Home » சிறுகதைகள் » கடவுளையும் கட்டலாம்!

கடவுளையும் கட்டலாம்!

எதை வேண்டுமானாலும் உன்னால் சாதிக்க முடியுமா?’ என்று யாராவது உங்களிடம் கேட்டால், “முடியும்’ என்பது மட்டுமே உங்கள் பதிலாக இருக்கட்டும். “முடியாது’ என்ற வார்த்தையை அகராதியை விட்டு தூக்கி எறிந்து விடுங்கள். இதோ! முடியும் என்பதற்கு சாட்சி கல்வியறிவே இல்லாத ஒரு வேடன்.

ஆதிசங்கரரின் சீடர் பத்மபாதர். இவர் சங்கரரின் சீடராவதற்கு முன், எப்படியாவது விஷ்ணுவின் நரசிம்ம வடிவத்தை நேரில் கண்டு விட வேண்டும் என நினைத்து காட்டில் தவமிருந்தார். ஒருநாள் ஒரு வேடன் வந்தான்.

அவன் பத்மபாதரிடம், “”சாமி! எதுக்கு இங்கே வந்து கண்ணை பொத்திகிட்டு தூங்குதே! உனக்கு வீடு வாசல் இல்லையா?” என்றான்.

“”போடா அபிஷ்டு! நான் தியானத்தில் இருக்கிறேன்,”.

“”அதெல்லாம் எனக்கு தெரியாது சாமி! எதுக்காக கண்ணை மூடி இருந்தே! சொல்லு!” என்றான்.

 

“”நான் நரசிம்மத்தை எண்ணி தவமிருக்கிறேன்,”.

 

“”நரசிம்மமா? அப்படின்னா என்ன!”

 

 

“”சிங்க முகம், மனித உடல் கொண்டது அது”.

“”அப்படி ஒரு மிருகத்தை காட்டில் நான் பார்த்ததே கிடையாதே! சரி… நீ எங்கிட்ட சொல்லிட்டே இல்லே! அது என் கண்ணில் படாமலா போயிடும்! இன்று சாயங்காலத்துக்குள் அதை புடிச்சுட்டு வந்துடுறேன்,” என்றவனை பரிதாபமாக பார்த்தார் பத்மபாதர். “சரியான ஞானசூன்யம்’ என்று எண்ணிக்கொண்டார்.

 

வேடனின் எண்ணமெல்லாம் நரசிம்மத்தின் மேல் இருந்தது. அவன் காட்டில் கடுமையாக அலைந்தான். இதுவரை அவன் நுழையாத அடர்ந்த பகுதிகளில் எல்லாம் புகுந்தான். மான், முயல் என்று எத்தனையோ ஓடின. உணவைப்பற்றி அவன் கவலைப்படவே இல்லை. தாகத்தையும் பொருட்படுத்தவில்லை. மாலையாகி விட்டது.

 

“”ஐயோ! அந்த சாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போயிற்றே! வாக்கை காப்பாற்றாதவன் பூமியில் வாழ தகுதியில்லாதவன். என் குலதெய்வமே! முருகா! அந்த மிருகத்தை என் கண் முன்னால் காட்டப்பா!” என்று உளமுருக வணங்கினான். பயனில்லை. நரசிம்மம் கண்ணில் படவில்லை.

 

இனியும் வாழ்வதில் அர்த்தமில்லை என்று உயரமான பாறை ஒன்றில் ஏறி, குதித்து உயிர்விட தயாரானான். அவனது கடமை உணர்வு கண்டு அந்த நாராயணனே கலங்கி விட்டார். நரசிம்ம வடிவில் அவன் முன்னால் வந்தார்.

 

“”ஆகா! மாட்டிகிட்டியா!” என்ற வேடன், அவரை காட்டு கொடிகளைக் கொண்டு கட்டினான். வேதாந்திகளுக்கும், தபஸ்விகளுக்கும் கட்டுப்படாத அந்த நாயகன் அந்த வேடனின் கட்டுக்கு பணிந்து நின்றான்.

நரசிம்மத்தை இழுத்துக்கொண்டு பத்மபாதர் முன்னால் வந்தான்.

 

“”சாமி! பாருமையா! இதுதானே நீர் கேட்ட நரசிம்மம்”.
பத்மபாதரின் கண்ணுக்கு நரசிம்மர் தெரியவில்லை. வேடனின் கையிலிருந்த காட்டுக்கொடிகள் தான் தெரிந்தது.

 

“”அடேய்! அவன் என் அரிய தவத்திற்கே வர மறுக்கிறான். உன்னிடமா சிக்குவான்,” என்றபடி ஏளனமாய் சிரித்தார்.

அப்போது அவர் காதில் குரல் கேட்டது.

“”பத்மபாதா! வேடன் என்னை அடைந்தே தீர வேண்டுமென ஒரே குறியுடன் அலைந்தான். என்னைக் காணாமல் உயிரையும் விட துணிந்தான். நீயோ, அலைபாயும் மனதுடன் நான் வருவேனோ மாட்டேனோ என்ற சந்தேகத்துடன் தவமிருந்தாய். உன் கண்ணுக்கு எப்படி தெரிவேன்!” என்றவர் மறைந்து விட்டார்.

 

ஒரு வேடனின் பக்திக்கு கட்டுப்பட்ட நரசிம்மன், தனக்கு காட்சியளிக்காமல் போனது பற்றி அவர் வெட்கப்பட்டார். பின், ஆதிசங்கரரை சந்தித்து அவரது சீடரான பிறகே ஞானம் அடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top