திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தை பாகத்தைக் குறிப்பிடும் சொல்லாகும். சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் பூமிக்கு நேராக வரும் பொழுதும் அமாவாசை திதி உண்டாகிறது. சந்திரன் சூரியனில் இருந்து பிரிந்து பூமியைச் சுற்றிவரும் மார்க்கத்தில், பூமிக்கும் சூரியனுக்கும் 180–வது பாகையில் வரும்பொழுது பவுர்ணமி திதி நிகழும்.
திதிகள் பூர்வபக்கத் திதிகள், அபரபக்கத் திதிகள் என இருவகைப்படும். அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் பவுர்ணமி இறுதியாகவுள்ள 15 திதிகளும் பூர்வபக்கம் எனப்படும். பவுர்ணமிக்கு அடுத்த பிரதமை முதல் அமாவாசை இறுதியாகவுள்ள 15 திதிகளும் அபரபக்கம் எனப்படும். பூர்வபக்கம், அபரபக்கம் என்பன முறையே சுக்லபட்சம், கிருஷ்ணபட்சம் என்றும்; வளர்பிறை, தேய்பிறை என்றும் அழைக்கப்படும்.
‘அமா’ என்றால், ஓரிடத்தில் பொருந்தியது (சேர்ந்தது– குவிந்தது) என்று பொருள்படும். ஓர் ராசியில் சூரியன், சந்திரன் இருவரும் சேர்ந்து உறவாகும், வாசியான நாள் ‘அமாவாசி’ எனப்படும்.
சூரியன் ஞானகாரகன், ஆத்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார். உயிர்களின் ஆத்ம அமைப்பு சூரியனால்தான் நிகழ்கின்றன. ஆண்மை, ஆற்றல், பராக்கிரமம், வீரம், தீரம், தவம் யாவும் சூரியனாலேயே தோன்றுகின்றன.
சந்திரன் மனதிற்கு அதிபதி. மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, உற்சாகம், இன்பம் முதலியன சந்திரனால் அடையத்தக்கவை. இத்தகைய சூரியர், சந்திரர் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் நாள் புனிதமான நாள் ஆகும். சகல தேவர்களும் அமாவாசையின் அதிபர்களாவர். சிறப்புமிக்க அமாவாசை தினத்தில் விரதம் மேற்கொள்வது, இறைவனுக்கு மகிழ்ச்சி அளிப்பதும், பெருமை தருவதுமான நன்னாளாகும்.
மாதந்தோறும் வரும் அமாவாசை தினமானது, இறந்த நமது முன்னோர்களை நினைத்து விரதம் அனுஷ்டிக்க ஏற்ற நாளாகும். இவற்றில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்றவை முக்கியத்துவம் கொண்டவை. மிகவும் விசேஷமானது ஆடி அமாவாசையாகும். ஆடி மாதத்தில் சந்திரன் உச்சம் பெற்ற கடக ராசியில், சூரியன் சஞ்சரிப்பதே இதற்கு காரணம். சூரியன் சிவ அம்சம். சந்திரன் சக்தியின் அம்சம். இவ்விரண்டு அம்சங்களும் ஆடி அமாவாசை தினத்தில் ஒன்றிணைவதால் ஆடி அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த விரதம் நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் என்றாலும், இறந்த தந்தைக்காக பிள்ளைகள் அனுஷ்டிக்கும் விரதம் என்று கூறுவார்கள்.
காலையில் எழுந்து ஆற்றிலோ, குளத்திலோ நீராடிவிட்டு, கரையோரத்தில் அமர்ந்து அந்தணர்களைக் கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆற்றிலோ, குளத்திலோ நீராட முடியாதவர்கள் வீட்டில் நீராடிவிட்டு அருகில் உள்ள ஆலயத்துக்கு சென்று, அங்கு அந்தணர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு இந்தியாவில் காசியும், இலங்கையில் கீரி மலைக் கடற்கரையும் விசேஷமான தலங்களாக கருதப்படுகிறது.
வீட்டை சுத்தம் செய்து சமையல் செய்ய வேண்டும். யார், யாரை வணங்க வேண்டுமோ, அவர்களை நினைத்தபடி இலைகளை போட்டு, சமைத்த உணவை அதில் படைத்து தீப– தூரம் காட்டி வழிபட வேண்டும். பின்பு இலையில் இருந்து எல்லா பதார்த்தங்களிலும் சிறிது சிறிது எடுத்துத், தனியாக ஓர் இலையில் வைத்து, காகம் உண்ணக் கூடியதான உயரமான இடத்தில் வைக்க வேண்டும். அவ்வுணவைக் காகங்கள் உண்ணத் தொடங்கிய பின்னர், விரதம் இருப்பவர்களும் வீட்டில் உள்ளவர்களும் உணவை உண்பார்கள். நமது முன்னோர்களே காகங்களாக வந்து, உணவை உண்பதாக நம்பிக்கை இருக்கிறது.
மேற்கண்டவாறு விரதத்தை மேற்கொள்வதால், இறந்த நமது முன்னோர்களின் அருள் பூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
தேவலரிடம் உள்ள நூலை பறிக்க வந்த அசுரர்களை அழித்து தேவலரைக் காத்திட்ட ஸ்ரீ சௌடேஸ்வரி அன்னை தேவலரை நோக்கி கூறினாள்.
மகனே! உன் பகை நீங்கியது. புனிதமான நூல் காப்பற்றப்பட்டது. விரும்பும் இடத்திற்குச் செல்க. எப்பொழுது நீ என்னை நினைத்தாலும் உன் முன் இருப்பேன். இன்று ஆடி அமாவாசை. இவ்வமாவாசை இரவில் நீ என்னை நினைத்தாய். உனக்காக நானும் அவதரித்தேன். இவ்வவதாரம் தேவாங்கர்க்குச் சொந்தமான அவதாரம். எனவே இவ்வாடி அமாவாசை எனக்குப் பிறந்தநாள். இதே நாளில் நீயும் பகைவரிடமிருந்து காப்பாற்றப்பட்டாய். எனவே உனக்கும் இது பிறந்த நாள்.
தேவாங்க குலத்தோர் அமாவாசை நாளில் வேறு காரியங்கள் செய்யாமல் என்னைத் தியானித்தால் சீரும் சிறப்பும், வலிமையும், செல்வமும், புகழும், பெருமையும், ஆயுளும், ஆரோக்கியமும் மற்றும் அணைத்து மங்கலங்களும் பெற்று வாழ்வர் என்று தேவாங்க மகரிஷிக்கு வரம் தந்து மறைந்தாள் ஸ்ரீ சௌடேஸ்வரி.
எனவே தான் பெரியவர்கள் அமாவாசையை விடுமுறைத் தினமாகக் கொண்டு அன்று அன்னையை நினைத்து வாழ்ந்தனர். நாம் அன்னையின் அருளைப்பெற கடும் தவத்தையோ, துறவு மேற்கொள்வதையோ வேறு கடுமையான விரதங்களையோ அவள் நமக்கு விதிக்கவில்லை. என்னை நினையுங்கள் வருகின்றேன் என்ற அந்தக் கருணையை நினைந்து நினைந்து உருக வேண்டாமா.
சூரியனைப் “பிதிர் காரகன்” என்கி றோம். சந்திரனை “மாதுர் காரகன்” என்கி றோம். எனவே, சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடும் தெய்வங்களாகும்.
சூரிய பகவான் ஆண்மை,ஆற்றல்,வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வர்.
தை அமாவாசை, ஆடி அமாவாசை இரண்டுமே பித்ருக்களைப் பூஜிக்கும் முக்கிய நாட்களாகக் கருதப்படுகின்றன. என்ன காரணம்? சூரியனின் வட திசைப் பயணமான உத்தராயணம் தை மாதம் ஆரம்பமாகிறது. தென்திசைப் பயணமான தட்சிணாயனம் ஆடி மாதம் தொடங்குகிறது. அதனால்தான், ஆடி மற்றும் தை மாத அமாவாசைகள் விசேஷமானதாக விளங்குகின்றன. இந்த இரண்டு தினங்களும் பித்ருக்களின் ஆசியை நமக்குப் பெற்றுத்தரும் அருமையான தினங்கள். ஏன்? தெரிந்தோ தெரியாமலோ, வாழ்வில் நம்மை அறியாது பல பாவங்களுக்கு நாம் உட்படுகிறோம். பல பிறவிகளில் செய்த பாவங்களும் இப்பிறவியில் நம்மை நிம்மதியின்றி தவிக்க விடுகின்றன. ஆழமாகச் சிந்தித்தால், நமது தவறுகள் நமக்குப் புரியும்.
வயதான பெற்றோர்களை சரிவர பராமரிக்காமல் அவர்களை முதியோர் இல்லம் அனுப்புவது… நகரத்தின் பழக்கங்கள் அவர்களுக்குப் பிடிக்காது என்று கூறி, கிராமத்தில் பெற்றோரை தனியே வைக்கிறார்கள்… பெற்றவர்களை ஷிப்ட் முறை போல அடுத்த மகளிடம் அல்லது மகனிடம் அனுப்புவது… என்ன வேதனை அந்தப் பெற்றோர்களுக்கு! பெற்றோரை உதாசீனப்படுத்திவிட்டு பிறருக்கு கல்விச் செலவுக்கு உதவுகிறேன்… கோயிலில் அன்னதானம் செய்கிறேன் என்பதால், நம் பாவம் நீங்கி புண்ணியம் பெருகிவிடாது. இவை அனைத்தும், இப்பிறவியில் நடைமுறை வாழ்வில் தினமும் நடப்பதை நாமே பார்க்கிறோம். இவற்றின் விளைவுதான்,நமக்கு ஏற்படுகின்ற காரணமில்லாத பிரச்னைகள்.மனக்கஷ்டங்கள்
இவற்றுக்குப் பரிகாரமே பித்ருக்களை பூஜிப்பதும், குலதெய்வத்தை ஆராதனை செய்வதும்தான் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
குடும்பத்தில் ஓர் ஆண் வாரிசு தோன்றியதும், ஆனந்தப்பட்டு தன்னுடைய பித்ரு கடமைகளைச் செய்து தங்களைக் கரையேற்றுவான் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதற்காகவே ஏற்பட்டது பித்ரு தர்ப்பண பூஜை. தேவலோக மூலிகையான தர்ப்பையைக் கொண்டு, எள் வைத்து ஜாதி, மத, பேதமின்றி தர்ப்பணம் செய்து மூதாதையரை மகிழ்விக்க வேண்டியது ஒவ்வொருவரின் முக்கியக் கடமையாகும்.
திருவண்ணாமலையில் சிவபெருமான் வல்லாள மகாராஜாவுக்குத் தர்ப்பணம் கொடுப்பது வருடந்தோறும் விழாவாகவே நடைபெற்று வருகிறது. குடந்தையில் சார ங்க பாணிப் பெருமாள் தன் பக்தனுக்கு திதி கொடுக்கிறார். திலதர்ப்பணபுரியில் ஜடாயுவுக்கு ஸ்ரீராமன் தர்ப்பணமளிக்கிறார்.
செங்கல்பட்டுக்கு அருகில் நென்மேலி என்ற இடத்தில் உள்ள பெருமாளுக்கு ‘சிராத்த சம்ரட்சணப் பெருமாள்’ என்ற திருநாமம். தினமும் கோயில் குளக்கரை யில் பெருமாள் எழுந்தருளி மூதாதையருக்கு சிராத்தம் கொடுக்கிறார்.
கொடுமுடி, பவானி,திருப்புட்குழி, ராமேஸ்வரம், வேதாரண்யம், கன்னியாகுமரி போன்ற இடங்களில் ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும். ‘கூடுதுறை’ எனப்படும் ஆறுகள், கடல்கள் சங்கமமாகும் கரையோரங்களில் திரளாக மக்கள் கூடி அன்று பூஜை செய்வது வழக்கம்.
முண்டம், தண்டம், பிண்டம் என்றே முறையாக பித்ருபூஜை செய்யும் வழக்கமும் உண்டு. முண்டம் என்பது, அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் பித்ருக்க ளைப் பூஜித்து, முடி களைந்து நீராடி அட்சய வடத்தின் வேர்ப்பாகத்தைத் தரிசிப்பது. ‘தண்டம்’ என்பது, காசி சென்று ‘பஞ்சநதி சிராத்தம்’ செய்து, இறந்த முன்னோர்களைப் பூஜித்து கங்கையில் நீராடி ஸ்ரீவிசுவநாதர், அன்னபூரணி, கால பைரவர் ஆகி யோரை தரிசித்து தண்டம் சமர்ப்பிப்பதா கும். இங்கு அட்சய வடத்தின் மத்திம பாகத்தைத் தரிசிக்க வேண்டும். அடுத்து ‘பிண்டம்’ கொடுப்பது! கயையில் அட்சய வடத்தின் நுனி பாகத்தைத் தரிசித்து, பித்ருக்களிடம் பூஜை செய்தது திருப்தி தானா? குறைகளை மன்னிக்கவும் என வேண்டி, ஆல மரத்தடியில் நின்று வழிபட்டு வர வேண்டும்.
இவ்வாறு முறைப்படி பூஜை செய்து பித்ருக்களைத் திருப்திபடுத்துவதால் அவர்கள் நம்மை மனம் குளிர ஆசிர்வதிக்கின்றனர். அவர்கள் மனம் மகிழ்ந்து அளித்த நற் பலன்கள் அனைத்தும் சுவரில் எறிந்த பந்து போன்று நம்மிடம் திரும்பி வந்து சேரும். தெய்வத்தன்மை பொருந்திய பித்ருக்கள் கங்கை, அருகில் ஆடி அமாவாசை தினத் தன்று காத்து இருப்பது நம் ஐதீகம். சிரமம் பார்க்காமல் ஆடி அமாவாசை சென்று பித்ருக்களைக் கரைசேர்க்கும் பூஜையைச் செய்வது குடும்பத்துக்கு மிகவும் புண்ணி யம் சேர்க்கும்.