யமுனை நதி அழுவது ஏன்? அக்பர் பீர்பால் கதை
அக்பர் தமது மனைவியுடன் யமுனை நதிக்கரையில் அமர்ந்து யமுனையின் அழகினை ரசித்துக் கொண்டிருந்தார்.
பேகம்…… யமுனை நதியின் நீரோட்டத்தின் சல சலப்பு உன்னை அழகி அழகி என்று கூறிக்கொண்டே செல்வது போல் தோன்றுகிறது… இல்லையா பேகம் என்றார் கொஞ்சும் குரலில்.
ஆனால் அரசியாரோ அக்பர் கூறியதை மறுத்து உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது யமுனை நதியின் சல சலப்பு ஒரு பெண் அழுது கொண்டிருப்பது போல தனது கண்களுக்கு தெரிகிறது. யமுனை அழுது கொண்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.. என்றார் அரசியார்.
அக்பருக்கோ அதிர்ச்சியாக இருந்தது. ஏன் பேகம் உன் அழகைக் கண்டு பொறாமை பட்டு அழுது கொண்டிருக்கிறதோ? என்றார் அரசர்.அரசியாரின் முகம் வெட்கத்தால் சிவந்துபோனது.
அடுத்த நாள் அரச சபை கூடியதும் அமைச்சர்களிடம் தமது சந்தேகத்தை கேட்டார். யமுனை அழுது கொண்டிருப்பது போல் தோன்றுவதற்கு என்ன காரணம்? யாருக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பீர்பால் சபையில் மெளனமாக அமர்ந்திருந்தார்.
என்ன பீர்பால்…. நீங்கள் கூறுங்கள் யமுனை ஏன் அழுது கொண்டிருக்கிறது? என்றார் அக்பர். தமது வழக்க்கமான புன்சிரிப்புடன் தமது இருக்கையை விட்டு எழுந்தார் பீர்பால்.
அரசே இமயமலை தான் யமுனையின் தாயகம் – வங்க கடல் யமுனையின் புகுந்த வீடு எனக் கூறலாம். பிறந்த இடத்தை விட்டு பிரிந்து புகுந்த இடமான வங்கக் கடலை நோக்கி போக வேண்டியுள்ளதே என வேதனைப்பட்டு அழுது கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன் என்றார் பீர்பால்.
தனது கேள்விக்கு சரியான விளக்கத்தை அளித்த பீர்பாலை மனமுவந்து பாராட்டினார் அக்பர். சபையில் இருந்த அனைவரும் பீர்பாலின் சாதுர்யமான பேச்சை கேட்டு ரசித்து தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்கள்.