சமுதாய அமைப்பு
சமூகத்தில் நான்கு பிரிவுகள் இருந்தன.
- உயர் குடியினர்
- நடுத்தர வர்க்கத்தினர்
- அடித்தட்டு மக்கள்
- அடிமைகள்
உயர் குடியினர் என்பவர்கள், எந்த வேலையும் பார்க்காதவர்கள். ஏராளமான சொத்து சுகம் படைத்தவர்கள். கணக்கற்ற அடிமைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள். எல்லா வேலைகளுக்கும் இவர்களால் அடிமைகளை ஏவ முடியும், ஒவ்வொரு நாளின் 24 மணி நேரத்தையும் தங்கள் விருப்பம்போல் செலவிடும் சுதந்தரம் கொண்டவர்கள். கலைகள், இலக்கியம், தத்துவம் ஆகியவற்றை வளர்க்கவும், அரசியல், நிர்வாகம் ஆகிய சமுதாயத் துறைகளில் பணியாற்றவும், வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டுவிட்ட இவர்களால்தான் முடியும் என்று கிரேக்க சமுதாயம் நம்பியது.
நாட்டு சேவைக்கும், வருங்கால சமுதாயத்தை உருவாக்கவும் முக்கியமானவர்கள் என்பதால், இவர்களைச் சமூக ஏணியின் உயர்தட்டில் தூக்கிவைத்து மதித்தார்கள்.
வியாபாரிகள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், கைத்தொழில் விற்பன்னர்கள், போன்றோர் நடுத்தர வர்க்கத்தினர். இவர்கள் பணபலம் படைத்தவர்கள். இவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. இவர்கள் தங்கள் வர்க்கம், அடித்தட்டு மக்கள் ஆகியோரோடு மட்டுமே திருமண உறவு வைத்துக்கொள்ள முடியும். உயர்குடியினரோடு திருமணம் செய்துகொள்வது சமூகத்தாலும், சட்டங்களாலும் தடுக்கப்பட்டிருந்தது.
அடிமைகளாக வாழ்க்கையைத் தொடங்கிய சிலர் கல்வி அறிவு பெற்றார்கள், வியாபாரிகளாக, கலைஞர்களாக, கைத்தொழில் விற்பனர்களாக, தங்கள் எஜமானர்களின் குழந்தைகளுக்கு ஆசிரியர்களாக உருவெடுத்தார்கள். இவர்கள் சமுதாய மூன்றாம் படியில், அடித்தட்டு மக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.
அடிமைகள் பரிதாபத்துக்குரிய ஆத்மாக்கள். யுத்தக் கைதிகள், அநாதைகள், குற்றவாளிகள், அடிமைக் குடும்ப வாரிசுகள் ஆகியோர் அடிமைகள். ஒரு சில கருணைமிக்க குடும்பங்கள் இவர்களை அன்போடு நடத்தியதும், கல்வி கற்க அனுமதித்ததும் நிஜம் என்றபோதும், பெரும்பாலான குடும்பங்களில் அரை வயிற்றுச் சோறு, தூக்கமே இல்லாமல் இடுப்பு ஒடியும் வேலை, சின்னச் சின்னத் தப்புக்கும் ரத்தம் பீறிவரும் சாட்டை அடி என ஓடியது இவர்கள் வாழ்க்கை.
அன்றாட வாழ்க்கை
வீடுகள்
மலையும், மலை சார்ந்த குறிஞ்சிப் பிரதேசமாக நாடு இருந்ததால், தாராளமாகக் கிடைத்தவை கற்கள்: கண்ணில் எப்போதோ பட்டவை மரங்கள். இதனால்,வீடுகள் பெரும்பாலும் கருங்கல், செங்கல், சுண்ணாம்பு ஆகியவை கலந்து கட்டப்பட்டன. களிமண் செங்கல், சுண்ணாம்பு ஆகியவை. மர சாமான்கள் ஒரு சில வீடுகளில் மட்டுமே இருந்தன. அகன்று விரிந்த முற்றம், அதைச் சுற்றி அறைகள். இதுதான் பொதுவாக வீடுகளின் அமைப்பு.
முற்றம்தான் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடும் இடம், விருந்தோம்பும் இடம்.
வீட்டில் பெரிய அறை ஆன்ட்ரான் (Andron). இது ஆண்கள் மட்டுமே பயன்படுத்தும் அறை. நிறையப் பேருக்கு விசேட நாட்களில் விருந்துகள் நடத்தவும் ஆண்ட்ரானைப் பயன்படுத்தினார்கள், இதேபோல் பெண்களின் உபயோகத்துக்காகவே இருந்த அறை கினைக்கான் (Gynaikon). வீட்டில் விசேஷங்கள் நடக்கும்போது ஆண்கள் கூட்டம் ஆன்ட்ரானில் கூடும்: பெண்கள் கினைக்கானில் சந்திப்பார்கள்.
கிரேக்கர்கள் கலைப் பிரியர்கள். எல்லா வீடுகளிலும் சிற்பங்கள் இருந்தன. பெண்கள் கிண்ணங்கள், கூஜாக்கள், தொட்டிகள், பானைகள் ஆகிய மண்பாண்டங்கள் செய்தார்கள். அவற்றில் அழகான ஓவியங்கள், கதைக் காட்சிகள் ஆகியவற்றைத் தீட்டினார்கள். இவையும், கைவினைக் கலைஞர்களின் படைப்புக்சளும் வீடுகளை அலங்கரித்தன.
வீடுகளில் பூஜை அறைகள் இருந்தன. அங்கு நெருப்பு குண்டங்கள் வைத்திருப்பார்கள். மூதாதையர்கள் அக்னி வடிவில் தங்களைப் பாதுகாப்பதாக அவர்கள் நம்பிக்கை. விசேட நாட்களில் நெருப்பில் சாம்பிராணி போடுவார்கள். விக்கிரகங்களுக்கு ஆலிவ் எண்ணெய் அபிஷேகம் செய்யும் பழக்கமும் உண்டு. வழிபாட்டில் டிதிர்ரம் (Dithyram) என்ற கடவுள் உச்சாடனப் பாடல்கள் பிரபலம்.
உணவு
கோதுமை ரொட்டி முக்கிய உணவாக இருந்தது. காலை, பகல், இரவு என எல்லா வேளைகளிலும் ரொட்டி. சூரியன் உதயமானவுடன் ரொட்டியைத் திராட்சை ரசத்தில் தோய்த்துச் சாப்பிடுவார்கள், மதியம் திராட்சை ரசத்தில் முக்கிய ரொட்டி, ஆலிவ், அத்திப் பழங்கள், பாலாடை, சமைத்த மீன். இரவுச் சாப்பாடு சூரியன் மறையும் வேளையில் நடக்கும்,விலாவாரியாக இருக்கும். சமைத்த காய்கறிகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள், மீன், தேன் ஊற்றிய இனிப்புகள் என ஏராளம் ஐட்டங்கள். கிரேக்கர்களுக்குக் கரும்பு, சீனி ஆகியவைபற்றித் தெரியாது. இனிப்புச் சுவைக்குத் தேன் மட்டுமே பயன்பட்டது.
கோவில் திருவிழாக்களில் மாடு, பன்றி ஆகியவை நூற்ற்க்கணக்காகப் பலியிடப்படும். அந்த மாமிசம் சமைக்கப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டது. பணக்காரர்கள் தவிர்த்த மற்றையோர் மாமிசம் உண்டது அப்போது மட்டும்தான்.
ஏழையரும், செல்வந்தரும் எப்போதும் அருந்திய பானம் திராட்சை ரசம். பழ ரசம், புளிக்கவைத்த ஒயின் என இருவகைகளிலும் ரசிக்கப்பட்டது. ஒயினை அப்படியே குடிப்பது நாகரிகமற்ற செயல். தண்ணீர் சேர்த்துத்தான் பருகினார்கள். சாப்பிடக் கரண்டிகள் கிடையாது, கைகள்தாம்.
உடைகள்
கம்பளி, லினன் ஆகியவற்றால் ஆண்களுடையவும், பெண்களுடையவும் உடைகள் செய்யப்பட்டன. ஆடைகளை வீட்டுப் பெண்கள் தைத்தார்கள். செல்வந்தர் வீடுகளில் அடிமைகள் வீட்டுப் பெண்களின் மேற்பார்வையில் தைப்பார்கள். இறுக்கமான உடைகளை அணிவது பண்பற்ற செயல். ஆண், பெண் ஆகிய இருபாலரின் உடைகளும் ட்யூனிக் (கூதணடிஞி) என்று அழைக்கப்பட்டன. பெண்களின் ட்யூனிக் முட்டிவரை நீளம்: ஆண்களின் ட்யூனிக் இன்னும் குட்டையானது.குளிர் காலங்களில் தடிமனான கம்பளிப் போர்வைகள் அணிவார்கள்.
ஆடுகளின் உடலிலிருந்து கம்பளி நூலை எடுப்பார்கள். சுடு தண்ணீரில் ஊறவைத்து எண்ணெய்ப் பசை, அழுக்குகள் ஆகியவற்றை நீக்குவார்கள். பணக்காரர்கள் மட்டுமே கம்பளி நூலைச் சாயங்களில் ஊறவைத்து வண்ண வண்ண ஆடைகள் அணிந்தார்கள். ஓக் மரப் பட்டை, மர வேர்கள், செடிகளின் தண்டுகள், உலர்ந்த இலைகள் ஆகியவை சாயம் பூசும் மூலப் பொருட்கள்.
லினன் ஆடைகள் தயாரிப்பது இன்னும் சிரமான காரியம். செடிகளைப் பிடுங்கிவரவேண்டும், தண்டுப் பகுதியைப் பிரித்து எடுக்கவேண்டும், நாரை எடுக்கவேண்டும், நாரில் ஊடுருவி இருக்கும் வித்துக்களை அகற்றவேண்டும்,
வீடுகளில் தறிகள் உண்டு. கம்பளி, லினன் ஆகியவற்றின் நூலை வீட்டுப் பெண்கள் தறிகளில் ஆடைகளாக நெய்வார்கள்.
ஆண்களும், பெண்களும் காலணி அணியும் பழக்கம் இருந்தது, மிருகங்களின் தோல் இதற்குப் பயன்பட்டது. இறந்த மிருகங்களின் தோலை உரித்து எடுப்பார்கள். அவற்றை வெந்நீர், புறாக்களின் எச்சம் கலந்த சுடுநீர் ஆகியவற்றில் ஊறப் போடுவார்கள். அப்போது உரோமங்கள், தோலில் ஒட்டியிருக்கும் மாமிசத் துண்டுகள் ஆகியவை போய்விடும், இந்தத் தோலில் எண்ணெய் போட்டுத் தேய்த்து மிருதுவாக்குவார்கள். பிறகு, எண்ணெய், மூலிகைகள் ஆகியவற்றில் பல வாரங்களுக்கு ஊறவைப்பார்கள். காலணிகளும், பை போன்ற பொருட்களும் செய்ய இப்போது தோல் தயார்!
ஒப்பனை
சிகை அலங்காரம் காலப்போக்கில் பல மாற்றங்கள் கண்டது. ஆரம்ப காலங்களில் ஆண்கள் நீண்ட தலைமுடியும், தாடியும் வளர்த்தார்கள். பின்னாட்களில், தாடி வளர்ப்போர் எண்ணிக்கை குறைந்துபோனது.
பெண்களுக்கு நீளத் தலைமுடி அழகின் அடையாளம், தலைமுடியைச் சுருட்டையாக்குவது ஆரம்ப காலங்களில் ஃபேஷனாக இருந்தது: பின்னுக்குச் சீவிக் கொண்டை போட்டுக்கொள்வதாக இது மாறியது. அடிமைப் பெண்களின் தலைமுடி எப்போதும் குட்டையாகத்தான் இருக்கவேண்டும். இதற்கு ஏற்றபடி, அவர்கள் கேசம் அடிக்கடி வெட்டப்பட்டது.
கறுப்பு நிறத்துக்கு மவுசு இல்லை. வெண்மைத் தோல் கொண்டவர்கள் மட்டுமே அழகர்கள், அழகிகள். கறுப்பு நிறப் பெண்கள் தங்கள் சருமத்தை வெண்மையாக்க, ஈயத்தால் ஆன களிம்பு தடவிக்கொண்டார்கள் . இது அவர்கள் உடல் நிலையைப் பாதித்தது இன்னொரு சமாச்சாரம். கறுப்பை வெண்மையாக்கிக்கொள்ள பவுடர் போன்ற சுண்ணாம்புப் பொடியையும் பூசிக்கொள்வார்கள். கன்னங்களுக்கு ரோஜா நிறப் பொடி (இது எதனால் செய்யப்பட்டது என்று தெரியவில்லை) பூசும் மேக்கப் கலையும் இருந்தது. வேல்விழிக் கண்களின் கவர்ச்சியை கூட்ட மை தீட்டிக்கொண்டார்கள் .
ஆண்கள் நகைகள் அணிவதில்லை. பெண்கள் வகை வகையான காதணிகள், வளையல்கள், கழுத்துச் செயின்கள் ஆகியவை அணிந்தார்கள். ஏனோ, கி.மு. நான்காம் நூற்றாண்டு வாக்கில் பெண்கள் நகை அணியும் பழக்கமும் மறையத் தொடங்கிவிட்டது.
வாசனைப் பொருட்கள்மேல் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனிப் பிரியம் உண்டு. துளசி, லவங்கப் பட்டை, பாதாம், ரோஜா, லில்லி, லாவென்டர் ஆகியவற்றின் சாரம் எடுத்து, எண்ணெய்களோடு சேர்த்துக் காய்ச்சி வீடுகளில் வாசனைப் பொருட்கள் தயாரித்தார்கள்.
தொடரும்…