Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » பண்டைய நாகரிகங்கள் – 11

பண்டைய நாகரிகங்கள் – 11

  1. கி. மு 1045 முதல் கி. மு.403 வரை – ஜோ வம்ச ஆட்சி

சீன வரலாற்றில் அதிக காலம், அதாவது 789 ஆண்டுகள் நீடித்த ஆட்சி இது. டி ஜின் தற்கொலைக்குப்  பின் வூ ஜோ (Wu Zhou)  என்னும் மன்னர் அரியணை ஏறினார். ஜோ வம்சாவளியைத் தொடங்கி வைத்தார். இவரைத் தொடர்ந்து 36 வாரிசுகள் சீனாவை ஆண்டனர். ஜோ வம்சாவளியில் சீனா கண்ட சில முக்கிய முன்னேற்றங்கள்:

ஷாங் ஆட்சிக் காலத்தில், சீனர்கள் வியாபாரத்தில் முதலில் நத்தையின் மேலோடுகளையும், அடுத்து வெண்கல நாணயங்களையும் பயன்படுத்தினார்கள் அல்லவா?  கி.மு. 900 அல்லது கி.மு. 800 காலத்தில், நாணயங்களோடு கரன்சிகளும் சேர்ந்தன. இந்த நோட்டுக்கள் காகிதத்திலும், பட்டுத் துணிகளிலும் செய்யப்பட்டிருந்தன.

சின் ஷி ஹூவாங்

ஜோ வம்ச ஆட்சியில், அறிவுத் தேடலுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. கன்ஃப்யூஷியஸ், லாவோஸி ஆகிய இரு தத்துவ மேதைகளின் சித்தாந்தங்களும் செழித்துத் தழைத்தது இப்போதுதான்.

கன்ஃப்யூஷியஸ் கி.மு. 551 முதல் கி.மு. 479 வரை, 72 ஆண்டுகள் வாழ்ந்தார். பிறரிடம் மரியாதை, பரந்த மனப்பான்மை, மன்னிக்கும் குணம், நன்றி காட்டுதல், விசுவாசம், தன்னம்பிக்கை, முன்னோரை வழிபடுதல் ஆகியவை இவருடைய முக்கிய கருத்துகள். கல்வியால் இந்தக் குணங்களை உருவாக்கலாம் என்று கன்ஃப்யூஷியஸ் நம்பினார். இதற்காக, ஒரு கல்விச் சாலையும் தொடங்கினார். இங்கே பட்டை தீட்டப்பட்டவர்கள் ஏராளம்.

லாவோஸி கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார்.  இவரைப் பற்றி நிறையக் கதைகள் உள்ளன: ஆனால், ஆதாரங்கள் குறைவு. இவர் சித்தாந்தம் தாவோயிஸம் (Taoism) என்று அழைக்கப்படுகிறது. அனைத்து உயிர்களும், பொருள்களும் ஒரே இயற்கையின் பல வடிவங்கள். மனிதன் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும் என்கிறது தாவோயிஸம்.

கி.மு. 543 – இல் ஜிக்கான் (Zichan) என்பவர் அரசரின் ஆலோசகராக இருந்தார். சீனாவின் விவசாயத்திலும், வியாபாரத்திலும் ஏராளமான சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். நாட்டின் எல்லைகளை வரையறுத்தல், ஆட்சி முறைகள், மந்திரிப் பதவிகளுக்குத் திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றுக்கான நெறிமுறிமுறைகளைத் தொகுத்துச் சட்டங்களாக்கினர்.

ஆட்சியில் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்து மாற்றங்கள் செய்யவேண்டும் என்று முதல் முதலாக உலக வரலாற்றில் ஜனநாயகக் குரல் கொடுத்தவர் ஜிக்கான்தான். இவர் உருவாக்கிய சட்டங்கள் வெண்கலப் பாளங்களில் பொறிக்கப்பட்டு, நாட்டின் பல பாகங்களிலும் வைக்கப்பட்டன, நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றப்பட்டன.   ஒவ்வொரு ஊரிலும் ஒரு நீதிபதி இருந்தார். குற்றங்கள், குற்றவாளிகள் பற்றி அவரிடம் தெரிவிப்பது பொதுமக்கள் கடமை. கசையடி, சித்திரவதை போன்ற தண்டனைகளை, குற்றங்களுக்கு ஏற்றபடி நீதிபதிகள் விதித்தார்கள்.

கி.மு. 500 – இரும்பு உருக்குவதும், இரும்புக் கருவிகள் செய்வதும் சீனர்கள் வசப்பட்டது. அவர்கள் முதலில் உருவாக்கிய இரும்புக் கருவி, ஏர். வீட்டு சாமான்களையும், வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களையும் இரும்பில் வடிவமைப்பது விரைவில் தொடர்ந்தது.

பீஜிங், ஹாங்ஜோ (Beijing-Hangzhou) ஆகிய இரு நகரங்களை இணைக்கும் கிராண்ட் கேனல் (Grand Canal)  இன்று 1776 கிலோ மீட்டர் தூரம் ஓடுகிறது. உலகின் மிகப் பெரிய செயற்கை நதி என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கால்வாய் முதலில் தோண்டப்பட்டது கி.மு. 486 – இல்.

  1. கி. மு. 403 முதல் கி. மு.221 வரை – உள்நாட்டுப் போர்கள் (Warring States) காலம்

கி.மு. 403 வாக்கில், ஜோ பரம்பரை அரசர்களின் பிடி தளரத் தொடங்கியது. அவர்கள் ஆட்சி நீடித்தாலும், நாடு முழுக்கப் பல குறுநில மன்னர்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.  மன்னர்கள் மற்றும் மக்களுடைய மனங்களையும் நேரத்தையும் யுத்தங்களே ஆக்கிரமித்தன என்றபோதும், பிற துறைகளிலும் வளர்ச்சிகள் இருந்தன. குறிப்பாக வானியல் ஆராய்ச்சியில் பலர் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களின் கண்டுபிடிப்புகள் எதிர்பார்க்கவே முடியாதவை.

கன் டே (Gan De), ஷி ஷென்  (Shi Shen) ஆகிய இரண்டு வானியல் அறிஞர்கள் விண்மீன்களின் பட்டியல் ஒன்று தயாரித்தார்கள். கி.மு. 350 வரலாற்று ஆவணங்களின் பொற்காலம். டா டே சிங் (Tao Te Ching) என்னும் வரலாற்றுப் புத்தகமும்,  சமுதாய அமைப்பு, நிர்வாகம், மதச் சடங்குகள் ஆகியவற்றை விவரிக்கும் நூலும் எழுதப்பட்டன. இந்த நூல் Record of Rites என்று இன்று அழைக்கப்படுகிறது. கி.மு. 300. எர்யா (Erya) என்னும் அகராதியும், கலைக் களஞ்சியமும் இணைந்த புத்தகம் தொகுக்கப்பட்டது. இந்த நூலின் சில பாகங்கள் இன்றும் நமக்குக் கிடைக்கின்றன.

கி.மு. 5, கி.மு. 6 நூற்றாண்டுகளில் வந்த கன்ஃப்யூஷனிஸம், தாவோயிஸம் போல், கி.மு. 305 – இல் உருவான பிரபல தத்துவம் யின் – யாங் (yin yang).  மாறுபட்ட இயல்புகள் ஒன்றோடொன்று சார்ந்திருப்பதும் ஒத்துப்போவதும் இயற்கையின் நியதி, மனித வாழ்க்கையின் அடிப்படை  என்று இந்தக் கொள்கை சொல்கிறது.  யின்  என்பது உலகம், பெண்கள், இருட்டு, பள்ளத்தாக்குகள், நீரோடைகள். யாங்  வகையில் சொர்க்கம், ஆண்கள்,  வெளிச்சம், மலைகள்.
யின் – யாங் தத்துவம் யாரால் உருவாக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், பிரபலமாக இருந்தது. இதைக் கற்றுத்ததரும் பிரத்தியேகப் பள்ளிகள் இருந்தன. யின் – யாங் மத சார்பான கொள்கையாக இருக்காமல், நடைமுறையிலும், குறிப்பாகச் சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறையான அக்குபஞ்சரின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.

யின் – யாங் தத்துவப்படி, நம் உடலில் மார்பு, உள் அங்கங்கள், இடுப்புக்குக் கீழே இருக்கும் பாகங்கள், ரத்தம், உடல் சுரக்கும் திரவங்கள் யின் வகை: தலை, உடலின் பின்புறம், தோல், ஜீரண உறுப்புகள் யாங் வகை. எந்த நோய்க்குச் சிகிச்சை கொடுத்தாலும், யின் – யாங்  சமநிலையில் இருக்க வேண்டும்.
நோயாளியிடம் அவர்களுடைய சுவை, நுகர்தல், கனவுகள் ஆகியவைபற்றி விலாவாரியாகக் கேள்விகள் கேட்பார்கள்.  அதே நேரத்தில், வெவ்வேறு அழுத்தங்கள் தந்து, உடலில் பல்வேறு பாகங்களில், பல்வேறு நேரங்களில் நாடித் துடிப்பைப் பரிசோதிப்பார்கள். ரத்த சோகை நோய்க்கு இரும்புச் சத்து அளித்தல், தொழுநோய்க்கு சால்முக்ரா எண்ணெய் தருதல் ஆகிய மேற்கத்திய மருத்துவ சிகிச்சைகள் சீனப் பாரம்பரியம் போட்ட பாதைகள்தாம்.

  1. கி. மு. 221 முதல் கி. மு.206 வரை – சின் வம்ச ஆட்சிக் (Qin Dynasty) காலம்

உள்நாட்டுப் போர்கள் காலத்தில், ஏழு சிற்றரசர்கள் ஒருவரோடு ஒருவர் முட்டி மோதிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் சின் பிரதேச மன்னரான சின் ஷி ஹூவாங் (Qin Shi Huang) மற்ற ஆறு அரசர்களையும் வென்றார், ஏழு பிரதேசங்களையும் தன்னுள் அடக்கிய பிரம்மாண்ட சீனாவின் அதிபதியானார். சீனா பூகோளப் பரப்பு விரிந்த ஒரே நாடானது இப்போதுதான்.

சீனா என்னும் நாட்டுப் பெயரே, சின் என்னும் வம்சப்பெயரில் வந்ததுதான். பிரதேச மன்னர்கள் தங்களைப் பிரபுக்கள்  என்று அழைத்துக்கொண்டார்கள். ஆனால், சின் ஷி ஹூவாங், இதிகாசங்களின்படி, தனக்குத் தானே, சக்கரவர்த்தி என்று பட்டம் சூட்டிக்கொண்டார். பட்டம், அதிகாரம் என்று அலைந்த இந்த விசித்திரமான மனிதர் செய்த நல்ல காரியங்களும் உண்டு, பைத்தியக்கார வேலைகளும் உண்டு.

சீன மொழியின் பேச்சு முறை ஏழு பிரதேசங்களிலும் ஒன்றாக இருந்தது. ஆனால், எழுத்து வடிவம் இடத்துக்கு இடம் மாறுபட்டது. சின் ஷி ஹூவாங் இதில் சீர்திருத்தம் கொண்டுவந்தார். ஒரே வடிவம், ஒரே அளவு கொண்ட எழுத்துகளை நாடு முழுக்கப் பயன்படுத்தவேண்டும் என்னும் அரசாணை பிறந்தது. தாம் எல்லோரும் ஒரே நாடு என்னும் உணர்வு சீனா முழுக்க உருவாவதற்கு இந்தச் சீர்திருத்தம் காரணமாக இருந்தது.

அதிகாரிகளை நியமிப்பதில் பாசம், பந்தம் ஆகியவற்றுக்கு இடமே கிடையாது, திறமை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்னும் கொள்கை நடைமுறைக்கு வந்தது, கண்டிப்பாக அமுல் படுத்தப்பட்டது.

இன்று கடைவீதிகளுக்குப் போய்ப் பாருங்கள். பொம்மைகள், வீட்டு உபகரணங்கள், செல்போன்கள் எனச் சீனத் தயாரிப்புகள் வகை வகையாக, விதம் விதம் விதமாய், மலை மலையாய்க் குவிந்து கிடக்கின்றன. இன்றல்ல, காலம் காலமாகவே, சீனர்கள் கண்டுபிடிப்புக் கில்லாடிகள்.  அவர்களுடைய பல்லாயிரம் கண்டுபிடிப்புகளில், நான்கு கண்டுபிடிப்புகள் உலக அறிவியலைப் பெருமளவில் பாதித்தவையாகக் கருதப்படுகின்றன. அவை – திசைகாட்டி, வெடி மருந்து,  காகிதத் தயாரிப்பு, அச்சுத்தொழில் ஆகியவை.

இவற்றுள், திசைகாட்டி, சின் வம்ச ஆட்சிக்காலத்தில், சுமார் கி.மு. 221 – 206 காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.  காந்தக் கலை (Magnetism) இதன் அடிப்படைக் கொள்கை. கி.மு. 4-ம் நூற்றாண்டிலேயே, சீன சோதிடர்கள் காந்தக் கற்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால், திசைகாட்டிகளாகக் காந்தங்களை உபயோகப்படுத்தத் தொடங்கியது சின் ஆட்சியில்தான். முதல் திசைகாட்டியில், ஒரு கரண்டி, வெண்கலத் தட்டின்மேல் வைக்கப்பட்டிருந்தது.

இப்படிப் பல துறைகளில் முத்திரை பதித்த சக்கரவர்த்தியின் அடிமனதில் எப்போதும் பல பயங்கள் – தன்னை யாராவது கொலை செய்துவிடுவார்களோ, தான் போரில் வென்ற ஆறு அண்டைப் பிரதேசங்களும் ஒன்றாகக் கை கோர்த்துத் தனக்குக் குழி பறிப்பார்களோ? ஆகவே எதிரிகளின் தாக்குதலிலிருந்து தன்னையும் நட்டையும் பாதுகாக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கவேண்டும் என்பதில் சின் ஷி ஹூவாங் உறுதியாக இருந்தார். அவருடைய பயம், இன்றும் நீடிக்கும் அற்புதமான உலக அதிசயம் உருவாகக் காரணமாக இருந்தது. அந்த அதிசயம் – சீனப் பெரும் சுவர்.

இன்று சுமார் 8850 கிலோ மீட்டர் நீளத்துக்கு விரியும் பெரும் சுவரைத் தனித் தனிப் பதுகாப்புச் சுவர்களாக சின் ஷி ஹுவாங் முதலில் கட்டினார். பல்லாயிரம் தொழிலாளிகள் இந்தப் பணியில் ஈடுபட்டதாகவும், கணக்கில்லாதவர்கள் வேலைப் பளுவால் இறந்ததாகவும் குறிப்புகள் சொல்கின்றன. (கி.பி. 1400 – க்குப் பின் வந்த மன்னர்கள் தனிச்  சுவர்களை இணைத்து ஒரே சுவராக மாற்றினார்கள்.)

தான் மட்டுமே புத்திசாலி, தன்னோடு ஒத்துப் போகாதவர்களை ஒழித்துக்கட்டவேண்டும் என்று சின் ஷி ஹூவாங் நினைத்தார். அவர் ஆட்சிக் காலத்தில், 460 – க்கும் அதிகமான அறிஞர்களுக்கு மரண தண்டனை விதித்தார். முந்தைய ஆட்சிகள் பற்றிய சில ஆவணங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினார்.

தான் அழிவே இல்லாத நிரந்தர மனிதன் என்று சின் ஷி ஹூவாங் நினைத்தார். தனக்குச்  சாவே வராமல் தடுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்க, நிரந்தர மருத்துவர் குழுவை நியமித்தார். அவர்கள் பாதரசம் கலந்த பல அமிர்தங்களை அவருக்குக் கொடுத்தார்கள். பாதரசம் உடலில் கலந்த முக்கிய காரணத்தால் தனது 49வது வயதில் மரணமடைந்தார்.

சாவை நினைத்துப்பார்க்கக்கூட  பயந்த மாமன்னர், தன் கல்லறையையும் ஏற்பாடு செய்திருந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். களிமண்ணால் செய்யப்பட்ட எட்டாயிரம் போர் வீரர் பொம்மைகள் (Terracota Army என்று இவற்றை அழைக்கிறார்கள்.) தன் உடலோடு சேர்த்துப் புதைக்கப்படவேண்டும் என்பது அவர் இறுதி ஆசையாக இருந்தது. அந்த பொம்மைகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. கலைநயம் கொண்ட இந்த எட்டாயிரம் பொம்மைகளில், ஒரு பொம்மைகூட இன்னொன்றுபோல் இல்லை. தன் விபரீத ஆசையில்கூட,  நிர்வாகத் திறமையையும், கலை ஆர்வத்தையும் காட்டியிருக்கும் சின் ஷி ஹூவாங் நம் புரிதலைத் தாண்டிய விசித்திர மனிதர்!

கி.மு. 210-ல் சின் ஷி ஹூவாங் மரணமடைந்தபின், அவர் வம்ச ஆட்சி வெறும் நான்கு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் அரசு கட்டில் ஏறினார். அவருக்குத் தலைமை அமைச்சராக இருந்த தம்பி அண்ணனைக் கொன்றார்.  திறமையே இல்லாத அவரை, எதிரிப் படைகள் வீழ்த்தின. சின் வம்ச ஆட்சி  பதினைந்தே வருடங்களில் அஸ்தமனமானது. அடுத்து வந்தது – ஹான் வம்ச ஆட்சி.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top