Home » சிறுகதைகள் » பொறாமைக்காரர்கள்!!!
பொறாமைக்காரர்கள்!!!

பொறாமைக்காரர்கள்!!!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு உண்டு என்பது போல, கிருஷ்ண தேவராயர் நல்ல மணம் நிறைந்த மலர்ச் செடிகளை வளர்ப்பதைத் தன் பொழுது போக்காகக் கொண்டிருந்தார்.

அரண்மனைத் தோட்டத்தில் தோட்டக்காரனைக் கொண்டு விதம் விதமான மலர்ச் செடிகளையும், கொடிகளையும் வளர்த்து வந்தார்.

நல்ல மணம் தரும் பூக்கள் திடீர் திடீரென காணாமல் போய்விடும். இவ்விதம் திருட்டுப் போவது பற்றி அறிந்து பெரிதும் வேதனைப்பட்டார் மன்னர். காவலர்கள் பலர் இருந்தும், இவ்விதம் திருடிச் செல்கிறார்களே… என்பது மன்னருக்கு வருத்தத்தையே அளித்தது.

ஒருநாள் இவ்விதம் திருட்டுப் போவதைப் பற்றி வேதனையுடன் அனைவரிடமும் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அன்று ஏதோ சொந்த வேலையை முன்னிட்டு வெளியூர் சென்றிருந்த அப்பாஜியால், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

அப்பாஜியின் மீது பொறாமை கொண்ட அமைச்சர்கள் அவர் மீது பழியைச் சுமத்தி விட்டனர். அவர்தான் அரண்மனைத் தோட்டத்திலிருந்த பூச்செடிகளைப் பிடுங்கிச் சென்று, அவருடைய தோட்டத்தில் நட்டு வைப்பதாகத் துணிந்து பொய் சொன்னார்கள்.

அதனால் தோட்டக்காரனுக்குப் பணம் கொடுத்து அவனைத் தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு, அன்று இரவு அரண்மனைத் தோட்டத்திலிருந்து செடிகள் சிலவற்றைப் பிடுங்கி, அப்பாஜி ஊரில் இல்லாத காரணத்தால் அவருடைய தோட்டத்தில் நட்டு வைத்து விட்டனர்.

மேலும், அந்தப் பொறாமைக்காரர்கள், அப்பாஜியின் வீட்டுத் தோட்டத்திற்கு சென்று பார்த்தால் உண்மை தெரியவரும் என்று கூறியிருந்ததால், மன்னர் கிருஷ்ண தேவராயருக்கு அங்கு சென்று பார்த்தால் என்ன என்ற எண்ணம் உண்டாயிற்று.

எனவே, விடியும் முன்னர் மாறுவேடம் பூண்டு அப்பாஜியின் வீட்டுத் தோட்டத் திற்குச் சென்று பார்க்கவும், அந்தப் பொறாமைக்காரர்கள் சொன்னது போன்று அரண்மனைத் தோட்டத்திலுள்ள பூச்செடிகள் அங்கு நடப்பட்டிருந்ததைக் கண்டு ஆத்திரப்பட்டார்.

அவ்வேளை, வெளியூரிலிருந்து வீடு திரும்பிய அப்பாஜி, மன்னர் மாறுவேடத்தில் தன் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டு இருந்ததைக் கண்டு, “”மன்னர் அவர்களே வணக்கம்! இவ்வளவு அதிகாலையில் மாறுவேடமுடன் ஏதோ துப்புத் துலக்க வந்தவர்கள் போல வந்திருக்கிறீர்களே என்ன விஷயம் என்பதை நான் அறியலாமா,” என்று புன்னகையுடன் கேட்கவும், மன்னர் கொஞ்சம் ஆத்திரப் பட்டுத் தான் பேசினார்.

“”அப்பாஜி, காரணம் இல்லாமல் ஒன்றும் நான் வரவில்லை. அரண்மனைத் தோட்டத்துப் பூச்செடிகள் திருடுப் போய்க் கொண்டிருந்தன. நீங்கள்தான் பிடுங்கி வந்து இங்கு நட்டு வைத்திருக்கிறீர்கள் என்று அமைச்சர்கள் சொன்னார்கள். அது சரியாகத்தான் போயிற்று,” என்று கொஞ்சம் ஆத்திரத்துடன் பேசினார் மன்னார்.

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்று எண்ணிய அப்பாஜி, அரசரிடம் எதையும் கூறவில்லை. நாம் ஊரில் இல்லாத நேரம் பார்த்து அந்தப் பொறாமைக்காரர்கள் எதையோ கூறவும், அரசரும் நம்பி விட்டார் என்று எண்ணிய அப்பாஜி, எதையும் பேசாமல் பேச முடியாமல் அவ்விதமே நின்றுவிட்டார். தன்னைப் பற்றி நன்கு தெரிந்தும் இவ்விதம் பேசி விட்டாரே என்ற வருத்தம் அவருக்கு.

மன்னர் ஆத்திரமுடன் எதை எதையோ பேசினாலும், அப்பாஜி நிதானம் இழந்துவிடவில்லை. கிருஷ்ண தேவராயராக இங்கு வரவில்லை. அந்தப் பொறாமைக்காரர்களின் தூண்டுதலால்தான் வந்திருக்கிறார் என்பதை உணர்ந்தார். இருந்தாலும் இவர் இவ்வளவு ஆத்திரமுடன் பேசியிருக்க வேண்டிய தில்லை என்று எண்ணி வருந்தத்தான் செய்தார்.

தாம் ஊரில் இல்லாத போது பொறாமைக்காரர்கள் இது போன்ற செயல்களில் இறங்கியுள்ளனர். அரசரும் அவர்கள் பேச்சை நம்பி விடவே, அவர்களால் பிடுங்கிக் கொண்டு வந்து நடப்பட்ட செடிகளைப் பார்த்ததும் ஆத்திரம் வந்து பேசிவிட்டார் என்று எண்ணி அமைதியடைந்தார்.

“”அரசே, இந்தத் திருட்டுச் செயலை யார் செய்தார்கள் என்பதை நான் இரண்டு நாட்களில் நிரூபித்து விடுவேன். ஒருவேளை, இரண்டு நாட்களில் நான் நிரூபிக்காவிட்டால் நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் நான் பெற்றுக் கொள்ளுகிறேன்,” என்றார் அப்பாஜி மிகவும் அமைதியாக.

இவ்வளவு சொன்னபிறகும் மன்னரின் முகத்தில் மகிழ்ச்சி பிறக்கவில்லை. வேண்டா வெறுப்பாக அதற்கு இசைவு தெரிவித்தார்.

அப்பாஜி, அரசரின் அவசர புத்தியை எண்ணி வேதனைப்பட்டார். என்னதான் அந்தப் பொறாமைக்காரர்கள் கூறினாலும், நிதானமாக எண்ணிப் பார்த்துப் பேசியிருக்கலாமே… நம்மிடம் இத்தனை ஆண்டு காலம் பழகி வந்த அரசர் ஏன் இவ்விதம் நிதானம் இழந்தவராய்ப் பேசினார் என்பதை எண்ணி வேதனை அடைந்தார்.

மறுநாள் தம்முடைய வீட்டுத் தோட்டத்து மண்ணை ஒரு பூந்தொட்டியில் நிரப்பிக் கொண்டு வந்து மன்னரிடம் கொடுத்து, அதில் அரண்மனைத் தோட்டத்துச் செடி ஒன்றைப் பிடுங்கி நட்டு வளர்க்கச் சொல்ல வேண்டும் என்று எண்ணி, மன்னரிடம் கேட்டுக் கொண்டதோடு தோட்டக்காரனையும் கூட்டி வந்து விட்டார்.
மன்னர் எதுவும் பேசாமல் நின்றார்.

“”இந்த மண்ணில், அதாவது எங்கள் வீட்டுத் தோட்டத்திலுள்ள மண்ணில் அரண்மனைத் தோட்டத்துச் செடிகள் வளருகின்றனவா என்று பார்க்கலாம். அதற்காகத் தான் இந்த மண்ணில் நடச் சொல்லுகிறேன்,” என்றார்.

அப்பாஜி கூறிய வண்ணம், அவர் கொண்டு வந்த தொட்டியிலுள்ள மண்ணில் ஒரு செடியை நட்டுத் தண்ணீரும் விட்டுப் பார்த்தார். தொடர்ந்து இரண்டு நாட்கள் இதைப் போல விட்டுப் பார்க்கச் சொன்னார்.

“”நீங்கள் இவ்விதம் சொல்லுகிறீர்கள். ஆனால், நான் அதிகாலையில் வந்து பார்த்த போது அந்தச் செடிகள் எல்லாம் வாடாமல் இருந்தனவே,” என்றார் மன்னர்.

“”இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது. அந்தப் பொறாமைக்காரர்கள் அந்தச் செடிகளை அப்போதுதான் நட்டிருப்பர். முந்தின நாள் இரவு நேரத்தில் தானே கூட்டம் நடந்தது. எனவே, நீங்கள் அடுத்த நாள் காலைவேளையில் வந்து பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் இரவு வேளையில் கொண்டு வந்து நட்டிருக்கின்றனர். இப்போது பனிக்காலமாதலால் செடிகள் எதுவும் வாடாமல் உங்கள் கண்களுக்குத் தெரிந்திருக்கின்றன. இப்போது வந்து பாருங்கள். அவர்கள் நட்ட செடிகள் எல்லாமே வாடிப் போய் விட்டன,” என்றார் அப்பாஜி கொஞ்சம் வேதனையுடன்.

அப்போதுதான் அரசர் எண்ணலானார்; நாம் அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விட்டோமோ என்று எண்ணி வருந்த ஆரம்பித்தார்.

இதை அவருடைய முகம் காட்டிக்கொடுத்து விட்டது. ஆத்திரத்தில் அறிவை இழந்து பேசிய பின்னர் அதன் பிறகு வருந்தி என்ன பயன்?

அதன் பின்னர், அப்பாஜி கூறிய வண்ணம் அவருடைய திருப்திக்காக அரண்மனைத் தோட்டத்திலிருந்தும் ஒரு பூச்செடியை வேருடன் பிடுங்கி அப்பாஜி கொண்டு வந்திருந்த அவருடைய தோட்டத்து மண்ணில் நட்டுத் தண்ணீர் ஊற்ற சொன்னார். அந்தச் செடி ஒரு மணி நேரத்திற்குள் வாடித்தலை சாய்ந்து விட்டது. மாலை வேளைக்குள் அது நன்றாகக் காயவும் தொடங்கியது.

அப்போது தான் கிருஷ்ண தேவராயருக்கு அந்தப் பொறாமைக்காரர்களின் செயல் தெரிய வந்தது. பெரிதும் ஆத்திரப்பட்டார். அவர்கள் அனைவரையும் மறுநாள் காலையில் வரவழைத்து அப்பாஜி கொண்டு வந்த மண்ணில் நடப்பட்ட செடியைப் பார்க்கச் சொன்னார். அவர்கள் புரிந்து கொண்டனர்.

மன்னர் அவர்களிடம், “”நீங்கள் அனைவரும், அப்பாஜியின் மீது பழி சுமத்த வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அதிகாலை வேளையில் அரண்மனைத் தோட்டத்துச் செடிகளைப் பிடுங்கிக் கொண்டு சென்று நட்டீர்கள் அல்லவா, அவைகளையும் சென்று பார்த்து வாருங்கள்,” என்றார்.

அவர்கள் அனைவரும் தலை குனிந்து நின்றனர். தங்களுடைய செயல்கள் இவ்வளவு விரைவில் வெளிப்படும் என்று எதிர்பார்க்க வில்லை.

“”அரசே, எங்களை மன்னிக்க வேண்டுகிறோம். அப்பாஜி மீது பழி சுமத்த எண்ணி அவர் இல்லாத போது இவ்விதம் நடந்து கொண்டோம்,” என்று கூறிக் கண்ணீர் வடித்தனர்.

“”உங்களை மட்டும் கூறிப் பயனில்லை. நானும் முட்டாள் தனமாக நடந்து கொண்டதை எண்ணித்தான் வருந்துகிறேன். விடிந்ததும் விடியாததுமாக அப்பாஜியின் வீட்டுக்குச் சென்று பார்க்கப் போனது மட்டுமின்றி, ஆத்திரமுடன் பேசி அவரை நோகச் செய்தேன் பாருங்கள். அது நீங்கள் செய்த அறிவீனத்தை விடவும் பெரிய அறிவீனமாகும். ஆக, உங்களின் செயலுக்குத் தண்டனை வழங்க நான் தகுதியற்றவனாகி விட்டேன். நான் சிந்திய அந்தச் சுடு சொல் அவருடைய உள்ளத்தை எவ்வளவு சுட்டிருக்கும்!” என்று எண்ணி வருந்திக் கூறவும், அதைக் கேட்ட வண்ணம் வந்த அப்பாஜி “”வருந்தாதீர்கள், ஆத்திரம் அறிவை இழக்கச் செய்து விட்டது என்று எண்ணி அமைதியடைய முயலுங்கள்,” என்று கூறவும் அப்பாஜியின் கரங்களைப் பற்றி நின்றார் மன்னர்.

அப்போது அவருடைய கண்களில் நீர் திரண்டு நின்றது. அவரை நாவினால் சுட்டு விட்டோமே என்று எண்ணியதால், பிறந்த கண்ணீர்தான் அது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top