விக்கிரமாதித்தன் கதை
விக்கிரமாதித்தனும் பட்டியும் உஜ்ஜனிமாகாளிப்பட்டினத்தில் தங்கள் தேசத்தை நிர்மாணித்து அரசாண்டு வரும் வேளையில் நாடு மிகுந்த சுபிட்சமாயும் நாட்டு மக்கள் எல்லா வளங்களும் பெற்று சந்தோஷத்துடனும் இருந்தார்கள். நாட்டில் மாதம் மும்மாரி பெய்தது. புலியும் பசுவும் ஒரே துறையில் நீர் அருந்தின. கீரியும் பாம்பும் ஓடிப்பிடித்து விளையாடின. விக்கிரமாதித்தனும் நீதிநெறி தவறாமல் அரசாண்டு வந்தான். அவனுடைய புகழ் நாடு நகரமெங்கும் பிரசித்தி பெற்று விளங்கியது.இவ்வாறிருக்கும் நாளில் தேவலோகத்தில் ஒரு பிரச்னை உருவாயிற்று.
தேவலோகத்தில் ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை என்ற நான்கு நடன மங்கையர் உண்டு என்பது எல்லோரும் அறிந்ததே. தமிழ் சினிமா நடிகைகள் என்று குழம்பவேண்டாம், இவர்கள் வேறு. இதில் ரம்பைக்கும் ஊர்வசிக்கும் தொழில் போட்டி வந்துவிட்டது. தங்களில் யாருடைய நடனம் சிறந்தது என்பதில் வாக்குவாதம் தொடங்கி பெரிய சண்டையாகி தேவேந்திரனிடம் பஞ்சாயத்திற்குப் போயிற்று.
அவனும் ஒரு நாள் தேவசபையில் இவர்கள் இருவரையும் நடனமாடச்சொல்லி கவனமாகப் பார்த்தான். அவனால் இவர்களின் ஆட்டத்தில் உயர்வு தாழ்வு கண்டுபிடிக்க முடியவில்லை. தேவசபையில் இருந்த எல்லோரையும் கேட்டான். ஒருவராலும் இவர்கள் ஆட்டத்தில் வேறுபாடு காண முடியவில்லை. சரி, அப்புறமாக தீர்ப்பு கூறுகிறேன் என்று அவர்களை அனுப்பிவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தான்.அப்போது சர்வலோக சஞ்சாரியான நாரதர் அங்கே வந்தார். தேவேந்திரன் நாரதரைப் பார்த்து வாரும் நாரதரே, இங்கு நடந்ததைப்பார்த்தீர்கள் அல்லவா? இவர்கள் நடனத்தில் வெற்றி தோல்வியைச்சொல்ல என்னால் முடியவில்லை. நீர்தான் திரிலோக சஞ்சாரியாயிற்றே, இந்தப்பிரச்னைக்கு தீர்வு சொல்லக்கூடியவர்கள் எங்காவது இருக்கிறார்களா என்று கேட்க, நாரதர் சொன்னார், பூலோகத்திலே உஜ்ஜனிமாகாளிப்பட்டினம் என்ற ஊரிலே விக்கிரமாதித்தன் என்று ஒரு ராஜா இருக்கிறான். அவன் சகல கலைக்ஞானமும், வீரதீரப் பராக்கிரமும், அதிவிவேகமும் உடையவனாய், பூலோக முழுவதும் பிரக்யாதி பெற்று விளங்குகிறான். அவனை நீர் நமது தேவலோகத் தேரை அனுப்பி வரவழைத்தீராகில் அவன் இந்தப்பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டு பிடித்து சொல்லுவான் என்றார்.உடனே தேவேந்திரனும் தேவலோக சாரதி மாதலியைக் கூப்பிட்டு உடனே பூலோகத்தில் உஜ்ஜனிமாகாளிபுரத்திற்கு போய் அங்கு அரசாண்டு கொண்டிருக்கும் விக்கிரமாதித்த ராஜாவை நாம் அழைத்து வரச் சொன்னதாய்க் கூறி அவனை நம் ரதத்தில் ஏற்றிக்கொண்டு சீக்கிரம் வருவாயாக என்று உத்திரவிட்டான். அவ்வாறே மாதலியும் தேவலோக ரதத்தில் குதிரைகளைப் பூட்டி பூலோகத்தில் உஜ்ஜனிமாகாளிபுரத்திற்கு வந்தான். அந்தக்குதிரைகள் எப்படிப்பட்டவை என்றால் தேரில் பூட்டிவிட்டால் வாயு வேகம் மனோ வேகம் என்று சொல்லக்கூடிய வேகத்தில் செல்லக்கூடியவை.
மாதலி விக்கிரமாதித்தன் அரச சபையில் பிரவேசித்து ராஜாவிற்கு வந்தனம் சொல்லி தன்னை இன்னாரென்று அறிமுகப்படுத்திக் கொண்டான். விக்கிரமாதித்தனும் அவனுக்கு முகமன் கூறி வரவேற்று யாது பிள்ளாய், இவ்வளவு தூரம் வந்த காரணம் என்ன என்று கேட்க, மாதலி, மகாராஜா, தேவேந்திரன் யாது காரணமாகவோ தங்களை அழைத்து வரச்சொன்னார் என்று கூறினான். விக்கிரமாதித்தன் பட்டியை நோக்க, பட்டியும் ராஜாவின் குறிப்புணர்ந்து மகாராஜா, எல்லாம் நல்ல காரியமாய் முடியும், சென்று வாருங்கள் என்று கூற, விக்கிரமாதித்தனும் சர்வாபரண, ஆயுதலரங்- கிருதனாய் புறப்பட்டு மாதலியைப்பார்த்து, போகலாமா என்று கேட்டான். மாதலியும் தேரை அரண்மனை வாசலில் கொண்டு வந்து தயாராக நிறுத்தினான்.
விக்கிரமாதித்தனும் சபையில் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு அரண்மனை வாசலுக்கு வந்து தேரில் ஏறுவதற்காக ஒரு கையினால் தேர்க்காலைப்பிடித்துக்கொண்டு ஒரு காலைத்தூக்கி தேர்த்தட்டில் வைக்கும்போது மாதலி குதிரைகளின் லகானைச்சுண்ட, அந்தக் குதிரைகள் வாயுவேகம் மனோவேகமாக நூறு யோஜனை தூரம் சென்றன. அது ஏனென்றால், மாதலிக்கு மனதிற்குள் ஒரு மானுடனை நம் தேரில் ஏற்றிச்செல்வதா என்ற ஆணவம்.
விக்கிரமாதித்தன் தேர்க்காலை ஒரு கையில் பிடித்து ஒரு கால் பெருவிரல் தேர்த்தட்டில் இருக்க, பிடித்த பிடியும், வைத்த காலும் அப்படியே இருக்க தேரில் ஒட்டிக்கொண்ட அட்டை போல் அசராமல் வந்து கொண்டிருந்தான்.
இதைப்பார்த்த மாதலி, ஆஹா, நாம் என்னவோ இவன் சாதாரண மானுடன் என்று எண்ணினோம், ஆனால் இவன் மிகுந்த வீரதீரப்பராக்கிரமசாலியாய் இருக்கிறானே, இவனை நாம் சரியானபடி தேவலோகம் கொண்டுபோய் சேர்க்காவிடில் நமக்கு வேலை போய்விடும் என்று யோசித்து தேரை நிறுத்தி, கீழே இறங்கி விக்கிரமாதித்தனை வணங்கி, மகாராஜா, நான் தங்களை சாதாரணமாக நினைத்து விட்டேன், என்னை மன்னிக்கவேண்டும் என்று கூறி, கைலாகு கொடுத்து விக்கிரமாதித்