Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » ஒரு நகரத்தின் கதை – 34
ஒரு நகரத்தின் கதை – 34

ஒரு நகரத்தின் கதை – 34

ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி 1954 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பல புதிய கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கின. மிகவும் பரபரப்பாக நடைபெற்றத தேர்தலில்  எஸ். பி. பி. என்று அழைக்கப்பட்ட சிங்கப்பூர் ப்ரொக்ரெசிவ் கட்சி (சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி) படுதோல்வி அடைந்தது. இதற்கு முன்னால் 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில்  சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி மூன்று இடங்களை வென்றது.

மற்ற மூன்று இடங்களை சுயேச்சை வேட்பாளர்கள் வென்றார்கள். ஆனால் அந்தத் தேர்தலை முழுமையான பொதுத் தேர்தல் என்று கருத முடியாது. அந்தத் தேர்தலில் வெற்றி அடைந்த எஸ். பி. பி. கட்சி படு தோல்வி அடைந்து  நான்கு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. புதிதாக உருவான பாட்டாளி முன்னணிக் கட்சி பத்து தொகுதிகளில் வெற்றி பெற்றது.

உம்னோ  கட்சி (U M N O ) மற்றும் மலேயா சீனக் கழகம் (M C A) இரண்டும் இணைந்து மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது. மக்கள் செயல் கட்சி மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது.

பத்து தொகுதிகளில் வெற்றி பெற்ற பாட்டாளி முன்னணிக் கட்சி உம்னோ எம். சி. ஏ. கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் தகுதி பெற்றது.  மூன்று செயலவை உறுப்பினர்கள், இரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் இணைந்து பதினேழு பேர் கொண்ட குழு உருவானது.

இவர்கள் முப்பத்திஇரண்டு  உறுப்பினர் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக் குழுவாக இருந்தனர். எஸ்.பி.பி.யிலிருந்து  நான்கு உறுப்பினர்கள், ஜனநாயகக் கட்சியிலிருந்து இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்கள் செயல் கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதிகளில் மூன்றில் வெற்றி பெற்றனர். கம்யூனிசக் கட்சியைச் சாராத பகுதியில் நின்று திரு லீ வெற்றி பெற்றார்.

அவர் வெற்றி பெற்றத் தொகுதி சிங்கப்பூரில் ஏழைகள் வாழும் தொகுதி  என்று கருதப்பட்ட தஞ்சோங் பாகர் பகுதியில் வெற்றி பெற்றார். இதன் பிறகு தஞ்சோங் பாகர் தொகுதி என்றாலே திரு லீயின் தொகுதி என்று அவர் வெற்றி பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. லிம் சின் சியாங் கம்யூனிஸக் கட்சியின் ஆதரவுடன் புக்கிட் தீமா தொகுதியில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் டேவிட் மார்ஷல் சிங்கப்பூரின் முதல் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். ஆனால் அவர் பதவி ஏற்ற நாளிலிருந்து பல பிரச்சினைகள்! தொடர்ச்சியாகப் பல வேலை நிறுத்தங்கள்! மாணவர்கள் அரசாங்கத்தை எதிர்த்து ஆட்சியைக் கவிழ்க்க முயன்றனர். இதனால் அவர்களின் கொந்தளிப்பு!1955 ஆம் ஆண்டு  275 வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. இவற்றில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வேலை நிறுத்தங்கள் மட்டுமே ஊதிய உயர்வு, வேலையிட மேம்பாடு போன்ற நியாயமான கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்டவை. 200 வேலை நிறுத்தங்கள் சிறையில் அடைக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களை விடுதலை செய்யவும் மற்ற தொழிலாளிகளின் நலனுக்காக அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும் நடத்தப்பட்டவை.

மே மாதம் 12 ஆம் தேதி 1955 ஆம் ஆண்டு வேலை நிறுத்தம் செய்வதன் அடையாளமாகப் பல பேருந்துகள் தெருக்களை அடைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.காவலர்கள், சட்டத்தை மீறி தெருவை அடைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளை அகற்ற முற்பட்டபோது பெரிய கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் நால்வர் இறந்தனர்.

31 பேர் பலத்த காயமடைந்தனர். பதவி ஏற்றுக்கொண்ட சில நாள்களிலேயே புதிய ஆட்சியாளர்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ஹோக் லீ பேருந்து நிறுவனம் அப்போது சிங்கப்பூரில் செயல்பட்டுக் கொண்டிருந்த பல பேருந்து நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிகள் சிங்கப்பூர் பேருந்து தொழிலாளிகள் சங்கம், ஹோக் லீ தொழிலாளிகள் சங்கம் என இரண்டு சங்கங்களைச் சேர்ந்தவர்கள்.

ஏப்ரல் 23 ஆம் தேதி ஹோக் லீ பேருந்து நிறுவனத்தில் வேலை செய்யும் சிங்கப்பூர் பேருந்து தொழிலாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் சில சீன மாணவர்களும் இணைந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதிக ஊதியம், மேம்படுத்தப்பட்ட வேலையிடச் சூழல், குறைந்த  நேர வேலை போன்ற நியாயமான கோரிக்கைகளுடன் வேலை நிறுத்தம்தொடங்கியது. இந்த சங்கத்திற்கு எதிராக ஹோக் லீ  நிறுவனம் மற்றும் ஒரு தொழிலாளிகள் சங்கத்தை உருவாக்கி அதனை இதற்கு எதிராகச் செயல்பட விட்டனர்.

ஹோக் லீ நிறுவனத்தின் இந்த நடவடிக்கை சிங்கப்பூர் பேருந்து தொழிலாளிகள் சங்கத்திற்கு சற்று எரிச்சல் ஏற்படுத்தியது. இந்த வேலை நிறுத்தத்திற்கு தொழிலாளிகளின் பின்னாலிருந்து ஆதரவு கொடுத்தது கம்யூனிஸ்ட் கட்சி. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இந்த வேலை நிறுத்தம் என்று சரித்திர ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பிரிட்டிஷ் அரசு சிங்கப்பூருக்குத் தன்னாட்சி வழங்குவதற்கு ஒரு முன்னோடியாகப் பொதுத் தேர்தல் நடத்தியது. அதில் பாட்டாளி முன்னணிக் கட்சி மிகக் குறைந்த இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

ஆனால் இதனால் கம்யூனிஸக் கொள்கைகளுக்கு ஆதரவாக இருந்தவர்களும், ஃபோங் ஸ்வீ சுவான், லிம் சின் சியாங் போன்ற பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான கொள்கை கொண்டவர்களும் பாட்டாளி முன்னணிக் கட்சி பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து செயல்படும் ஒரு கட்சியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இருந்தனர்

. இந்தச் சூழலில் பெரிய கலவரம் நடந்தால் அது தங்கள் விடுதலைப் போராட்டத்தின் பிரதிபலிப்பாக சிங்கப்பூர் முழுமையாக சுதந்திரம் அடைய வழி வகுக்கும் என்ற திட்டத்துடன் ஹோக் லீ பேருந்து தொழிலாளிகள் நடத்திய வேலை நிறுத்தத்திற்கு தங்கள் முழு ஆதரவைக் காட்டினர். ஆனால் இவர்கள் நினைத்ததற்கு மாறாக, மிகப் பெரிய கலவரமாக உருவெடுத்து நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளிகள் பேருந்துகளை பேருந்து நிறுத்தங்களிலிருந்து புறப்பட விடாமல் தடுத்தனர். இதனால் நகரம் முழுவதும் போக்குவரத்து வசதி இல்லாமல் பொதுமக்கள் இன்னலுற்றனர். சீன நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பல பேருந்துகளில் ஏறி பெருந்திரளாக வந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். உணவு வாங்கிக் கொடுத்தும், நன்கொடை திரட்டியும் நிதி உதவி செய்தனர். சில மாணவர்கள் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தி தொழிலாளர்களை மகிழ்வித்தனர்.மேலும் பல தொழிலாளர்களும்.

தொழிலாளர் சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டன. காவலர்கள் வழியை மறித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளை அகற்ற பல முறை முயன்றனர். இதனால் பல தொழிலாளர்கள் அடிபட்டனர். இதனால் பொதுமக்கள் அனுதாபமும் ,  கம்யூனிஸக் கட்சியின்  ஆதரவும் கிட்டியது.

மே மாதம் 12 ஆம் தேதி வியாழக்கிழமை அலெக்ஸாந்திரா சாலை, தியோங் பாரு பகுதிகளில் பெரிய கலவரம் தொடங்கியது. கிட்டத்தட்ட 2,000 மாணவர்கள், தொழிலாளர்கள் கூடியிருந்த கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப் புகைகுண்டுகளைப் பயன்படுத்தினர். பெரிய ரப்பர் குழாய்களில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர்.

ஆவேசப்பட்டக் கூட்டம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள்மீதும், காவல்துறையினர் மீதும் கற்கள் வீசி தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். இரண்டு காவல் துறை அதிகாரிகள் இறந்தனர். துப்பறிவுப் பிரிவைச் சேர்ந்த யூ பாங் என்ற அதிகாரி பயணம் செய்து கொண்டிருந்த காருக்குத் தீ வைத்து அவரை உயிரோடு கொளுத்தினர். தியோ போக் லான் ஆண்ட்ரூ என்ற சிறப்புப் பிரிவு காவலருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டு சென்றனர். ஜீன் டி சைமாண்ட்ஸ் என்ற அமெரிக்கப் பத்திரிகையாளருக்கும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு இறந்து போனார்.

சின் காங் பள்ளியைச் சேர்ந்த பதினாறு வயது மாணவனான சோங் லான் சோங் துப்பாக்கியால் சுடப்பட்டு நுரையீரலில் அடிபட்டு இறந்தான். காவல் துறையினர் கலவரத்தை அடக்கும் முயற்சியில் இலக்கில்லாமல் சுட்டனர். அப்போது அடிபட்டு இறந்த அந்த மாணவனை உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லாமல் கிட்டத்தட்டஇரண்டரை மணி நேரம் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சோங் லான் சோங்கை கம்யூனிஸக் கட்சியைச் சேர்ந்த மற்ற மாணவர்கள் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். பத்து நிமிடங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் அருகாமையில் அவன் அடிபட்டிருந்தாலும், அவன் சுடப்பட்டதை அனைவருக்கும் காட்டி அனைவரின் உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதற்காக இப்படிச் செய்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பே அவன் இறந்தான்

மறு நாள் காலைக்குள் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஹோக் லீ பேருந்து நிறுவனமும் தொழிலாளர் சங்கமும் நீதிமன்ற விசாரணைக்குச் சென்றனர். விசாரணையின் முடிவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களின் ஊதியமும் உயர்ந்தது. வேலையும் திரும்பிக் கிடைத்தது.  எனவே தங்கள் வேலை நிறுத்தத்தால் தங்களுக்கு வெற்றி கிடைத்ததாக நினைத்தனர். ஆனால் முதலில் அனுதாபத்துடன் பார்த்த பொதுமக்கள் எல்லை மீறி நடந்த வன்முறைச் சம்பவங்களால் வேலை நிறுத்தங்களைப் பற்றி எதிர்மறையாக நினைக்கத் தொடங்கினர்.

பொதுமக்களின் மாற்று எண்ணத்தை உணர்ந்துகொண்ட திரு டேவிட் மார்ஷல் வேலை நிறுத்தத்தின் போது கலவரங்களில் ஈடுபட்ட மாணவர்கள்மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார். மாணவர் தலைவர்களைப் பள்ளிகளை விட்டு நீக்கினார்.

கலவரங்களில் ஈடுபட்ட அதிக அளவு மாணவர்கள்  இரு சீனப்பள்ளி களையும் மூட உத்தரவு இட்டார்.  ஆனால் மாணவர்கள் கொண்ட இந்த உத்தரவுகளுக்குக் கட்டுப்படாமல் பிடிவாதமாக இருந்தனர். 1955 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி இரண்டாயிரம் மாணவர்கள் மூடப்பட்ட பள்ளிகளுக்குள் நுழைந்தனர். மாணவர்களின் பெற்றோர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் தினந்தோறும் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு உணவு, உடை என்று தேவைப்பட்ட பொருள்களைக் கொண்டு வந்து கொடுத்தனர்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகள் கம்யூனிஸக் கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றப் பயன்படுத்தப்படும் உத்திகளாக இருக்கின்றன என்று இந்தக் கலவரத்தைப் பற்றி விமர்சனம் எழுந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் டேவிட் மார்ஷல் இன்னும் கடுமையான உத்தரவுகள் போட்டு உடனடி நடவடிக்கைகள் எடுத்து கலவரக்காரர்களையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களையும் உடனடியாக அடக்கியிருக்க வேண்டும் என்று டேவிட் மார்ஷல் ஆட்சி செய்யும் திறனைக் குறை கூறியது.

1956 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்ற டேவிட் மார்ஷலின் கோரிக்கையையும் நிராகரித்தது. உள்நாட்டுப் பாதுகாப்பை முறையாக சமாளிக்க முடியாத  ஆட்சியை நம்பி முழுமையான சுதந்திரம்அளிக்க முடியாது என்று டேவிட் மார்ஷல் ஆட்சியில் தனது அதிருப்தியைக் காட்டியது. இதனால் டேவிட் மார்ஷல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

கலவரம் நடைபெற்ற மே மாதம் 12 ஆம் தேதி வியாழக்கிழமை கறுப்பு வியாழன் என்று சிங்கப்பூர் சரித்திரத்தில் குறிப்பிடப்படுகிறது. வேலை நிறுத்தத்திற்கும் அதனால் ஏற்பட்ட கலவரத்துக்கும் ஆதரவாக இருந்த ஃபோங் சுவீ சுவான் நடந்த வன்முறைகளால் மனம் வருந்தி ஹோக் லீ நிறுவனத்தின் பேருந்துகளுக்கு ஏற்பட்ட சேதாரங்களுக்கும், காவல் துறையினர் மீது அத்துமீறி நடந்த வன்செயல்களுக்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top