தமிழகத்தின் நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர்வரத்து அதிகரிக்கும். நதிகளும் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக நீர் நிரம்பி காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி மாதம் 18–ந் தேதி ஆடிப்பெருக்கு விழா ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் ஓரங்களில் கொண்டாடப்படுகிறது. காவிரி, பெண்ணை, பொருணை ஆகிய மூன்று நதிகளிலும் ஆடிப் பதினெட்டு கொண்டாடுவதை, சிலர் மூவாறு பதினெட்டு என்று கூறுவார்கள்.
தட்சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் துவங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு. இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம். ஆடி18–ல் காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத்தம்பதிகள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர்.
நீர்நிலைகளில் ஓரம் தான் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட வேண்டும் என்றால் மற்றவர்கள் என்னதான் செய்வது என்கிறீர்களா?. ஆறு மற்றும் நீர் நிலைகளின் ஓரம் தான் என்று இல்லை, நம் வீட்டிலேயே கூட எளிமையான முறையில் ஆடிப்பெருக்கு விழாவை அனுஷ்டிக்கலாம். அதற்கு செய்ய வேண்டியது இதுதான்.
ஒரு செம்பில் சிறிதளவு அறைத்த மஞ்சளை போட வேண்டும். பின்னர் அந்த செம்பில், நிறை குடத்தில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரில் மஞ்சள் கரைந்துவிடும். வீட்டின் பூஜை அறையில் இருக்கும் திருவிளக்கில் தீபம் ஏற்றி, விளக்கின் முன்பாக செம்பு நீரை வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப்பூக்களை போட வேண்டும்.
தொடர்ந்து கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். வழிபாட்டின் போது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து படைத்து வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் வாழ்வில் வளம் கொழிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
காவிரி அன்னை, ரங்கநாதரின் தங்கையாக கருதப்படுகிறாள். ஆடிப்பெருக்கு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு, ரங்கநாதர் எழுந்தருள்வார்.
அங்கு அவருக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும், புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் முதலிய சீர் வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து அம்மா மண்டபம் படித்துறைக்குக் கொண்டு வருவார்கள்.
பெருமாள் முன் அந்தச் சீர்வரிசைகளை வைத்து ஆராதனைகள் செய்த பின் அவற்றை காவிரிக்கு சமர்ப்பிப்பார்கள். காவிரி அன்னைக்கு, பெருமாள் சீர்வரிசை அளிக்கும் பக்தர்களை பரவசப்படுத்தும் முக்கிய நிகழ்வாக உள்ளது.
தென்னிந்தியாவில் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது, பவானி கூடுதுறை. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் ஆடிப்பெருக்கு அன்று அதிகாலையில் திறக்கப்படும். கூடுதுறையில் நீராடிவிட்டு பக்தர்கள், இறைவனை வழிபடுவார்கள்.
அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும் ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கல காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.
அட்சய திரிதியையை விட, ஆடிப்பெருக்கு சிறப்பான நன்னாளாகும். இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். ஒருவர் செய்யும் நற்செயல்களால், எவ்வாறு புண்ணியம் பெருகுகிறதோ, அதுபோல் இந்த நாளில் தொடங்கும் எந்தக் காரியமும் நன்மை அளிக்கும் வகையிலேயே நிறைவுபெறும்.