இரண்டாம் உலகப்போரின் இறுதிகட்டங்கள் உலக அரசியலிலும், ஆட்சிகளிலும் பலமாற்றங்களைக் கொண்டு வந்தன. போர் முடியும் வரை போர் எப்போது முடியும்? இயல்பு வாழ்க்கைக்கு எப்போது திரும்ப முடியும் என்று காத்திருந்தார்கள். ஆனால் போர் முடிந்த பிறகு திரும்பும் வாழ்க்கை எப்படிப்பட்ட வாழ்க்கையாக இருக்க முடியும்? தொடர்ந்த இரு உலகப்போர்களால் நிலைகுலைந்த பல ஐரோப்பியநாடுகள் தாங்கள் காலனி அமைத்தநாடுகளில் தங்கள் ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்த முடியாத சூழல் உருவானது. இந்திய விடுதலைப் போரின் உச்சகட்டமாக இரண்டாம் உலகப்போரின் முடிவில் இந்தியாவுக்கு விடுதலை போன்ற பெரியமாற்றங்கள் காத்திருந்தாலும் சிங்கப்பூரில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்தன?
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஜப்பான் சரணடைந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோற்றுப்போனது என்பது தெரிந்ததும் பொதுமக்கள் கட்டுப்படுத்த முடியாத கலவரங்களில் ஈடுபட்டனர். ஜப்பானியர்களால் தங்களை கட்டுப்படுத்த முடியாது என்பது தெரிந்ததும் வெளிப்பட்ட சுதந்திர உணர்வு. ஆனால் அப்போதிருந்த இல்லாமை வறுமைச் சூழலால் கடைகளில் புகுந்து கொள்ளைஅடித்து, பணத்தை திருடுவது என்று பலவகைக் குற்றங்களில் ஈடுபட்டனர். போலீஸ் இல்லை என்றதும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் எதிரிகளை பழிவாங்குவதற்காக பல கொலைகள் நிகழ்த்தப்பட்டன.
இந்நிலையில் பிரிட்டிஷ் ராணுவம் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திரும்பி வந்ததும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிங்கப்பூர் தெருக்களில் நின்று அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். செப்டம்பர் 1945ஆம் ஆண்டிலிருந்து 1947ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை சிங்கப்பூரில் பிரிட்டிஷ் ராணுவ ஆட்சி தொடர்ந்தது. செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் அணிவகுத்து மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைந்தனர். ஒருவாரம் கழித்து பாடாங் அரங்கத்தில் வெற்றி அணிவகுப்பு நடந்தது.
இந்த வெற்றி அணிவகுப்பில் ஜப்பானியர்களை எதிர்த்துப் போரிட்ட பிரிட்டிஷ் படைவீரர்கள் மட்டுமல்லாமல் மலேயன் பீப்பிள்ஸ் ஆன்டி ஜப்பானிஸ் ஆர்மி என்று அழைக்கப்பட்ட எம்பி எ ஜே எ படையினரும் மலேயாக் காடுகளிலிருந்து வெளியே வந்து அணிவகுப்பில் கலந்துகொண்டனர். தென்கிழக்கு ஆசியாவின் பிரிட்டிஷ் படைத்தளபதி மௌண்ட்பேட்டன் பிரபு இந்த வெற்றி அணிவகுப்பை பார்வையிட்டார். அணிவகுப்பு முடிந்த பிறகு சிட்டி ஹால் என்று அழைக்கப்பட்ட நகர மண்டபத்திற்குச் சென்றார். அங்கே ஜப்பானியர்கள் தாங்கள் சரணடைவதாக எழுதி வைத்துக்கொண்டு காத்திருந்தனர். மௌண்ட்பேட்டன் பிரபு அவர்கள் சரணடைவதை ஒப்புக்கொண்டதாக கையெழுத்திட்டார்.
பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலுக்கு தென்கிழக்கு ஆசியாவின் தலைமைச் செயலகமாக சிங்கப்பூர் இருந்தது. ஊரக உள்கட்டமைப்பு எல்லாம் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. மின்சாரம், தொலைபேசி இணைப்புகள், குடிநீர்வசதி இவற்றோடு சிங்கப்பூரின் உயிர்நாடியாக இருந்த துறைமுகம் எல்லாம் அழிக்கப்பட்டிருந்தன. துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அனைத்துக்கப்பல்களும் அழிக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டிருந்தன. துறைமுகம் மீண்டும் இயங்கவேண்டுமானால் இவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
துறைமுகத்தை ஒட்டி உள்ள கிடங்குகளில் ஒரு சில மட்டுமே மிஞ்சியிருந்தது. உணவுப்பற்றாக்குறை, முக்கிய உணவுப்பொருளான அரிசிபற்றாக்குறை, இந்த அத்தியாவசிய உணவுப்பொருள்கள் கிடைக்காதலால் ஏற்பட்ட ஊட்டச்சத்துகுறைபாடுகள், நோய்கள், குற்றங்கள், வன்முறைகள் என வாழ்க்கை தொடர்ந்தது.
உணவுப்பங்கீட்டு முறை தொடர்ந்தது. குறைந்த விலையில் உணவுகிடைப்பதற்காக பீப்பிள்ஸ் ரெஸ்டாரண்ட் என்ற குறைந்த விலை உணவகங்களை அரசாங்கமே நடத்தியது. குடிநீர்க் குழாய்களை பழுது பார்க்கவும், மீண்டும் சாலைகளைச் சரி செய்யவும், தொலைபேசி இணைப்புகளை பழுது பார்க்கவும் ஜப்பானியப் போர்க்கைதிகளை பயன்படுத்திக் கொண்டனர். தங்குவதற்கு சரியான வீடுகள் கிடைக்காமல் சிறிய இடங்களில் அதிகமக்கள் தங்கிக்கொள்ளும் சூழல். வீட்டு வாடகைக் கட்டணம் அதிகமாயிற்று.
வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு புறம், செய்யும் வேலையில் சரியான சம்பளம் கிடைக்காத விரக்தி, அத்தியாவசியப்பொருள்கள் கிடைக்காத நெருக்கடி, விலைவாசி ஏற்றம், கருப்புச்சந்தை போன்ற பிரச்சினைகளினால் வேலைநிறுத்தங்கள்!!! வேலைநிறுத்தங்களால் பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மற்ற பொதுப்பணித்துறைகளிலும் வேலைகள் நிறுத்தப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இறுதியில் பொருளாதாரம் ஓரளவு நிலைத்தன்மை பெற்றது. உலகமெங்கும் ரப்பர் மற்றும் தகரத்திற்கு தேவைகள் அதிகரித்தது.
இதனால் மலேயாவில் கிடைத்த தகரத்தையும், ரப்பரையும் ஏற்றுமதி செய்யும் முக்கிய துறைமுகமாக சிங்கப்பூர் உருவானது. போருக்கு முந்தைய நிலை ஏற்பட இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பதை உணர்ந்து மக்கள் சற்றே அமைதியடைந்தனர். ஆனாலும் சமாளிக்க முடியாத பிரச்சினை ஒன்று தீவிரமாக உருவானது. இடதுசாரி கம்யூனிஸ்ட்டுகள் என்றவன் முறைகலந்த கம்யூனிஸ்ட்டுகள் மலேயாவிலும் சிங்கப்பூரிலும் பரவினர்.
1930களில் சிங்கப்பூரைத் தலைமைச் செயலகமாகக் கொண்டு மலேயன் கம்யூனிஸ்ட் பார்ட்டி செயல்படத் தொடங்கியது. அதன் தலைவர்கள் சீனப்பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள். அதன் உறுப்பினர்கள் தொழிலாளிகள். இந்தத் தொழிலாளிகள் ஆங்கிலேயர்கள் தங்கள் வாழ்க்கை நிலை உயர்வதற்கு எதுவும் செய்யவில்லை என்று ஆங்கிலேய முதலாளிகளுக்கு எதிரான சிந்தனைகள் கொண்டிருந்தனர்.
அவர்கள் வெறுப்புக்கு மேலும் வலுசேர்ப்பது போல் கம்யூனிஸ சித்தாந்தங்கள் தொழிலாளி, முதலாளி வர்க்க பேதங்களை எடுத்துரைத்தது. கம்யூனிஸ கட்சி மூலம் தங்கள் வாழ்க்கை நிலைமாறும் என்று நினைத்தனர். போர் நடந்த போது மலேயன் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பிரிட்டிஷ்காரர்கள் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதன்படி கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆயுதங்கள் கொடுத்துதவி ஆயுதப் பயிற்சிகள் கொடுத்தனர்.
இவர்கள் எம்பி எ ஜே எ என்ற பெயரில் ஜப்பானியர்களை ரகசியமாக தாக்கினர். ஜப்பானியர்கள் சரணடைந்ததும் கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து ஆயுதங்களை திரும்பி ஒப்பபடைக்கச் சொல்லி உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் தங்களிடமிருந்த ஆயுதங்கள் அத்தனையும் ஒப்படைக்காமல் தங்களின் இரண்டாவது திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தனர். முதல் திட்டம் ஜப்பானியர்களை வெல்வது! அடுத்த திட்டம், மலேயா, சிங்கப்பூர் இரண்டையும் கம்யூனிஸ ஆட்சியின்கீழ் கொண்டுவருவது!!! ஆனால் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு ஜப்பானியர்களை வென்றபின் ஆங்கிலேயர்களை மீண்டும் வரவிடாமல் தங்கள் ஆட்சியை அமைப்பதற்கு முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தபோதே ஜப்பானியர்கள் எதிர்பாராத வகையில் இரண்டாம் உலகப்போரில் தோல்வி அடைந்தனர்.
போருக்கு பிந்தைய சிங்கப்பூரில், ஆங்கிலேயர்கள் மேல் வைத்திருந்த விசுவாசமும் நம்பிக்கையும் சற்றுக்குறைந்தது. ஆங்கிலேயர்கள் ஆளப்பிறந்தவர்கள்அல்ல. சண்டை என்று வந்தபோது ஜப்பானியர்களிடம் சரணடைந்து பொதுமக்களைக் காப்பாற்றாமல் இரண்டரை ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் மனதில் சற்று மதிப்பு குறைந்து போயிற்று. இதற்குள் பலநாடுகள் அந்நியர் ஆட்சி எங்களுக்கு தேவையில்லை என்று ஆங்கில ஆட்சிக்கு எதிராக சுதந்திரம் தேவை என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.
மலாய் மொழியில் மெர்டெகா (விடுதலை) என்ற முழக்கம் கேட்க ஆரம்பித்தது. அவரவர்கள் நாட்டில் ஒரு தேசிய கட்சி தோன்றி தங்கள் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கத் தொடங்கினர். இந்நிலையில் ஆங்கிலேயர்கள் தங்கள் பெருமைக்குரிய சொத்தாக நினைத்த இந்தியா 1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இந்தியாவின் ஆட்சி பொறுப்பில் அமர்ந்தது. இந்த சுதந்திரப் போராட்டம் பல நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து பல நாடுகள் ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெறத்தொடங்கின.
அதே சமயம் பிரிட்டிஷ் அரசாங்கமும் மலேயாவுக்கும் சிங்கப்பூருக்கும் படிப்படியாக தன்னாட்சி அமைத்துக் கொள்ள வழி விட்டது.
1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிங்கப்பூரில் முதன் முதலாகப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் மூலம் சட்டமன்றப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 23,000 ஆங்கிலேயர்கள் மட்டும் வாக்குரிமை பெற்றவர்களாக கருதப்பட்டனர். 25 உறுப்பினர்களில் 6 பேர் மட்டுமே தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மற்ற உறுப்பினர்கள் கவர்னர் மற்றும் வர்த்தகச் சபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தலில் நின்று வெற்றி பெற்ற மூன்று உறுப்பினர்கள் சிங்கப்பூர் ரொக்கரசிவ் பார்ட்டி(Singapore progressive party) என்று அழைக்கப்பட்ட எஸ்எஸ்பி கட்சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தக் கட்சியில் வணிகர்கள், தொழில் நிபுணர்கள் போன்ற பழமைவாதிகள் இருந்தனர். இவர்கள் சிங்கப்பூரை முழுமையாக தன்னாட்சியாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் கிடையாது. அதற்காகப் போராட வேண்டும், சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் போன்ற திட்டங்கள் எதுவுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆறு பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற மூவரும் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
தேர்தல் நடந்து மூன்று மாதங்களில் மலேயாவில் ஆயுதங்களோடு கம்யூனிஸ்ட்டுகள் நாடெங்கிலும் கலவரங்களில் ஈடுபட்டனர். இதனால் உள்நாட்டுக் குழப்பங்கள் அதிகரித்தன. இதை தடுப்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் அவசரகாலநிலைமை என அறிவித்தது. இடதுசாரி கம்யூனிஸ்ட்டுகளை அடக்குவதற்காக மலேயா, சிங்கப்பூர் என இரண்டு நாடுகளிலும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் என்ற முரண்பாடான சட்டத்தை உருவாக்கியது. இச்சட்டத்தின்படி உள்நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்து எனச் சந்தேகப்படும் யாரை வேண்டுமானாலும் கைது செய்து விசாரணை எதுவுமின்றி காலவரையின்றி சிறையில் அடைக்கலாம். இடது சாரி கம்யூனிஸ்ட்டுகள்தான் பிரிட்டிஷ் ஆட்சியை தீவிரமாக எதிர்த்தவர்கள். அவர்களில் முக்கால்வாசியினர் இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டதும் சிங்கப்பூர் மற்றும் மலேயாவில் தன்னாட்சி பெறுவதற்கு இன்னும் அதிககாலம் காத்திருக்கும் சூழல் உருவானது.
தொடரும்…