Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » அகோரிகள் என்பவர்கள் யார்? – சில உண்மைகள் – 1

அகோரிகள் என்பவர்கள் யார்? – சில உண்மைகள் – 1

உலக மக்கள் இரு பிரிவாக இருக்கிறார்கள் என சொல்லலாம். ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள், ஆன்மீக தன்மை பற்றி உணர்வற்றவர்கள். இந்த இரு பிரிவில் யார்உயர்ந்தவர்கள் என்றால், இருவரும் தான். பூமியின் ஏதாவது ஒரு பகுதி இரவு தன்மையை கொண்டு இருக்கிறது. அதற்காக அந்த பகுதியே எப்பொழுதும் இரவாகவே இருக்காது என சொல்லலாம். காலம் சுழலும் இரவு பகலாகும், பகலும் இரவாகும். ஆனால் பூமியில் தொடர்பற்று ஆகாய மார்க்கத்தில் இருக்கும் ஒரு வஸ்துவுக்கு இரவு பகல் என்பது கிடையாது. சூரியனில் ஏது இரவு ஏது பகல்? மனிதர்கள் பூமியில் தொடர்பு கொண்டு வாழ்வதால் அவர்களுக்கு மாற்றம் என்பது இருக்கிறது. ஆன்மீகவாதிகள் இதிலிருந்து விடுபட்டு உள்ளதால் காலத்தாலும், மாற்றத்தாலும் கட்டுவிக்கப்படாமல் விடுபட்டு இருக்கிறார்கள்.

ஆன்மீகவாதிகள் என்றவுடன் பாரத தேசத்தில் மட்டுமே இருப்பதாகவும், உலகில் வேறுபகுதியில் கடவுள் ஆன்மீகவாதிகளை வளரவிட மாட்டார் எனவும் பலர்எண்ணுகிறார்கள். வேத காலம் என ஒன்று இருந்தது. அக்காலத்தில் உலகமே ஒரு நாடாக இருந்தது. எல்லை பிரச்சனையில் பக்கத்து மாநிலத்துடன் சண்டையிடும் நமக்கு இதை சிந்திப்பது சிரமம் தான். வேத மந்திரம் “பாரத கண்டே” எனும் சொல் நமது உலகமே ஒரே கண்டமாக இருந்தது என உணர்த்துகிறது.

காலத்தால் கலாச்சார மாற்றம் அடைந்து பெரிய சேலையாக இருந்த பாரதம் பல சிறு துண்டங்களாக மாற்றம் அடைந்து கைக்குட்டையானது. உலகின் பிறபகுதிகள் கலாச்சார மாற்றம் அடைந்தாலும், பாரத தேசத்தில் மட்டுமே ஆன்மீகவாதிகள் பெருக காரணம் சூழல் தான். தாங்கள் செய்யும் ஆன்மீக சாதனைகள் (பயிற்சிகள்) இடையூறு வராதவண்ணம் சூழல் இங்கு இருக்கிறது. ஞானம் அடைய தனிமனித முயற்சி இருந்தாலும் அதற்கான சூழல் வேண்டும்.

திபத்தில் இருக்கும் மக்கள் முக்கியமாக ஓர் மந்திரத்தை சொல்லி கடவுளை வேண்டுவதுண்டு. “கடவுளே எனக்கு அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் என்னை பாரதத்தில் பிறக்க வை”- என்பதே அம்மந்திரம். வேறு இடங்களில் ஒரு மனிதன் பிறந்தால், தானே ஞானமடையும் முயற்சியில் இறங்க வேண்டுமாம். பாரதத்தில் பிறந்தாலே போதும் என்பது அவர்களின் எண்ணம். பாவம் அவர்களுக்கு தெரியாதே, நாம்துரித உணவகத்தில் உண்டு, கேளிக்கை செய்து, இனத்தை பெருக்கி மாண்டுவிடுவோம் என்பது…!

ஆன்மீகவாதிகள் என்றவுடன் நம் மக்களுக்கு சில எண்ணங்கள் உண்டு. கற்பனை உலகிலேயே வாழ்பவர்கள் தங்கள் நினைத்தது போல தான் பிறர்வாழ்கிறார்கள் என எண்ணுவார்கள். உண்மையில் ஆன்மீகவாதிகளின் நிலை ரகசியாமாக காக்கப்படுவதில்லை. மக்கள் தெரிந்துகொள்ள முயற்சிக்காததால் ரகசியமாகி விட்டது.கடலுக்கு அடியில் முத்து எடுக்க சென்றவன், தான் கடலின் ஆழத்தில் கண்டவற்றை கரையில் இருப்பவனுக்கு சொல்ல முடிவதில்லை. அது போல ஆன்மீகநாட்டமுள்ளவனும் பிறரிடம் தான் கண்ட ஆன்மீகவாதிகளை பற்றி வெளியே சொல்ல முடிவதில்லை.

ஆன்மீகம் என்பது மதம்,கலாச்சாரம், சடங்குகள், மொழி போன்றவற்றை கடந்தது. ஆன்மீகம் என்றவுடன் அனைவரும் மதத்துடன் அதை தொடர்புபடுத்தி குழப்பிகொள்கிறார்கள்.

ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு பல நிலைகள் மற்றும் தன்மைகள் உண்டு. இயல்புவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அவர்களை பார்த்தால் வித்தியாசம்தெரிவதில்லை.

சாதுக்கள், சன்யாசிகள், ஸ்வாமிகள், யோகிகள், ரிஷிகள், மகரிஷிகள் என பல வடிவங்களில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைவரையும் நம் ஆட்கள் ஒரேவார்த்தையில் அடக்கிவிடுவார்கள் அது- “சாமியார்”

தாந்தீர்கம் செய்பவர்களும், மந்திரங்கள் மூலம் தீமை விளைவிப்பவரும் இங்கு ”சாமியார்” எனும் அடைவுக்குள் வந்துவிடுகிறார்.

தமிழகத்தில் சித்தர்கள் என சிலரை சொல்லுவதுண்டு. தமிழ் நாட்டை தாண்டி வேறு மாநிலத்திற்கு சென்று சித்தர் பற்றி பேசினால், சித்தார் எனும் இசைகருவியை தான் காண்பிப்பார்கள். காரணம் சித்தர் எனும் பெயர்வழக்கு தமிழில் மட்டுமே உண்டு. யோகிகள் என்பவர்களை தான் நாம் சித்தர்கள் என தமிழ் “படுத்தி” இருக்கிறோம். இது போதாது என்று அவர்கள் பதினெட்டு எண்ணிக்கையில் தான் இருக்கவேண்டும் என கட்டயாம் வேறு படுத்துகிறோம். உண்மையில் சித்தர்கள் மதம் சார்ந்தவர்கள் அல்ல. தங்களை உடலாலும், உயிராலும் மேன்மை அடைய ஆன்மீக பயிற்சி செய்பவர்கள் எனலாம்.

நாம் எப்படி காவி காட்டிய அனைவரையும் சாமியார் என்கிறோமோ அது போல வட நாட்டில் அவர்களை “பாபா” என அழைப்பார்கள். பாபா என்றால் தந்தை அல்லது உயிர் கொடுத்தவர் என அர்த்தம்.

அங்கு அனைவரும் பாபா தான். மேல்தட்டு மக்கள் மஹராஜ் என அழைப்பார்கள். ரிஷிகள் அவர்களுக்கு அரசனை போன்றவர்கள்.[இந்த சொல்லாடலை மனதில்வைத்துக்கொள்ளுங்கள் பின்னால் இதை பற்றி பேசுவோம்.]

அகோரிகள் எனும் சொல்லாடலும் தமிழ் நாட்டில் சித்தர்கள் என நாம் சொல்லுகிறோமே அதன் வடமொழி வழக்குதான். தமிழில் வடமொழி சொற்கள் தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஒருவனை பார்த்து “கேவலமானவன் நீ” என சொன்னால் அவர் என்ன நினைப்பார்?
வடமொழியில் “கேவல” எனும் சொல் தனித்துவமான – மேல்நிலையான என பொருள்படும். [உ.ம். கேவல சைதன்யம்- உண்னதமான துய்மை நிலை]. இப்பொழுது எதற்கு இந்த சமஸ்கிருத வகுப்பு என நீங்கள் கேட்பது புரிகிறது.

தினசரிகளில் கொடூரமான விபத்தை பற்றி எழுதும் பொழுது “கோரமான விபத்து” என எழுதுவார்கள் அல்லவா? கோரம் என்றால் “பார்க்க முடியாத அளவுக்கு”,“மனம் பாதிப்படையும் தன்மை உள்ள” என பொருள் கொள்ளலாம். இதற்கு எதிர்பதம் தான் அ-கோரம்.

ரம்மியமான, பார்த்தால் ரசிக்க தக்க நிலையில் இருப்பவர்களே அகோரர்கள். அகோரமான முகம் என தமிழில் இந்த சொல்லையும் தவறாகவே பயன்படுத்துகிறோம்.

அகோரமான நிலையில் இருப்பவர்கள் தான் அகோரிகள். வடநாட்டில் அனைவராலும் அகோரிகள் என அழைக்கப்படுபவர்கள் யோகிகளே. நாக சன்யாசிகள் அல்லது நாகா பாபா என அழைக்கப்படுபவர்களும் இவர்கள் தான். ஹிந்தியில் நங்கா என்றால் நிர்வாணம் என அர்த்தம். நங்கா பாபா எனும் சொல் வழக்கு பின்னாளில் நாகா பாபா என மாற்றமடைந்தது.

உடலில் ஆடைகள் இல்லாமல், நீண்ட முடியுடன். முகத்திலும் மார்ப்பிலும் முடிகள் இல்லாமல் இருப்பவர்கள் அகோரிகள்.இனிவரும் பகுதியில் இவர்களை யோகிகள் என அழைப்போம். தலை பகுதிகள் தவிர பிற இடங்களில் இவர்களுக்கு முடிகள் இருக்காது. இவர்கள் உலகை வெறுத்து தனியாக வாழ்பவர்கள் கிடையாது. சிறு சிறு குழுக்களாகவும் தலைமை யோகியின் பின்னால் இவர்கள் இருப்பார்கள்.

தங்களை விளம்பரபடுத்திகொள்ளவோ, தங்களுக்கு இருக்கும் அமானுஷ ஆற்றலை வெளிகாண்பிக்கவோ மாட்டார்கள். உடல் முழுவதும் சாம்பல் அல்லது மண்கொண்டு பூசியிருப்பார்கள். மத பொருட்கள் எதையும் கைகளில் வைத்திருக்க மாட்டார்கள்.

யோகிகள் குழுக்களாக இருக்கும் சூழலில் யார் தலைமை யோகி அல்லது குரு என கண்டறிவது சிரமம். அனைவரும் ஒரே போல இருப்பார்கள். ஆண் மற்றும் பெண் யோகிகள் இருவரும் இருப்பர்கள். நிர்வாணமாக இருந்தாலும் பெண்யோகிகளை கண்டறிவது கடினம்.

இவர்களின் தலைமுடி வயதானாலும் வெள்ளை ஆகாது. உடல் பயில்வானை போல இல்லாமல்,உடல் சீரான நிலையில் இருக்கும். ரிஷிகேசத்தில் இருந்த ஒரு யோகியின் புகைப்படம். இந்த படம் எடுக்கும் பொழுது அவருக்கு 85 வயது…!

தத்வவாலே பாபா

ரிஷிகேசம் அல்லது இமாலய மலையின் வனங்களில் இருப்பார்கள். பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை கும்பமேளாவிற்கு வந்து கூடுவார்கள். இமாலயவனத்திலிருந்து நடந்தே அலாகாபாத் எனும் இடத்திற்கு வருவார்கள், மீண்டும் நடந்தே சென்றுவிடுவார்கள். வாகனத்தை பயன்படுத்த மாட்டார்கள். வாகனத்தில் சென்றால் குறைந்த பட்சம் பன்னிரெண்டு மணி நேர பயணம்.

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுது கட்டுகோப்பாக வரிசையில் செல்வார்கள். வரிசையின் முன்னாலும் , பின்னாலும் இருக்கும் யோகிகள் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள்.

நீண்ட முடியும், மண் அல்லது சுடுகாட்டு சாம்பலை பூசி இருந்தாலும் அவர்கள் மேல் எந்த விதமான வாசனையும் இருக்காது. நறுமணமும் இருக்காது, நாற்றமும் இருக்கது. முக்கியமாக இவர்கள் பிறருடன் பேசுவது குறைவு. தங்களுக்குள் பேசிக்கொள்ளவே மாட்டார்கள்.

குழுவாக வட்டவடிவில் உற்கார்ந்து கொண்டு ஒரு மூலிகையை புகைப்பார்கள். இம்மூலிகை கஞ்சா என பிறர் எண்ணுகிறார்கள். கும்ப மேளாவில் கஞ்சா எல்லாஇடத்திலும் கிடைக்கும், சிலர் இலவசமாக பிறருக்கு வழங்குவார்கள். ஆனால் இவர்களிடம் யாரும் கொடுக்க மாட்டார்கள், இவர்களும் வாங்க மாட்டார்கள்.

தாங்கள் இருக்கும் வனத்திலிருந்து சில மூலிகைகளை கொண்டுவருவார்கள். வட்டமாக உட்கார்ந்திருக்கும் இவர்கள் வட்டத்தின் மையத்தில் அந்த மூலிகையை வைத்து ப்ரார்த்தனை செய்த பின் புகைப்பார்கள். மூலிகை குழாயில் வைத்து ஒரு முறை மட்டுமே உள்ளே இழுப்பார்கள். பிறகு அடுத்தவருக்கு கொடுப்பார்கள். இப்படியாக வட்டம் முழுவதும் புகைகுழாய் வட்டமடிக்கும்.

ரிஷிகேசத்திலும், கும்ப மேளாவிலும் 1 டிகிரி செண்டிகிரேட் குளிராக இருந்தாலும் நிர்வாணமாக உற்கார்ந்து தியானம் செய்வார்கள்.

இப்படி பட்ட யோகிகளை புரிந்து கொள்வது கடினம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top