Home » படித்ததில் பிடித்தது » சமணரைக் கழுவேற்றியமையின் உண்மைத்தன்மை!!!
சமணரைக் கழுவேற்றியமையின் உண்மைத்தன்மை!!!

சமணரைக் கழுவேற்றியமையின் உண்மைத்தன்மை!!!

சமணரைக் கழுவேற்றியமையின் உண்மைத்தன்மை என்ன ???

சமணர்களை கழுவில் ஏற்றிவிட்டார்கள் என்று சைவத்தின்பால் பழிபோடுகின்றவர்கள் நடுநிலையுடன் ஆய்ந்தறியத் தவறிவிட்டார்கள் என்றே பொருள்! அப்படியொரு நிகழ்வு நடைபெறவில்லை என்று அறிஞர்கள் சுட்டுவர்.

அப்படியொன்று நடைபெற்றிருக்குமானால் அவை சமண இலக்கியங்களில் மட்டுமல்லாது பல்வேறு தடையங்களையும் பதிந்திருக்கும் தமிழக வரலாற்றில்! எனவே சமணர்கள் கழுவேறினர் என்பது சேக்கிழார் தவறாகக் கையாண்ட கருத்து என்பது இவர்கள் வாதம்! எனினும் சேக்கிழாரின் கருத்துநிலையில் நின்று இதனை ஆய்வோம் எனில், திருமுருக கிருபானந்தவாரியார் இதற்களித்துள்ள விளக்கம் உள்ளதை உள்ளபடி உணர கைகொடுக்கின்றது.

அவரின் கருத்தை தொகுத்துத் தருகின்றேன்.

அன்பு வேறு;சைவம் வேறு அன்று.அன்பே சிவமாய் அமர்ந்திருத்தலினால் அன்பும் சைவமும் ஒன்றே. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்வது ஆன்றோர்களது அறம்.
இனி,கடவுளுக்கு எம்மதமும் சம்மதம்.எல்லா மதங்களும் இறைவன் கருணையினால் தோன்றியவையே.

ஒரு கல்லூரியில் பல வகுப்புகள் இருப்பதுபோல் என்று அறிக. எல்லாச் சமயங்களும் முடிவில் ஓர் இடத்திற்கே சென்று சேருகின்றன. ஆறாவது நூற்றாண்டில் இருந்த சமணசமய குருமார்கள் இந்த அருள்நெறியை விட்டுவிலகினார்கள்.

அன்பெனும் அரிய மணியை மருள் என்னுங் கடலில் எறிந்து இருள் கொண்ட மனத்தினராய்த் திரிந்தார்கள். மனிதன் மற்றொரு மனிதனைக் கண்டு அன்பினால் தழுவுதலும் உபசரிப்பதும் மக்கட்பண்பு.

திருநீறு பூசுகின்ற சைவர்களைக் கண்டால் அக்காலத்திருந்த சமணர்கள் “கண்டு முட்டு”(பார்த்தவுடன் தீட்டாகிவிட்டோம்) என்றார்கள். கண்டுமுட்டு என்றவுடன் “கேட்டு முட்டு” என்பார் சிலர்.

சைவர்களைக் கண்டால் குளிப்பார்கள். அத்துணைக் கொடிய சமயமாக அவர்கள் அந்நாள் கருதினார்கள். கண்டால் தீட்டு,கேட்டால்கூடத் தீட்டு என்றால். இது எத்துணை அநியாயம் என்பதனைச் சிந்தித்துப் பாருங்கள்.

இதுவுமன்றித் தங்கள் குழந்தைகள் அழுதால் அச்சுறுத்தும் பொருட்டு” பூச்சுக்காரன் வருகின்றான்;பூச்சாண்டி வருகின்றான்” என்று கூறுவார்கள். திருநீறு பூசுகின்றவர்களை அத்துணைப் பயங்கரமானவனாகக் கருதினார்கள். அதனால், திருவருள் அவர்களை அழிக்கத் துணை செய்தது.

வலிமையுள்ள ஒரு மகன் மெலிந்த தன் தம்பி அல்லது தமையனை அடிப்பானாயின் தந்தை யார்புறஞ் சேருவார்? அடிப்பவன் புறமா? அடிபடுவானுக்காக இரங்கி,அடிபட்டவனைத் எடுத்து அணைத்து, அடிப்பவனைத் தண்டிப்பார்.

இருவருக்கும் அவர் தந்தையானாலும் ,பொதுவாக இருவரையும் ஆதரிக்க வேண்டிய கடப்பாடு உடையவரானாலும், குற்றஞ் செய்த மைந்தனைத் தண்டிப்பது தந்தையின் இன்றியமையாத கடப்பாடு அன்றோ?

அதுபோல். சமண சமயத்தார், சைவ சமயத்தாரை ஒறுத்தபோது பரம்பொருள் சைவசமயத்தின்பால் நின்று சமணத்தை அழிக்கத் துணைபுரிந்தது எனவுணர்க.

திருஞானசம்பந்தர் பதினாறாயிரம் அடியார் திருக்கூட்டத்துடன் மதுரைக்கு வந்து திருவாலவாயுடைய அண்ணலை வழிபட்டு ஒரு திருமடத்தில் தங்கியிருந்தார். சமணர்கள் தாம் அறிந்த நெருப்பு மந்திரத்தைக்கூறி திருமடத்தைக் கொழுத்த முயன்றார்கள்.

அம்மந்திரத்தினால் நெருப்பு பற்றவில்லை. அதைக்கண்டு தளர்ந்த சமணர்கள் ஒளிந்து சென்று பதினாறாயிரம் பேர் கண்ணயர்ந்து துயிலும் திருமடத்தில் தீ மூட்டினார்கள். இது எத்துணைப் பெரிய தீமை என்பதை நினைத்துப் பாருங்கள்.

பின்னர், அனல்வாது செய்தார்கள். புனல்வாதந் தொடங்கும்போது, “தோற்றவர் என் செய்வது?” என்று குலச்சிறையராகிய முதலமைச்சர் கேட்டார்.

அங்கது கேட்டு நின்ற
அமணரும் அவர்மேற் சென்ற
பொங்கிய வெகுளி கூரப்
பொறாமைகா ரணமே யாகத்
தங்கள்வாய் சோர்ந்து தாமே
தனிவாதில் அழிந்தோ மாகில்
வெங்கெழு வேற்று வான் இவ்
வேந்தனே என்று சொன்னார்.

முடிவில் சமணர்கள் தோற்றார்கள். தோற்ற ஒரு காரணத்தினால் மட்டும் மன்னன் சமணரைக் கழுவிலேற்றவில்லை. பதினாறாயிரம் அடியார்கள் துயின்ற திருமடத்தில் தீவைத்த பெரும் பாதகத்தை நினைத்து, “இவர்களைக் கழுவில் ஏற்றுக” என்று முதலமைச்சருக்குக் கட்டளையிட்டார்.

அரசன் நீதிநெறியின்படி குற்றமுள்ளவரைத் தண்டிக்கும்போது ஞானாசிரியார் தடுத்தல் முறையாகாது. அங்கனந் தடுத்தால் அரச நீதி கோடும்.

பல கொலைகள் செய்த ஒருவனை நீதிபதி இந்நாள் மரணதண்டனை விதிக்கின்றார். அதை ஒரு ஞானி சென்று தடுக்கலாமா? தடுக்கப்படாது.

ஆதலினால், கருணை வடிவாக விளங்கும் பிள்ளையார் அந்த அரசநீதியில் தாம் குறுக்கிடாது இருந்தார் என்று தெளிக.

இதனை முதலமைச்சராகிய சேக்கிழார் பெருமானே விளக்கியருளுகின்றார். பெரியபுராணம் பாடியவர்.சட்டதிட்டங்களை நன்கு அறிந்த சோழநாட்டு முதன்மந்திரி என்பதை மறவற்க.

ஆகவே, தீமை புரிந்த சமணர்களைக் கழுவேறச் செய்தது மன்னறம் என்றும் , அது மறுமைக்கு அப்பாவஞ் சூழாதபடி செய்வதென்றும்,மன்னறத்தினைத் தடுத்தல் ஞானிகட்கு கடனன்றென்றும், பெரும் பாவஞ் செய்த அமணர் கழுவேறியது முறையே என்றும் அன்பர்கள் அறிக.

பதினாறாயிரம் அடியவருடன் மதுரைக்கு வந்து மடத்திலே திருஞானசம்பந்தப் பெருமான் தங்கியிருந்தபோது மடத்துக்கு தீவைத்தமை முறையா?

சைவரைக் கண்டாலே தீட்டு எனக்கருதி கண்டு முட்டு என்பாரும் அவ்வண்ணம் சொல்லும்போது ஏனைய சமணர் கேட்டுவிட்டால் கேட்டவர் கேட்டதாலேயே தீட்டுவந்ததெனக் கருதி கேட்டு முட்டு என்றும் சொல்லுகின்ற இழிவான பண்பாடு முறையாகுமா?

பூச்சாண்டி என்று சைவரை நிந்தனை செய்தமை சால்பா?

சைவநெறியை சமணராக இருப்பவர் எவரேனும் ஒழுக முனைந்தால்,அவருக்கு மரணதட்டனைகளை செயற்படுத்தியமை( கல்லிலே கட்டி கடலிலே வீசுதல்,சுண்ணாம்பு அறையில் இடல்,யானைகளைக் கொண்டு மிதித்துக் கொல்லுதல்) என்பன உண்மைச் சமயத்தின் கொள்கையா?

சைவக்கோயில்களை ஆக்கிரமித்து சமணக் கோயில்களாக்குதல் விரும்பக்கூடிய ஒன்றா?
சைவக்கோயில்களை பூசைகள் நடத்தவிடாது,பூட்டிவைத்தல் தர்மமாகுமா?

இத்தனையும் செய்தவர்கள் சமணர்கள்! மன்னரை மயக்கி, மன்னரின் செங்கோலை தம்பக்கம் சரியவைத்து, தமக்கேற்றால்போல் ஆட்சியை நடத்தினர் சமணர்.

எனவே, சமணத்தின் பொய்த்தன்மையை உணர்ந்துகொண்ட மன்னன், தன்னை தவறான வழியில் நெறிப்படுத்தி தனது அரசாட்சிக்கு அபகீர்த்தி ஏற்படவைத்தமையாலும் சமணர்கள் தன்னை தீய ஆட்சியை நடத்தியவன் என்ற பெயரை கொண்டவனாக்கியமையாலும் கோபம் கொண்டு கழுவேற்றினான்!

இது மன்னன் தனது புகழை மங்கச்செய்த சமணரின் தூரோகத்தன்மையை உணர்ந்துகொண்டமையால் வழங்கிய தண்டனை! இராசதுரோகம் என்றால் மிகையாகாது.

இதே; திருஞானசம்பந்தர் தோற்றிருந்தால் நிச்சயம் அவரும் அவருடன் சேர்ந்து சைவத்தை ஒழுகுகின்றோம் என்பாரும் ஒன்று சமணத்தை தழுவியிருக்க வேண்டும்;அன்றி கழுவேறி இருக்க வேண்டியநிலை ஏற்பட்டிருக்கும்.

காரைக்கால் அம்மையார் கயிலையை நோக்கி சென்றமையை ஆய்வாளர்களில் சிலர், சைவநெறியை பரப்புகின்றவர்கள் வாழமுடியாத காலமாக சமணரின் கொடுமை நிறைந்த காலமாக தமிழகம் விளங்கியமையாலே என்று சுட்டுவர்.

அத்தகைய கொடுமைக்காரர்களாக சமணர்கள் விளங்கினர்.சமணநெறியில் இருந்து சைவத்துக்கு மாறிய அப்பர் பெருமானுக்கு ஏற்பட்ட இன்னல்களே சமணத்தை ஒழுகியவர்கள் எவ்வளவு கொடூரர்களாகி இருந்தனர் என்பதை உணர்வதற்கு போதுமானதாகும்!

சமணநெறியின் பெயரால் சைவநெறிக்குரியோருக்கு வழங்கப்பட்ட இன்னல்களும் கொடுமைகளும் கொலைத்தண்டனைகளுக்கும் படுபாதகச்செயல்களையும் சம்பந்தப் பெருமான் மன்னனின் மனதை தெளிவவைத்து முடிவுக்கு கொண்டுவந்தார்.

விழிப்படைந்த மன்னர், கொடுங்கோல் புத்தியுடையோரை கழுவேற்றினான்; அவர்களில் சிலர் தோற்றதால் தோல்வியை தாங்கமுடியாது கழுவேறினர்.

கொடியவர்களை மன்னன் அழிக்க நினைத்தானே ஒழிய, சமணசமயத்தவரை அல்ல!!! சமணசமயக் கோயில்கள் தமிழகத்தில் இன்றும் உண்டு! சமண சமயத்தவர்கள் தமிழகத்தில் இன்றும் உள்ளனர்! எனவே கழுவேற்றியது கொடியவர்களை! சமணர்களை என்பது அறத்துக்கு முரணான மதவாதக்கண்ணோட்டம்!!!

‘சைவத்தின்மேல் பழி போடுவதற்கு” கிடைத்த அல்வா போன்று ஒருசிலர் இக்கதையைக் கையாள்வர். இவர்கள் அறிவுக்கோளாறு உடையவர்கள்!

சிலர் சமணர் “அன்பே” உருவானவர்கள் என்றும் சைவக்கதைகளில் அவர்களை பொய்யாக காட்டியுள்ளனர் என்றும் மருளின் விளைவால் சொல்வர்.

சமணரைக் கழுவில் ஏற்றியமைக்கு சைவநூல்களே சான்று என்பதை இவர்கள் உணர எத்தனிக்கார்! சமணரைக் கழுவில் ஏற்றியமைக்கு சைவநூல்களை சான்றாக கொண்டுவரும் இக்கூட்டத்தார், சமணர் மருளில் மூழ்கியிருந்தனர் என்பதற்கு அதேசைவநூல்களில் காணப்படும் ஆதாரங்களை ஏற்கார். ஏனெனில் அவர்கள் இருப்பதும் மருளுக்குள்ளேயே!!!

இராச இராச சோழன் ஆளாத கிழக்காசிய நாடில்லை! ஆனால் எங்குமே சைவநெறியை திணித்ததாக வரலாறில்லை! சைவநெறியைப் போற்றிக் காத்த சைவ மன்னர்கள் பலர் வைணவ ஆலயங்களுக்கு தொண்டு செய்தமையும் வைணவ ஆலயங்களை கட்டிவித்தமையும் வரலாறாக இன்றும் உண்டு.

பௌத்த ஆலயங்களைக் கட்டுவித்தமையும் வரலாறாக உண்டு. கோச்செங்கண் என்னும் சைவ மன்னன் சமயக்காழ்ப்பின்றி வைணவ ஆலயங்களை கட்டுவித்துள்ளமை வரலாறு.

எனவே ‘அன்பே சிவம்’ என்பது சைவசாரம். அந்த சமயத்தின்மேல் களங்கம் சுமத்த துடிப்பவர்கள் உலக சமயங்களின் வளர்ச்சி வரலாற்றைப் படித்து தெளிந்தபின்னர், மன்னர்களின் ஆட்சி நீதியை உணர்ந்து கொண்டு, சைவநெறியின் ஒழுக்கத்தை ஆராய்வுக்கு உட்படுத்த விளைதல் நலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top