Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » ஒரு நகரத்தின் கதை – 36
ஒரு நகரத்தின் கதை – 36

ஒரு நகரத்தின் கதை – 36

சிங்கப்பூரை மலேயாவுடன் இணைப்பதில் மலேயாத் தலைவர்கள் உடன்படாமல் இருந்ததற்கு மக்கள் செயல் கட்சி இடது சாரி கொள்கைகளுக்கு ஆதரவாக இருந்தது என்று நினைத்தது மட்டும் காரணமல்ல. சிங்கப்பூரில் வாழ்ந்த மக்களில் 70% மேல் சீனர்கள். இந்த நிலையில் சிங்கப்பூரை மலேயாவைச் சேர்ந்த மாநிலங்ககளில் ஒன்றாகச் சேர்த்தால் சீன இனத்தவரைப் பெருவாரியாகக் கொண்ட மாநிலமாக அமையும். சீன இனத்தவரைப் பெரும் பான்மையினராகக் கொண்ட ஒரு மாநிலம் அமைவது மலேசியாவுக்குள் ஒரு கம்யூனிஸ மாநிலம் உருவாகலாம் என்ற அச்சம்.

1961 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி தோற்றுப் போகும் நிலை ஏற்பட்டது. இந்தத் தேர்தலில் மசெக தோற்றுப் போய் கம்யூனிஸ ஆதரவாளர்களுக்குச் சாதகமாக முடிந்திருந்தால் நம்முடைய ஜோகூர் பாலத்திற்கு அப்பால் ஒரு குட்டி குயூபா நாடு தோன்றியிருக்கும் என்று மலேயாப் பிரதம மந்திரி துங்கு அப்துல் ரஹ்மான் சொன்னார்.

1961 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி வேளி நாட்டு நிருபர்களிடையே பேசிக் கொண்டிருந்த போது மலேயா நாட்டுடன் இணைய இருக்கும் மாநிலங்களின் பெயர்களை வெளியிட்டார். அதில் மலாய் இன மக்களை பெரும்பான்மையினராகக் கொண்ட மாநிலமான பிரிட்டிஷ் போர்னியோ என்று அழைக்கப்பட்ட சபா, சராவாக் மாநிலம், அதிக எண்ணிக்கையில் சீன மக்களைக் கொண்ட சிங்கப்பூர் என இரண்டு மாநிலங்களும் மலேயாவுடன் இணைக்கப்படலாம் என அறிவித்தார்.

வடக்குப் பகுதியில் இருக்கும் சபா, சராவாக் மாநிலத்தில் இருக்கும் மலாய் இன மக்களின் மக்கள் தொகையும், தெற்குப் பகுதியில் அதிக அளவு சீன மக்கள் கொண்ட சிங்கப்பூரையும் இணைத்துக் கொண்டால் இந்த எண்ணிக்கைகள் சமமாக்கப் பட்டு விடும் என்றார். இந்த இணைப்பால் சிங்கப்பூர் முழுமையாக கம்யூனிஸ ஆதரவாளர்கள் ஆட்சியில் இருக்கும் சாத்தியங்களும் தடுக்கப்படலாம்.ஜோகூர் பாலத்துக்கு அப்பால் ஒரு குயூபா நாடு உருவாவதையும் தடுக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.

துங்கு அப்துல் ரஹ்மானின் இந்த திடீர் அறிவிப்பு மக்கள் செயல் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.மக்கள் செயல் கட்சியில் இருந்த மிதவாதிகளும், கம்யூனிஸ ஆதரவாளர்களும் இரண்டு குழுக்களாகப் பிரிந்தனர்.மக்கள் செயல் கட்சியில் இருந்த மிதவாதிகள் திரு லீ தலைமையில் மலேயாவுடன் சிங்கப்பூர் இணைவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.மக்கள் செயல் கட்சியின் கம்யூனிஸ ஆதரவாளர்கள் மலேயாவுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மலேயாவுடன் இணைவதற்கு ஆதரவாக இருந்த திரு லீ சட்டமன்றத்தில் இந்த இணைப்புக்கு யார் ஆதரவாளர்கள் என்பதை நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்க எண்ணினார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிந்த பின் மக்கள் செயல் கட்சியில் இருந்த 16 சட்டமன்ற உறுப்பினர்கள் மலேயாவுடன் சிங்கப்பூர் இணைவதை எதிர்த்தவர்கள் என்பதால் மக்கள் செயல் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல் படுபவர்கள் எனக் குற்றம் சாட்டி அவர்களை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கினார். மக்கள் செயல் கட்சியின் அலுவலக அதிகாரிகள் இருபது பேரையும் பதவியிலிருந்து விலக்கினார்.

மக்கள் செயல் கட்சியின் கொள்கைகளோடு முரண்பட்டு பதவி விலக்கப்பட்டவர்கள் இணைந்து ஒரு புதிய கட்சியைத் தோற்றுவித்தனர்.பாரிஸான் சோஷியலிஸ் என்ற பொதுவுடைமை முன்னணிக் கட்சியை உருவாக்கினர்.(THE SOCIALIST FRONT) லிம் சின் சியாங் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்த கட்சி்க்கு மக்கள் செயல் கட்சியின் அடித்தள உறுப்பினர்கள், உள்ளூர் அதிகாரிகள் என்று அனைவரும் ஆதரவளித்தனர்.மக்கள் செயல் கட்சியின் 51 கிளைக் குழுக்களில் 35 குழுக்கள் பாரிஸான் சோஷியலிஸ் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கியது.இதனால் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் செயல் கட்சிப் பணியாளர்கள் பாரிஸானுக்கு ஆதரவாக இயங்கத் தொடங்கினர்.

மக்கள் செயல் கட்சி இரண்டாகப் பிளவுப்பட்டு இரு கட்சிகளும் இணைப்புக் குறித்து தங்கள் பிரச்சாரங்களைத் தொடங்கினர்.மலேயாவுடன் சிங்கப்பூர் இணையுமா இணையாதா என்பதை பொது மக்கள் கருத்து மூலம் தீர்மானிக்கும் சூழ்நிலை உருவானது.திரு லீ சிங்கபபூர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி அந்த முடிவு மூலம் மலேயாவுடன் சிங்கப்பூர் இணையலாமா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று அறிவித்தார்.

மலேயாவுடன் இணைவதற்கு ஆதரவாக வானொலி மூலம் பிராச்சாரம் செய்தார். 36 வானொலி பிரச்சாரங்கள் சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகள் மூன்றிலும் ஒலிபரப்பாயின. மலேயாவுடன் இணவதற்கான சாத்தியங்களை உள்ளடக்கிய மூன்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்தத் திட்டங்களில் மக்கள் செயல் கட்சி அறிவித்த திட்டம் 70 சதவீத வாக்குகள் பெற்றது.மற்ற இரண்டும் 2 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றது.26 சதவீத வாக்குப்பெட்டிகள் காலியாக இருந்தன.

1962 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடந்த இவ்வாக்கெடுப்பின் முடிவு தங்களுக்குச் சாதகமாக இல்லை என்பதை உணர்ந்த பாரிஸான் கட்சி உள்ளூரில் தங்களுக்கு ஆதரவு இல்லை என்பதால் வெளிநாடுகளில் ஆதரவு திரட்ட முனைந்தனர். மலேயா, சராவாக், புருணை, இந்தோனேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகளுடன் கூட்டணி அமைத்தது.

பாரிஸான் கட்சியினர்மலேசியா மீண்டும் ஒரு புதிய காலனி ஆட்சியை அமைக்க விரும்புகிறது.இதனால் பிரிட்டஷ் அரசாங்கம் மீண்டும் தன் அதிகாரத்தை இந்த நாடுகளில் காட்டுக் கூடும்என்றுபிரச்சாரம் செய்தனர். இந்தோனேசிய அதிபர் சுகர்னோ இந்தோனேசியா, மலேசியா, போர்னியோ போன்ற நாடுகளை உள்ளடக்கி ஒரு மாபெரும் இந்தோனேசிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க எண்ணினார்.

1963 ஆம் ஆண்டு சபா எங்கள் நாட்டைச் சேர்ந்த பகுதி என்று பிலிப்பின்ஸ் சொந்தம் கொண்டாடியது.அதனால் சபாவை உள்ளடக்கிய புதிய மலேசியா உருவாவதை எதிர்த்தது.மலேயா, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் 1963 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சந்தித்து இந்தப் பிரச்சனை குறித்து விவாதித்தனர்.இந்த சந்திப்பின் இறுதியில் இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண முயன்றனர்.

மலேயா ஐக்கிய நாட்டு சபை சபா மற்றும் சராவாக் மக்களிடையே கருத்தாய்வு செய்வதை அனுமதித்தது.சபா, சராவாக் மக்கள் தாங்கள் எந்த நாட்டுடன் சேர வேண்டும் என்பதை முடிவு செய்யட்டும்.ஆனால் அந்தக் கருத்தாய்வின் முடிவுக்குக் கட்டுப்படமுடியாது என்பதையும் மலேசிய அரசு தெளிவாகக் கூறியது.இந்தக் கருத்தாய்வின் முடிவில் புரூனை மலேயாவுடன் இணைய மறுத்தது.புரூனை எண்ணெய் வளம் மிக்க நாடு.

கோலாலம்பூர் அரசு எடுத்த ஒன்றிணைந்த வரி விதிப்புக் கொள்கைகள் புரூனை அரசுக்கு ஏற்புடையதாக இல்லை. மேலும் புரூனை சுல்தானும் மலாய் சுல்தான்களும் கொண்டிருந்த இணக்கமான உறவுகளும் கேள்விக்குறியாக மாறும் சூழல் உருவானது.எனவே புரூனை தனித்து இயங்கும் நாடாக, தன்னுடைய ஆட்சியின் கீழ் இருக்கும் என்று புரூனை சுல்தான் அறிவித்தார்.

சிங்கப்பூர், மலேயா, சபா, சராவாக் நாட்டுத் தலைவர்கள் மலேசியா உடன்படிக்கையில் கையெழுத்து இட்டனர்.இதன்படி ஒன்றிணைந்த மலேசியா நாடு ஆகஸ்ட் 31 ஆம் தேதி உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஐக்கிய நாட்டு சபையின் கருத்தாய்வின் முடிவை அறிய போதிய அவகாசம் வேண்டும் என்பதால் செப்டெம்பர் 16 ஆம் தேதி சிங்கப்பூர், சபா, சராவாக் மா நிலங்களை ஒன்றிணைத்த மலேசிய நாடு உருவாகும் என்று துங்கு அப்துல் ரஹ்மான் அறிவித்தார். திரு லீ ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதியிலிருந்து செப்டெம்பர் 15 ஆம் தேதி வரை சிங்கப்பூர் ஒரு சுதந்திர நாடு.

இதற்குப் பாதுகாவலர்களாக மக்கள் செயல் கட்சி இருக்கும் என்று அறிவித்தார்.செம்டெம்பர் 16 ஆம் தேதி மலேசியாவுடன் இணையும் என்று, அதற்கு முன்பாக 1963 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் தேதி சட்டமன்றத்தைக் கலைத்தார்.செப்டெம்பர் 21 ஆம் தேதி புதிய தேர்தல் நடைபெறும்.இந்த தேர்தல் மூலம் மக்கள் செயல் கட்சி சிங்கப்பூரை ஆள முழு உரிமைப் பெறலாம் என தேர்தலுக்குத் சிங்கப்பூர் தயார் ஆனது.

கடுமையான போட்டியுடன் நடந்த பிரச்சாரங்களில் பாரிஸான் கட்சி சிங்கப்பூர் மலேயாவுடன் இணைவதை எதிர்த்தது. சீனக் கல்விக்கும், கலாச்சாரத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறியது. பாரிஸான் கட்சியின் பாதிக்கும் மேற்பட்ட மத்தியச் செயல் குழு உறுப்பினர்கள், லிம் சின் சியாங் உள்பட பலர் சிறையில் இருந்தனர்.

புரூனை நாட்டில் இருந்த ஒரு புரட்சியாளருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஃபிப்ரவரி மாதம் பெரிய எண்ணிக்கையில் அரசியல்வாதிகள், தொழிலாளிகள், மாணவர் தலைவர்கள் போன்றோர் உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் இவர்களைக் கைது செய்ததற்குக் காரணம் மலேயா மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கம்.

உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் பிரிட்டிஷ் அரசின் கீழ் மலேசிய அதிகாரிகள் பொறுப்பில் இருந்தது. ஆனால் செப்டெம்பர் மாதம் நடந்த தேர்தலின் போது பாரிஸான் கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிறையில் இருந்தது மக்கள் செயல் கட்சிக்கு இருந்த எதிர்ப்பை ஓரளவிற்குக் குறைத்தது. இந்தச் சாதகமானச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு மக்கள் செயல் கட்சி தீவீரமாக தன் தேர்தல் பிரச்சாரத்தைத் தொங்கியது.

மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் ஆட்சியின் போது ஏற்பட்ட சமுதாய மாற்றங்களையும் பொருளாதார முன்னேற்றங்களையும் பற்றி பிரச்சாரங்களி்ல் பேசினர். திரு லீ சிங்கப்பூரின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மக்கள் செயல் கட்சிக்கு ஆதரவு திரட்டினார்.தேர்தலில் ஐம்பத்தியொரு தொகுதிகளில் முப்பத்தியேழு இடங்களில் வெற்றி பெற்றது.பாரிஸான் சோஷியலிஸ் கட்சி பதின்மூன்று இடங்களில் வென்றது.

மக்கள் செயல் கட்சி ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றது.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top