Home » படித்ததில் பிடித்தது » ஆகஸ்ட் முதல் ஞாயிறு நண்பர்கள் தினம்!!!
ஆகஸ்ட் முதல் ஞாயிறு நண்பர்கள் தினம்!!!

ஆகஸ்ட் முதல் ஞாயிறு நண்பர்கள் தினம்!!!

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் (Friendship Day) உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவில் எப்போதோ வாழ்ந்த நண்பர்கள் இருவரில் ஒருவர் இறந்த பின், மற்றொருவர் தற்கொலை செய்து கொண்டு இறந்த சம்பவத்தினை நினைவுபடுத்தி ஒவ்வொரு ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது.
அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் 1935ஆம் ஆண்டு ந‌ட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

அதில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை கட்டாய விடுமுறை அறிவித்து, அன்றைய தினத்தை நட்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

அன்று முதல் அமெரிக்காவில் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

உலகெங்கிலும் பரவியிருக்கும் நண்பர்கள், இந்த நட்பு தினத்தையும் கொண்டாடத் துவங்கிவிட்டனர். தற்போது பல்வேறு நாடுகளிலும் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

நட்பில் பலவகை அதுபோல் கொண்டாட்டமும் பல வகை

நட்பு தினம் என்றதும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்று சரியாகச் சொல்லிவிடுவோம்.

நட்பு தின‌த்தை கொ‌ண்டாடுவ‌திலு‌ம் பல்வேறு வகைகளைப் பிரித்துள்ளனர்.

அதாவது தேசிய நட்பு தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்றும், மகளிர் நட்பு தினம் ஆகஸ்ட் 3வது ஞாயிறு என்றும், சர்வதேச நட்பு மாதம் என்பது பிப்ரவரி என்றும், பழைய மற்றும் புதிய நண்பர்களுக்கான வாரம் மே மாதத்தின் 3வது வாரம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.

 சங்க காலத்தில், பாண்டிய நாட்டைச் சேர்ந்த புலவர் பிசிராந்தையாரும், சோழ நாட்டு மன்னன் கோப்பெருஞ்சோழனும்  ஒருவரையொருவர் பார்க்காமலேயே  நட்பை வளர்த்து நண்பர்களாக வாழ்ந்த வரலாற்றை நாம் மறக்கமுடியுமா..?  கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து மரணமெய்தியசெய்தி கேட்டு, பிசிராந்தையாரும் தன் நண்பரின் பக்கத்திலேயே வடக்கிருந்து மரணமெய்திய  நிகழ்ச்சியை போல் நட்பை உயர்வு செய்யும்  வேறு நிகழ்ச்சியை சொல்ல முடியுமா..?
  அதேப்போல் சங்ககாலத்தில், வாழும் காலத்தை அதிகரிக்கச் செய்யும் நெல்லிக்கனியை தான் சாப்பிடாமல் தன் நண்பரான அவ்வைக்கு கொடுத்தானே அதியமான்… இதையும் நம் இளைஞர்கள்மறந்துவிட்டனரா..?
   அதேப்போல், ”நட்பு” என்ற அதிகாரத்தில் பத்து குறள்களை தந்திருக்கிறாரே திருவள்ளுவன்.

“உன் நண்பனைப் பற்றிச் சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. நட்பு என்பது அந்த அளவுக்கு நெருக்கமான, இனிமையான, தூய்மையான ஓர் உறவு. நண்பர்கள் இல்லாதவர் என யாருமில்லை. நண்பர்கள், எல்லோருடைய வாழ்விலும் முக்கிய இடத்தை வகிக்கின்றனர். ஏழை – பணக்காரன், ஆண் – பெண், வெள்ளை – கருப்பு, ஜாதி – மதம், வயது – வரம்பு, நான் – நீ, போன்ற வேறுபாடுகளை கடந்தது நட்பு.

இன்றைய வேகமான உலகில் கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ள முடியாத பல விஷயங்களை, நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்ள முடிகிறது. நட்புக்கு மதிப்பளிக்கும் விதமாக, ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆக.,3) உலக நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

தினமும் சந்திக்கும் நண்பர்களை நினைவுபடுத்த தேவையில்லை. எனினும், பள்ளிக்கூட, கல்லூரி கால நண்பர்களை நினைவுபடுத்தி, சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது நண்பர்கள் தினம்.

குறைந்தது ஒருமுறை: ஒவ்வொரு காலகட்டத்திலும், புதிய, புதிய நண்பர்களின் பழக்கம் கிடைக்கும். இவர்களை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் மொபைல், சாட்டிங், இ-மெயில், வாழ்த்து அட்டை அனுப்புவதன் மூலம், அவர்களுடன் அந்த நாள் நினைவுகளை பகிர்ந்து கொள்ள முடியும். புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வது வரவேற்கத்தக்கது.

அதற்காக பழைய நண்பர்களை மறந்துவிடக்கூடாது. நண்பர்களிடையே வரக்கூடாத விஷயம், “பகைமை’. தவிர்க்க முடியாத காரணங்களினால் முறிந்து விட்ட நட்பை, திரும்பவும் உயிர்ப்பிக்கும் நாளாகவும் இந்நாள் அமைகிறது. கருத்து வேற்றுமையினால் நண்பர்களுக்கு பிரிவு வருவது இயற்கை தான், அதை அடுத்த சில மணி நேரங்களில் உணர்ந்து தாமாக பேச முன்வர வேண்டும். நட்பு எந்த ஒரு மனிதனும் தனி தீவாக ஒதுங்கிவிடாமல் காப்பாற்றுகிறது.
உலகம் முழுக்க நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உயிர் தருவான் தோழன் என்பார்கள்.

ஏழை, பணக்காரன், சாதி, மத பேதமின்றி, வயது வித்தியாசம் இன்றி, பால் இன வேறுபாடு இல்லாமல் வருவது நட்பு.

இருந்தாலும் பெரும்பாலும் கிட்டத்தட்ட ஒரே வயதில் உள்ளவர்கள்தான் நண்பர்களாக, தோழிகளாக இருக்கிறார்கள். காரணம் வகுப்பில் படித்த தோழர்கள், வேலை செய்யும் இடங்களில் பழகியவர்கள் இப்படியாகத்தான் நிறைய நண்பர்கள், தோழிகள் இருக்கிறார்கள்.

நண்பர்கள் தினத்தன்று வாழ்த்து தெரிவிப்பது, எஸ்.எம்.எஸ். அனுப்புவது, மெயில் அனுப்புவது, நேரில் வீட்டுக்கு சென்று அல்லது சந்தித்து பேசி மகிழ்தல், நண்பர்கள் தின கயிறு கட்டுவது என அண்மைக் காலத்தில் களைகட்டி வருகிறது.

நண்பர்கள் தின கயிறு கட்டி மகிழ்கிறார்கள். பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து நண்பர் தினத்தை கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்.
நட்பு எல்லை என்பதே இல்லை என்பதே அதன் சிறப்பு.

இவனிடம் எதைப்பற்றியும் பேசலாம்.

கேலி… கிண்டல்…

இன்பம்… துன்பம்….

கொண்டாட்டம்…

என இந்த உலகில் என்ன வெல்லாம் இருக்கிறதோ அத்தனையையும் அப்படியே பகிர்ந்து கொள்ளக் கூடிய ஜீவனுள்ள ஒரே உறவு நல்ல நட்பு மட்டுமே.

அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, மாமா, அத்தை என எத்தனையோ உறவுகள் நம்மைச் சுற்றி இருந்தாலும், எல்லோரிடமும் எல்லாவற்றையும், எப்போதும் பகிர்ந்து கொள்ள முடியாது. இதற்கு நண்பன் மட்டுமே விதிவிலக்கானவன். பள்ளியில் முதல் வகுப்பில் தொடங்கி… பால்ய காலத்தில் வலுப்பெற்று முதிர்ச்சியடைந்த பின்னரும் அப்படியே இளமையாக இருப்பது நட்பு மட்டுமே. 5 வயதில் தொடங்கும் உறவுப் பாலம் ஆடி அடங்கிப் போன காலத்திலும் அப்படியே வலுவாக இருக்கும். 50 வயதை தாண்டிய பின்னரும் வாடா… போடா… என்ற பேச்சுக்களில் கிடைக்கும் சுகமே அலாதியானதுதான்.

காதலில் தொடங்கி நெஞ்சைப்போட்டு பிசைந்து கொண்டிருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் வடிகாலாக இருப்பதும் நட்புதான். மனதில் தோன்றிய முதல் காதலை… நாம் எல்லோருமே நண்பர்களிடம் தான் முதலில் சொல்லியிருப்போம். அப்புறம்தான் காதலிக்கு தெரிந்திருக்கும். இப்படி சுகமானாலும் சரி… சோகமானாலும் சரி… அதில் எப்போதும் நட்புக்கே முதலிடம்.

இத்தகைய உன்னதமான நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 4–ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் கூட இதனை தெரிந்து வைத்துள்ளனர். தங்களுக்குள் வாழ்த்து அட்டைகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால்… நண்பர்கள் தினம் கூடுதல் சிறப்பை பெற்றிருக்கிறது. எப்போதுமே ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்றாக கூடும் நண்பர்கள், இன்று நண்பர்கள் தினம் என்பதால் எல்லையில்லா மகிழ்ச்சியுடன் அதனை கொண்டாடி வருகிறார்கள்.

அதேபோல இளம்பெண்களும் தங்கள் தோழிகளுடன் நண்பர்கள் தின வாழ்த்துக்களை பரிமாறி வருகிறார்கள். செல்போன் வாட்ஸ் அப்பில் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.

துன்பத்தில் தோள் கொடுக்கும் நண்பன்… இதேபோல பள்ளி, கல்லூரி தோழர்கள் மூலமாக பெற்றோர் தயவின்றி நல்ல வேலையில் சேர்ந்தவர்களும் உண்டு.

இப்படி இன்றைய கால கட்டத்தில் நட்பு வாழவும் வைக்கிறது. வீழவும் வைக்கிறது. எனவே நண்பர்களாக இருந்தாலும் பார்த்து பழகுங்கள் நல்ல பழக்கங்களுக்கு அடிமையாகுங்கள்.

தோள் கொடுக்கும்

தோழனுக்கு கை கொடுப்போம்…

நட்பை போற்றுவோம்…

1958ம் ஆண்டு பராகுவே நாட்டைச் சேர்ந்த ஆர்டிமியோ பிராக்கோ என்பவர் தனது நண்பர்களுக்கு அளித்த விருந்து ஒன்றில் உலக அளவில் நண்பர்கள் தினத்தை கொண்டாடும் முடிவை வெளியிட்டார். பல்வேறு நாடுகளில் கிடைத்த வரவேற்பு காரணமாக இன்று பெரும்பாலான நாடுகளில் நண்பர்கள் தின கொண்டாட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக இந்தியா, நேபாளம், வங்கதேசம் மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் நண்பர்கள் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலான நாடுகளில் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினத்தை கொண்டாடுகிறார்கள். சில நாடுகளில் ஜூலை மாதத்தில் கொண்டாடுகிறார்கள். பராகுவே நாட்டில் ஜூலை 30, அர்ஜெண்டினா, பிரேசில், உருகுவே நாடுகளில் ஜூலை 20ம் தேதி கொண்டாடப்படுகிறது.

உலக நண்பர்கள் தினத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை 1998ம் ஆண்டு அங்கீகாரம் அளித்துள்ளது.. பெற்றோர், சகோதரர் போன்ற உறவுகள் அவரவர் விருப்பத்தில் வருவதல்ல. ஆனால், நட்பு என்பது அவரவர் முடிவு செய்யும் ஒன்று. எனவே, நண்பர்களை தேர்வு செய்வதில் பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது. அந்த நட்பு நம்மை கடைசி காலம் வரை வழி நடத்துவதாக இருக்க வேண்டும்.

நண்பனைப் பற்றி:

* நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு, ஒருபோதும் நண்பனை விட்டுக் கொடுக்காதே.
* உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
* உன் நண்பர்களை காட்டு… உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
* ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்.
* நமது நண்பர்கள் தான், நமது உண்மையான சொத்துகள்.
* உன்னை பற்றி முழுதாக அறிந்திருந்தும், உன்னை விரும்புபவனே உன் நண்பன்.

நல்ல நண்பர்களை நாம் தக்க வைத்து கொண்டால் ”இன்று” மட்டும் அல்ல என்றும் நண்பர்கள் தினம் தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top