Home » சிறுகதைகள் » பெண்ணை மணக்க தகுதி!!!
பெண்ணை மணக்க தகுதி!!!

பெண்ணை மணக்க தகுதி!!!

விக்கிரமாதித்தன் கதை

பெண்ணை மணக்க யாருக்கு தகுதி?

விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு நடக்கத் தொடங்கினான்.

வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும் ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது.

விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்!

ஒரு ஊரில் ஒரு குடும்பத்தைச் சார்ந்த நான்கு சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வெளியூர் சென்று நல்ல வித்தை கற்று அதன்மூலம் திரவியம் சம்பாதிக்க வேண்டும். பிறகு ஓராண்டு கழித்து எல்லோரும் ஓரிடத்தில் சந்திக்க வேண்டும் என்று தீர்மானித்து பிறகு பிரிந்து சென்றனர். ஒரு வருஷம் கடந்தது. அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடினர்.

மூத்தவன் “நான் ஒரு நூதன வித்தையை கற்றுள்ளேன். எந்த ஒரு பொருளையும் அதை ஒரு மனித வடிவத்திற்கு என்னால் மாற்ற முடியும்” என்றான். இரண்டாமவன் “இது ஆச்சர்யமாக இருக்கிறது. நான் கற்ற வித்தை அப்பேர்ப்பட்ட மனித உருவத்திற்கு உயிர் கொடுத்து அதை அசைக்க வைக்க முடியும்” .

மூன்றாமவன் “அதைவிட ஆச்சர்யமானது. அப்படி ஒரு மனிதப் பிறவியை என்னுடைய திறமையால் பேச வைக்க முடியும்” என்றான். கடைசியாக நாலாமவன்” நீங்கள் கற்றுக் கொண்ட வித்தைபோல் எனக்கு ஏதும் தெரியாது. நான் நிறைய பொருள் சம்பாதித்திருக்கிறேன். உங்கள் திறமையால் தோன்றும் ஒரு மனித பிறவிக்கு என்னால் போதிய வசதிகள் உணவு, உடை, வீடு கொடுத்துக் காப்பாற்ற முடியும் என்றான்.

இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது மூத்தவன் அருகிலிருந்த ஒரு மரத்தின் கிளையை முறித்து, தன்னுடைய திறமையால் அதை ஒரு பெண் உருவத்திற்கு மாற்றி விட்டான். மற்ற மூவரும் இதைக்கண்டு அதிசயித்தனர். அப்போது இரண்டாமவன் அதன் மேல் மந்தரம் ஜபித்து ஜலம் தெளித்தான் அந்த பெண் உருவத்திற்கு உயிர் கொடுத்தான்.

அந்த அழகான பெண் உருவம் உயிர் பெற்றதனால் அசைய ஆரம்பித்தது. இதைக்கண்ட மூன்றாமவன் “இப்போது என்னுடைய திறமையால் அவளைப் பேச வைக்கிறேன்” என்று அவளுடைய காதில் ஒரு மந்த்ரத்தை ஓதினான்.

அவள் இனிய குரலில் பேசியதும் அந்த மூவரும் மிகவும் குதூகலமடைந்தனர். அப்போதே அந்த மூவரிடையே சண்டை தொடங்கிவிட்டது. அந்தப் பெண்ணை கைப்பிடிப்பது யார் என்பது பற்றி விவாதம்.

மூத்தவன் தான் மனித உருவம் கொடுத்ததால் அவள் தனக்கே உரியவள் என்று வாதிட்டான். இரண்டாமவன் தான் அவளுக்கு உயிர் கொடுத்தால் அவள் அவனுக்கே உரியவள் என்றான். மூன்றாமவன் அவளை பேச வைத்ததால் அவள் அவனுக்குத் தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடினான்.

கடைசியாக நாலாமவன் “நீங்கள் கற்றுக் கொண்ட வித்தை போல் எனக்கு ஏதும் தெரியாது. நான் நிறைய பொருள் சம்பாதித்திருக்கிறேன் உங்கள் திறமையால் தோன்றும் மனித பிறவிக்கு என்னால் திருப்தியாக வசதிகளுடன் வாழ்வு கொடுக்க முடியும்.ஆதலால் அவளை மணந்து வாழ்வதற்கு நான் தான் தகுதி வாய்ந்தவன் என்ற கூறினான்.” இவ்வாறு அந்த கதையை கூறிவிட்டு அந்த வேதாளம் மன்னன் விக்ரமாதித்யனிடம் “இந்த நான்கு பேரில் அந்தப் பெண்ணை மணக்க யாருக்கு தகுதி உண்டு? சரியான விடையை சொல்” என்றது.

அதற்கு மன்னன், “முதல் மூன்று பேர்களும் அவளுக்கு உருவம், உயிர், பேசும் திறன் கொடுத்ததால் அவர்கள் தந்தை போல் ஆகின்றனர். ஆதலால் அவர்கள் அவளை மணக்க தகுதியற்றவர்கள். நாலாவது சகோதரன் அவளுக்கு வாழ்வளிப்பதற்கு போதுமான செல்வம் இருப்பதால் அவன் தான் அவளை மணம் புரிய தகுதி உள்ளவன்” என்றான்.

மன்னன் மௌனம் காக்கத் தவறி வேதாளத்திற்கு பதில் கூறியதால் அந்த வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு மீண்டும் மரத்திலேறிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top