Home » சிறுகதைகள் » ஆடி அமாவாசை!!!
ஆடி அமாவாசை!!!

ஆடி அமாவாசை!!!

அமாவாசை அன்று காலையில் எழுந்து, அருகில் இருக் கும் ஆற்றிலோ, குளத்திலோ ஸ்நானம் செய்து விட்டு, இறந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். முறைப்படி தர்ப்பணம் செய்து வைக்கும் அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், குளக்கரைகளில், கடற்கரையோரங்களில் இருப்பார்கள்.

அவர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். அதன்பின்னர், முதியவர்களுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும். அமாவாசை அன்று வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்வார்கள்.

அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளும் இடம்பெற்றிருக்கும். விரதமிருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த எல்லா உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, துணிகள் வைத்து படைப்பவர்கள் துணிகளையும் வைத்து,

அகல் விளக்கேற்றி வைத்து, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு, படைத்த எல்லா உணவு, பதார்த்தங்களையும் தனித்தனியாக இலையோடு எடுத்து, வீட்டிற்கு வெளியில், உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.

காக்கைகள் உண்டபிறகு, வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவுமுறைகளுக்கேற்ப உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும். இறந்தவர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிரியமானவர்கள் பயன்படுத்த வேண்டும், பிறருக்கு தானமாகத் தரக் கூடாது. அமாவாசை விரதமிருப்பவர் காலையில் சாப்பிடக்கூடாது.

பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம். முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

முன்னோர் வழிபாடு

ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் திதி கொடுப்பது வழக்கம். முன்னோர் வழிபாடு குலம் காக்கும் என்பது ஆழ்ந்த நம்பிக்கை. இதற்காக ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் மக்கள் நீராடி முன்னோர்களுக்குத் திதி கொடுப்பது வழக்கம். அப்படித் திதி கொடுப்பதுடன் ஆடி அமாவாசையுடன் தொடர்பு கொண்ட இந்தக் கதையையும் நினைவுகூரலாம்.

சிறிய நிலப்பரப்புகளைக் ஆண்ட மன்னர்கள் பலர் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். இந்த ராஜ்ஜியங்களில் உருவான கதைகளும் பல்லாயிரக்கணக்கானவை. அவற்றில் ஒன்று அழகாபுரி அரசனின் கதை. இம்மன்னனுக்கு நெடுங்காலமாகக் குழந்தைப் பேறு இல்லை.

விரதங்கள் பல மேற்கொண்டு இறையருளால் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றான். அக்குழந்தை பிறந்த அன்றே அசரீரி ஒன்று ஒலித்தது. மார்க்கண்டேயன் போல் இக்குழந்தைக்கும் பதினாறு வயதே ஆயுள் என்று தெரிவிக்கப்பட்டது.

மன்னன் மன வேதனை அடைந்தான். காளி கோயிலுக்குச் சென்று கதறி அழுதான். காளியை உபாசனை செய்தான். காளி தோன்றி அவனுக்கு ஆறுதலளித்தாள். ஆயுளை உடனடியாக நீட்டிக்க அக்குழந்தைக்கு விதி இல்லை என்றும், தனது சக்தியால் பரிகாரம் ஒன்றினைக் கூறுவதாகவும் தெரிவித்தாள்.

அதன்படி பதினாறாவது வயதில் இந்த இளவரசன் இறந்த பின், உடலை எரியூட்டிவிடாமல், உயரிய குணங்கள் கொண்ட ஒரு பெண்ணுக்கு மணமுடித்துக் காட்டில் விட்டுவிடுமாறு கூறி மறைந்தாள் காளி. இதனால் தன் மகன் நீண்ட ஆயுள் பெறக்கூடும் என்பதை உணர்ந்த மன்னன் ஒருவாறு சமாதானம் அடைந்தான்.

ஆண்டுகள் உருண்டோடின. இளவரசன் ஆயுளும் முடிந்தது. கதறி அழுத மன்னனின் நினைவில் காளி கூறிய பரிகாரம் ரீங்காரமிட்டது. இளவரசனின் உடலை வாசனை திரவியங்களால் தூய்மைப்படுத்தி, அழகுபடுத்தி பட்டாடைகளையும், ஆபரணங்களையும் அணிவிக்கச் செய்தான். வாழ வழியில்லாத அனாதைப் பெண்ணை அழைத்து வரச் செய்து, இறந்த இளவரசனுக்கு மணம் முடித்தான்.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்பெண் தனிமையில் கதறி அழுதாள். இறந்த இளவரசனை மணந்ததால் சுமங்கலித்துவத்தை இழந்ததாக எண்ணி எண்ணிக் குமுறி அழுதாள். அவளது துயர் தீர ஈசன் திருவுளம் கொண்டான். இளவரசன் உடலை உயிர்ப்பித்து, அவளுக்குத் தீர்க்க சுமங்கலித்துவம் அளித்தான்.

இப்படியாக அந்த இளவரசனின் விதியானது அவனுடைய மனைவியின் பிரார்த்தனையால் மாறியது என்கிறது அந்தக் கதை. இக்கதையை ஆடி அமாவாசைக்கு முதல் நாள் படித்து, மறு நாள் அம்பிகைக்கு வெல்லப் பாயசம் செய்து நிவேதனம் செய்தால், பெண்களின் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்றும் ஈசன் வரமளித்தானாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top