கண்ணன் கதைகள்
அதிகாலை நேரம். தகதகவென வானில் தங்கப் பழம்போல் கதிரவன் புறப்பட்டுக் கொண்டிருந்தான். யமுனை நதிக் கரையில் சந்தியாவந்தனம் செய்துகொண்டிருந்தார் காலவ முனிவர்.
அர்க்கியம் விடுவதற்காக யமுனையின் புனிதநீரை இருகைகளிலும் அள்ளி எடுத்தார். கண்ணனை கடவுளை மனத்தில் தியானித்து “கேசவம் தர்ப்பயாமி! நாராயணம் தர்ப்பயாமி’ என்று விழிமூடி பக்தியுடன் அவர் அர்க்கிய மந்திரங்களை ஜபித்துக் கொண்டிருந்தபோது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. அர்க்கியம் சமர்ப்பிப்பதற்காக அவர் கைகளில் எடுத்த புனித நீரில், மேலிருந்து ஏதோ வந்து விழுந்தது.
கண்திறந்து பார்த்தார். அது எச்சில் தாம்பூலம்! வெற்றிலையை மென்றுவிட்டு இப்படித் தன் கைகளில் துப்பியவர் யார் என்று ஆகாயத்தைப் பார்த்தார். உயரத்தில் புஷ்பக விமானத்தில் மனைவியோடு உல்லாசமாகப் பறந்துபோய்க் கொண்டிருந்தான் ஒரு கந்தர்வன். காலவர் மனத்தில் சுறுசுறுவெனக் கோபம் பொங்கியது.
“”கையிலெடுத்த புனித நீரை அசுத்தப்படுத்தினானே! இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்குள் அந்த கந்தர்வன் தலை அறுபடட்டும்,” வாய்விட்டு சபித்தார்.
மீண்டும் “கிருஷ்ண கிருஷ்ண!’ என்று ஜபித்தவாறு தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டு சந்தியாவந்தனத்தை முடித்துக் கொண்டு ஆசிரமம் நோக்கி நடந்தார் .
அப்போது “நாராயண! நாராயண!’ என்று குரல்கொடுத்தபடி அவர் முன் தோன்றினார் நாரதர்.
“”நீங்கள் இப்படிச் செய்யலாமா?” என்று கேட்டார் அவர்.
“”என்ன செய்துவிட்டேன்?”
“”ஒன்றுமறியாத அப்பாவி கந்தர்வனை, அவன் தலை இன்று மாலைக்குள் அறுபட வேண்டும் என்று சபித்துவிட்டீர்களே! கந்தர்வர்கள் இப்போதுதான் தலையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் தலையை மாலைக்குள் எடுக்க நினைப்பது என்ன நியாயம்? அந்த கந்தர்வன் யாழிசையில் வல்லவன். அவன் இசைப்புலமையை மெச்சி உங்கள் கரத்தால் அவன் கழுத்தில் மாலை விழுந்தால் அது அவனுக்குப் பெருமை. ஆனால், அவன் கழுத்தே மாலைக்குள் விழவேண்டும் என்று நினைத்தால் அது சரியல்லவே!”
“”மகரிஷி! அவன் என் கைகளில் எச்சில் தாம்பூலத்தை உமிழ்ந்தான்”.
“”அது திட்டமிட்டுச் செய்த செயல் அல்ல முனிவரே! போகிற போக்கில் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்றே அறியாமல் அவன் துப்பினான். அது காற்றில் உங்கள் கரத்தில் வந்து விழுந்துவிட்டது. எச்சில் துப்பியது குற்றம்தான் என்றாலும். அதற்கு ஏதேனும் சிறுதண்டனை விதிக்கலாமே தவிர மரண தண்டனை வழங்குவது முறையா?”
காலவருக்குத் தாம் சபித்தது பிசகு என்று தெரிந்தது. ஆனால் சபித்ததைத் திரும்பப் பெற இயலாதே? இப்போது என்ன செய்வது? பரிதவிப்போடு நாரதரைப் பார்த்தார்.
நாரதர் மேலும் சொல்லலானார்: “”இப்போது உங்கள் தலைக்கே ஆபத்து வந்துவிட்டது முனிவரே! அவன் தலை மாலைக்குள் விழுந்தால் உங்கள் தலை இரவுக்குள் விழுந்துவிடும். கந்தர்வர்கள் ஒற்றுமை நிறைந்தவர்கள். தங்களில் ஒருவனைத் தக்க காரணமில்லாமல் சபித்துக் கொன்ற உங்களைச் சும்மா விட மாட்டார்கள்”.
முனிவர் திகைத்தார். “”அறியாமல் சபித்துவிட்டேன். இந்தச் சிக்கலிலிருந்து தப்பிக்க ஒரு வழிசொல்லுங்கள் சுவாமி!” அவர் கலக்கத்தோடு நாரதரை வேண்டினார்.
“”ஒரே வழிதான் இருக்கிறது. நீங்கள் கண்ணனது பக்தர் தானே! உடனடியாக துவாரகை சென்று கண்ணனைச் சரணடையுங்கள். நடந்தவற்றையெல்லாம் சொல்லி, கண்ணன் தான் அந்த கந்தர்வன் தலையை வீழ்த்தவேண்டும் என்று வேண்டுங்கள். கண்ணனால் கொல்லப்பட்டால் கந்தர்வர்கள் அடங்கி விடுவார்கள். கண்ணனை எதிர்க்கவோ, அவர் பக்தரான உங்களைத் தாக்கவோ அவர்கள் துணிய மாட்டார்கள். இதைத் தவிர வேறு வழியில்லை!”
“”இதோ இப்போதே புறப்படுகிறேன்!”
காலவர் கண்ணனை நோக்கிப் புறப்பட்டார். அவர் புறப்பட்டுப் போனதை உறுதி செய்துகொண்ட பின் நாரதர் “நாராயண! நாராயண’ என்றவாறு பாதிக்கப்பட்ட கந்தர்வனை நோக்கிப் புறப்பட்டார்.
காலவர் சொன்னது முழுவதையும் கேட்டுக் கொண்டான் கண்ணன்.
பக்தர்களைக் காப்பது தான் தன் லட்சியம் என்றும், அன்று மாலைக்குள் கந்தர்வன் தலையைத் தான் வீழ்த்துவது நிச்சயம் என்றும் வாக்குறுதி தந்தான்.
காலவரிஷி நிம்மதியாக ஆஸ்ரமம் போய்ச் சேர்ந்தார்.
நடந்த அனைத்தையும் நாரதர் மூலம் கேட்டறிந்த கந்தர்வன் பதறினான். “”அறியாமல் செய்த பிழைக்கு மரணதண்டனையா? கண்ணனே என்னைக் கொல்லப் போகிறானா?” கண்ணீர் விட்டுக் கதறினான். கந்தர்வனின் மனைவியும் உரத்த குரலெடுத்து அழலானாள்.
நாரதர் அவர்களை அமைதிப்படுத்தினார். கந்தர்வனின் மனைவியை உடனடியாக சுபத்திரையிடம் சரணடையுமாறு வற்புறுத்தினார். சுபத்திரை கண்ணனின் சகோதரி மட்டுமல்ல! மாவீரன் அர்ஜுனனின் மனைவியும் கூட! அவளைச் சரணடைந்தால் நல்லதே நடக்கும் என்றார் நாரதர்.
முந்தானையை எடுத்து இடுப்பில் செருகிக்கொண்ட கந்தர்வனின் மனைவி, விறுவிறுவென ஓர் ஆவேசத்தோடு சுபத்திரையின் மாளிகைக்குச் சென்றாள். அர்ஜுனன் அருகில் இல்லாத நேரத்தில் அவள் காலில் முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் சடாரென விழுந்தாள். விழுந்தவள் நீண்டநேரம் எழுந்திருக்கவே இல்லை.
ஒரு சுமங்கலி. கண்ணீரும் கம்பலையுமாய்த் தன் காலில் விழவேண்டிய அவசியமென்ன? கந்தர்வன் மனைவியைத் தொட்டுத் தூக்கி ஆறுதல் சொல்லி விவரம் கேட்டாள் சுபத்திரை.
“”என் கணவரை ஒருவர் இன்று மாலைக்குள் கொல்லப் போகிறார். என் கணவரைக் காப்பாற்றி என் மாங்கல்யத்தைக் காப்பதாக வாக்குறுதி கொடுங்கள் தாயே!”.
நாரதரின் அறிவுரைப்படி, தன் கணவரைக் கொல்லப்போவது கண்ணன் தான் என்பதை அப்போது சொல்லாமல் தவிர்த்தாள் அந்த புத்திசாலி மனைவி.
சுபத்திரை வாக்குறுதி தந்து, அவளை அர்ஜுனனிடம் அழைத்துப் போனாள்.
“”இவள் கணவரின் உயிரை நீங்கள் காக்க வேண்டும் பிரபோ! அவனைக் காப்பதாக வாக்குறுதி தாருங்கள்!” என்று சுபத்திரை வேண்டினாள்.
மனைவி கேட்டபின் சரியென்று தலையாட்டாத கணவனும் உண்டா? அர்ஜுனன் வாக்குறுதி தந்தபின், “”கொல்லப்படப் போவது கந்தர்வன் என்பது சரி. அவனைக் கொல்லப் போவது யார்?” என்று தாமதமாக விசாரித்தான்.
“”கண்ணன் கடவுள்!” என்றாள் கந்தர்வன் மனைவி.
அதைக் கேட்ட சுபத்திரை, அர்ஜுனன் இருவர் தலையும் கிறுகிறுவெனச் சுற்றியது. ஆனால், “”கொடுத்த வாக்குறுதி கொடுத்ததுதான். நான் கண்ணனை எதிர்த்துப் போரிடுவேன்!” என காண்டீபத்தோடு எழுந்தான் அர்ஜுனன்.
“தாங்கள் வழிபடும் கடவுளை எதிர்த்துப் போரா…!’ சுபத்திரை பதறினாள்….
கண்ணனுக்கும் அவன் பக்தனான அர்ஜுனனுக்கும் போர். என்ன விந்தையான காட்சி! இதைக் காண தேவர்கள் அனைவரும் வானில் கூடினார்கள். காலவ முனிவர், போர்க்களத்தில் கண்ணன் அருகே கைகூப்பி நின்று கொண்டிருந்தார். நாரதரும் வந்துசேர்ந்தார்.
விசித்திரமான போர்தான் அது. வழக்கம்போல் “கிருஷ்ண கிருஷ்ண!’ என்று ஜபித்தவாறே அம்புகளைக் கண்ணனை நோக்கி எய்தான் அர்ஜுனன். அவனது கிருஷ்ண பக்தி காரணமாகஅம்புகள் அனைத்தும் கண்ணன் கழுத்தில் பூமாலையாக விழுந்தன!
கண்ணன் எய்த அம்புகளும், அர்ஜுனனின் கிருஷ்ண பக்தி அவனைக் கவசம்போல் காத்ததால், அவன் கழுத்தில் மாலையாக விழத் தொடங்கின. இப்படிப் போர்க்களத்தில் கடவுளும் பக்தனும் மாற்றி மாற்றி மாலை மரியாதை நிகழ்த்திக் கொள்வதைப் பார்த்து நாரதர் திகைத்தார்.
“”கண்ணா! சூரியாஸ்தமனம் நடக்கப் போகிறது. உன் பக்தர் காலவர் சாபம் பலிக்குமாறு செய்வதாக நீ வாக்குறுதி கொடுத்திருக்கிறாய். அர்ஜுனனுடன் எதற்குப் போர்? நேரடியாக ஓர் அஸ்திரத்தை கந்தர்வன் கழுத்தை நோக்கி வீசு! தாமதம் வேண்டாம்!” நாரதர் கூற்றை ஏற்ற கண்ணன் நேரடியாக கந்தர்வனை நோக்கி அம்பு வீச, அந்த அம்பு அவன் கழுத்தை அறுத்துத் தலையை ஒரே கணத்தில் மண்ணில் வீழ்த்தியது.
கந்தர்வன் மனைவி ஓடோடி வந்து அர்ஜுனன் காலில் விழுந்தாள்.
“”சுவாமி! என் கணவர் உயிரைக் காப்பதாக வாக்குறுதி தந்தீர்களே? இப்படி நடப்பது நியாயமா?” என்று கதறினாள்.
நாரதர் ஒரு குறும்புப் புன்னகையுடன் கண்ணனிடம் கேட்டார்:
“”கண்ணா! காலவர் உன் பக்தர். அவர் சாபத்தைப் பலிக்கச் செய்வதற்காக நீ கந்தர்வனைக் கொன்றாய். சரி. ஆனால் அர்ஜுனனும் உன் பக்தன் தான்! அவன் வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டியதும் உன் கடமைதானே? அந்தக் கடமையில் நீ தவறலாமா? அப்புறம் உலகம் உன்னை என்ன சொல்லும்?”
கண்ணன் யோசித்தான்.
“”அதுவும் சரிதான்! என்று, கந்தர்வனை நோக்கி வலக்கரத்தை உயர்த்தினான். மறுகணம் அந்த அருளாசியால் கந்தர்வன் தலை அவன் உடலில் தானே உருண்டோடி வந்து, ஒட்டிக் கொண்டது. அவன் உயிர்பெற்று எழுந்தான்.
கந்தர்வனின் மனைவியும் கந்தர்வனும் கண்ணனையும், அர்ஜுனனையும் நாரதரையும் காலவ மகரிஷியையும் மகிழ்ச்சியோடு வணங்கினார்கள்.
பக்தர்களைக் காப்பதில் எந்த வேறுபாடும் காட்டாத கண்ணனின் அளப்பருங் கருணையை எண்ணி வானவர் சொரிந்த பூமாரியால் மண்ணகம் முழுவதும் நிறைந்தது.