன்! ஆகவே, அவனையே தத்து எடுத்துக் கொள்ள ஜமீன்தார் சிபாரிசு செய்கிறேன்!” என்றார். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! தசரத மலையைக் கண்டு பிடிக்க பீமனும், சோமனும் தான் மிகக் கடினமாகப் பாடுபட்டார்கள். உயிருக்கே அபாயம் விளைவிக்கக் கூடிய சாதனைகளைப் புரிந்தார்கள். அப்படியிருக்க, கேவலம் எடுபிடி வேலை செய்த ராமனைப் போய் எவ்வாறு யோகி தேர்ந்தெடுத்தார்? என் சந்தேகத்திற்கு பதில் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்!” என்றது.
அதற்கு விக்கிரமன், “பீமன், சோமன் இருவரும் உண்மையாகவே பாடுபட்டார்கள் என்றாலும், அவர்கள் செய்தது அவர்களுடைய திறமைக்குப் பொருத்தமான செயல்களே! அபாயகரமான சாதனைகளை அவர்கள் உற்சாகத்துடன் செய்தார்கள். ஒருவன் தனது மனத்திற்குப் பிடித்த வேலையை செய்யும்போது சிரமம் தெரிவதில்லை.
ஆனால் ராமனின் நிலை வேறு! நன்கு படித்திருந்த அவனை ஒரு கொத்தடிமை போல் ஈனமான வேலைகளைச் செய்யச் சொன்னான் அந்த வியாபாரி! அவனுடைய மனத்திற்குப் பிடிக்காத, வேலையை அவனுக்கு செய்ய நேரிட்டது. எதனால்? தசரத மலையைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தினால்தான்! மூவரின் நோக்கம் ஒன்றானாலும், அவர்களுக்கு செய்ய நேரிட்ட முயற்சிகள் வேறுபட்டவை!
ஆகவே, மூவரில் ராமன்தான் அதிக சிரமப்பட்டான் என்று யோகி தேர்வு செய்தது சரியே!” என்றான். விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, அவன் சுமந்திருந்த வேதாளம் தான் புகுந்திருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.