Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » சூரிய குடும்பம் – 6

சூரிய குடும்பம் – 6

இன்று செவ்வாய்க் கிரகத்தைப் பற்றிய தகவல்களை பார்ப்போம்.

தரையின் சிவப்பு நிறம் காரணமாக ரெட் ப்ளானெட் என அழைக்கப்படும் செவ்வாய்,ரோமானியர்களின் யுத்தத்துக்கு உரிய கடவுளான மார்ஸ் எனும் பெயரை சூடியுள்ளது. சூரிய குடும்பத்தில் சூரியனிடமிருந்து 4வது இடத்தில் பூமிக்கு அடுத்ததாக இது காணப்படுகின்றது. செவ்வாய், போபோஸ் மற்றும் டெயிமோஸ் எனும் இரு துணைக் கோள்களைக் கொண்டுள்ளது.

துணைக்கோள் போபோஸ்

துணைக்கோள் டெயிமோஸ்

பூமியைப் போலவே துருவப் பகுதிகளைக் கொண்டுள்ள செவ்வாயில் சந்திரன் மற்றும் வெள்ளி ஆகிய கிரகங்களில் காணப்படுவது போலவே பாரிய குழிகளும் மேலும் மலைகள், பள்ளத்தாக்குகள், கால்வாய்கள், எரிமலைகள் மற்றும் பாலை வனங்கள் என்பனவும் காணப்படுகின்றன. சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய மலைத் தொடரான ஒலிம்பஸ் மொன்ஸ் செவ்வாயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பூமியில் காணப்படுவது போலவே செவ்வாயிலும் பருவ நிலை வட்டம் நிகழ்கின்றது. மிகவும் மெல்லிய வளி மண்டலத்தை உடைய செவ்வாயில் கார்பனீரொட்சைடு வாயுவே அதிகம் உள்ளது.

ஓலிம்பஸ் மலை

தரைப்பகுதி சிவப்பாகக் காணப்படுவதற்குக் காரணம் அதில் மேற்பரப்பில் உள்ள துரு அல்லது இரும்பு ஒக்ஸைட்டு ஆகும். துருவப்பகுதிகளில் உள்ள பனி பெரும்பாலும் கார்பனீரொட்சைட்டின் உலர்ந்த வடிவமாகும்.

செவ்வாய்க் கிரகமே அதிகளவு விண்கலங்கள், தொலைக்காட்டிகள் மற்றும் செய்ம்மதிகள் மூலம் ஆராயப்பட்ட கிரகமாகும். 1965ம் ஆண்டு நாசாவால் செலுத்தப்பட்ட மரீனெர் 4 செவ்வாயின் மேற்பரப்பில் நீர் உள்ளதா என ஆய்ந்தது. இதையடுத்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் செவ்வாயில் ஒரு காலத்தில் மிக அதிகளவு நீரும் பூமியில் உள்ளது போலவே கடலும் காணப்பட்டதற்கான சாத்தியக் கூறுகள் கிடைத்தன.

 

பூமியும் செவ்வாயும்

சமீபத்தில் 2007ம் ஆண்டு மார்ச்சில் ஏவப்பட்ட நாசாவின் போஃனிக்ஸ் லேண்டர் செவ்வாயின் மார்ட்டியன் நிலம் எனும் ஆழம் குறைந்த தரையில் 2008 ஜூலை 31 இல் இறங்கி பனித் துகள்கள் குறித்து ஆராய்ந்தது. தற்போது செவ்வாயின் சுற்றுப் பாதையில் மூன்று விண்கலங்கள் இயங்குகின்றன. அவை மார்ஸ் ஒடிஸ்ஸி, மார்ஸ் எக்ஸ்பிரெஸ், மற்றும் மார்ஸ் ரெக்கொன்னைசன்ஸ் ஆர்பிட்டர் என்பனவாகும்,

மேலும் நாசாவின் இரு இரட்டை வண்டிகளான ஸ்பிரிட் மற்றும் ரோவர் என்பன செவ்வாயின் தரையில் இறங்கி அதன் மேற்பரப்பின் இயல்புகளை ஆராய்ந்தன. இவை ஆரம்பத்தில் ஒழுங்காக இயங்கிய போதும் சில மாதங்கள் கழித்து இவற்றுடன் தொடர்புகளை மேற்கொள்வதில் தடங்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து நாசாவால் செலுத்தப்பட்ட மார்ஸ் குளோபல் செர்வெயோர் எனும் செய்மதி செவ்வாயின் தென் துருவத்தை ஆராய்ந்து அங்கு பனிப் பாறைகள் விலகுவதைக் கண்டுபிடித்தது. செவ்வாய்க் கிரகம் இத்தனை தீவிரமாக விஞ்ஞானிகளால் ஆராயப்படுவதற்குக் காரணம் அங்கு உறை நிலையிலோ வாயு நிலையிலோ நீர் காணப்படுமிடத்து வருங்காலத்தில் அங்கு மனிதன் குடியேற முடியும் என்பதாகும்.

ஸ்பிரிட் விண்வண்டி

ரோவர் விண்வண்டி

இனி செவ்வாய்க்கிரகம் குறித்த சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம் –

1.சூரியனிடம் இருந்து அமைந்துள்ள அதிக பட்ச தூரம் – 249 209 300 Km அல்லது 1.665 861 AU
2.சூரியனிடம் இருந்து அமைந்துள்ள குறுகிய தூரம் – 206 669 000 Km அல்லது 1.381 497 AU
3.தனது அச்சில் சரிவு – 25.19 பாகை
4.தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் – 24.6229 புவி மணித்தியாலங்கள்
5.சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் நேரம் – 686.98 நாட்கள்
6.சுற்றுப் பாதையில் பயணிக்கும் வேகம் – 24.1309 Km/s
7.கோளின் விட்டம் மையக் கோட்டினூடாக – 6794.4 Km
8.மேற்பரப்பளவு – 144 மில்லியன் Km2
9.திணிவு – 6.4191 * 10 இன் வலு 23 Kg
10.சராசரி அடர்த்தி – 3.94 g/cm3
11.மேற்பரப்பு ஈர்ப்பு சக்தி – 3.71 m/s2
12.தப்பு வேகம் – 5.02 Km/s
13. மேற்பரப்பு வெப்பநிலை – குறுகியது 133K மத்திய 210K அதிக 293K

செவ்வாயின் வளிமண்டலத்திலுள்ள வாயுக்களின் வீதங்கள் –

1.காபனீரொட்சைட்டு – 95.32%
2..நைதரசன் – 2.7%
3.ஆர்கன் – 1.6%
4.ஒக்ஸிஜன் – 0.13%
5.நீராவி – 0.03%
6.ஓசோன் – மிகக் குறுகியளவு

வெறும் கண்களால் பார்க்கும் போது சந்திரனுக்கு அண்மையில் பிரகாசமான நட்சத்திரம் போல் தென்படும் செவ்வாய் தொலைக் காட்டிகளாலும் தெளிவாக அவதானிக்கத் தக்கது. அமெரிக்காவின் மரீனர் 4 செய்மதியைப் போலவே முந்தைய சோவியத் ஒன்றியம், ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் செவ்வாய் குறித்து ஆராய்வதற்கு ஆர்வம் காட்டின.

செவ்வாயின் தோற்றம் பற்றி நோக்கும் போது விஞ்ஞானிகள் கருதுவது என்னவென்றால் சூரிய குடும்பம் தோன்றும் போது இத்தொகுதியில் காணப்படும் தூசு துகள்களுடன் விண்கற்கள் மோதியதால் செவ்வாய் உருவானதாகவும் பின்னர் சூரியனால் ஈர்க்கப்பட்டு அதைச் சுற்றி வர நேரிட்டதாகவும் கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் அதிகளவு எரிமலைகள் தொழிற்பட்டு வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டு நிரம்பியதாகவும் கூறப்படுகின்றது. செவ்வாயின் தரைப் பகுதி மூன்று பகுதிகளாக வகுக்கப்பட்டு நோக்கப் படுகின்றது.

அவையாவன :

1.தெற்கு உயர் நிலம்
2.வடக்கு சமநிலம்
3.துருவப் பகுதிகள்

தெற்கு உயர் நிலம் மிகப் பெரியதாகும். இங்கு சந்திரனில் காணப்படுவது போன்று குழிகள் காணப்படுகின்றன. 3.9 மில்லியன் வயதுடைய இம்மலைப்பகுதி மிகப் பழையதாகும் வடக்கு சமநிலம் மிகத் தாழ்ந்த பகுதியாகும். மிகப் பழைய காலத்தில் இங்கு பூமியில் உள்ளதைப் போலவே கடல்கள்,அருவிகள்,மற்றும் நீர் வீழ்ச்சிகள் என்பவற்றுடன் எரிமலைகளும் இருந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. துருவப் பகுதிகளை எடுத்து நோக்கினால் நாம் சாதாரண தொலைக் காட்டிகள் மூலம் அவதானிக்கும் போது கூட தெளிவாகத் தென்படுவனவாகும். நாசாவின் போஃனிக்ஸ் லேண்டர் இந்த துருவப் பகுதியிலேயே (தென் துருவம்) இறங்கி பனிக்கட்டிகளைக் குடைந்து நீர் மூலக்கூறுகளைத் தேடியமை குறிப்பிடத்தக்கது.

செவ்வாயின் மையத்திலிருந்து சராசரியான ஆரை 1500 – 2000 Km இடையில் அமைந்துள்ளது. இதன் உட்பகுதி பெரும்பாலும் இரும்பு கலவையினாலும் சல்ஃபர் மற்றும் சிலவேளைகளில் ஒக்ஸிஜனாலும் ஆக்கப்பட்டுள்ளது. பூமியைப் போலவே இதன் மையத்தில் அமைந்துள்ள திரவமான மன்டெல் சிலிக்கேட்டால் ஆனதாகும். இதன் அடர்த்தி 1300 – 1800 Km இடைப்பட்டதாகும். சூரியனுக்கு அண்மையிலுள்ள ஏனைய கிரகங்களைப் போலன்று செவ்வாயின் வளி மண்டலம் அடர்த்தி குறைவாகக் காணப்படுவதால் அதனால் வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடிவதில்லை. எனினும் எரிமலைகளின் தொழிற்பாடு காரணமாகவும் தரையின் இயல்பினாலும் அதன் மேற்பரப்பு வெப்பநிலை பூமியை விட அதிகம். இதனால் திரவ நிலையில் அங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு.

இதன் மேற்பரப்பில் அடிக்கடி நிகழும் மணற் புயல் காரணமாக இதன் தரை வேறுபாடுகளை உயர்ரக விண் தொலைக்காட்டிகளால் கூட தெளிவாக அவதானிக்க முடியாத தன்மை நிலவுகின்றது. இதுவரை செவ்வாய்க் கிரகம் பற்றிய பௌதிக மற்றும் விண்ணியல் தகவல்களைப் பார்த்தோம். எதிர்வரும் தொடரில் தரையில்லாத அடர்ந்த வாயுக்கோள்களில் முதலாவதாகவும் சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமாகவும் விளங்கும் வியாழன் குறித்த தகவல்களை ஆராய்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top