தோல்வியை வெல்லும் தியானம்:-
தோல்வி என்று ஒரு நிகழ்ச்சி நடந்துவிட்டால் மனிதர்களின் மனம் அந்த தோல்வியில் இருந்து சாமான்யமாக வெளி வராது.
காரணம் உங்களுடைய ஆழ்மனது தான்.
உங்களுடைய நடத்தைகள் அனைத்திற்கும் உங்களுடைய ஆழ்மனதுதான் காரணம். நீங்கள் ஒரு செயலை தவறு என்று நினைத்தீர்கள் என்றால் அந்த நினைவு அப்படியே உங்கள் ஆழ்மனதிற்கு எடுத்து செல்லப்பட்டு நீங்கள் செய்யும் செயல் தவறு என்று பதியப்படுகிறது.
பிறகு அந்த செயலை சரி என்று யாராவது சொன்னாலும் உங்களது ஆழ்மனது இல்லை அந்த செயல் தவறானது என்று ஞாபகபடுத்தும். உங்களது செயலும் உங்கள் ஆழ்மனது என்ன சொல்கிறதோ அதன் பிரகாரம்தான் நடந்து கொள்வீர்கள்.
இதேபோன்றுதான் ஒரு நல்ல மனிதரை நீங்கள் கெட்டவர் என்று முடிவு செய்து விட்டீர்கள் என்றால் அந்த சிந்தனை அப்படியே உங்கள் ஆழ்மனதினில் பதிந்துவிடும். அதன் பின்பு யார் சொன்னாலும் உங்கள் எண்ணத்தை மாற்றி கொள்ளமாடீர்கள்.
எனவே ஒரு மனிதனுடைய சிந்தனை, செயல்கள் அனைத்தும் அவன் ஆழ்மனதினில் பதியப்பட்டு, அந்த ஆழ்மனதின் உந்துதலினால்தான் அவனுடைய தொழில், வேலை, குடும்பம் போன்றவற்றில் பிரதிபலிக்கும்.
இதுகுறித்து அந்த காலத்தில் வெளிவந்த ஒரு திரைப்பட பாடல்.
“உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி”
அதனால்தான் “எண்ணம் போல் வாழ்வு” என்று ஒரு பல மொழி உண்டு.
நல்லவற்றை பற்றி நினைக்கும்போது அந்த நல்லவைகள் உங்கள் ஆழ்மனதினின் அடித்தளத்தில் பதியப்பட்டு உங்களுடைய பேச்சு, செயல்கள், சிந்தனைகளில் பிரதிபலித்து உங்களுக்கு நன்மையை தரும்.
அதேபோன்று கெட்டவைகளை நினைக்கும்போது அவை அப்படியே உங்கள் ஆழ்மனதினில் பதியப்பட்டு உங்களுடைய பேச்சு, செயல்கள், சிந்தனைகளில் பிரதிபலித்து உங்களுக்கு கெட்டவைகளை தரும்.
மனிதனின் ஆழ்மனது என்பது ஒரு ஒலி நாடாவை போன்றது. எது எப்படியோ அதை அப்படியே பதிவு செய்து வெளிபடுத்தும்.
மனிதனின் ஆழ்மனது என்பது ஒரு xerox இயந்திரத்தை போன்று உள்ளதை உள்ளபடி பதிவு செய்யும்.
மனிதனின் ஆழ்மனது என்பது ஒரு கண்ணாடியை போன்றது. எது எப்படியோ அதை அப்படியே பிரதி பலிக்கும்.
நீங்கள் தோல்வியை எதிர்கொள்ள வேண்டும் என்றால் அல்லது அதை வெற்றி கொள்ள வேண்டும் என்றால் அதை ஒரு இழப்பு ஆக எடுத்து கொள்ளாதீர்கள்.
தோல்வி தரும் பாடங்களை வெற்றிக்குண்டான அனுபவமாக எடுத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் தோல்வியை ஒரு அவமானமாக நீங்கள்
நினைத்தீர்கள் என்றால் அந்த சிந்தனை உங்கள் ஆழ்மனதினில் பதியப்பட்டு உங்களுடைய பேச்சிலும் செயலிலும் பிரதி பலிக்கும்.
நான் நினைக்கிறேன் இந்த காரியம் நடக்காது, நான் நினைக்கிறேன் என்னால் அங்கு போக முடியாது, நான் நினைக்கிறேன் என்னால் அந்த செயலை செய்ய முடியாது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அவை அத்தனையும் உங்கள் ஆழ்மனதினில் பதியப்பட்டு நடக்கும் காரியங்கள் அத்தனையும் உங்களுக்கு பாதகமாகவே நடக்கும்.
இதை விடுத்து என்னால் அதை செய்யமுடியும், அங்கு போக முடியும், அந்த காரியம் நடக்கும் என்று சிந்தித்து பாருங்கள் உங்கள் சிந்தனைகள் அப்படியே ஆழ்மனதினில் பதியப்பட்டு உங்களுக்குள்ளேயே ஒரு உற்சாகம் பிறக்கும்.
நீங்கள் தடையென்று நினைக்கும் எந்த ஒரு காரியமும் உங்கள் நினைப்பில்தான் இருக்கிறது. நினைப்பை மாற்றி கொண்டீர்கள் என்றால் அந்த தடையை தகர்த்து எறிந்து விடலாம். அதற்கும் உங்கள் ஆழ்மனதுதான் காரணம்.
விளையாட்டு வீரர்களை எடுத்து கொள்ளுங்கள். நேற்று தோற்றவர் இன்று சாம்பியன் ஆகி விடுகிறார். காரணம் அவருடைய நினைப்புதான். நாம் எப்படியாவது இன்று சாம்பியன் ஆகி விடவேண்டும் என்ற நினைவு அவருடைய ஆழ்மனதினில் பதியப்பட்டு அவர் வெற்றி அடைவதற்கான யுக்திகளை எடுத்து கொடுத்து அவரை சாம்பியன் ஆக்குகிறது.
நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் தோல்விகள் தரும் அனுபவங்களை மட்டும் மதிப்பு கொடுங்கள். அனுபவங்களை மட்டும் உங்கள் ஆழ்மனதிற்கு எடுத்து செல்லுங்கள். அந்த அனுபவங்கள் அவ்வபோது உங்கள் ஆழ்மனதினில் இருந்து வெளிவந்து நீங்கள் வெற்றி அடைவதற்கு வழி செய்யும்.
சரி இந்த ஆழ்மனதுக்கும் தியானத்துக்கும் சம்பந்தம் உண்டா?
நிச்சயம் உண்டு. உங்கள் ஆழ்மனதை சென்றடையும் ஒரே சக்தி தியானம்
மட்டும்தான். தியானம் உங்கள் ஆழ்மனதினை ஊடுருவி சென்று அங்கு இருக்கும் அல்லது பதிய பட்டிருக்கும் தோல்வி கரமான சிந்தனைகளை கிளறி வெளி கொண்டு வந்து உங்கள் மனதை இலகுவாக்குகிறது.
தோல்வி கரமான சிந்தனைகள் மனதினில் இருந்து அகற்றப்படும் போது மனது சரியாக சிந்தனை செய்ய ஆரம்பிக்கிறது. எது சரி, எது தவறு என்று சரியாக சிந்தனை செய்ய ஆரம்பித்து அதன் பிரகர்ரம் உங்களை நடக்க செய்கிறது. தவறானவைகளை கண்டு கலக்கம் அடையாமல் உங்கள் சிந்தனை செயல்களை முறைபடுத்துகிறது. எனவே தியானம் என்னும் அற்புத கலையின் மூலம் வாழ்க்கை, தொழில், வேலை மற்றும் இதர அமசங்களிலும் வெற்றி பெறலாம் என்பதில் சந்தேகம் இல்லை.